புதிய இயல்பில் தீபாவளி: சேமிப்புக்கு முன்னோடி!

இராகவன் கருப்பையா- இவ்வாண்டின் தீபாவளி கொண்டாட்டங்கள் நம் நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதுமே ஒரு புதிய இயல்பில் கொண்டாடப்பட்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றுதான்.

கோறனி நச்சிலின் கோரத்தாண்டவத்தில் நாம் அனைவருமே சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் போதிலும் நரகாசுரனின் வேண்டுகோலுக்கிணங்க தீபம் ஏற்றி வாழ்வில் ஒளிவீசச்செய்யும் தீபாவளியை எவ்வகையிலும் நாம் புறக்கணிக்கவில்லை.

ஆனால் இவ்வாண்டின் தீபாவளி பண்டிகை நடமாட்டக் கட்டுப்பாட்டுக்கிடையே கொண்டாடப்பட்டதால் அனைவருக்குமே அது வித்தியாசமானதொரு அனுபவம் என்பதில் ஐயமில்லை. நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்குக் கட்டுப்பட்டு வீட்டினுள்ளேயே முடங்கிக்கிடந்த நமக்கு இவ்வாண்டின் தீபத்திருநாளும் ஓரளவு சுருங்கித்தான் போனது.

வழக்கம்போல ஆட்டம்பாட்டமாகவும் கூட்டம்கூட்டமாகவும் கொண்டாட இயலவில்லை. மாறாக மிகக்கவனமாகவும் பாதுகாப்பாகவும் சிக்கனமாகவும், அதே சமயம் அதன் மகத்துவம் கொஞ்சமும் குறையாமலும் கொண்டாடி முடித்தோம்.

இருந்த போதிலும் இதுவெல்லாம் காலத்தின் கட்டாயம், தவிர்க்க முடியாத சூழ்நிலை என்பதையும் நாம் அவசியம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

எது எப்படியாயினும் நம் வாழ்வில் நாம் எதிர்நோக்கும ஒவ்வொரு பிரச்னைக்குப் பின்னாலும் வாய்ப்பொன்றும் ஒளிந்திருக்கும் என்பது நியதி.

அடக்கம் ஒடுக்கமாக மிதமான தீபாவளியைக் கொண்டாடிய நமக்கு அதற்கான செலவுகளும் கனிசமான அளவுக்குக் குறைந்து ஓரளவு பண சேமிப்புக்கும் வழி வகுத்ததை மறுக்க இயலாது. அப்படிப் பார்த்தால் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற கூற்றும் இந்த சூழலில் நியாயமான ஒன்றுதான்.

இந்நாட்டில் நம் சமுதாயம் தாழ்த்தப்பட்டு ஒதுக்கப்பட்டு  உதாசினப்படுத்தப்பட்டிருக்கிறதேத் தவிர அறிவிலும் ஆற்றலிலும் திறமையிலும் எவ்வகையிலும் நாம் சளைத்தவர்கள் அல்ல.

ஆனால் நம்மில் பலர் சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காததால் பொருளாரத்தில் நலிந்து தொடர்ந்து பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறோம்.

தீபாவளி தினத்திற்கென செலவிடப்படும் தொகையைவிட தொடர்ந்தாற்போல் சுமார் ஒரு மாத காலத்திற்கு நடைபெரும் விருந்தோம்பல் நிகழ்ச்சிகளுக்கே மிக அதிகமான பணம் செலவிடப்படுவதாக நம்பப்படுகிறது. குறிப்பாக மதுபானத்திற்கு கோடிக்கணக்கில் செலவிடப்படுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

ஆக அரசாங்கத்தின் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைபடி மாநிலங்களுக்கிடையில் மட்டுமின்றி பெரும்பாலான மாநிலங்களில் மாவட்டங்களுக்கிடையிலும் கூட பயணிக்க முடியாத நிலையில் இத்தகைய விரும்தோம்பல் நிகழ்வுகள் இவ்வாண்டு கிட்டதட்ட 80 விழுக்காட்டுக்கும் மேல் குறைந்துள்ளதாக நம்பப்படுகிறது.

எனவே இத்தகைய கட்டாயத்திலான சூழலை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு சேமிப்புக்கு நாம் முன்னுரிமை வழங்குவது சாலச்சிறந்த செயலாகும்.

அரசாங்கம் அண்மையில் அறிவித்த அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நமது கதி என்ன என்று நாம் எல்லாருமே அறிந்த ஒன்றுதான். இந்நாட்டில் இன்னமும் நாம் ஒரு பாவப்பட்ட, கேற்பாரற்ற சமூகம் என்ற அவலம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையை அந்த வரவு செலவுத் திட்டம் மிகத் தெளிவாக நமக்கு புலப்படுத்தியுள்ளதையும் நாம் அறியாமல் இல்லை.

நமது அரசியல் தலைவர்களோ அரசு சாரா இயக்கங்களோ பொது மக்களோ எவ்வளவு கூக்குரலிட்டாலும் நிலைமையில் மாற்றம் ஏற்பட வாய்பிருப்பதாகத் தெரியவில்லை. காலங்காலமாக இது நமக்கு பழக்கப்பட்டுவிட்ட ஒன்றுதான்.

எனவே விரும்பியோ விரும்பாமலோ நம் கையே நமக்குத் துணை என்ற நிலையில் நம் வாழ்வின் இயல்பை மாற்றிக்கொண்டு வாழ்க்கைப் போராட்டத்தை நாம் தொடரத்தான் வேண்டும்.

பொருளாதார வலிமை நமக்குக் கொடுக்கும் துணிச்சலுக்கு வேறு எதுவுமே ஈடு இணையில்லை என்பதும் நாம் அறியாத ஒன்றல்ல.

ஆக சேமிப்புக்கு இவ்வாண்டுத் தீபாவளி நமக்கு வழங்கியுள்ள இந்த அரிய வாய்ப்பை ஒரு முன்னோடியாக பயன்படுத்திக்கொண்டு பொருளாதார வளப்பத்திற்கு பாதையை அமைத்துக்கொள்வது அவசிமாகும்.

சீனர்களைப் போன்று நமது இரத்தத்திலும் ‘சேமிப்பு’ என்ற ஒரு அம்சத்தை ஊறவிடச் செய்து அதனை ஒரு வாழ்க்கை நடைமுறையாகவே ஏற்படுத்திக்கொள்வது சிறப்பாகும்.

உடனடியாக இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் இந்த நூற்றாண்டின் பிற்பகுதியிலாவது இந்தாட்டில் நம் சமூகம் பொருளாதார வலிமை பெற்ற ஒரு சக்தியாக வலம் வர இதுபோன்ற வாழ்க்கை நடைமுறைகள் நிச்சயம் உதவும்.