தமிழ் பள்ளி விரோதிகளுக்கு நிரந்தர சாவுமணி எப்போது!

இராகவன் கருப்பையா- தமிழ், சீனப் பள்ளிகளை இழுத்து மூடவேண்டும், நிறுத்த வேண்டும், ஒழிக்க வேண்டும், அழிக்க வேண்டும் – இது போன்ற கூக்குரல்களைக் கேட்டு கேட்டு நமக்கும் அலுத்துப் போய்விட்டது.

ஒரு தடவையா இரண்டு தடவையா? ஆண்டாண்டு காலமாக மலாய் அரசியல்வாதிகளுக்கு, குறிப்பாக புதுசாகத் துளிர்விடத் துடிக்கும் இளம் அரசியல்வாதிகளுக்கு தமிழ், சீனப் பள்ளிகளின் விவகாரம் ஒரு கிள்ளுக்கீரையாகவே இருந்து வருகிறது.

மற்ற இனத்தவரின் மொழிகளை சீண்டினால்தான் ஆதரவாளர்கள் தங்களை தலை மீது வைத்துத் துதிபாடுவார்கள் என்ற கீழ்த்தரமான எண்ணத்தில் அவர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள் போலும்.

தமிழ், சீனப் பள்ளிகளுக்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என அறிக்கை விடுவது தங்களுடைய அரசியல் வளர்ச்சிக்கு உரமாக அமையும் என்று எண்ணி பிற இனத்தவரின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் உளறும் இத்தகைய சாக்கடை ஜந்துகளுக்கு நாம் பாடம் புகட்டத்தான் வேண்டும்.

இந்நாட்டில் 200 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட ஒரு வரலாற்றை தமிழ் பள்ளிக்கூடங்கள் கொண்டுள்ளன என்பது நமக்கு பெருமை தரும் ஒரு விசயம்.

நாட்டின் தலைசிறந்த கல்விமான்களில் பலர் மட்டுமின்றி, எண்ணிலடங்கா மருத்துவர்கள், சட்டத்துறை நிபுணர்கள்,  அரசதந்திரிகள், சமூகத் தலைவர்கள்,  தொழிலதிபர்கள் மற்றும் பல முண்ணனி அரசியல் தலைவர்களும் கூட தமிழ் பள்ளிகளில் பயின்றவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பில்லியன் கணக்கில் அரசாங்கப் பணத்தை சுருட்டிக் கொண்டு ஏப்பம் விடும் அரசியல் தலைவர்களை தமிழ் பள்ளிகள் உருவாக்கவில்லை.

நிலைமை இவ்வாறு இருக்க, தமிழ்ப் பள்ளிகள் மீது தொடர்ந்தார்போல் கழிவை உமிழும் இந்த சாக்கடைகளின் சீண்டல்களுக்கு எப்போது நிரந்தரமான சாவு மணி அடிப்பது என்பதே தற்போதைய மிகப் பெரிய கேள்விக்குறியாகும்.

தொற்று நோயைப்போல் தொடரும் இப்பிரச்னையை, சீனப் பள்ளிகளுக்கு அரணாக விளங்கும் ‘டொங் ஸொங்’ மற்றும் ‘ஜியௌ ஸொங்’ போன்ற சக்திவாய்ந்த கல்வி அமைப்புகள் எவ்வாறு சமாளிக்கின்றன என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் நாம் நமது செயல்முறையை மாற்றியமைக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.

பழைய பாணியிலேயே வரிசை வரிசையாக நம்முடைய படங்களை தமிழ் பத்திரிகைகளில் போட்டுக்கொண்டு ‘கண்டனத்தை பதிவு செய்கிறேன்’, ‘வண்மையாகக் கண்டிக்கிறேன்’, ‘கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’, ‘தண்டிக்க வேண்டும்’, என்று கருத்துக் கூறுவதோடு நிறுத்திக்கொள்வதில் பயனில்லை.

‘பெருமைக்கு எருமை மேய்க்கிற’ கதை போல, தமிழ் பேசும் அரசியல்வாதிகளும் கூட இதையேதான் செய்கின்றனர், பிறகு வழக்கம் போல எல்லாவற்றையும் மறந்துவிடுகின்றனர்.

இப்படியே ‘குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருந்தால்’ ஒன்றும் நடக்கப்போவதும் இல்லை என்பதனை நாம் உணரவேண்டும்.

ஏனென்றால் தமிழ்ப் பள்ளிகளை இழிவுபடுத்தும் அந்த சாக்கடை ஜந்துகள் தமிழ் பத்திரிகைகளையா வாங்கிப் படிக்கிறார்கள்?

இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு மேலும் பல ஆக்ககரமான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து சிந்திப்பது அவசியம்.

‘தமிழை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடாதே’ என புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பாடியுள்ளதை நாம் இங்கு நினைவுக் கூறத்தான் வேண்டும்.

‘அகல உழுவதைவிட ஆழ உழுவதே மேல்’ என்பதற்கு ஏற்ப, தமிழ் தினசரிகளில் அறிக்கை விடுவதோடு நின்றுவிடாமல் நாடு தழுவிய நிலையில் காவல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான புகார்களை செய்யவேண்டும்.

ஆங்காங்கே அவ்வப்போது ஒருசில புகார்கள் பதிவு செய்யப்படுகிற போதிலும் அந்தப் புகார்கள் தொடர்பாக இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

எனவே நிந்தனை சட்டத்தின் கீழ் காவல் துறையினர் விசாரணையை முடுக்கிவிடும் வரையில் நாம் ஓயக்கூடாது. சம்பந்தப்பட்ட சாக்கடைகள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் வரையில் நமது முயற்சிகளை நாம் நிறுத்தக்கூடாது.

நாட்டிலுள்ள 523 தமிழ்ப் பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் அனைத்தும் தத்தம் நகரங்களில் தலா ஒரு புகார் செய்தாலே பெரியதொரு தாக்கத்தை நாம் ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.

அதே போல தமிழ் சார்ந்த அரசு சாரா இயக்கங்களும் கூட  ஆங்காங்கே புகார்களை பதிவு செய்து நெருக்குதலை அதிகரிக்க முடியும்.

தேவை ஏற்பட்டால் பிரதமர் அலுவலகம் மட்டுமின்றி பேரரசரிடம் கூட மகஜர் சமர்ப்பித்து நமது அதிருப்தியை வெளிப்படுத்தலாம்.

தமிழையோ தமிழ் பள்ளிகளையோ இழிவுபடுத்தும் ஒருவரையாவது நீதிமன்றத்தில் நிறுத்தினால்தான் நமக்கு விமோசனம் கிடைக்கும் –  நிரந்தரத் தீர்வும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

இப்போது இல்லாவிட்டாலும் நமது எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி தமிழ் மொழி தழைத்தோங்க இத்தகைய தீவிர நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளத்தான் வேண்டும்.