சிலாங்கூரில் நீர்த் தடை: இதுவும் கடந்து போகும்

இராகவன் கருப்பையா

கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளில் கை கழுவுதல், முகக்கவசம் அணிதல் மற்றும் கூடல் இடைவெளியை கடைபிடித்தல், ஆகியவை முக்கியமான அம்சங்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

ஆனால் கடந்த 3ஆம் தேதியிலிருந்து குறைந்தபட்சம் 4 நாள்களுக்கு சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சுமார் 12 இலட்சம் பேர் இந்த பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க முடியாமல் போனது மிகவும் வருத்தமான விசயமாகும்.

‘குடிக்கவே தண்ணீர் இல்லாத போது அடிக்கடி  கைகளை எப்படி கழுவுவது’ என்ற அவர்களுடைய ஆதங்கமும் நியாயமான ஒன்றுதான்.

சந்தையில் உள்ள கைத்தூய்மிகளில் நிறையவே கலப்படம் இருப்பதால் அதுவும் கூட சுத்தமாக இல்லாத நிலையில் தூய்மையான நீரைக் கொண்டு கைகளை அடிக்கடி கழுவுவது உண்மையிலேயே அத்தியாவசியமான ஒரு நடவடிக்கை என்பதில் ஐயமில்லை.

ஆக இப்படிப்பட்ட ‘இரண்டும் கெட்டான்’ நிலைக்கு சிலாங்கூரின் 20% மக்கள் தள்ளப்பட்டதற்கு எந்தத் தரப்பும் இதுவரையில் பொறுப்பேற்கவில்லை என்பது மிகவும் வருத்தமான ஒரு விசயம்.

கோவிட்-19 கொடிய நோயை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் இன்னமும் தடுமாறிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் கடந்த வாரத்தில் இந்நோயினால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை திடீரென 100 வரையில் எட்டியது நமது அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிலாங்கூர் முழுவதிலும் மொத்தம் 1,292 பகுதிகளைச் சேர்ந்த பொது மக்கள் தங்களுடைய இல்லங்களில் ஒரு சொட்டு தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்ட அவலத்திற்கு யார் அடிப்படைக் காரணம் என்பதே தற்போதைய பிரதானக் கேள்வியாகும்.

அரசியல் ஆதாயத்தை முன்வைத்து, பல தரப்புகள் ஆளுக்கு ஆள் குற்றஞ்சாட்டிக்கொண்டிருக்கும் வேளையில் மத்தியில் பரிதாபமாக பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான்.

சிலாங்கூர் மாநிலத்தில் குடிநீரில் கழிவு நீர் கலப்பது, மாசுபடுவது, வினியோகம் தடைபடுவது முதலிய பிரச்னைகள் எல்லாம் புதிய விசயமல்ல.  இது போன்ற இன்னல்கள் எல்லாமே சிலாங்கூர்வாசிகளுக்கு கசந்துபோன, பழகிவிட்ட, அழுத்துப்போன  ஒன்று என்பது அப்பட்டமான உண்மை.

ஒவ்வொரு முறையும் இந்த பூதாகரப் பிரச்னை எழும்போது யார் மேல் பழியைப் போட்டு தப்பித்துக்கொள்வது என்றுதான் எல்லாத் தரப்பினருமே முட்டி மோதிக்கொள்கிறார்களேத் தவிர இந்த அநியாயத்திற்கு கண்ணுக்கு எட்டிய வரையில் நிரந்தரத் தீர்வு ஒன்றைக் காணோம் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

இம்முறை ரவாங்கில் உள்ள ஒரு தொழிற்சாலையின் கழிவு நீர் சுங்ஙை கொங் ஆற்றில் கலந்ததால் இந்த பிரச்னை எழுந்தது என அடையாளம் கண்டு அந்த நிறுவனத்தின் 4 முதலாளிகளும் 2 ஊழியர்களும் கைது செய்யப்பட்டது நாம் அறிந்த ஒன்றுதான்.

ஆனால் அந்த தொழிற்சாலை கடந்த 6 ஆண்டுகளாக முறையான உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்துள்ளதாக இப்போதுதான் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்பது வியப்பாகவே உள்ளது.

அப்படியானால் ரவாங்கை உள்ளடக்கிய செலாயாங் ஊராட்சி மன்ற அமலாக்க அதிகாரிகள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? ஏன் இந்த அத்துமீறல் அவர்களுடைய கண்களில் படவில்லை, போன்ற கேள்விகளுக்கு பதிலக்கானோம்.

இதற்கிடையே அந்த ஆற்றின் தூய்மைக்கேடு தொடர்பாக விசாரணை நடத்தி கடந்த ஏப்ரல் மாதவாக்கில் சட்டத்துறை அலுவலகத்திடம் அறிக்கையொன்றை சமர்ப்பித்ததாக சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடீன் கூறினார்.

ஆனால் இதுவரையில் நடவடிக்கையேதும் எடுக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டது நமக்கு மேலும் ஆச்சரியத்தையே ஏற்படுத்துகிறது.

நாட்டின் அதிக செல்வாக்கு மிக்க, பலம் பொருந்திய ஒரு மாநிலம் சிலாங்கூர். குடிநீர் என்பது மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் சுவாசக்காற்றைப் போன்ற அத்தியாவசியமான ஒன்று.

அமிருடின் சொல்வது உண்மையென்றால் சட்டத்துறை அலுவலகத்திற்கு ஏன் இந்த மிகாதனப் போக்கு, கவனக் குறைவு?

அவர்கள்தான் அப்படியென்றால் சிலாங்கூர் மாநிலம் ஏன் தொடர் நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை?

அந்த தொழிற்சாலை கோம்பாக் மாவட்ட நில அலுவலக சட்டவிதிகளை மீறியுள்ளதால் அதனை இழுத்து மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக அமிருடின் கூறினார். ‘வெள்ளம் வரும் முன் அணை போடவேண்டும்’ என்று அவருக்குத் தெரியாதா என்ன?

இதற்கிடையே இப்பிரச்னை குறித்து கருத்துரைத்த வீடமைப்பு, ஊராட்சித் துறை அமைச்சர் ஸுரைடா கமாருடின், ஊராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் போதாது, அமலாக்க சட்டத்தில் குறைபாடுகள் உள்ளன என்று தப்பித்துக்கொண்டார்.

இதுபோன்றக் குற்றங்களுக்கு எதிரான தண்டனையை அதிகரிப்பதற்கு சட்டவிதிகளில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என நீர்வள, சுற்றுப்புற சூழல்துறை அமைச்சர் துவான் இப்ராஹிமும் கூட பட்டும் படாமலும் கருத்துரைத்து தப்பித்துக்கொண்டார்.

நிலைமை இவ்வாறு இருக்க, இன்னும் ஓரிரு நாட்களில் அல்லது வாரங்களில் மக்கள் இவற்றையெல்லாம் மறந்துவிடுவார்கள். இதுவும் கடந்து போகும் என அரசியல்வாதிகளுக்கும் தெரியும்.

ஆக உலகிலேய மிகத் தூய்மையான குடிநீரைக் கொண்டுள்ள ஐஸ்லாந்தைப் போல் இல்லாவிட்டாலும் மக்களுக்கு குறைந்த பட்சம் சுகாதாரக் கேடு ஏற்படாத வகையில் தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமையாகும்.