மலேசியத் தமிழ் அறவாரியம், ஒரு பார்வை – குமரன் வேலு

ஐ.ஏ.பி. எனப்படும் கல்வி மேலாண்மை தலைமைப் பயிற்சிக் கழகத்தில், 2016-2017 இல்  பணியாற்றியபோது, தமிழ் அறவாரியம் முன்னெடுத்த மாநாடுகள் சிலவற்றில் பங்கெடுத்துள்ளேன். என்னை ஒரு பேச்சாளராக அழைப்பார்கள்.

பெற்றோரியல் மாநாடு அவற்றில் ஒன்று. கல்வியியல் சார்ந்த வல்லுனர் எனும் அடிப்படையில் நானும் என் கருத்துக்களைப் பகிர்ந்திருக்கின்றேன். தொடர்ச்சியாகத் தமிழ் அறவாரியத்தின் சில நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

இருமொழித் திட்டம் (டி.எல்.பி.) தமிழ்ப்பள்ளிகளில் நுழைந்தபோது, அதைக் கண்டித்தது தமிழ் அறவாரியம், என் கருத்தையும் கேட்டார்கள். ஆங்கில மொழியில் ஆளுமையை அதிகரிக்க மாற்றுவழிகள் ஆயிரம் உண்டே என்றேன். எதற்குத் தமிழைக் கைவிட்டு ஆங்கிலத்தை நுழைக்க வேண்டும் என்றேன்.

மலேசியாவில் உள்ள தமிழ்சார்ந்த இயக்கங்கள் சில, மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று டி.எல்.பி.யை வரவேற்றன. அறிவியல், கணிதம் போன்ற பாடங்களை ஆங்கில மொழியில் பயில்வதற்கு அவர்கள் தமிழை விட்டுக்கொடுத்தார்கள்.

இன்றுவரை, தமிழ்ப்பள்ளிகளில் இருமொழி பாடத்திட்டம் (டி.எல்.பி.) தேவையற்றது எனும் கருத்தைத் தமிழ் அறவாரியம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனால், தமிழ்க்கல்வியின் அடையாளத்தில் தேய்வு உண்டாகும் என்றும், தமிழ்மொழியின் வளர்ச்சியில் தேக்கம் உண்டாகும் என்றும் தமிழ் அறவாரியம் கருதுகிறது.

தமிழ்க்கல்வி மலேசியாவில் நிலைபெறவும் அதன் கல்வித்தரம் உயரவும் ஆய்வுகள் செய்தும் திட்டங்களை முன்னெடுப்பதுவும்தான் தமிழ் அறவாரியத்தின் தலையாய பணி என்பதைக் குறுகிய காலத்திலேயே தெரிந்து கொண்டேன்.

இந்த இயக்கம் 2002-இல் தமிழ்க்கல்வி ஆர்வலர்கள், சமூகப் பற்றாளர்கள் சிலரால் தோற்றுவிக்கப்பட்டது. வழக்குரைஞர்கள் திரு எம் மனோகரன் (முன்னாள் மக்களவை உறுப்பினர்), திரு சி பசுபதி, திரு கா ஆறுமுகம், என்று பல புகழ்ப்பெற்ற ஆளுமைகளால் தொடங்கப்பட்ட இயக்கம் இது.

தமிழ் அறவாரியம் சொந்தமாக நிதி திரட்டித் தமிழ்மொழிசார்ந்த பல்வேறு திட்டங்களை முன்னெடுப்பதைக் கண்கூடாகக் கண்டேன். அதனால், தமிழ் அறவாரியத்தில் பணியாற்றுபவர்களை மிக உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்த்தேன். தன்னலம் கருதாது கட்டுக்கோப்புடன் அவர்கள் தொண்டாற்றுவதை நேரில் பார்த்தேன். தமிழ்க்கல்விக்காக தன்னலம் கருதாது பணியாற்ற தயார் நிலையில் இருக்கும் தமிழ் அறவாரியம் சீனக்கல்வியின் காவலனாக செயல்படும் Dong Zong போல செயல்படப் போகிறது என்ற நம்பிக்கையை என்னுள் ஏற்படுத்தியது.

2017-இல், தமிழ் அறவாரியத்தில் உறுப்பினராக இணைவதற்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நானும் அதே ஆண்டின் இறுதியில் உறுப்பினராகுவதற்கு இசைந்தேன்.

RM 1000 வெள்ளி கட்டி, என்னை ஆயுள் உறுபினராக இணைத்துக் கொண்டேன்.

அதன்பிறகு, 2018 தொடங்கி ‘துளி வெள்ளம்’ எனும் திட்டத்தின் கீழ் மாதம் RM 30 வெள்ளியைத் தமிழ் அறவாரியத்திற்கு நன்கொடையாக வழங்கி வருகிறேன். இது ஆண்டுற்கு RM 360.

என் மனைவியின் மைத்துனர், என் நண்பர்கள் என ஒரு 10 பேர்கள் மாதம் 30 வெள்ளி தமிழ் அறவாரியத்திற்கு நன்கொடை வழங்குவதற்கு ஏற்பாடு செய்தேன். ஆண்டிற்கு மொத்தம் RM 3600. ஓரிருவர் இப்போது நிதி வழங்குவதை நிறுத்தி விட்டதாக அறிகிறேன்.

கடந்த 2018-இல், தமிழ் அறவாரியத்தின் அப்போதையத் தலைவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ‘wheel of fortune’ எனும் நிகழ்ச்சிக்கு RM 2000 வெள்ளி நன்கொடை வழங்கினேன்.

2019-இல், தமிழ் அறவாரியம் நன்கொடை திரட்டுவதற்காக ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது, அந்த நிகழ்ச்சிக்கு RM 1000 வெள்ளி நன்கொடை கொடுத்தேன்.

மலேசியத் தமிழ் அறவாரியம், மிகச் சிறந்த ஆக்கப்பணிகளை மேற்கொள்ளும் இயக்கமாக இருப்பதைக் கண்டபிறகே சமூகக் கடப்பாடு கருதி தமிழ் அறவாரியத்தின் திட்டங்களுக்குத் தோள்கொடுக்க முனைந்தேன்.

தமிழ் அறவாரியம் முன்னெடுக்கும் நிபுணத்துவச் செயல்திட்டங்கள் :-

  1. மலேசியாவில் தமிழ்ப்பள்ளி, தமிழ்க்கல்வி, சிக்கல்கள், தேவைகள் பற்றிய ஆய்வினை மேற்கொண்டு ஆங்கிலத்தில் நூலாக (journals) வெளியிடுதல். கல்வியாளர்கள், பொதுமக்கள், அரசாங்கம் ஆகிய மூவகையினருக்கும் தகவல் கொடுக்கின்றார்கள்.
  2. தமிழ்ப்பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழி ஆளுமையை அதிகரிக்க 21 நாள் ஆங்கில மொழி முகாம்களை ஏற்பாடு செய்கின்றனர்.
  3. தமிழ்ப்பள்ளியின் பெற்றோர்களுக்குக் கல்வியின் அவசியம் பற்றியும் பிள்ளைகளின் படிப்பில் உதவும் வழிவகைப் பற்றியும் இம்பாக்கு (impak) எனும் பெயரில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கல்வியை வழங்கும் திட்டத்தை ஏற்பாடு செய்தல்.
  4. மலேசியாவில் உள்ள எல்லா தமிழ்ப்பள்ளிகளிலும் வாரியங்களை (School Board of Governors / Lembaga Pengelola Sekolah) அமைத்து, அவை செயல்பட வேண்டிய முறை குறித்த வழிகாட்டிகளைத் தயாரித்து கொடுத்தும், தலைமைப்பயிற்சிகளைக் கொடுத்தும் வருகின்றனர். இன்னும் சில பள்ளிகளில் வாரியங்கள் அமைக்கும் முயற்சிகள் தொடர்கின்றன. சீனக் கல்வி அமைப்பான Dong Zong கும், கல்வியமைச்சும் வியந்து பாராட்டும் அளவுக்கு இவ்வழிகாட்டி நூல் இருப்பதாக அறிந்தேன்.
  5. தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில், முதுகலை (masters), முனைவர் (PhD) படிப்புக்குத் தயார்படுத்தும் ஆய்வு முன்மொழிவு எழுதும் பயிற்சிப் பட்டறையை நடத்தி வருகிறது தமிழ் அறவாரியம். இந்தப் பயிற்சியின் வழி பயன்பெற்றவர்கள் நிச்சயமாக அதன் பயனை உணர்வார்கள்.
  6. தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கணித ஆளுமையைத் தமிழ்மொழியில் வளர்ப்பதற்கு “இராமானுஜன் கணித வட்டம்” எனும் திட்டத்தை முன்னெடுத்து பயிற்சிகளையும் போட்டிகளையும் நடத்தி வருகிறது. இன்று மலேசியாவில் புகழ்பெற்று விளங்கும் Science Fair எனும் அறிவியல் விழா கூட, ஒரு காலத்தில் தமிழ் அறவாரியத்தின் தொட்டிலில் வளர்ந்த குழந்தை என்பதை அங்குதான் அறிந்து கொண்டேன்.
  7. தமிழ்க்கல்வி வளர்ச்சி மாநாடு, பெற்றோரியல் மாநாடு, கல்விக் கருத்தரங்குகள் என நிகழ்ச்சிகள் பலவற்றையும் நடத்துகிறது தமிழ் அறவாரியம்.

கூகுள் தேடுபொறியில் ‘Tamil Foundation Malaysia’ எனத் தட்டினால் போதும் பல தகவல்களைப் பெறலாம். அண்மையில் கல்வி அமைச்சினால் அமைக்கப்பட்ட ‘மலேசியத் தமிழ்மொழிக் காப்பகம்’ எனும் நிறுவனத்தில் தமிழ் அறவாரியத்தின் பங்களிப்பும் கணிசமாக இருக்கிறது என்பதும் உண்மை. இன்னும் சில திட்டங்களைத் தமிழ் அறவாரியம் அவ்வப்போது முன்னெடுக்கிறது என்றும் அறிகிறேன்.

இப்படி பலவாறு தமிழ்க்கல்விக்குப் பங்காற்றிவரும் தமிழ் அறவாரியத்தைப் பற்றி, வெளியில் பொதுமக்களிடையே நல்ல எண்ணம் அல்லது அபிப்பிராயம் இருக்கிறதா என்று கேட்டால் மாறுபட்ட பதில்கள் கிடைப்பதைக் கண்டேன்.

கடந்த 2018-இல், ஒரு தமிழ் அமைப்பின் முதன்மை பொறுப்பில் உள்ள ஒருவரை சந்திக்க நேர்ந்தது. ‘தமிழ் அறவாரியம் என்றால் எனக்கு அழற்சி’ என்று அவர் சொன்னது என்னுள் பல கேள்விகளை எழுப்பியது. ஏன் தமிழ் அறவாரியத்தின் மேல் இத்தனை சினம்.  தமிழ்ப்பற்றுள்ள தமிழாசிரியர் ஒருவர் ‘தமிழ் அறவாரியம் என்றாலே எனக்கு கசக்கிறது’ என்றார்.

இன்னொருவர், இவர் புலனம், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் வலம் வரும் விமர்சகர், தமிழ் அறவாரியம் அரசாங்கத்திடம் பெற்ற நிதியின் கணக்கைக் கேட்டு தமிழ்மலர் நாளிதழில் கட்டுரை ஒன்று வெளிவந்திருப்பதைக் காரணம் காட்டி தமிழ் அறவாரியத்தின் மீது குற்றம் சுமத்தினார். மானாவாரியாகப் பலர் தமிழ் அறவாரியத்தின் மீது பழி சொல்லி வருகின்றார்கள்.

பெரும்பாலும், தமிழ் அறவாரியத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் / முன்பு பொறுப்பில் இருந்தவர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டாகத்தான் இவற்றைப் பார்க்க வேண்டுமே ஒழிய, தமிழ் அறவாரியம் முன்னெடுத்துவரும் திட்ட்டங்களின் விளைபயன் குறித்த எந்த விமர்சனமும் இல்லை. வீண் பழிச்சொற்களால் ஓர் இயக்கத்தின் சீர்மிகு திட்டங்கள் வீழ்ந்துவிடக் கூடாது என நினைக்கிறேன்.

இந்த நாட்டிலே தமிழ்க்கல்விக்கு மிகப்பெரும் அரணாக விளங்க வேண்டிய பொறுப்பு தமிழ் அறவாரியத்திற்கு உண்டு. சீன்க்கல்விக்கு Dong Zong போன்று, தமிழ்க்கல்விக்குத் தமிழ் அறவாரியம்தான் காவலன் எனும் பெயரைத் தமிழ் அறவாரியம் பெற வேண்டும் எனத் தமிழ் அறவாரியத்தின் ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் நான் விரும்புகிறேன்.

தமிழ் அறவாரியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்பவர்கள் தமிழ் அறவாரியத்திற்கு ஏற்படும் புகழுக்கும் இகழ்ச்சிக்கும் பொறுப்பேற்றுக்கொள்ளும் நிலையில் இருப்பதை எண்ணிப்பார்த்தல் நன்று.

தமிழ் அறவாரியத்தின் கனவு மெய்ப்பட வேண்டும்.