தமிழ்ப்பள்ளிக்கான அரசாங்க பட்ஜெட் போதுமானதா?- சுப்ரமணியன் இராகவன்

நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளிகள் 2012 ஆம் ஆண்டு முதல், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் காலத்தில் அதிகமான நிதியை பெற்றன. அதன் வழி ஒரு புதிய தோற்றத்தையும் கண்டன என்பது நாம் அறிந்த ஒன்று. பின்வரும் பட்டியல் தமிழ்ப்பள்ளிகள் கண்ட அந்த மாற்றத்தை காட்டுகிறது.

  1. தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுத் திட்ட வரைவு குழு (PTST), பிறகு SEDIC
  2. இந்தியத் துணைக் கல்வி அமைச்சர்
  3. 7 புதிய தமிழ்ப்பள்ளிகள்,
  4. தமிழ்ப்பள்ளி மேம்பாட்டு வரைவு குழுவின் முயற்சியில் 13 தமிழ்ப்பள்ளிகளில் மேம்பாட்டுத் திட்டம்,
  5. PRK2012 – 37 தமிழ்ப்பள்ளிகள் உட்படுத்திய 2012 ஆம் ஆண்டு தமிழ்பள்ளிகள் சிறப்பு மேம்பாட்டுத் திட்டம்,
  6. PRK2013 – 3 தமிழ்ப்பள்ளிகள் உட்படுத்திய 2013 ஆம் ஆண்டு தமிழ்ப்பள்ளிகள் சிறப்பு மேம்பாட்டுத் திட்டம்,
  7. மறுசீரமைப்பு பணிகளுக்கு 2015 முதல் 50 மில்லியன் ஒதுக்கீடு, மொத்தம் 250 மில்லியன் 2020 வரை
  8. 2017 பாலர் பள்ளி திட்டம், 33 பள்ளிகளில் பாலர் பள்ளிகள் அமைக்கப்பட்டன.

ஆக, ரிம 1 பில்லியனுக்கு  மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்கள் கடந்த 10 ஆண்டு காலங்களில் தமிழ்ப்பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டன. 60க்கும் மேலான தமிழ்ப்பள்ளிகள் இடமாற்றம், புதிய இணைக்கட்டடம் பெற்றுப் புதிய பொழிவுடன் காட்சி தருவதை பார்க்க முடிகின்றது.

பல பள்ளிகள் தொழில்நுட்ப ரீதியாகப் பல சவால்களை எதிர்நோக்கியதால், குறிப்பாக நில உரிமை பிரச்சனை காரணமாக மிகப்பெரிய தாமதங்களை எதிர்நோக்கின, சில பள்ளிகள் இன்று வரை எதிர்நோக்கி வருகின்றன.  2014ல் ஆரம்பிக்கப்பட்ட சில கட்டுமானம் திட்டங்கள் இன்றும் முடிவடையாமல் இருக்கின்றது.

50 மில்லியன் மறுசீரமைப்பு நிதி

2021 ஆம் அரசின் நிதி அறிக்கையில் முதலில் தனி நிதி ஒதுக்கீடு செய்யாதது இந்திய சமுதாயத்தில் மிகப் பெரிய அதிருப்தியைக் கொடுத்தது. பிறகு 29.9 மில்லியன் என்று அறிவிக்கப்பட்டது. புதிய அறிவிப்பில் நாம் மகிழ்ச்சி அடைந்ததாகத் தெரியவில்லை.

வருடாந்திர 50 மில்லியன் மறுசீரமைப்புக்கான ஒதுக்கீடு தொகையில் பல பள்ளிகள் பயன் பெற்றன என்பதனை மறுக்க முடியாது. அதுவும் பள்ளிக்கு நேரிடையாகப் பள்ளி மேலாளர் வாரியங்களின் மூலம் வழங்கப்பட்டது. இதன் மூலம் முடங்கி கிடந்த பள்ளி மேலாளர் வாரியங்கள் உயிர்ப்பிக்கப்பட்டன. தமிழ் அறவாரியம் முழு மூச்சாக ஈடுபட்டு 480க்கும் மேலான பள்ளிகளில் வாரியங்கள் அமைக்கப்பட்டன.

பல பள்ளிகள் சிறப்பாகச் செயல்பட்டுப் பள்ளியில் நிலவிய பல பழுதுகளைச் சரி செய்தன. குறிப்பாகப் பழுதாக இருந்த கழிப்பறை, மின்சார கம்பிகள், தண்ணீர் குழாய்கள், கூரை பிரச்சனை, கால்வாய் சீரமைப்பு ஆகிய மராமத்து வேலைகள் சிறப்பாக செய்யப்பட்டன, சில பள்ளிகள், நிர்வாகத் திறனால் இந்த நிதியை கொண்டு பள்ளிக்கான இணைக்கட்டம் அமைத்தல், அறிவியல்/கணினி போன்ற இதர முக்கிய வசதிகளை மேம்படுத்திக்கொண்டன.

நிதியை யார் கையாள்வது?

குறைகளுக்கும் பஞ்சம் இல்லை. நிதியை யார் கையாள்வது – தலைமையாசிரியரா? வாரியத் தலைவரா?, எந்த மறுசீரமைப்பு பணிகள் முக்கியம் – பள்ளி சொல்வதா? வாரியம் சொல்வதா? பெற்றோர் ஆசிரியர் சங்கம் சொல்வதா? வட்டார தலைவர் சொல்வதா?. யாருக்குக் குத்தகை வழங்குவது?, வாரிய பதிவை ரத்துச் செய்து வேண்டியவர்களை கொண்டு புது வாரிய குழுவை அமைப்பது, பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக வாரிய உறுப்பினர்கள் கல்வி இலாகாவில் / போலீஸ் / லஞ்ச ஒழிப்பு இலாகாவில் புகார்கள் அளிப்பது எல்லாம் அரங்கேறின.

பல பள்ளிகளில் தேவையில்லாத மறுசீரமைப்பு வேலைகளும் நடந்தேறின. முக்கிய பழுதுகள் பார்க்கப்படவில்லை.  பல லட்சங்கள்கள் கொடுத்தும் பள்ளி கழிப்பறை பழுதுப்பார்க்கவில்லை. ஒரு மாநிலத்தில் 50%க்கும் மேலான பள்ளிகளில் கழிப்பறை பிரச்சனை இருப்பதாக தெரிவித்துள்ளன.

ஒரு பள்ளியில் திரிசங்கு பிரச்சனை, முத்தரப்புக்கும் – தலைமையாசிரியர், வாரியத் தலைவர், பெற்றோர் ஆசிரியர் தலைவர் குடிமி சண்டை. பள்ளியில் பழைய நிலையில் உள்ள சிற்றுண்டிக் கூடத்தை மறுசீரமைப்புச் செய்வதா? புதியதாகக் கிடைக்கப்பெற்ற சிறு நிலத்தைச் சுத்தம் செய்து திடலாக மாற்றுவதா? அல்லது மழையில் ஒழுகும் பள்ளிக் கூரையைச் சீரமைப்பதா?

இவ்வாறு இருக்கையில், கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கிடைக்கப்பெற்ற நிதி குறைக்கப்பட்டது சமுதாயத்தின் கண்டனத்திற்கு உருவானது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே.

50 மில்லியன் மறுசீரமைப்பு நிதி ஒதுகீட்டின் குறைப்பாடு

அரசின் இந்த நிதி ஒதுக்கீட்டில் ஒரு மிகப்பெரிய குறைப்பாடு உள்ளது, அதாவது;      ‘சிறு தொகையில் வழங்கப்பட்டு குறிப்பிட்ட சீரமைப்புப் பணிக்கு மட்டுமே பயன் படுத்த வேண்டும்’

2012 மற்றும் 2013 சிறப்புத் திட்டங்களுக்குப் பிறகு திடமான திட்டங்கள் எதுவும் நமக்கு இல்லை. 2017 ஆம் பாலர் பள்ளி திட்டமும் தொடரப்படவில்லை.

கடந்த காலங்களில், நிதியமைச்சின் சிறப்பு அனுமதியுடன் கல்வி அமைச்சுச் சில பள்ளிகளுக்கு இந்நிதியை மற்ற முக்கிய தேவைகளுக்கு வழங்கி வந்துள்ளது. இருப்பினும் இந்த அனுமதி பெறுதல் மிக கடினமானது மேலும் நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும். பல நேரங்களில் அனுமதி மறுக்கப்பட்டதும் உண்டு.

ஆக, இந்த மறுசீரமைப்பு நிதி பயன்பாட்டை அரசு முக்கியமாகக் கல்வி அமைச்சு மறு பரிசீலனைச் செய்வது அவசியம்.

திடமான திட்டங்கள்

பள்ளி மறுசீரமைப்புத் தேவைப்பட்டாலும், நமது தமிழ்ப்பள்ளில் குறைந்த மாணவர்கள் பிரச்சனையைச் சமாளித்து, எதிர்காலத்தை உறுதி செய்ய திடமான திட்டங்கள் நமக்கு தேவைபடுகின்றன.

பள்ளி இடமாற்றம் – குறைந்த மாணவர்கள் கொண்ட பள்ளிகளைத் தேவை இருக்கும் இடங்களில் புதிய நிலத்தில் கட்டுவது.இணைக்கட்டடம் – அதிக மாணவர்கள் கொண்ட பள்ளிகளுக்கு அல்லது இதர கல்வி வசதி அறைகள் இல்லாத  பள்ளிகளுக்கு அதன் எதிர்கால தேவைக்கேற்ப கட்டடம் கட்டுவது.பாலர் பள்ளி – சாத்தியமான பள்ளிகளுக்குப் பாலர் பள்ளி அமைப்பதன் மூலம் 1ஆம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கையை உறுதிசெய்வது.மோசமான நிலையில் உள்ள எதிர் காலத்தில் சாத்தியம் கொண்ட பள்ளிகளை மீண்டும் மேம்படுத்துதல்.உள்கட்டமைப்புத் தேவைகள் – திடல், மின்சாரம், தண்ணீர் போன்ற முக்கிய பயன்பாடு தேவைகளை மேம்படுத்துதல்.

நாட்டில் 122(23%)  தமிழ்ப்பள்ளிகள் 30க்கும் மிக குறைவான மாணவர்களைக் கொண்டுள்ளன என்பதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். விரைவான இடையூடு திட்டங்கள் (pelan intervensi) இல்லாமல் போனால் குறுகிய காலத்தில் இப்பள்ளிகளை நாம் இழக்க நேரிடும்.

நமது நிதி தேவை என்ன?

தமிழ்ப்பள்ளிகளின் உண்மையான நிதி தேவை என்ன? கணிசமான மில்லியன் ஒதுக்கப்பட்டால் நமது சிக்கல் தீர்ந்து விட்டதா? இன்று 100 மில்லியன் கொடுத்தால் அதனை பயன்படுத்த நாம் தயாரா?

நாம் தயார் நிலையில் இல்லை என்பதுதான் உண்மை.

தமிழ்ப்பள்ளிகளின் கட்டட கட்டமைப்பு முழுமையான தரவுகள் அல்லது சாத்தியக்கூறு ஆய்வு  இல்லாத பட்சத்தில் நமது தேவையை அறிந்திருப்பது கடினமே. இதன் காரணமாகவே 2012 ஆம் சிறப்புச் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் தொழில்நுட்ப சிக்கலில் தவித்தன, தவித்துக்கொண்டிருக்கின்றன.

ஒரு சில பள்ளிகளே இடமாற்றத்திற்கான நிலத்தை பெற்றிருக்கின்றன. அதில் சில கல்வி அமைச்சின் இடமாற்றத்திற்கான அனுமதி (புதிய இடத்தில் 150க்கும் குறைவான மாணவர்கள் கொண்டிருப்பதால்) பெற முடியாமல் தவிக்கின்றன. இன்றைய நிலையில் 10க்கும் குறைவான தமிழ்ப்பள்ளிகள் இணைக்கட்டடம் பெற தகுதி பெற்றுள்ளன.

ஆகவே, கீழ்க்கண்ட பரிந்துரை பட்டியல் படி வருடாந்திர நிதி தேவையை நாம் உத்தேசிக்கலாம்.

 

மேற்கண்ட ரிம 55.5 மில்லியன் நிதி தமிழ்ப்பள்ளிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதாகவும்,  நிர்வகிக்க கூடியதாகவும் இருக்கின்றது. மேலும் அதன் தேவைகளை அறிய சாத்தியக்கூறு ஆய்வும் (Feasibility Study), மேம்பாட்டுத் திட்டம் வரையவும் தொடர்ந்து அதனை நிர்வகிக்கவும் சிறப்பு குழு தேவைப்படுகின்றது.

எதுவாகினும், தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதி தேவையும் திடமான திட்டமும் தேவைப்படுகின்றது.

சுப்ரமணியன் இராகவன்- கிம்மாஸ் – ஜோகூர் பாரு இரட்டை மின்சார தண்டவாள கட்டுமான திட்ட தலைமை பொறியியலாளர். தமிழ் அறவாரிய செயலவை உறுப்பினர்.நெகிரி செம்பிலான் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரிய உறுப்பினர்கள் சங்க செயலாளர்.