நம்மை எப்பொழுதும் உறுத்துவது என்ன? நம்முடைய எதிர்காலம் எப்படி இருக்கும்? எப்படிப்பட்ட துயர்கள், இடர்கள் உருவாகலாம்? அவற்றைத் தவிர்ப்பது எப்படி? தவிர்க்க இயலுமா?
இதுபோன்ற கவலைக்குரிய கேள்விகள் எழுவது இயல்பு என்பார்கள்.
நம் மூதாதையர் எங்கிருந்தோ வந்தார்கள். அவர்கள் பிறந்தநாட்டை விட்டுப் பிற நாடுகளுக்குச் சென்றார்கள். புதுவாழ்வைத் தேடி சென்றார்கள், பாதுகாப்பான வாழ்க்கையைத் தேடி சென்றார்கள்.
அவர்கள், மசிடோனியாவின் மாவீரன் அலெக்ஸாந்தரைப் போல் பிற நாடுகளை ஆக்கிரமிக்கும் நோக்கம் கொண்டிருக்கவில்லை அல்லது மங்கோலிய பேரரசன் ஜென்ஜிஸ் (அல்லது ஜெங்கிஸ்) கான் போல் மாபெரும் சாம்பிராஜியத்தைக் காணவோ, நிர்மாணிக்கவோ முயற்சிக்கவில்லை.
வாழ்க்கை தற்காலிகமானது
புதுவாழ்வு, பாதுகாப்பு, பொருளாதார விருத்தி, பொருளாதார பாதுகாப்பு, நியாயமான, நேர்மையான வாழ்க்கை போன்ற சாதாரண அம்சங்களைக் கொண்ட வாழ்க்கையை விரும்பினார்கள்; தேடினார்கள். அதற்காகவே உழைத்தார்கள். மரித்தார்கள். அத்தகைய வாழ்க்கை தற்காலிகமானது என எண்ணினர், நம்பினர். தங்களின் உற்றார் உறவினர்களின் நட்பை, அன்பை அரவணைக்க முடியாமல் துறவிகள் போல் வாழ்ந்தனர்.
ஆமாம், துன்பங்களைச் சுமந்து வாழ்ந்தார்கள். இன்பம் கனவாக இருந்திருக்கலாம். அவர்கள் பட்ட துன்பங்கள் கொஞ்சம் நஞ்சமா?
அப்படிப்பட்ட வாழ்க்கையை நாடி சென்றவர்கள், இந்த நாட்டுக்கும் வந்தார்கள். திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்பது பண்டைகால பொருளாதார வாழ்க்கையின் அடிப்படை தத்துவமாக இருந்தது என்றால் தவறாகுமோ? ஆகாது! அதுதான் உண்மை. அதைத்தான் நம் மூதாதையர்கள் பேணி வாழ்ந்தார்கள். இன்றும் அத்தகைய பொருளாதார வாழ்க்கையைத் தேடி, இங்கு வருகின்ற பிற நாட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடவில்லை. இப்படிப்பட்ட எண்ணம் உலக மக்களிடம் பரவலாக இருப்பதைக் காணலாம்.
பல நாடுகளுக்கு வாழ்வைத் தேடி போனவர்கள் புகுந்த நாட்டு வாசிகளின் வாழ்க்கைக்கு எவ்வித பாதகமும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டது மட்டுமல்ல, அந்தக் குடிமக்களின் வாழ்வும் பாதுகாப்புடன் இருக்க உழைத்தார்கள் என்றால் அதில் குறை காணமுடியுமா?
அவ்வாறு இந்த நாடுகளிலோ, பிற நாடுகளிலோ குடியேறியவர்கள் நிரந்தரமாகத் தங்கவுமில்லை; அப்படி ஒரு மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளவும் இல்லை என்று கூட சொல்லலாம். ஆனால், குடியேறிய நாடுகளைத் தங்களின் நாடாக ஏற்றுக்கொள்வோரின் எண்ணிக்கையும் குறைவானது அல்ல.
நாடு வளம் பெற உழைத்தார்கள்
தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் இருந்து குடியேறினர். அங்கு வாழும் மக்களின் வேதனையில், சோதனையில், கவலைகளில் பங்கு கொண்டார்கள். நாடு வளம் பெற உழைத்தார்கள். கடும் நோய்களுக்கு ஆளானார்கள், அவதியுற்றார்கள், மரித்தார்கள். இவை யாவும் வரலாற்று உண்மைகள். கட்டுக்கதைகள் அல்ல.
புகுந்த நாட்டில் அவர்களின் கரிசனம் விஞ்சிடவே, பிறந்த நாட்டை மறந்தார்கள். புது நாட்டின் வளமும், சுபிட்சமும், நிரந்தர பாதுகாப்பும் அவர்களின் அசைக்க முடியாத பற்றாக மாறியது. தங்களின் வாழ்க்கையைப் பற்றிய அக்கறை, கவனம் குறைந்தது.
ஆனால், எதிர்கால சந்ததியின் நலனைக் கருத்தில் கொண்டு உழைத்தார்கள், தங்களின் இளமையைத் தானமாகத் தந்தார்கள். தங்களின் வாழ்க்கையையே புகுந்த நாட்டின் நலனுக்காக அர்ப்பணித்தார்கள். இன்று பலர் தவறாக நினைப்பது போல், வெறும் கையோடு வரவில்லை.
உழைப்பே உயரிய பண்பு. சளைக்காத உழைப்பு, மனஉறுதி, மாண்பு, நேர்மை, நாணயம், தர்மம், தெய்வ நம்பிக்கை ஆகிய உயரிய குணாதிசயங்களைப் பாரம்பரியமாகக் கொண்டிருந்தார்கள். அவையே அவர்களின் பாரம்பரிய பொக்கிஷங்களாக மதித்து பாதுகாத்தனர். ஒரு பொழுதும் அவற்றை விட்டுக்கொடுக்கவில்லை; விட்டுக்கொடுக்கும் எண்ணம் இருந்ததும் இல்லை.
காலம் மாறியது. வெள்ளையர்களின் கொடுமைமிகுந்த, அவமானமிக்க, அடிமைப்படுத்தப்பட்ட வாழ்வில் இருந்து விடுபடும் காலம் பிறந்தது. சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற வேட்கையும் மிகுந்தது.
அந்தச் சுதந்திர நீரோட்டத்தில் எல்லா இன மக்களுடன் இணைந்து சுதந்திர நாட்டைக் காண உயர்வான எண்ணத்தை விழுமிய ஒற்றுமை நோக்கத்தை வெளிப்படுத்தினர். சுதந்திர நாடு எனும்போது அது மக்களாட்சியாக இருக்க வேண்டும் என்ற அரசியல் தத்துவத்திற்கு மதிப்பளித்து,
அது வலுபெற எவரும் தயங்கவில்லை. புலம்பெயர்ந்து வந்தவர்களின் சந்ததியினர் நாட்டின் நலனைக் கருதி, தங்களின் கோரிக்கைகளில் கட்டுப்பாட்டை விதித்துக் கொண்டார்கள். ஆமாம், அரசியல் சுதந்திரம் தேவை. ஜனநாயக வாழ்க்கை தேவை.
அடிமைத்துவ வாழ்க்கைக்குச் சாவுமணி
மனிதனுள் மனிதனாக வாழ வேண்டும் என்கின்ற உயர்ந்த எண்ணம் உறுதி பெறவே நாட்டின் புது அரசியல் அமைப்பில் பங்குபெற்றோர்க்கு எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு என்று பாரதியார் பாடியதை நினைவுகூர்ந்து முன்னேற்றம் காண விரும்பியது தவறாகாது. அது பேராசை அல்ல; நாட்டின் மீது கொண்ட பற்று என்றால் மிகையாகாது.
அரசியலில் விட்டுக்கொடுக்கும் கலாச்சாரம் மிகவும் முக்கியமான ஒன்று என்பார்கள். அதை மதித்து நடந்த சமுதாயத்தைத்தான் கண்டோம். அன்று நம் மூதாதையர் எதிர்பார்த்தது என்ன? காலனித்துவ ஆட்சியோடு அடிமைத்துவ வாழ்க்கைக்குச் சாவுமணி அடித்துவிட்டோம் என்ற ஆணித்தரமான நம்பிக்கை. அடிமை எண்ணத்துக்கு இடந்தராத சமுதாயத்தைக் காணுவோம் என்று கங்கணம் கட்டினார்கள். அது நடந்ததா? அது ஒரு பெரும் கேள்விக்குறியாகத் திகழ்கிறது.
காலம் மாறிவிட்டது. இந்தக் காலகட்டத்தில் நாம் எதை எதிர்பார்க்கிறோம்? நம்முடைய எதிர்காலத்தைப் பற்றி கணக்கிடுகிறோமோ? நம்முடைய மூதாதையர் போல நம்முடைய எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்புக்காக உழைக்கிறோமா? அல்லது அடிமை மனப்பான்மையைத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டுப் போக நினைக்கிறோமா?
சந்தேகம்தான். ஏனெனில், நாம் நினைத்தாலும் அதற்கு இடையூறாகச் சில சக்திகள் செயல்படுவதையும் நாம் அறியாதது அல்ல. ஆனால், நம்மிடம், நமக்காக விட்டுச் செல்லப்பட்ட சொத்து என்னவெனில், எல்லா துன்பங்களையும், இடர்களையும் தாங்கிக் கொள்ளும் மனவலிமை. அதுவே, நாம் பெற்றுள்ள அற்புதமான பொக்கிஷம்.
நம் மூதாதையர் மொழி வளமும், அறிவு வளமும், விவேகமும், நிறைந்தவர்களாகத் திகழ்ந்தனர். அப்படிப்பட்டவர்கள் விட்டுச்சென்ற முதுமொழிகளில் ஒன்றுதான்,
சமுதாய சீர்கேடுகளுக்குப் பொருளாதார அநீதியே காரணி
மரம் தம்மிடம் அடைக்கலம் பெற வருவோர்க்கு நிழல் நல்குகிறது. ஆனால், அது வெயிலில் காய்கிறது. மரம் பழங்களைத் தருகிறது. பாகுபாடின்றி எவர் வேண்டுமானாலும் அந்தப் பழங்களை எடுத்து செல்லலாம். அதிகாரத்தில் இருப்பவர்கள் இதிலிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும்? மரத்தைப் போல எல்லோருக்கும் பாதுகாப்பும், நாட்டு பொருள்வளத்தில் நியாயமான பங்கும் கொடுப்பதுதான் தர்மம்.
அரசியலில், ஆட்சியில் சங்கடங்களுக்குக் குறைவு இருக்காது. அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல், சகித்துக் கொண்டு புதுவழிகளைக் கண்டுபிடித்து பொருளாதார நீதி வழங்குவதில் மனம் உறுதியாக இருக்க வேண்டும். குடிமக்கள் எவரும் அவதிப்படக்கூடாது. எல்லோரும் நியாயமாக நடத்தப்பட வேண்டும். அதுவே அறம் காக்கும் பண்பாக ஏற்றுக்கொள்ளப்படும். பொருளாதார பாகுபாடு காணப்படும் நாட்டில் நல்லெண்ணத்தைக் காண்பது அரிது, சமுதாய சீர்கேடுகளுக்குப் பொருளாதார அநீதி காரணியாகிவிடும் என்பது திண்ணம்.