தமிழ்ப்பள்ளிகள் தரத்தில் தலைநிமிர்ந்து நிற்கின்றன! – குமரன் வேலு

தேசியப்பள்ளி சீனப்பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்கள் தமிழ்ப்பள்ளி மாணவர்களை விடவும் அறிவியல் கணிதப் பாடங்களில் கெட்டிக்காரர்களா?

இதோ தரவுகள் காட்டும் உண்மை:-

கல்வியமைச்சின் ஆய்வுப் பிரிவான EPRD 2016-ல் 6-ஆம் ஆண்டு (UPSR) பொதுத்தேர்வு முடிவுகளை ஆய்வு செய்தது.

தேசியப் பள்ளி, சீனப்பள்ளி, தமிழ்ப்பள்ளியில் பயிலும் மூவின மாணவர்களின் அறிவியல், கணிதப் பாடங்கள் பற்றியத் தேர்ச்சி விகிதத்தை அது ஆய்வு செய்தது.

அதில், தமிழ்ப்பள்ளியில் பயிலும் இந்திய மாணவர்களின் அறிவியல், கணிதப் பாடங்களின் தேர்ச்சி, மற்ற மொழிப்பள்ளியில் பயிலும் இந்திய மாணவர்களை விடவும் சிறப்பாக இருப்பது தெரிய வருகிறது.

தேசியப் பள்ளி, சீனப் பள்ளி, தமிழ்ப்பள்ளியில் பயிலும் இந்திய மாணவர்களின் அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களின் தேர்ச்சி விகித ஒப்பீடு :-

Gred Purata Mata Pelajaran (GPMP)

தமிழ்ப்பள்ளிசீனப் பள்ளிதேசியப் பள்ளி

அறிவியல்

2.683.68

3.20

கணிதம்3.083.77

3.35

(குறிப்பு: எண்கள் சிறிதாக சிறிதாக தேர்ச்சி சிறப்படைகிறது என்று பொருள்)

# தேசிய அளவிளான தேர்ச்சி விகித ஒப்பீடு

அறிவியல்

கணிதம்

2.85

3.23

# இனங்களுக்கிடையிலான ஒப்பீடு

அறிவியல்கணிதம்

இந்தியர்

2.683.08
சீனர்2.34

2.30

மலாய்க்காரர்2.93

3.42

தமிழ்ப்பள்ளியில் பயிலும் இந்திய மாணவர்களின் அறிவியல் (2.68) பாடத்தின் தேர்ச்சி, மலாய்ப்பள்ளியில் பயிலும் மலாய் மாணவர்களுடன் (2.93) ஒப்புநோக்கையில் சிறப்பாக இருப்பது தெரிய வருகிறது.

கணிதப் பாடத்தில் (3.08) இந்திய மாணவர்கள் மலாய் மாணவர்களை விடவும் சிறந்த தேர்ச்சி பெற்றிருக்கின்றார்கள். தேசிய விகிதத்தை விடவும் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கூடுதலாக இருக்கிறது.

சீன மொழியில், அதாவது தாய்மொழியில் அறிவியல் (2.34) மற்றும் கணிதம் (2.30) படிக்கும் சீனப்பள்ளி, சீன மாணவர்கள் தேர்ச்சியில் இந்திய (2.68/3.08), மலாய் (2.93/3.42) மாணவர்களைப் பின்னுக்குத் தள்ளி முன்னணியில் இருப்பதும் தெரிய வருகிறது.

சீனர்கள் பாரம்பரியமாகக் கணிதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் இனம். அண்மையக் காலமாக, அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்றவாறு வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்ட இனம். அவர்களின் கலாச்சாரப் பின்னணியும் ஈடுபாடும் கணிதம் அறிவியல் பாடங்களில் அவர்களின் வெற்றிக்கு உதவுகின்றன என நம்பலாம்.

இந்த ஒப்பீட்டில் இருந்து இரண்டு விடயங்கள் புலனாகின்றன :-

  1. தமிழ்ப்பள்ளியில் படிக்கும் இந்திய மாணவர்கள் மற்றமொழிப் பள்ளியில் பயிலும் இந்திய மாணவர்களை விடவும் அறிவியல், கணிதத்தில் சிறந்து விளங்குகின்றனர்
  2. சீன மொழியில் பயிலும் சீனக் குழந்தைகளின் அறிவியல் / கணிதத் தேர்ச்சி, அவ்வப்போது ஆங்கிலத்திலும் பயிலும் மலாய், இந்திய மாணவர்களை விடவும் சிறந்தத் தேர்ச்சியாக இருக்கின்றது.

தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் சீனப் பள்ளிகளுக்கு ஒரு கல்வி வருகை மேற்கொண்டு, அங்கு எவ்வாறு அறிவியல் கணிதம் கற்பிக்கப்படுகிறது, என்ன திட்டங்களைச் செயல்படுத்துகின்றனர் என்பதை ஆய்வு செய்தால் (Benchmark), தமிழ்ப்பள்ளிகளில் அறிவியல் & கணிதம் போன்ற பாடங்களின் வளர்ச்சிக்கு மேலும் உதவும்.

ஏன் அறிவியல் & கணித அறிவு தேவை?

அறிவியல், கணிதப் பாடங்களில் தேர்ச்சி பெறுவது என்பது எல்லோரும் விஞ்ஞானியாகவும் டாக்டராகவும் பொறியியலாளராகவும் கணித மேதைகளாகவும் ஆகிவிட வேண்டும் என்பதற்காக அல்ல.

அறிவியல் அறிவு ஒருவகை பகுத்தறிவு. சான்றுகள் அடிப்படையில் சிந்திக்கவும் அதை வாழ்க்கைக்குப் பயன்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும்.

இனிப்பு சாப்பிட்டு விட்டு பல்துலக்காவிட்டால் பல் சொத்தை ஏற்படும் என்பது அறிவியல் அறிவு. அதை அறிந்துகொண்டு படுக்கப்போகும் முன் பல்துலக்கினால் உங்களுக்கு அறிவியல் அறிவு பயன்படுகிறது என்று பொருள்.

அதையேத் தொடர்ந்து கடைபிடித்தால், அறிவியல் அறிவினால் பயன் உண்டு. இதற்கெல்லாம் நீங்கள் டாக்டராக, எஞ்சினியனராக இருக்க வேண்டும் என்பதில்லை. இந்த அறிவியல் அறிவை ஆரம்பப் பள்ளியில் தமிழில் படித்தால் என்ன குறைந்து விடும்?

அறிவு உள்ள எல்லோரும் அறிவியல் மேதையாகவோ கணித மேதையாகவோ வந்துவிட முடியாது.

ஆனால், ஆர்வமும் முயற்சியும் ஈடுபாடும் உள்ளவர்கள் உறுதியாக வெற்றி பெறுவார்கள். அதற்கு மொழி ஒரு தடையே இல்லை.

தமிழ்ப்பள்ளியில் படித்து …

அறிவியல் மேதையான அக்கினிச் சிறகு அப்துல் கலாமும், இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியாளர் சிவதாணுவும், இன்னும் பலரும் நல்ல எடுத்துக் காட்டு. நம்ம ஊர் முனைவர் ஜெயந்தி, இப்பொழுது நியுசிலாந்தில் விஞ்ஞானியாக இருக்கின்றார். அவரும் தமிழ்ப்பள்ளியில்தான் படித்தார்.

இந்தியப் பெற்றோர்கள் தமிழ்ப்பள்ளிகள் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்து பிள்ளைகளைத் தமிழ்பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.

தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பாமல் வேற்று மொழி பள்ளிக்கு அனுப்பும் இந்தியப் பெற்றோர்கள் சிந்திப்பார்களாக?