தமிழ் இடைநிலைப் பள்ளி எட்டாக் கனிதானா?

இராகவன் கருப்பையா- நம் நாட்டில் தமிழ் இடைநிலைப் பள்ளி ஒன்று நிறுவப்பட வேண்டும் என்ற வேட்கை இன்றோ நேற்றோ முளைத்த ஒன்றல்ல.

தமிழ் சார்ந்த கல்விமான்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் இலக்கிய வட்டத்தினர் போன்ற எல்லா தரப்பினரும் கடந்த அரை நூற்றாண்டுக்கும்  மேலிருந்தே இது தொடர்பான கோரிக்கைகளை அவ்வப்போது எழுப்பி வந்துள்ளனர்.

ஆனால் ஆட்சியில் இருந்த நமது இந்திய அரசியல் தலைவர்கள் எந்த அளவுக்கு அக்கறை செலுத்தி இந்த விசயத்தை அரசாங்கத்தின் நேரடிப் பார்வைக்குக் கொண்டு சென்றனர் என்பதுதான் கேள்விக்குறி.

இருந்த போதிலும் கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற 12ஆவது பொதுத் தேர்தலில் பினேங் மாநிலத்தை ஜ.செ.க. கைப்பற்றியதைத் தொடர்ந்து அதன் முதலமைச்சர் லிம் குவான் எங்கும் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமியும் அதற்கான நடவடிக்கைகளை மீண்டும் முடுக்கிவிட்டது நாம் அறிந்த ஒன்றே.

இதன் தொடர்பாக அப்போதைய கல்வியமைச்சருக்கு 2 கடிதங்களை லிம் அனுப்பியுள்ளார். ஆனால் பாரிசானின் கீழ் இருந்த மத்திய அரசாங்கம் அந்த கோரிக்கையை நிராகரித்தது.

‘அரசாங்கத்தின் ஒப்புதல் மட்டும்தான் எங்களுக்கு வேண்டும். பள்ளியை நிர்மானிப்பதற்கான இடத்தையும் அதற்கான செலவுகளையும் மாநில அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்’ என்றுகூட லிம் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த விவகாரத்தில், அந்த காலக்கட்டத்தில் கல்வித் துணையமைச்சராக இருந்த ம.இ.க.வைச் சேர்ந்த கமலநாதனின் அப்போதைய நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை. அவர் சற்று தீவிரம் காட்டியிருந்தால் ஒப்புதல் கிடைத்திருக்க வாய்ப்பிருக்கிறது என்றே தோன்றுகிறது.

தமிழ் இடைநிலைப் பள்ளி நம் இனத்திற்கு பயனான ஒன்று என்ற போதிலும் அந்தத் திட்டம் நிறைவேறினால் அது எதிர்க்கட்சியின் வெற்றியாக அமைந்துவிடும் என்ற அடிப்படையில் அரசியல் சுயநல முடிவு ஏதும் எடுக்கப்பட்டதாகவும் தெரியவில்லை.

பாரிசான் ஆட்சியில்தான் இந்த அவலம் என்றால் பக்காத்தான் ஆட்சியின் போது ஏன் இத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்பதே மக்களின் தற்போதைய ஆதங்கமாகும்.

கடந்த பொது தேர்தலுக்கு முன் பக்காத்தான் கூட்டணி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இந்தியர்களுக்கென தனிப்பட்ட முறையில் 22 சலுகைகள் அறிவிக்கப்பட்டதை மக்கள் அறிவார்கள்.

அந்த அறிக்கையின் 5ஆவது சலுகையாக, தமிழ் இடைநிலைப் பள்ளி அமைக்கப்படும் என்ற வாக்குறுதி மலேசிய இந்தியர்களை மட்டற்ற மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தது என்றால் அது மிகையில்லை.

ஆனால் நடந்தது என்ன?

எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கு பக்காத்தான் ஆட்சிபுரிந்த 22 மாதகால அவகாசம் போதாது என்பதனை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

எனினும் நீண்ட நாட்களாக முடங்கிக் கிடக்கும் விசயங்களான தமிழ் இடைநிலைப் பள்ளி மற்றும் இந்தியர்களின் குடியுரிமைப் பிரச்னை போன்றவற்றுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும்.

பக்காத்தான் ஆட்சியின் கல்வித் துணையமைச்சர் தியோ நீ சிங்கிடம் இது குறித்து பேசியதாகக் குறிப்பிட்ட இராமசாமி,  இத்திட்டத்திற்கு அவர் சாதகமாக பதிலுரைத்ததாகவும் அண்மையில் தெரிவித்தார்.

ஆனால் கல்வியமைச்சர் மஸ்லீயீன் பார்வைக்கோ அமைச்சரவையின் பார்வைக்கோ இவ்விவகாரத்தை அவர் கொண்டு சென்றாரா என்று தமக்குத் தெரியாது என இராமசாமி மேலும் கூறினார்.

ஆக பக்காத்தான் ஆட்சியில் இத்தோடு தமிழ் இடைநிலைப் பள்ளி விவகாரம் ஒரு புஸ் வானமாகிவிட்டது என்பதுதான் நிதர்சன உண்மை.

லிம் குவான் எங்கோ இராமசாமியோ இதர 4 இந்திய அமைச்சர்களோ அதன் தொடர்பான மேல் நடவடிக்கை எதனையும்  மேற்கொண்டார்களா என்று தெரியாது.

ஆனால் நல்லதொரு வாய்ப்பை தெரிந்தோ தெரியாமலோ சம்பந்தப்பட்ட எல்லாத் தலைவர்களும் நழுவவிட்டனர் என்பதே மறுக்க முடியாத உண்மை.

‘தேர்தல் வாக்குறுதிகள் பாறையில் எழுதப்படவில்லை, அவை ஒன்றும் பைபள் இல்லை,’ என்றெல்லாம் அப்போதைய பிரதமர் மகாதீர் தான் தோன்றித்தனமாக பேசித்திரிந்த போதிலும், இந்திய அமைச்சர்கள் சற்று சிரத்தை எடுத்து இதற்கான ஒப்புதலைப் பெற்றிருக்கலாம் என்றே தோன்றுகிறது.

நிலைமை இவ்வாறு இருக்க, ‘பினேங்கில் தமிழ் இடைநிலைப் பள்ளி எங்கே, அப்பள்ளிக்கான நிலம் என்னவானது, வாக்குறுதி என்னவானது,’ என ம.சீ.ச.வின் கூலிம் தொகுதித் தலைவர் சுவா தியோங் கீ கடந்த வாரம் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து இராமசாமி அது குறித்து மீண்டும் கருத்துரைத்தார்.

அப்பள்ளியை கட்டுவதற்கான அனைத்துத் திட்டங்களும் தயார் நிலையில் உள்ளதாகவும் மத்திய அரசாங்கத்திடமிருந்து உரிமம் கிடைத்தால் கட்டுமானப் பணிகள் தொடங்கிவிடும் என்றும் அவர் கூறியது சற்று வேடிக்கையாகத்தான் உள்ளது.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளாமல், இப்போது மல்லாக்க படுத்துக்கொண்டு காறி உமிழ்வதைப் போல்தான் உள்ளது நிலைமை.

தமிழ், சீனப் பள்ளிகளை இழுத்து மூட வேண்டும் எனும் இனவாத அரசியல்வாதிகளிடம் இருந்து இப்படிப்பட்ட ஒரு ஒப்புதலைப் பெறுவது ‘குதிரைக் கொம்புதான்’.

இருந்த போதிலும் இத்திட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து இதற்கு உரமூட்டிவரும் இராமசாமிக்கு அரசியல் வேற்றுமை பாராமல் எல்லாத் தரப்பும் பிளவுபடாத ஆதரவும் ஒத்துழைப்பும் ஊக்கமும் வழங்கினால் நாட்டின் முதல் தமிழ் இடைநிலைப் பள்ளிக்கான நமது நீண்டநாள் கனவு நிச்சயம் விரைவில் நனவாகும்.

இல்லையேல் இன்னமும் நமக்கு இது ஓர் எட்டாக் கனியாகவே தொடரும்!