மலேசியாவில் இந்துக் கோயில்கள் உடைத்து தரைமட்டமாக்கப்படுவது ஒரு புதிய விசயமில்லை.
ஆண்டாண்டு காலமாக பாரிசான் ஆட்சியின் போது நடந்துவந்த இந்தக் கொடுமை பிறகு பக்காத்தான் அரசாங்கத்திலும் இப்போது பெரிக்காத்தான் ஆட்சியிலும் தொடர்கிறது – அவ்வளவுதான்! ஏனென்றால் இதுபோன்ற விசயங்களுக்கெல்லாம் இந்நாட்டில் நம் இனம்தான் கிள்ளுக்கீரையாயிற்றே!
கடந்த காலங்களில் நம் இனத்தை பிரதிநிதித்த அரசியல் தலைவர்கள் இத்தகையக் கொடூரங்களுக்கு நிரந்தரத் தீர்வு ஒன்றைக் காண்பதற்கு சிரத்தை எடுத்து முயற்சி மேற்கொண்டிருந்தால் இப்பிரச்னை இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்க வாய்ப்பில்லை.
கெடா மாநிலத்தில் அடுத்தடுத்து நடந்த கோயில் உடைப்பு சம்பவங்களும் அதன் தொடர்பான அம்மாநிலத்தின் மந்திரி பெசார் சனூசியின் தரங்கெட்ட ஆணவப் பேச்சும் இந்த விவகாரத்தை ஒரு உச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளதாகத் தெரிகிறது.
நாட்டின் இதர மாநிலங்களிலும் காலங்காலமாக இதுபோன்ற அட்டூழியங்கள் நடந்து வந்துள்ள போதிலும் கடந்த 2007ஆம் ஆண்டில் தலைநகரில் நடந்த ஹிண்ட்ராஃப் பேரணியைத் தொடர்ந்து சற்று தணிந்தது.
எனினும் தீவிர இனவாதப் போக்குடைய பாஸ் கட்சி தற்போது ஆட்சி பீடத்தில் அமர்ந்த பிறகு நிலைமை மீண்டும் மோசமடையத் தொடங்கிவிட்டது.
இருந்த போதிலும் கடந்த செப்டம்பர் மாதத்தில் மோகன் ஷான் தலைமையிலான மலேசிய இந்து சங்கம், பாஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களுடனான சிறப்பு சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டதைத் தொடர்ந்து கோயில் உடைப்பு விவகாரங்களில் நமக்கு விமோசனம் கிடைக்கும் போலத்தோன்றியது.
ஆனால் சனூசியின் கீழ்த்தரமான பேச்சை பிரதமர் முஹிடின் மட்டுமின்றி பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங்கும் கூட கண்டிக்கவோ அது குறித்து கருத்துரைக்கவோ இல்லை என்பதுதான் வியப்பு.
ஹாடியின் அழைப்பின் பேரில் அவர்களை சந்திக்கச் சென்ற மலேசிய இந்து சங்கத்தினர், மத மாற்றம், இதர மதங்களை இழிவு படுத்துதல் மற்றும் பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்தி விவகாரம் முதலியவற்றைப் பற்றிதான் கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டார்களேத் தவிர முக்கியமான விசயமான கோயில் உடைப்புப் பற்றி பேசினார்களா என்று தெரியவில்லை.
இப்போது நடப்பதைப் பார்க்கப்போனால் அந்த சந்திப்புக்கு அர்த்தமில்லாமல் போய்விட்டதைப் போல் தோன்றுகிறது.
பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுவதைப் போல உள்ளது பாஸ் கட்சியினரின் போக்கு.
இதுபோன்ற சமயங்களில் அரசியல் தலைவர்கள்தான் முன்னின்று குரல் கொடுக்கிறார்களேத் தவிர இந்து சங்கத்தினர் சற்று சாவகாசமாகத்தான் கலத்தில் இறங்குகின்றனர்.
இந்து சமயம் சம்பந்தப்பட்ட எல்லா விசயங்களுக்கும் இந்து சங்கம்தான் அரணாக விளங்க வேண்டும் என்பதனை அவர்கள் மறந்துவிடக் கூடாது. குறிப்பாக இந்நாட்டில் கோயில் உடைப்புகளை ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அவர்கள் ஆக்ககரமான செயல்பாடுகளை முன்னெடுப்பது அவசியமாகும்.
பினேங் மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமியும் ம.இ.க. தலைவர் விக்னேஸ்வரனும் ஒரு கோப்பை கள் குடித்துவிட்டு 2 கோப்பை கள் குடித்த மாதிரி பேசுகிறார்கள் என்று படுமோசமாக கருத்துரைத்த சனுசிக்கு எதிராக இந்நேரம் இந்து சங்கம் வீறுகொண்டு எழுந்திருக்க வேண்டும்.
நெருப்புடன் விளையாடாதீர் என ராமசாமி மட்டும்தான் சனூசியை எச்சரித்தாரேத் தவிர இந்து சங்கம் வழக்கம் போல மிதமான போக்குதான். அத்தகைய துணிச்சல் இந்து சங்கத்தினருக்கும் இருக்க வேண்டும்.
இந்து மதம் என்பது பயங்கரவாதமோ ஆடம்பரமோ ஆர்ப்பரிப்போ அகங்காரமோ இல்லாத அமைதியான மதம்தான். இருந்த போதிலும் ‘கொட்டக் கொட்டக் குனிபவனும் மடையன், குனியக் குனியக் கொட்டுபவனும் மடையன்’, என்பதனை நாம் மறக்கலாகாது.
சமயம் தொடர்பான உரிமைகளை தட்டிக்கேட்பதில் இந்து சங்கம் கிஞ்சிற்றும் பின்வாங்கக் கூடாது என்பதுவே நமது உறுதியான நிலைப்பாடாகும். அரசியல்வாதிகள் பார்த்துக்கொள்வார்கள் என பின் வரிசையில் நின்றுகொண்டு கைக்கட்டி வேடிக்கைப் பார்க்கக் கூடாது.
நாட்டின் எந்த ஒரு மூலை முடுக்கிலாவது இந்து சமயத்திற்கு பங்கம் ஏற்பட்டால் இந்து சங்கத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அளவுக்கு தனது பலத்தை அச்சங்கம் வலுப்படுத்திக்கொள்ள வேண்டும்.
அப்படியொரு நிலைப்பாட்டைக்கொண்டிருந்தால் நம்மை அடிக்கடி சீண்டிப் பார்க்க நினைப்போருக்குக் கொஞ்சமாவது தயக்கம் ஏற்படும்.
இல்லையென்றால் சமய விவகாரத்திலும் நாம் அனாதைகளாகவே வாழவேண்டிய அவலம் தொடர்ந்து நீடிக்கும்.
~இராகவன் கருப்பையா