தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பது எவ்வாறு? – முனைவர் குமரன் வேலு

மலேசிய மக்கள் தொகை அதிகரித்து வருவது கண்கூடு என்றாலும் பூமிபுத்திராக்களை விடவும் சீனர் மற்றும் இந்தியர்களின் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது.

இன எண்ணிக்கை வீழ்ச்சியினால், புதியக் கட்சி அரசியல் அணுகுமுறைகளும் தோன்றி வருகின்றன. அதைப் பற்றி பிறகு காண்போம்.

ஒரு பொருளைக் கூவி விற்றாலும் வாங்குவதற்கு ஆள் வேண்டுமே. மொழி வாரியாக ஆரம்பப் பள்ளிகள் மலேசியாவில் இருந்தாலும், படிப்பதற்கு ஆள் எண்ணிக்கை வேண்டுமே.

பள்ளிகளின் தரம் உயர்ந்தால் மற்ற இனக் குழந்தைகளும் தமிழ்ப்பள்ளிக்கு வருவார்கள் என்று ஒரு தரப்பும், தமிழ்மொழிக்குப் பொருளாதார வளம், அதாவது வேலையை வாங்கித்தரும் ஆற்றல் இல்லை என இன்னொரு தரப்பும் கூறுவதைக் காணலாம். தரம், பொருளாதரம் எனும் இவர்கள், தமிழ்ப்பள்ளிப் பக்கம் தலைவைத்தும் படுக்க மாட்டார்கள். இவர்களை நான் மேட்டுக்குடி மேதாவிகள் என்று சொல்வது வழக்கம்.

இந்தியர்களே குழந்தைகளை அதிகம் பெற்றுக்கொள்ளுங்கள் என்றால், பகுத்தறிவுவாதிகளும் பெண்ணியம் பேசும் தரப்பினரும் ‘நமக்கு எண்ணிக்கை முக்கியமல்ல, தரம்தான் முக்கியம்’ என்று நம்கருத்தைக் குறை சொல்வார்கள்.

எண்ணிக்கை அரசியல், தமிழ்க்கல்வி வாய்ப்புக்கான முக்கிய வழி என்றால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சிலர், தமிழ்ப் பள்ளிகள் இல்லாவிட்டால் என்ன, கோயிலில் தமிழ்ப்படிக்கலாம் என்பார்கள்.

மனிதனாக, கலாச்சாரத்தோடு வாழ்ந்தால் போதும் என்பார்கள். தமிழ்மொழி பேசாவிட்டால், கற்காவிட்டால் ஒன்றும் குடிமுழுகிவிடாது என்பது ஒரு சில படித்த பகுத்தறிவுவாதிகளின் கருத்து. ஆங்கிலம் பேசி மனிதனாக வாழ்வோம் என்பார்கள். தமிழ் மட்டும் பேசினால் அவன் காட்டுமிராண்டி என்பதும் அதில் அடங்கும்.

இப்படி பல உளவியல், சமூக, பொருளாதார, பிறப்பு விகித வீழ்ச்சி காரணங்களால் தமிழ்ப்பள்ளியில் பதியும் மாணவர் எண்ணிக்கை சரிந்து வருகிறது. இதைச் சரி செய்யும் வழிகளை ஆராய வேண்டும்.

மலேசிய இந்தியர்கள்

மலேசிய இந்தியர்களில் 85 விழுக்காட்டினருக்கும் மேல், நகர்ப்புறங்களில் வசிப்பதாகத் தேசியப் புள்ளிவிவரத்துறை கூறுகிறது. இவர்களில் 40 விழுக்காட்டினர் ஏழைகள், 35 விழுக்காட்டினர் நடுத்தர ஏழைகள், 20 விழுக்காட்டினர் நடுத்தரம், 5 விழுக்காட்டினர் வசதியானவர்கள் என்பது என்னுடைய அனுமானம்.

நகர்ப்புறங்களில் தரமான புதியத் தமிழ்ப்பள்ளிகளை நிறுமாணிக்க வேண்டும் என்பதை மேலுள்ள தரவு காட்டுகிறது.

தமிழ்ப்பள்ளிகள்

மேலும், தற்போது 70 விழுக்காடு தமிழ்ப்பள்ளிகள் நகர்ப்புறங்களில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 2020 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, 527 தமிழ்ப்பள்ளிகளில் 369 நகர்ப்புறத்திலும் 158 கிராமம்/புறநகர்ப்பகுதிகளிலும் இருக்கின்றன.

2019 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, 525 பள்ளிகளில் மொத்தமுள்ள 81,420 தமிழ்ப்பள்ளி மாணவர்களில், 90 விழுக்காட்டினர் (73,380) நகர்ப்புற மாணவர்கள்.

வெறும் 10% விழுக்காட்டினர் (8,040) மட்டுமே புறநகர், தோட்டப்புற மாணவர்கள். இவர்கள்தான் 158 புறநகர்ப் பள்ளிகளில் பயில்கின்றார்கள். இவர்களை ஒரு பள்ளிக்குச் சராசரி 50 மாணவர்கள் எனக் கணக்கிடலாம். அதாவது புறநகர்ப்பள்ளிகள் குறைந்த மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பள்ளிகள் என்பது தெளிவு.

புறநகர்ப்பகுதிப் பள்ளி

பல பள்ளிகள் குறைந்த மாணவர் எண்ணிக்கையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. பல 10-க்கும் குறைவான எண்ணிக்கை கொண்டுள்ளன. நகர்மயமாக்கம், வேலைத்தேடி நகர்களை நோக்கி குடியேற்றம் / புலம்பெயர்வு, பிறப்பு விகித வீழ்ச்சி எனப் பல காரணங்களினால் புறநகர்ப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை மேலும் சரிவுகண்டு வருகிறது.

புறநகர்ப்பகுதிகளில், குறிப்பாகத் தோட்டப்புறத்தில் இந்தியர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. பலர் பட்டணம் பக்கம் போய்விட்டார்கள்.

பட்டணம் நோக்கி சென்றுவிட்டவர்கள் சரியான ஈர்ப்பின்றி தோட்டப்புற பள்ளிகளுக்குப் பிள்ளைகளை அனுப்பமாட்டார்கள். குறிப்பாக, இளையத் தலைமுறைப் பெற்றோர் அனுப்பமாட்டார்கள். பி40 தரப்பினரும் நகர்ப்புறத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், தோட்டப்புறப் பள்ளிகளில் மாணவரை அதிகரிக்கும் பணி எளிதானதல்ல.

போக்குவரத்து செலவு, நேரச் செலவு, தோட்டப்புறச் சூழலைப் பற்றியத் தப்பான கண்ணோட்டம், பள்ளிக்கட்டிட வசதிக் குறைபாடுகள் எனப் பல எதிர்மறை சிந்தனை வயப்பட்டு, தோட்டப்புறப் பள்ளிகளுக்குப் பிள்ளைகளை அனுப்பமாட்டார்கள்.

இந்தப் பள்ளிகள், மாணவர் எண்ணிக்கை வீழ்ச்சியின் காரணமாக இயற்கையாகவே மூடுவிழா காணும் சாத்தியங்கள் நிரம்பவே உண்டு. நினைவில் வையுங்கள் 158 பள்ளிகள்.

கட்டுரையாளர் இரா குமரன் வேலு

பள்ளிகள் இணைப்பு, வகுப்புகள்

இணைப்பு எனக் கல்வியமைச்சின் திட்டங்கள் சிலவகையில் உதவினாலும், தமிழுணர்வுடையவர்களும், தமிழ்ப்பள்ளிகள் இனத்தின் சொத்து எனப் பேசுவோரும்

பிள்ளைகளைப் புறநகர்ப்பள்ளிக்கு அனுப்பும் திட்டங்களை முன்னெடுக்கலாம்.

ஆயினும், பெற்றோரின் ஆதரவின்றி இத்திட்டம் வெற்றிப்பெறாது.

தோட்டப்புறப் பள்ளிகளுக்குச் சென்று படிக்க போக்குவரத்து வசதியையும், மாணவருக்கு அல்லது பெற்றோருக்கு ஊக்கத்தொகையும், படிப்பிற்கான செலவினங்கள் அனைத்தையும் ஏற்கவும் முன்வருவதன் வழி சிலப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். ஆனாலும், இது நிரந்தரமல்ல.

தங்கிப்படிக்கும் பள்ளிகள் பற்றியும் அரசாங்கத்தை வலியுறுத்தலாம்.

சிலாங்கூர் மாநிலத்தில் குவாலகுபு அருகில் களும்பாங் எனும் ஊரில், தலைமையாசிரியர் திரு குமார் அவர்கள் ஏழை மாணவர்கள், கைவிடப்பட்ட குழந்தைகள் படிப்பதற்குத் தங்கும் வசதியை ஏற்படுத்தி மாணவர் எண்ணிக்கையை அதிகரித்து உள்ளார். இது மிகச் சிறந்த எடுத்துக் காட்டு.

தோட்டப்புறத்தில் இருந்து, நகர்புறங்களில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்குப் பள்ளிகளை இடம் மாற்ற, அரசாங்கத்தை வலியுறுத்த அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் முயலலாம். ஆண்டுக்கு 10 பள்ளிகள் என, 10 ஆண்டுகளில் 100 பள்ளிகளை இடம் மாற்ற அதிரடி திட்டங்களை அரசியல் பேசுவோர் செய்யலாம்.

நகர்ப்புற நிலைமை

367 நகர்ப்புறத்துப் பள்ளிகளில், 73,380 மாணவர்கள், சராசரி ஒரு பள்ளியில் 200 மாணவர்கள் என்றாகிறது. 367 (70%) நகர்ப்புறத் தமிழ்ப்பள்ளிகளில், எத்தனைப் பள்ளிகள் குறைந்த எண்ணிக்கையில் மாணவரைக் கொண்டிருக்கின்றன என்பது கண்டறிய வேண்டியத் தரவு.

ஒரு சில நகர்ப்புறப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 1000-க்கும் மேல். வகுப்பறை பற்றாக்குறையும் உண்டு. கிள்ளான் போன்ற நகர்ப்புறங்கள் இந்தியர்கள் அடர்த்தியாக வாழும் இடங்கள். சிம்பாங் லீமா தேசியப் பள்ளியில் 50% மாணவர்கள் இந்தியர்கள். சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் 2000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள்.

நகர்ப்புறங்களில் புதியத் தமிழ்ப்பள்ளிகளின் தேவையை இந்தத் தரவு உணர்த்துகிறது.

வசீகரப் பாடம், புறப்பாடத் திட்டம் கொண்ட வசதியான தமிழ்ப்பள்ளி

புதியப் பள்ளிகள், எல்லா வசதிகளையும் புதியத் தோற்றத்தையும் வசீகரமான பாட, புறப்பாட திட்டத்தையும் (Sekolah Berprestasi Tinggi போன்று) வழங்கினால் கல்விகற்ற, வசதியான பெற்றோர்கள் தேசியப் பள்ளி, பன்னாட்டுப் பள்ளிகளைத் தவிர்த்து இங்கு பிள்ளைகளைப் பதியும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படும் என்று நம்புகிறேன்.

மேலும், மேலிருந்து கீழ் (Top Down Strategy) அணுகு முறையின்படி, சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவை :-

  1. தமிழ்ப்படித்திருந்தால் (கூடுதல் மொழி) அரசு வேலை வாய்ப்புகளில் கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும் என்பதை அரசு அறிவிக்க வேண்டும். இதை ஆளும் கட்சிகள் மென்மையாக முன்னெடுக்க வேண்டும்.

மலேசியக் கல்விப் பெருந்திட்டத்தில் (PPPM 2013-2025), ஒவ்வொரு மாணவரும் பன்மொழிகள் கற்றவராக இருத்தல் நன்று எனக் கூறப்பட்டிருகிறது.

இதை அமலாக்கம் செய்யும் வழிகளில் ஒன்றுதான், தமிழ்ப் படித்திருந்தால் வேலை வாய்ப்பில் முன்னுரிமை. போலீசு அதிகாரியாக வேண்டுமா, மருத்துவரா, இன்னும் அரசுத் துறைசார்ந்த வேலைகள் பலவற்றிலும் கூடுதல் மொழி (தமிழ்மொழி உட்பட) படிக்கத் தெரிந்து இருக்க வேண்டும் எனும் விதியை இணைத்தால், தமிழ்ப்பள்ளி பக்கம் மாணவர் அதிகரிக்க வழியுண்டு.

  1. அரசியல் கட்சிகள் (ம.இ.கா, ஜ.செ.க., பி.கே.ஆர். இன்னும் இதர) கட்சிப் பதவிகளில் இருப்போர், கட்சி சார்பாக அரசுப்பதவியில் இருப்போர், தம் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளியில் சேர்த்திருக்க வேண்டும் எனும் கொள்கையை வகுக்க வேண்டும்.

இதனால், தமிழ்க்கல்வியின் தரம் உயரக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

முக்கியப் புள்ளிகளின் பிள்ளைகள் இங்குப் படிப்பதால், ஆசிரியர்களும் தங்கள் பிள்ளைகளை இங்கு பதிவர். இந்திய சமுதாயத்திற்கு தமிழ்ப்பள்ளியின் மீது நம்பிக்கையும் உண்டாகும். அரசு அதிகாரிகளும் அடிக்கடி பள்ளிக்கு வந்து போவார்கள்.

  1. அடுத்தது, Bottom Up Strategy. அதாவது, அரசாங்கத்தைச் சார்ந்திராமல், சமூகமே முயன்று முன்னெடுத்து தமிழ்ப்பள்ளிகளின் தர உயர்வுக்கும் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்புக்கும் செயலாற்றும் முறைப்பற்றி பார்ப்போம்.
  2. போக்குவரத்து வசதியில்லை அதனால் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை என்று கூறுவோரின் பிள்ளைகளுக்குப் போக்குவரத்து மற்றும் உணவு வசதிகளைச் செய்துதர முன்வந்தால், சில பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதை, அவ்வட்டாரத் தமிழ் ஆர்வலர்கள், தமிழ்ச்சார்ந்த இயக்கங்கள், கோயில் பொறுப்பாளர்கள் உணர்ந்தால், உதவிகள் வழங்கும் திட்டத்தை முன்னெடுக்கலாம்.
  3. என்ன ஆனாலும் உயிரே போனாலும் தமிழ்ப்பள்ளிதான் எனும் உணர்வாளர்களைத் தவிர – கல்வித்தரம் சரியில்லை, ஆசிரியர்கள் சரியில்லை, தலைமையாசிரியர் சரியில்லை, பள்ளிக்கட்டிடத்தில் வசதியில்லை, ஆங்கிலம் மலாய்மொழி ஆளுமையில்லை, தமிழ் மொழி படிப்பதால் எதிர்காலம் இல்லை, வேலை வாய்ப்பு இல்லை, தமிழ் எங்கள் தாய்மொழி இல்லை, போக்குவரத்து வசதி இல்லை, இப்படி பல ‘இல்லை’கள் சொல்லும் இந்தியர்கள் தமிழ்ப்பள்ளிகளை மூடுவதற்குக் காரணமாகிப் போவார்கள்.

எனவே தமிழ்மொழியை நேசிக்கின்ற, தமிழ்ப் பற்றுள்ளத் தலைமுறையை உருவாக்கும் வண்ணம் தமிழாசிரியர்கள் தமிழ்மொழியைக் கற்றுத்தர வேண்டும். தேர்வுக்காக மட்டும் கற்பிப்பது என்றில்லாமல், உணர்வுப்பூர்வமாகவும் இருக்க வேண்டும் தமிழ்க்கல்வி.

பரப்புரை பீரங்கி பிரச்சாரம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பெற்ற வெற்றியைக்காட்டி நிகழ்த்தப்பட வேண்டும்.

  1. வெற்றிப் பெற்றவனை மட்டுமே அளவுகோலாய்க் கொண்டு அங்கீகரிக்கும் இந்த உலகம். தமிழ்ப்பள்ளியில் படித்த பெரும்பாலோர் நல்ல பதவியில், நல்ல பொருளாதார நிலையில், நல்ல மொழி வளத்தோடு, அரசியல், நிருவாகம், வணிகம், அறிவியல், தொழில் நுட்பம் போன்றத் துறைகளில் முத்திரைப் பதித்தால் இந்தியச் சமூகத்திற்குத் தமிழ்மொழியின் மீது ஈர்ப்பு வரும்.

தமிழ்ப்பள்ளியில் படித்த மாணவர்கள் இடைநிலைப் பள்ளிக்கு செல்லும்போது, அங்கே PMR, SPM தேர்வுகளில் (top scorer) ஆகச்சிறந்த அடைவாளர் பட்டியலை ஆக்கிரமித்து இருந்தால் தமிழ்ப்பள்ளியின் உற்பத்தி மீது சமுகத்திற்கு ஈர்ப்பும் மதிப்பும் உண்டாகும்.

இடைநிலைப் பள்ளியின் முதல்வர்கள் தமிழ்ப்பள்ளி மாணவர்களை வரவேற்று வாழ்த்துவார்கள். தமிழ்ப்பள்ளி மாணவர்களால் பள்ளி அடைவுநிலை உயரும் என்று அவர்களுக்குத் தெரியும்.

ஒழுங்கும் நேர்த்தியும் நேர்மையும் ஒழுக்கமும் பண்பும் மரியாதையும், அறிவாற்றல் திறனும், புத்தாகக்கத் திறமையும் கொண்டவர்களாகத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் விளங்கினால் இடைநிலைப்பள்ளியில் மரியாதையும் வரவேற்பும் கிடைக்கும்.

வேலைக்குத் தேர்ந்தெடுக்கும் முதலாளிமார்களும் தமிழ்ப்பள்ளியில் படித்தவர்களின் சிறப்பம்சம் கண்டு, அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வேலையில் சேர்த்துக்கொள்வார்கள்.

போட்டி நிறைந்த உலகில் சிறப்பம்சம் நிறைந்தவர்களுக்கு எப்போதுமே மவுசு உண்டு. ஆக, வலிமையானவர்கள் பிழைத்துக்கொள்வார்கள். ஆங்கிலத்தில் இதை survival of the fittest என்கிறோம்.

ஆகவே, சிறப்பம்சம் / சிறப்புத்தன்மை கொண்ட தமிழ்ப்பள்ளி மாணவர்களை உருவாக்கினால் போதும். உலகத்தின் பார்வை தமிழ்ப்பள்ளிகள் மீது திரும்பும். இந்தியர்கள் தமிழ்ப்பள்ளி பக்கம் திரும்ப வருவார்கள்.

அடுத்த பத்தாண்டுகளில் தமிழ்ப்பள்ளியில் படித்த மாணவர்கள் பல பொறுப்புள்ள உயர்ந்த பதவிகளை அலங்கரித்தால் (டாக்டர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், விஞ்ஞானிகள், அரசு அதிகாரிகள், பொறியிலாளர்கள், இன்னும் பல துறைகளில்) தனியார் வணிக நிறுவனத்தின் உயர்பதவியில் இருக்கும் வண்ணம் தமிழ்ப்பள்ளிகளின் மாணவர் ஆளுமை உற்பத்தி இருந்தால் தமிழ்ப்பள்ளிகளை சமூகம் கொண்டாடும்.

இதனால், மாணவர் எண்ணிக்கை தானாக உயரும். ஆசிரியர்கள் கூடுதல் அர்ப்பணிப்போடு சிறந்த கல்வியை வழங்கினால் போதும். மாற்றம் விளையும். ஆனால், ஒட்டுமொத்த சமூகமும் இதற்கு உதவ வேண்டும்.

இதை யார் செய்வது?

கல்வி, சமூகநல மற்றும் ஆய்வு அறவாரியம் (EWRF) , தமிழ் அறவாரியம் போன்ற இயக்கங்கள், தமிழ்ப்பள்ளி மாணவரின் ஆளுமையை அதிகரிக்க திட்டங்கள் தீட்டி செயல்படுத்தின.

இதை மற்றவர்களும் தொடர வேண்டும்.

சமூக அக்கறையும்.பொறுப்பும் உள்ள இயக்கங்கள், தமிழ்ச் சார்ந்த இயக்கங்கள், ஆசிரிய இயக்கங்கள், பள்ளி வாரியங்கள், ஆசிரியர்கள், தமிழ்க்கல்விமான்கள்

ஒன்றிணைந்து ஆற்ற வேண்டிய சமுகப்பணி இது.

சரியான திட்டமிடல், நிதி, அமலாக்கம், உட்பட அர்ப்பணிப்பு உணர்வுள்ள மனித கூட்டம் தேவைப்படுகிறது.

இதை எந்த இயக்கமாவது முன்னெடுத்தால் அந்த இயக்கத்திற்குத் தொல்லை கொடுக்க உடனே கிளம்பிவிடும் நண்டுகள் நிறைந்த சமூகத்தில், இதை முன்னெடுக்கும் துணிச்சலான திட்டங்கள் கொண்ட இயக்கமும் தோன்றும்.