நின் உணர்வுகளுக்கும் கனவுகளுக்கும் என்றும் உயிர் இருக்கும்

இந்திய சமுதாயம், சிலாங்கூர் மாநிலத்தின் ஓர் அற்புதமான தலமைத்துவ பண்புகளைக்கொண்ட சமூக ஆர்வலரை இழந்தது.

சரவண பிரபாகர், கிள்ளான் வட்டாரத்தில் இயக்கும் சமூக இயக்கங்களிலும், தமிழ்ப்பள்ளிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு ஒரு முன்னுதாரண சேவையாளராகச் செயல்பட்டவர். சரியாகவும், முறையாகவும் அறிவுப்பூர்வமாகவும் செயலாற்றும் தன்மை கொண்டவர் பிரபாகர்.

நேற்று முன்தினம் (5.11.2020) மாரடைப்பால் இறந்த பிரபா, 23.8.1967-இல் பிறந்தவர் ஆவார்.

தன்னலமற்ற அவரின் தன்மையும், எப்பொழுதும் புன்னகை கொண்ட அவரின் எடுப்பான தோற்றமும் அவருடன் இனைந்து செயலாற்றியவர்களின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் ஓர் அற்புத உணர்வாகும்.

சிலாங்கூர் தமிழ்ச் சங்கத்தின் நடப்பு பொதுச்செயலராகவும், சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் முக்கிய பணிகளில் ஒன்றான, மாணவர்களுக்கான கணினி தகவல் தொழில்நுட்ப கல்வி திட்டத்தின் மேற்பார்வையாளராக செயலாற்றியவர் பிரபா. அந்தப்பள்ளி வாரியத்தின் பொருளாளராக இருந்த அவர், புக்கிட் இராசா தமிழ்ப்பள்ளி வாரியத்தின் செயலாளர் பொறுப்பையும் வகித்தார்.

ஒருங்கிணைக்கப்பட்ட சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி வாரியங்களின் இயக்கத்தின் பொருளாளராகவும், அதோடு கிள்ளான் வட்டார ரோட்டரி கிளப்பின் செயலவையிலும் இருந்து தொண்டூழிய பணிகளை சமூக மேம்பாட்டுக்காகச் செய்தவர் பிரபா.

தமிழ்ப்பள்ளியில் கல்வி பயிலாத போதிலும் தமிழ்மொழி மீது தீராத பற்று கொண்டிருந்த, இவர் தனது குழந்தைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பியதோடு தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுக்குச் செம்மையாகச் சேவையாற்றியவர்.

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்- தோன்றலின் தோன்றாமை நன்று – என்ற குறளுக்கு இலக்கணமாக திகழ்ந்த சரவண பிரபாகரின் மறைவு ஓர் ஈடுசெய்ய இயலாத இழப்பாகும்.

இவரது இழப்பினால் துன்புறும் மனைவி, குழந்தைகள், குடும்பத்தினர்கள் ,உற்றார் உறவினர்களுக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களும் ஆறுதல்களும்.

நீங்காத துயிலில் நீரிருந்தாலும் நண்பா, நின் உணர்வுகளுக்கும் கனவுகளுக்கும் என்றும் உயிர் இருக்கும்.

– சிலாங்கூர் தமிழ்ச்சங்கத்தின் இரங்கல் செய்தி – இலா சேகரன், தலைவர், செயலவையினர்,  சிலாங்கூர் தமிழ்ச்சங்கம் – மலேசியா.