சூரிய ஒளி மூலமாக இயங்கும் நடமாடும் இஸ்திரி வண்டியை வினிஷா உமாசங்கர் என்ற 14 வயது மாணவி கண்டுபிடித்துள்ளார். மாணவியின் இந்த கண்டுபிடிப்பிற்கு ஸ்வீடன் நாட்டில் ‘மாணவர் பருவநிலை விருது’ கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விருதானது, சுற்றுச்சூழல்-பருவநிலை பிரச்னைகளுக்கு வருங்கால தலைமுறையினர் நன்மைக்காக புதிய தீர்வுகளைக் கண்டுபிடிக்கும் 12 முதல் 17 வயது வரை உள்ள மாணவர்களை ஊக்குவிக்க வழங்கப்படும் சர்வதேச விருதாகும்.
திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியைச் சேர்த்த உமாசங்கர், சங்கீதா என்ற தம்பதியின் மகளான வினிஷா உமாசங்கர், தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்குச் சிறு வயது முதலே அறிவியலின் மீது அதிக ஈடுபாடு இருந்து வருகிறது.
“என்னுடைய 5வது பிறந்தநாளின் பொது எனது பெற்றோர் விண்வெளி கலைக்களஞ்சியம் பற்றிய புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கினர். அதைப் படித்ததிலிருந்து எனக்கு அறிவியலின் மீது ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியது. அதை தொடர்ந்து சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை குறித்து அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆர்வம் காட்டினேன்” என்று கூறுகிறார் மாணவி வினிஷா உமாசங்கர்.
எதற்காக இந்த கண்டுபிடிப்பு?
“சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அனைத்தையும் படித்துத் தெரிந்து கொண்டதன் மூலம் எனது 12 வயதில், சூரிய சக்தி மூலமாக இயங்கும் இஸ்திரிப் பெட்டி தயாரிப்பதற்கான யோசனை வந்தது. குறிப்பாக, இந்த யோசனையானது ஒரு நாள் பள்ளி முடிவடைந்து, வீட்டிற்கு வந்துகொண்டிருந்த போது, சாலையோரங்களில் சலவை தொழிலாளர்களைக் கண்டேன். அவர்கள் இஸ்திரி செய்வதற்கான கரியைச் சாலையில் காய வைத்துக் கொண்டிருந்தனர்.
காய வைத்த அந்த கரித் துண்டுகளை இஸ்திரி செய்வதற்குப் பயன்படுத்திய பிறகு, அதனை குப்பையில் போடுவதைக் கவனித்தேன். இதை அவர்கள் தினமும் செய்வதைக் கண்டேன். இதுபோன்று கரி பயன்படுத்துவதால் நிறையப் பிரச்னைகள் ஏற்படுகிறது என்பதை ஆராய்ந்து, இதனால் சுற்றுச் சூழலுக்கும், மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் சுவாச பிரச்னைகள் வருகின்றன என்பதை அறிந்தேன்.
மரத்தை வெட்டி எரித்துத் தான் இந்த கரியைத் தயாரிக்கின்றனர். இதனால் காடுகளில் இருக்கும் மரங்கள் அழிக்கப்படுகின்றன. மேலும் காற்று, நிலம், நீர் அனைத்துமே மாசுபடுகிறது. இதன் எதிரொலியாக பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. ஆகவே இந்த கரி உற்பத்தி செய்வதை எப்படியாவது நிறுத்தவேண்டும் என்பதற்காகவே சூரிய சக்தி மூலமாக இயங்கும் இஸ்திரி வண்டி(Solar Ironing Cart) என்ற திட்டத்தை உருவாக்கினேன்,” என்கிறார் வினிஷா உமாசங்கர்.
சூரிய ஒளி இஸ்திரி வண்டியின் பயன்பாடு
கரியைச் சூடு ஏற்படுத்துவதாகத் தான் பயன்படுத்துகின்றனர். அதனால் சூரிய ஒளி மூலம் பெறப்படும் சக்தியை, சூரிய தகடுகள்(Solar Panels) மூலமாகப் பெற்று அதை வண்டியில்பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரியில் சேமிக்க முடியும். பிறகு, பேட்டரியிலிருந்து நேரடியாக வெப்பம் இஸ்திரிப் பெட்டிக்குச் செல்கிறது. இந்த முறையானது நேரடி சக்தியில்(Direct Current) இயங்குவதால் மின் சக்தி குறைவாகப் பயன்படுத்தப்பட்டு, நீண்ட நேரம் மின் சக்தி நீடிக்க உதவுவதாக கூறுகிறார் மாணவி.
“இதுபோன்று சலவை தொழில் செய்பவர்கள் தினமும் ரூபாய் 700 முதல் 1000 வரை கரி வாங்குகின்றனர். இதனால் அவர்களுடைய அன்றாட வருமானத்தில் பெருமளவு தொகையைக் கரி வாங்குவதில் செலவிடுகின்றனர். இவர்களைப் போன்ற தொழிலாளர்கள் சூரிய ஒளி மூலம் இயங்கும் இஸ்திரி வண்டியை ஒரு முறை வாங்கினால், குறைந்தபட்சம் 8 வருடங்கள் அவர்களது வருமானத்தை மிச்சப்படுத்தலாம். இதற்கிடையில் இந்த இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால் உள்ளூர் எலெக்ட்ரிசன் உதவியுடன் இதனைச் சரி செய்து கொள்ளலாம்,” என்று கூறுகிறார்.
விருதுகள்
இந்த திட்டத்திற்காக 2019 ஆண்டு “டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் இக்னைட் விருது”, இதையடுத்து சிறந்த பெண் கண்டுபிடிப்பாளர் பிரிவில் “டாக்டர் பிரதீப் பி தேவனூர் விருது” வினிஷாவுக்கு கிடைத்துள்ளன.
“இந்த ஆண்டு ஸ்வீடன் நாட்டின் குழந்தைகள் பருவநிலை விருது வாங்கினேன். இந்த விருதுக்கு நான் தேர்வான போது, இந்த முயற்சியின் பயன்பாடு திருவண்ணாமலை மட்டுமின்றி இந்திய அளவில் மட்டுமே பயன்படும் என்றிருந்தனர். ஆனால் இந்த கரி பயன்பாட்டைக் குறைந்துவிட்டால் கற்று மாசுபாடு குறையத் தொடங்கிவிடும். ஆகவே காற்று மாசுபாடு கொஞ்சம் குறைத்தாலுமே இதன் தாக்கம் உலகம் முழுவதும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைச் சுட்டிக்காட்டி விருது வழங்கும்போது என்னைப் பாராட்டினர்,” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் மாணவி வினிஷா உமாசங்கர்.
மாணவியின் தனிப்பட்ட முயற்சி
இந்த யோசனையும், இதற்கான திட்டத்தை உருவாக்கியது அனைத்துமே எனது தனி முயற்சியால் கொண்டு வரப்பட்டது. ஆனால் எனது இந்த முயற்சிக்கு எனது பெற்றோர் துணையாக இருந்து எனக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுத்தனர். அறிவியல் தொடர்பான புத்தகங்களை வாங்கிக்கொடுப்பது, அறிவியல் தொடர்பாக எனக்கு எழும் சந்தேகங்களை பெற்றோரிடம் கேட்பேன். அதற்கான விடையை எப்படியாவது ஆராய்ந்து எனக்கு தெரிவித்து விடுவார்கள். இந்த தாக்கம் தன்னை சர்வதேச அளவுக்கு கொண்டு வந்துள்ளதாக வினிஷா பெருமிதம் கொள்கிறார்.
“திருவண்ணாமலையில் இருந்து சூரிய சக்தி மூலமாக ஒரு இஸ்திரி வண்டியைச் செய்ய முடிவெடுத்த பிறகு அதற்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் இங்கே கிடைக்கவில்லை. அதனால் எனது முயற்சிக்கான திட்டத்தை முதலில் கோட்பாடு முறையில்(Theory Based) உருவாகினேன். அதாவது இதை எப்படி உருவாக்குவது என கூகுள் செய்தும், நிறையப் புத்தகங்களை படித்தும் இதற்கான திட்டத்தை வடிவமைத்தேன்.
இதை உருவாக்க எனக்கு 7 மாதங்கள் ஆகின, எனது 7ஆம் வகுப்பு முடிக்கும் பொழுது இந்த திட்டத்தை உருவாக்கத் தொடங்கினேன். பிறகு இந்த திட்டத்தை வெளியே கொண்டுவரக் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக் காலம் ஆகியது. எனது திட்டத்தைத் தேசிய அளவிலான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் சமர்ப்பித்தபோது, இதற்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்ப்பாக்கவில்லை,” என்று கூறுகிறார் வினிஷா.
தற்போது இந்த திட்டத்திற்குக் காப்புரிமை பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறும் வினிஷா, இந்த ஆண்டு இறுதிக்குள் அதற்கான காப்புரிமை கிடைத்துவிடும் என்கிறார்.
குழந்தைகள் எந்த ஒரு முயற்சி செய்தாலும் அதைச் சிறிது, பெரிது என்று வேறுபாட்டிற்குக் கொண்டு செல்லாமல், அனைத்தையும் ஒரே மாதிரியாக பார்க்கும் மனநிலை பெற்றோருக்கு வர வேண்டும் என்கிறார் மாணவியின் தந்தை உமாசங்கர்.
“மாணவர்களுக்குப் பொருளாதார ரீதியாக உதவியாக இருக்க வேண்டும் என்பது இல்லை. அவர்களது முயற்சியை ஊக்கப்படுத்தி துணையாக உடன் இருந்தாலே போதுமானது. ஆகவே நமது பிள்ளை செய்யக்கூடிய சிறிய சிறிய முயற்சிகளை ஊக்குவிக்கும் போது, அது பெரிய அளவில் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
மாநில அளவிலும், தேசிய அளவிலும் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான போட்டி வரும் பொழுது அதை முன் கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்வேன். அதாவது, அடுத்த ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்தில் வர இருக்கும் போட்டிகளின் தன்மையை ஆராய்ந்து அதற்கென அனைத்து ஏற்பாடுகளையும் எனது மகளுக்குச் செய்து கொடுப்பேன். இதன் மூலமாக போட்டியின் முக்கியத்தை அறிந்து அதற்கென பிரத்யேகமாக தமது திட்டத்தை வகுப்பது பெரிதும் பயனுள்ளதாக அமைகிறது,” என்று கூறுகிறார் தந்தை உமாசங்கர்.
மாணவி வினிஷா, சூரிய ஒளி இஸ்திரி வண்டியை கண்டுபிடித்ததற்காக ஸ்வீடன் நாட்டில் துணை பிரதமர் இசபெல்லா லோவின் பங்கு பெற்ற காணொளி நிகழ்வில் ஸ்வீடன் நாட்டின் குழந்தைகளுக்கான சூழலியல் அறக்கட்டளை சார்பில் இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருதில் பட்டம், பதக்கம் மற்றும் இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் 8.5 லட்சம் ரொக்கம் வழங்கப்பட்டது.
வினிஷா விருது பெற்றதற்கு மகிழ்ச்சியையும், பாராட்டுதலையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நன்றி – நடராஜன் சுந்தர் பிபிசி தமிழ் 20 நவம்பர் 2020