வியாபாரமாகும் அரசியல் மக்களை சிந்தனையை மாற்றுமா?

இராகவன் கருப்பையா – நம் நாட்டின் 63 ஆண்டுகால வரலாற்றில் இப்போது நாம்  பார்ப்பதைப் போன்ற நிலையற்ற ஒரு அரசியல் சூழலை எந்த காலக்கட்டத்திலும் நாம் அனுபவித்ததே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

பொதுமக்களின் நலனை புறந்தள்ளி, தேர்தலின் போது அவர்கள் அளித்த வாக்குகளை துச்சமென மதித்து தங்களுடைய பதவி சுகபோகங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து அரசியல் நிலைத்தன்மையை உலுக்கிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளின் போக்கினால் பல நிலைகளிலும் அதிருப்தி அலை அதிகரித்து வருவதை நம்மால் உணரமுடிகிறது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் புற வழியாக ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து இயங்கிக் கொண்டிருந்த முஹிடின் அரசாங்கத்திற்கு சபா தேர்தலுக்குப் பிறகு சோதனை காலம் ஆரம்பித்துவிட்டது.

ஆட்சியில் இருந்த போதிலும் பிரதமர் மற்றும் துணைப் பிரதமர் பதவிகளை அலங்கரிக்க இயலாமல் சிறுமைப்படுத்தப்பட்டுள்ளதைப் போல் உணரும் அம்னோ தலைவர்களுக்கு சபா முதலமைச்சர் பதவி கிடைக்காமல் போனது நிலைமையை மேலும் மோசமாக்கியது.

ஆக முஹிடினின் சர்வாதிகாரப் போக்கு மிதமிஞ்சி போய்க்கொண்டிருக்கிறது  என சில அம்னோ தலைவர்கள் ஆங்காங்கே வெளிப்படையாகவே கருத்துரைக்க ஆரம்பித்தது மட்டுமின்றி அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக்கொள்வது பற்றியும் பேசத் தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில் புதிய அரசாங்கத்தை அமைக்க தம்மிடம் பெரும்பான்மை இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் அதிரடியாக செய்த அறிவிப்பு மகாதீர் உள்பட பல தரப்பினரை பதற்றத்திற்குள்ளாக்கியதும் உண்மைதான்.

இதுவரையில் வெளிப்படையாக ஒத்துக்கொள்ளாத போதிலும் சில அம்னோ தலைவர்களுடன் திரை மறைவில் அன்வார் பேரம் பேசியுள்ளார் என்றே நம்பப்படுகிறது.

தமது நிலைப்பாடு குறித்து மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் அன்வார் விளக்கமளித்த அதே தினத்தில் குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரஸாலி ஹம்சாவும் பேரரசரை சந்தித்ததுதான் பொது மக்கள் மட்டுமின்றி உயர் நிலை அரசியல் வட்டாரத்தையும் குழப்பத்தில் மூழ்கடித்தது.

அந்த சந்திப்பு குறித்து தமக்குக் கூட எதுவும் தெரியாது என அம்னோ தலைவர் அஹ்மட் ஸாஹிட் குறிப்பிட்டது வேடிக்கையாகவே உள்ளது என்பது ஒரு புறமிருக்க, பல நிலைகளில் அக்கட்சி பிளவுபட்டுள்ளது என்பதையும் இது உணர்த்துகிறது.

கடந்த 1987ஆம் ஆண்டில் நடைபெற்ற அம்னோ தலைவர் பதவிக்கான போட்டியில் மகாதீரிடம் தோல்வியடைந்த தெங்கு ரஸாலி அதன் பிறகு நாட்டின் முன்னணி அரசியலில் ஆர்வம் காட்டாதவராகவே இருந்து வந்துள்ளது நமக்குத் தெரியும்.

இந்நிலையில் திடீரென பேரரசரை சந்தித்தது மட்டுமின்றி முஹிடினுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளையும் அவர் செய்து வருவது சற்று வியப்பாகத்தான் உள்ளது.

சுமார் 33 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் பதவி மீது அவருக்கும் இப்போது ஆசை வந்துவிட்டதோ என எண்ணத் தோன்றும் அதே வேளையில், இவருடைய நடவடிக்கைகளில் மகாதீரின் பங்கு என்னவாக இருக்கும் என்பதனையும் ஏறத்தாழ நம்மால் யூகிக்க முடிகிறது. ஏனென்றால் மகாதீரும் அவருக்கு ஆதரவாக இருக்கும் இதர 4 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட இதே போன்ற நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை கொண்டுவர ஏற்பாடு செய்து வருகின்றனர்.

83 வயதுடைய தெங்கு ரசாலியின் நடவடிக்கைகளில் அம்னோ செயலாளர் அனுவார் மூசா உள்பட அக்கட்சியைச் சேர்ந்த பல உயர்மட்ட தலைவர்களும் அதிருப்தி கொண்டுள்ளனர்.

துணைப் பிரதமர் பதவியையும் மேலும் பல முக்கியமான அமைச்சுகளையும் கையகப்படுத்துவதற்கு முஹிடினிடம் பேரம் பேச தயாராகி வரும் அம்னோ தலைவர்கள் இதனால் சற்று குழம்பியுள்ளதாகத் தெரிகிறது.

இதற்கிடையே அம்னோவின் கோரிக்கைகளுக்கு இணங்கினால் முஹிடினின் பலம் குறைந்துவிடும் என முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் காலிட் சமாட் எச்சரித்துள்ளார்.

இப்படி எல்லா கோணங்களிலும் நெருக்குதல்களை எதிர்நோக்கி வரும் முஹிடினின் பாடு உண்மையிலேயே திண்டாட்டம்தான்.

இந்நிலையில் அன்வார் பிரதமராவதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்ற தனது வேட்கையை மகாதீர் தீவிரப்படுத்தி வருகிறார் என்ற மக்களின் யூகத்திற்கு ஏற்ப அறிக்கைகளும் வந்தவண்ணமாக உள்ளன.

முஹிடினுக்கான ஆதரவை அம்னோ மீட்டுக்கொள்ளக்கூடாது என்று குறிப்பிட்ட மகாதீர் அப்படியொரு செயல்பாட்டை தடுப்பதில் மும்முரம் காட்டி வருவதையும் மக்கள் உணராமல் இல்லை.

அன்வார் பிரதமரானால் நாட்டில் அரசாங்கம் இல்லாத நிலைதான் ஏற்படும் என்று மிக ஏளனமாக அவர் பேசிவருவதையும் மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.

இவ்வாறான குழப்பங்களுக்கெல்லாம் உச்சமாக விளங்குவது, அன்வாரை ஆதரிக்கும் அந்த 120க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பதுதான்.

அந்த ரகசியத்தை தெரிந்துகொள்வதற்கு உள்துறை அமைச்சின் வாயிலாக காவல் துறையினரைக் கூட முஹிடின் பயன்படுத்திவிட்டதாகத் தெரிகிறது.

ஆக இப்படிப்பட்ட எல்லா குழப்பங்களுக்கும் பின்னணியில் ஆட்சி அதிகாரம், பதவி சுகபோகங்களுக்கு முண்டியடித்து நிற்கும் சில அரசியல்வாதிகளின் பேராசைதான் என்றால் அது மிகையில்லை.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்சிபெறச் செய்வதற்கும் மக்களின் பொதுவான நன்மைக்குமா அவர்கள் இப்படி போராடுகின்றனர் என்ற ஐயப்பாடு எல்லாருடைய மனதிலும் எழுவது நியாயமான ஒன்றுதான்.

‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்பதும், திருடன் தரும் பணதிற்காகவும் பரிசு கூடைகளுக்கும் வாக்குகளை தாரை வார்த்து கொடுக்கும் மக்களின் போக்கும் மாற வில்லையென்றால் பக்காத்தானோ, பாரிசானோ, பெரிக்காத்தானோ, முவாஃபாக்காட்டோ, எந்த கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் மக்களின் வாழ்வில் வசந்தம் மலர வாய்ப்பே இல்லை என்பதே நிதர்சன உண்மை!