தமிழ்ப்பள்ளியில் படித்ததால் கெட்டா விட்டோம்? – முனைவர் குமரன் வேலு

தேசியப் பள்ளியில் படித்த என் தமிழ் நண்பன் ஒருவன் தமிழ்ப்பள்ளியின் மீது நல்ல எண்ணமும் மதிப்பும் இல்லாதவன். ‘தமிழ்ப்பள்ளிகள் மாட்டுத்தொழுவம் போல் காட்சியளிக்கும் பாழடைந்தக் கொட்டகைகள்’ என்று கேலி பண்ணுவான்.

தோட்டப்புறத்தில், கால்நடைகள் போட்டச்சாணிகள் ஆங்காங்கே காட்சித்தர, பள்ளியின் வேலியோரம் அசைபோட்டவாறு படுத்திருக்கும் மாடுகள் நிறைந்த, ஆறு வகுப்பறைகளுடன் கூடியப் பலகையில் கட்டப்பட்ட தமிழ்ப்பள்ளிக் கட்டிடத்தை எங்கு கண்டானோ, தமிழ்ப்பள்ளிகள் பற்றிய அவனுடைய கருத்து அப்படி இருந்தது.

ஆங்கிலேயர் காலத்தில் இரண்டு மாடிகளுடன் கட்டப்பட்ட, நான்கடி அகலத்தில் மொத்தமான கற்சுவர்களைக் கொண்ட பக்திமயமான கத்தோலிக்கக் கிருத்துவ மிசினரி ஆரம்பப் பள்ளியில் படித்தவன் என் நண்பன். அங்கு இன்னும் ஆங்கிலத்தில் படிக்கின்றார்கள் என நம்பும் நம்மினத்தவரும் இன்றும் உண்டு.

கட்டுரையாளர் இரா குமரவேலு

இடைநிலைப் பள்ளியில் அப்பொழுது ஆங்கிலவழிக் கல்வி அகன்று, மலாய்வழி கல்வித் தொடங்கியிருந்த காலகட்டம். கணிதம், அறிவியல் பாடங்களை மலாய்மொழியில்தான் நாங்கள் படித்தோம். இருவரும் சிரம்பானில் செயிண்ட் பவுல் இடைநிலைப் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தபோது நண்பர்களானோம்.

அவன் பட்டணத்தில் பிறந்தவன். தந்தையும் தாயும் அரசாங்கப் பணியாளர்கள். வறுமை என்றால் என்னவென்று அறியாது வளர்ந்தவன். அவனுக்கு நுனிநாக்கில் ஆங்கிலம் தண்ணிப்பட்ட பாடு படும். அத்தனை சரளமாக ஆங்கிலம் பேசுவான். தமிழில் கெட்டவார்த்தைகளைத் தவிர மற்ற வார்த்தைகளைப் பேசி அறியாதவன். அப்படியே பேசினாலும் வாயில் சுளுக்கு வந்ததுபோல் உச்சரிப்பான். சரமாரியாக அவன் ஆங்கிலத்தில் திட்ட நான் தமிழில் திட்டுவேன். தமிழ்மொழியின் வரலாற்றுப் பெருமை பற்றி அப்பொழுதே நான் அவனிடம் விளக்குவதுண்டு.

தமிழ்ப்பள்ளியில் படித்த எனக்கு ஆங்கிலம் சரளமாக வராவிட்டாலும் இலக்கணப் பிழையில்லாமல் நிறுத்திப் பேசும் திறமை இருந்தது. எங்களுக்கிடையில் இருந்த அந்தச் சமூக இடைவெளியைக் கூடுதல் கணிதம் பாடம் குறைததது. கணிதம் காப்பியடிக்க என்னிடம்தானே வந்தாக வேண்டும்.

எசு.பி.எம் தேர்வுக்குப் பிறகு அவனை நான் காணவே இல்லை. தேர்வு முடிவுகள் எடுக்கச் சென்ற போதும் அவன் வரவில்லை. இப்பொழுது இருப்பதுபோல் அப்போது கைப்பேசியும் இல்லை. அவனுடைய வீட்டு தொலைப்பேசி எண்ணையும் அவன் பகிர்ந்ததில்லை.

காலம் ஓடியது. நான் என் ஆறாம் படிவப் படிப்பை முடித்து மலாயாப் பல்கலைகழகத்தில் அறிவியல் துறையில் படிக்க நுழைந்தேன். இளங்கலை பட்டதாரியாகி, சில ஆண்டுகள் தனியார் துறையில் வேலை செய்தபின் முதுகலை பட்டமும் படித்து முடித்தேன்.

தனியார் துறையில் வேலை செய்வதில் சலிப்புற்ற நான், சில காரணங்களை முன்னிட்டு அரசாங்க ஆசிரியராக விண்ணப்பம் செய்தேன். ஒரு பனிரெண்டு ஆண்டுகள், 6-ஆம் படிவம் வரை கணிதம், வேதியியல் (chemistry), இயற்பியல் (physics) போன்ற பாடங்களைப் படித்துக் கொடுத்தேன்.

 

இந்தக் காலகட்டத்தில் எசு.பி.யம் வேதியல் (chemistry) தேர்வுத்தாள் திருத்தும் பொருட்டு கிள்ளான் நகரில் உள்ள ஒரு பள்ளிக்குச் சென்றிருந்தேன்.

அங்குதான் திருப்பம். என்னுடன் படித்த என் இடைநிலைப்பள்ளி நண்பனை மீண்டும் சந்தித்தேன். அவனும் தேர்வுத்தாள் திருத்துநராக வந்திருந்தான். அவன் ஓர் ஆசிரியராக பணிசெய்வான் என்று நான் எதிர்ப்பார்க்கவே இல்லை. நாங்கள் நிறையப் பேசினோம். அவன் அப்பொழுது அரசாங்கத்தைக் குறை சொன்னான். அவனுக்குப் பதவி உயர்வு தராது, பாரபட்சம் காட்டப்படுவதாக சலித்துக் கொண்டான். அவன் இன்னும் இளங்கலைப் பட்டதாரியாகத்தான் இருந்தான்.

மறுபடியும் சந்திப்பதாகச் சொல்லி விடைபெற்று பிரிந்தோம். இதற்கிடையில் நான் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் கணித விரிவுரையாளராகப் பணியமர்த்தப்பட்டேன். ஆசிரியர் தொழிலை விட்டு ஆசிரியருக்குப் படித்துக்கொடுக்கும் விரிவுரையாளராக ஆகிவிட்டேன். பின் என்னுடைய இரண்டாவது முதுகலைப் பட்டத்தையும் (கணிதம்) படித்துப் பெற்றேன்.

சில ஆண்டுகள் கழித்து கணிதக் கல்வியில் முனைவர் பட்டத்தையும் படித்துப் பெற்றேன்.

இதற்கிடையில் சிரம்பான் செயிண்ட் பவுல் பள்ளியில் நடைப்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவனை மீண்டும் சந்தித்தேன். இப்பொழுது ‘நான் டாக்டர் பட்டம் பெற்றுவிட்டேன்’ என்றேன். பொய்யாகப் பாராட்டிய அவன் இன்னும் இளங்கலைப் பட்டம் மட்டுமே கொண்டிருப்பதாகக் கூறினான். நான் அப்பொழுது கல்வியமைச்சில் ஓர் உயரிய பதவியில் இருந்த நேரம்.

தோட்டப்புறத் தமிழ்ப்பள்ளியில் படித்த நான் தன்னூக்கத்தினாலும் ஆர்வத்தினாலும்  கல்வியில் உயரமுடிந்தது.

தேசியப் பள்ளியில் படித்து, நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சாதாரண ஆசிரியராக மட்டுமே அவனால் வரமுடிந்தது.

ஆங்கிலக் கல்வி, தேசியப்பள்ளி, பன்னாட்டுப் பள்ளி இவையெல்லாம் தரமானவை என்று பேசும் இந்தியர்கள், அங்குப் படித்திருந்தும் சாதாரண நிலையில் இருப்பது ஏன்?

அங்குப் படிப்பவர்கள் எல்லோரும், சுந்தர் பிச்சைப்போன்று, உலகின் முதல்தர நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக அல்லது பல கம்பெனிகளுக்கு முதலாளியாக, உலகம் போற்றும் விஞ்ஞானியாக, டாக்டராக, எஞ்சினியராக, பொருளாதார நிபுணராக இருக்கின்றார்களா என்றால் இல்லை! ஆங்கிலம் மட்டும் பேசத்தெரிந்தால் போதுமா?

சீனப் பள்ளியில் படித்த இந்திய மாணவர்கள் எத்தனைப்பேர் சீனர்போல் கம்பனிக்கு முதலாளியாக இருக்கின்றார்கள்? சீன தவுக்கைகளுக்கு எடுபிடியாக மட்டும் இவர்கள் இருக்கின்றார்கள்.

சீனப் பள்ளியில் படித்துவிட்டு மலாய்மொழிக் கூட திருத்தமாகப் பேசத்தெரியாத சீனர்கள் பலர் தொழில் அதிபர்களாக உயரவில்லையா?

தமிழ்ப்பள்ளியில் மட்டும் படித்துவிட்டு உழைப்பினால் உயர்ந்த உன்னதமான தமிழர்கள் நம் நாட்டிலேயே இருக்கின்றார்கள். பூச்சோங்கில் உணவகம் தொடங்கி, பல கிளைகளைத் திறந்து, படிக்காமலே உழைப்பினால் டத்தோசிறீ பட்டம் வாங்கி பணத்தை அள்ளிக் கொடுக்கும் வள்ளலாக திகழ்கிற நல்லவரையும் பார்த்திருக்கிறேன்.

ஆங்கிலம் படித்து பட்டம் வாங்கி அன்றாடம் காய்ச்சியாய் வாழும் ஆடவரையும் பார்ர்திருக்கிறேன்.

தமிழ்ப்பள்ளியில் படித்து தமிழ்ப்பள்ளியில் தலைமையாசிரியராக இருக்கும் என் நண்பர் ஒருவர், நீலாய் பட்டினத்திற்கு அருகில் ஓர் ஏக்கர் நிலம் வாங்கி அதிலே மாளிகை கணக்கில் வீட்டைக்கட்டி வாழ்ந்து வருகிறார். தமிழ்ப்பள்ளியில் படித்த அவரின் பிள்ளைகள் ஒருவர் டாக்டராக மற்றொருவர் எஞ்சினியராகவும் இருக்கின்றார்கள்.

பாடுபட்டு உழைத்து முயற்சிப் பண்ணினால்தான் வாழ்க்கையில் முன்னேறமுடியும் என்றிருக்கும் பொழுது தமிழ்ப்பள்ளியில் படித்தாலும் அதை செய்ய முடியுமே.

தமிழ்ப்பள்ளியில் படித்து வாழ்க்கையில் உயர்ந்தவர்களின் பட்டியல் நீளம். அதில் உலகப்புகழ் பெற்றவர்களும் உண்டு.

தமிழ்ப்பள்ளியில் படித்தாலும் அறிவோடு திகழ்ந்தால் கெட்டுவிட மாட்டோம். உலகம் அறிவும் ஆற்றலும் திறமையும் உள்ளவர்களை எங்கிருந்தாலும் வரவேற்கும்.