பச்சோந்திகள் தேடும் திடீர் தேர்தல்

 இராகவன் கருப்பையாநம் நாட்டின் தற்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு திடீர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனும் அறைகூவல்கள் பல தரப்புகளிலிருந்து அண்மைய வாரங்களாக வலுத்து வருவதை நம்மால் காணமுடிகிறது.

நாட்டில் அரசியல் நிலைத்தன்மை சரியாக இல்லைஎனவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு உடனே பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அம்னோ துணைத் தலைவர் முஹமட் ஹசான் கடந்த வாரம் குறிப்பிட்டார்.

அம்னோவின் மூத்தத் தலைவரும் ஒரு காலக்கட்டத்தில் நீண்ட நாட்களாக நிதி அமைச்சராக இருந்தவருமான ரஸாலி ஹம்சாவும் கூட அண்மையில் இதே போன்ற ஒரு கருத்தை வெளியிட்டார். நாட்டில் அரசியல் நிலைத்தன்மை ஏற்படுவதற்கும் பொருளாதாரம் மீட்சியடைவதற்கும் தேர்தல்தான் தீர்வு என்றார் அவர்.

அனைத்துலக தொழில்துறை அமைச்சர் அஸ்மின் அலி கூறியதுதான் சற்று வேடிக்கையான ஒன்று.

தற்போதைய அரசாங்கம் அரசியல்சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தை வெற்றிகரமாகக் கையாண்டுள்ளதாகவும் திடீர் தேர்தலை நடத்துவதற்கு தாங்கள் தயாராய் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டது மக்களுக்கு வியப்பாகத்தான் உள்ளது.

இது குறித்து கருத்துரைத்த பி.கே.ஆர். கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம்திடீர் தேர்தலுக்கு எதிர்கட்சிகளும் தயாராக உள்ள போதிலும் கோவிட் பிரச்சினையால் தற்போதைக்கு தேர்தல் நடத்துவது விவேகமான ஒரு நடவடிக்கையாகாது என்றார்.

இன்னும் பலரும் கூடகுறிப்பாகக் கடந்த பொதுத் தேர்தலில் தோற்றவர்கள் அல்லும் பகலும் திடீர் தேர்தலையே வலியுறுத்தி வருகின்றனர்.

ஆக இவர்கள் அனைவருமே அரசியல் சுயநலத்தையே முன்வைத்துப் பேசுகிறார்களேத் தவிர நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

இன்றைய சூழ்நிலையில் நம் நாட்டில் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு ஏறக்குறைய 800 மில்லியன் ரிங்கிட் செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் பொருளாதாரம் மிக மோசமாக நலிவடைந்துள்ள இந்த காலகட்டத்தில் தேர்தலுக்கான அந்த செலவு தேவையில்லாத வெறும் பண விரயம் என்றே மக்கள் கருதுகின்றனர்.

தங்களுடைய வரிப்பணம் இப்படி வீணடிக்கப்படுவதை பொது மக்கள் நிச்சயம் விரும்பமாட்டார்கள்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒரு சிலரின் அரசியல் ஆதாயத்திற்காக மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது நாம்  அறிந்த ஒன்றே. அந்த ஆட்சிக் கவிழ்ப்பிற்கும் பொது மக்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

அதனால் கடந்த பொதுத் தேர்தலில் மன்னை கவ்வியவர்கள் புற வழியாக மீண்டும் ஆட்சிக்கு வந்து அமர்க்களப்பட்டுள்ளார்களே தவிர பொது மக்கள் யாரும்  துள்ளிக் குதித்து கொண்டாடியதாக தெரியவில்லை. மாறாக இப்பட்ட சுயநல அரசியல்வாதிகள் மீது அவர்கள் விரக்தியடைந்தது மட்டுமின்றி நியாயமான தேர்தல் மீதும் வெறுப்படையத் தொடங்கிவிட்டனர்.

இவர்களே ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு பிறகு மறு தேர்தல் வேண்டுமென இவர்களே ஒற்றைக்காலில் நிற்பதைப் பார்த்தால் மக்களுக்கு வியப்பாகவும் கோபமாகவும்தான் உள்ளது. திடீர் தேர்தலுக்குத் தேவைப்படும்

இந்த 800 மில்லியன் ரிங்கிட்டை பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்குகுறிப்பாக வறுமையில் வாடும் அடித்தட்டு மக்கள் பயனடையும் வகையில் செலவழிக்கலாம்.

மலேசிய மக்கள் தொகையில் சுமார் 40 விழுக்காட்டினர் அன்றாடம் தலா 11 ரிங்கிட்டுக்கும் குறைவான தொகையிலேயே வாழ்க்கையை நகர்த்துகின்றனர் எனப் பிரிட்டனைத் தலைமையகமாகக் கொண்ட ‘தி கார்டியன்‘ பத்திரிகை அண்மையில் தனது ஆய்வறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்ததை நாம் இங்கு நினைவுகூரத்தான் வேண்டும்.

ஆக, ‘தாய் பிச்சையெடுக்கபிள்ளை கோயம்புத்தூரில் கூத்தடித்த‘ கதையாகத்தான் உள்ளது நம் அரசியல்வாதிகளின் போக்கு என்றால் அது மிகையில்லை.

இதற்கிடையே முன்னாள் பிரதமர் நஜிபுக்கு எதிராக கடந்த வாரம் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் திடீர் தேர்தலுக்கான ஆரூடங்களை வலுக்கச் செய்துள்ளது.

அம்னோ தற்போது மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ளதால் நீதிமன்றத் தீர்ப்பு நஜிபுக்கு சாதகமாக அமையும் என அந்த கட்சியை சேர்ந்த பலர் எதிர்பார்த்தனர்.

அரசாங்க நிர்வாகமும் நீதித்துறையும் இரு வெவ்வேறு கூறுகள் என்பது நாம் அனைவருமே அறிந்த ஒன்றுதான். அப்படியிருக்க இவர்கள் ‘மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு‘ போட நினைப்பதானது, ‘தான்‘ என்ற அகம்பாவமா அல்லது அறியாமையா என்று தெரியவில்லை.

நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்ட மறு தினமே அம்னோ தலைவர் அஹ்மட் ஸாஹிட் திடுக்கிடும் அறிவிப்பு ஒன்றையும் செய்தார்.

அம்னோ வெளியில் இருந்துகொண்டே முஹிடின் அரசுக்கு ஆதரவு வழங்குமேத் தவிர அவருடைய பெரிக்காத்தான் கூட்டணியில் இணையாது என அஹ்மட் ஸாஹிட் செய்த அறிவிப்பின் உள்நோக்கத்தையும் மக்கள் உணராமல் இல்லை.

அஹ்மட் ஹாஹிட் மீதான 80கும் மேற்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் மட்டுமின்றி நஜிப் மனைவி ரோஸ்மாவிற்கு எதிரான ஊழல் வழக்குகளும் தற்போது உயர் நீதிமன்றத்தில் உள்ள நிலையில்புங் மொக்தார்அப்துல் அஸிஸ்தெங்கு அட்னான்அஹ்மட் மஸ்லான் மற்றும் ஈசா சாமாட் முதலிய இதர தலைவர்கள் மீதான வழக்குகளும் விரைவில் வெளிச்சத்திற்கு வரவிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திடீர் தேர்தலுக்கு வழிக்கொணரும் நோக்கத்தில் முஹிடினுக்கான ஆதரவை அம்னோ எந்நேரத்திலும் மீட்டுக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு அவையில் பெரும்பான்மை ஆதரவு இல்லாவிட்டாலும் நடப்பு அரசுக்கு ஆபத்துதான் என்பதனை எல்லாருமே அறிவார்கள்.

ஆக எப்படியாவது பிரதமர் பதவியில் அமர்ந்துவிட வேண்டும் எனக் கங்கணம் கட்டி வரிசை பிடித்து நிற்கும் அம்னோ தலைவர்கள் மத்தியில் முள்ளின் மேல் நடந்துகொண்டிருப்பதைப் போன்ற பரிதாபகரமான நிலைமைதான் முஹிடினுக்கு இப்போது.

எனவே திடீர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு தரப்பும் அதைப் பற்றியே பேசாமல் நடுங்கிக்கொண்டிருக்கும் இன்னொரு தரப்பும் மேற்கொள்ளவிருக்கும் அடுத்தகட்ட நகர்வை வஞ்சிக்கப்பட்ட வாக்காளர்கள் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.