கெட்கோ மக்களின் நெடுங்காலப் போராட்டமும் நம்பிக்கை கூட்டணியின் துரோகமும்!

எஸ் அருட்செல்வன் | கெட்கோ வாழ் மக்கள் தொடர்ந்து பல தரப்பினரால் ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர். 2018-ம் ஆண்டு, இந்த ஏமாற்றங்கள் நம்பிக்கை கூட்டணியால் ஒரு முடிவுக்கு வரும் என அவர்கள் நம்பினார்கள். மார்க்ஸ் சொன்னதுபோல, ‘வரலாறு மீண்டும் மீண்டும் நிகழ்கிறது, முதலில் சோகம், பிறகு கேலிக்கூத்து’ என்ற வரிகள் இதனைச் சிறப்பாக விவரிக்கின்றன.

கடந்த நவம்பர் 25-ம் தேதியில் டிஏபியும், 29-ம் தேதியில் வீரப்பனும் வெளியிட்ட இரண்டு அறிக்கைகளைத் தமிழ் ஊடகங்கள் வெளியிட்டன. அவ்வறிக்கைகள் பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளித்தன. கெட்கோ வாழ் மக்களுக்கு 4 ஏக்கர் மற்றும் 2 ஏக்கர் நிலம் மட்டுமே வழங்கப்படும், இதுவே இறுதியான முடிவு என்று வீரப்பன் தெரிவித்துள்ளார். இது இதுவரை நம்பிக்கை கூட்டணி தலைவர்கள், குறிப்பாக நெகிரி செம்பிலானின்  தலைவர்கள் எடுத்த எல்லா நடவடிக்கைகளுக்கும் அறிக்கைகளுக்கும் வாக்குறுதிகளுக்கும் எதிரானதாக அமைந்துள்ளது.

மஇகா தலைவர்களுக்கு அரசியல் களமாட இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்த காரணத்தால், அவர்கள் தொடர்ந்து வீரப்பன் மற்றும் அவரது சகாக்களான இரவி முனுசாமி, குணசேகரன் மற்றும் அருண்குமார் ஆகியோரைத் தாக்கி வருகின்றனர்.

தேசிய முன்னணி (பி.என்.) ஆட்சியில் இருந்த காலகட்டத்தில், அவர்கள் வழங்கிய 4 ஏக்கர் நிலத்தைப் பெற்றுக்கொள்ள பி.என். மற்றும் மஇகா ஒப்புக்கொண்டது. ஆனால், சில குடியிருப்பாளர்கள் 8 ஏக்கர் நிலம் கேட்டுப் போராடினர், அப்போது அவர்கள் பக்கம் இந்த நம்பிக்கை கூட்டணி தலைவர்களும் நின்றனர். 4 ஏக்கர் பெற்றுகொண்டவர்களுக்கும் 8 ஏக்கர் கோரிக்கை வைத்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் பல கைதுகள், சண்டைகள், சொத்து இழப்புகள் மற்றும் இன ரீதியான பிரச்சனைகள் கூட ஏற்பட்டுள்ளன.

8 ஏக்கர் வழங்குவதாக, இதுவரை தான் சொன்னதே இல்லை என்று வீரப்பன் கூறுவது தப்பித்துக்கொள்வதற்காகச் சொல்லப்படும் பலவீனமான பொய்யன்றி வேறெதுவும் இல்லை. தற்போதைய சூழ்நிலைகளால், 8 ஏக்கர் நிலம் சாத்தியமில்லை என்று அவர் சொல்லியிருக்கலாம்; அதற்காக மன்னிப்பு கேட்டிருக்கலாம். ஆனால், அதைச் செய்யாமல் பொய் சொல்கிறார்.  ஆட்சியைக் கைப்பற்றியக் காலம் தொட்டே, இந்தக் கட்சியினரின் ஆணவம் பெரும் சிக்கலாக உள்ளது. இந்த அறிக்கை குறித்த விவரங்களைக் கெட்கோ மக்கள் பத்திரிக்கைகளிலும் சமூக ஊடகங்களிலும் அறிந்துகொண்டுள்ளனர். இந்தப் பொய்களை அம்பலமாக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

நம்பிக்கை கூட்டணி மத்திய, மாநில ஆட்சியைக் கைப்பற்றியது

2018, மே 9-ம் தேதி, 60 ஆண்டுகளாக இருந்த பி.என்- அம்னோ ஆட்சியைக் கவிழ்த்து, நம்பிக்கைக் கூட்டணி வரலாறு காணாத வெற்றியைக் கண்டது. நெகிரி செம்பிலானிலும் நம்பிக்கை கூட்டணி மாபெரும் வெற்றி கண்டு, 2018, மே 25-ல், மாநில ஆட்சியை நிறுவியது. அந்த வெற்றி கெட்கோ வாழ் மக்களுக்கு ஒப்பற்ற மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்தது. ஏனெனில், கெட்கோ வாழ் மக்களுக்கு 4 ஏக்கர் நிலமும் நிலத்தை வாங்கியவர்களுக்கு 2 ஏக்கர் நிலமும் வழங்கப்படும் என்று முந்தைய முதலமைச்சர் முஹமட் ஹசான் கூறியதை நம்பிக்கை கூட்டணி அரசு எதிர்த்ததோடு, அனைவருக்கும் 8 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என்றக் கோரிக்கையில் அன்று உறுதியாக நின்றது.

நம்பிக்கை கூட்டணி தலைவர்களும், தற்போது அங்கு எம்.பி.யாக  இருப்பவரும் பி.என். அரசாங்கம்  கெட்கோ  நில பிரச்சனைக்கு அளித்த தீர்வை எதிர்த்ததை கெட்கோ மக்கள் இன்றளவும் தெளிவாக நினைவில் வைத்துள்ளனர். இந்த நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் கெட்கோ வாழ் மக்களோடு பல ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டதற்கும், அதனால் அவர்கள் கைது செய்யப்பட்டதற்கும் பல ஆதாரங்கள் கண் முன்னே கிடக்கின்றன. அதை அவ்வளவு சுலபமாக அவர்களால் அழித்திட முடியாது.

இந்த நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் ஆட்சியில் அமர்ந்ததும் கெட்கோ மக்களை ஏமாற்றியது மட்டுமில்லாமல், மாட் ஹசன் அரசாங்கத்தால் பல குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்தப்பட்டனர். மாட் ஹசன் அரசாங்கம் ஊழலை கடைபிடிப்பதுடன் லோட்டஸ் குழுவின் துணை நிறுவனமான லோட்டஸ் ஹோல்டிங்ஸுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

நெகிரி செம்பிலானில் நம்பிக்கை கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட கெட்கோ வாழ் மக்கள் மாநில அரசு அலுவலகத்திற்கு வெளியே ஒன்று கூடினர். இது 1 ஜூன், 2018-ல், அதாவது நம்பிக்கை கூட்டணி ஆட்சிக்கு வந்த ஒரு வாரத்தில் இது நடந்தது. அவர்கள் நம்பிக்கை கூட்டணி  தலைவர்களின் புகைப்படங்கள் கொண்ட ஒரு பெரியப் பதாகையை ஏந்திகொண்டு அங்குச் சென்றனர்.

அன்று அவர்கள் கையளித்த மனுவில், தங்கள் நிலத்தில் நடைபெறும் மரம் வெட்டுதல் உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும் எனக்  குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், பி.என். ஆட்சியின் போது நடந்த ஊழல்களையும் அவர்களின் அலட்சியத்தன்மைகளையும் அம்பலப்படுத்த வேண்டும் என விரும்பினர்.  முறையாக ஏலம் விடாமல், சந்தை விலைக்குக் கீழே லோட்டஸ் ஹோல்டிங்ஸுக்கு நிலத்தை விற்பனை செய்தது, இரப்பர் மரங்களுக்கான ஒப்பந்த நடவடிக்கையில் இருந்த சிக்கல் போன்ற பல பிரச்சனைகள் அந்த மனுவில் இருந்தன. நம்பிக்கை கூட்டணி ஆட்சியில் அந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு காணப்படும் என அவர்கள் நம்பினர். மேலும், டாக்டர் மகாதீர் அவர்களால் நியமிக்கப்பட்ட பெருமக்கள் மன்றத்தில் (சிஇபி) ஒருவரான பேராசிரியர் ஜோமோ, 1எம்டிபி போன்று பல ஊழல்கள் நடந்துள்ளன என்றும், அதில் கெட்கோவும் ஒன்று எனவும் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.

முதல் சந்திப்பும் முதல் வாக்குறுதியும்

பெரும்பாலான கெட்கோ வாழ் மக்களும் அவர்களைப் பிரதிநிதித்த வழக்கறிஞர் ஆர் கெங்காதரனும் நம்பிக்கை கூட்டணி ஆட்சிக்கு வந்த பின்னரும், மாநிலக் கூட்டத்திற்குச் செல்லும் வாயில் மூடப்பட்டிருப்பதைக் கண்டு அதிருப்தி கொண்டிருந்தனர். சில நம்பிக்கை கூட்டணி தலைவர்கள், பி.எஸ்.எம். மக்களைத் தூண்டிவிடுகிறது, அதிகாரத்திற்கு வந்த முதல் வாரத்திலேயே இவ்வளவு பெரிய கோரிக்கையை வைப்பது நியாயமற்றது எனக் குற்றம் சாட்டினர். ஆயினும், கூட்டத்திற்குப் பிறகு, கெட்கோ செயற்குழுவைச் சந்திக்க இரவி, வீரப்பன், அருள் குமார் மற்றும் குணா ஆகிய நான்கு இந்திய பி.எச். தலைவர்களை மாநில அரசாங்கம் நியமித்தது.

8 ஏக்கர் நிலத்தைக் கோரும் கெட்கோ செயற்குழுவைப் பிரதிநிதித்து வழக்கறிஞர் ஆர் கெங்காதரன் கலந்துகொண்டார். வேறு தரப்பினர் மீது பலிபோடவும் காரணங்களை அள்ளி வீசவும், புதிய மாநில அரசு தயாராக இருந்த காரணத்தால், பி.எஸ்.எம். அந்த அழைப்பைக் கடுமையாகப் புறக்கணித்தது. அந்தக் கூட்டத்தில்  கெட்கோ வாழ் மக்களுக்கும் அவர்களது வழக்கறிஞர் ஆர் கெங்காதரனுக்கும், முன்பு கூறியபடியே 8 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என நம்பிக்கை கூட்டணி தலைவர்களால் மறுமுறை வாக்குறுதி அளிக்கப்பட்டது . பெரும் மகிழ்ச்சியடைந்த கெட்கோ வாழ் மக்கள், பகாங்  எல்லையில், ஜெம்போலில் இருக்கும் கெட்கோவிற்கு வந்து, அங்கு வசிக்கும் மக்களுக்கு  நேரடியாக விளக்குமாறு அழைப்பு விடுத்தனர்.

உண்மையான வாக்குறுதி

11 ஜூலை 2019 அன்று, நம்பிக்கை கூட்டணி  தலைவர்களான குணா, ரவி, வீரப்பன் ஆகியோர்  கெட்கோ வாழ் மக்களுக்கு  8 ஏக்கர் நிலத்தையும், வாங்கியவர்களுக்கு  4 ஏக்கர் நிலத்தையும் மாநில அரசு வழங்கும் என்று கூறினர். மாண்புமிகு குணா மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார். இந்தப் பிரச்சினை 31 ஆகஸ்ட் 2019-க்குள் தீர்க்கப்படும் என்றார்; அதே நேரத்தில் வீரப்பனும் ரவியும் மிகவும் எச்சரிக்கையாக 2019-ம் ஆண்டின்  இறுதிக்குள் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்போம் என்று கூறினர்.

உண்மையிலேயே இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படுமா என்று நான் கெட்கோ வாழ் மக்களைக் கேட்கும்போதெல்லாம், அவர்கள் மேற்கோள் காட்டியது இந்த மூன்று தலைவர்களின் பொது உறுதிமொழியைதான்.  8 ஏக்கர் வழங்கப்படும் என்று இவர்கள் கூறியதில் நம்பிக்கை ஏற்பட நான் சட்டரீதியான பிரகடனம் (SD) ஒன்றைச் செய்யுமாறு கூறினேன். இப்போது எங்களிடம் ஒன்றல்ல, கூட்டத்தில் கலந்துகொண்ட 30-க்கும் மேற்பட்ட மக்களின் பிரகடனங்கள் உள்ளன. இப்போது இந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் இதைச் சொல்லவில்லை என்று கூறி ஒரு பிரகடனத்தில்  கையெழுத்திட முன்வருவார்களா?

வீரப்பன் இந்த வாக்குறுதியை  மாநிலக் கூட்டத்தில் மீண்டும் கூறினாரா?

26 செப்டம்பர் 2018 அன்று, வீரப்பன் மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தில் கட்கோ குடியேறிகளுக்கு 4 ஏக்கர் மற்றும்  வாங்கியர்களுக்கு 2 ஏக்கர் என்பதை முன்பே ஒப்புக்கொண்ட 170 பேருக்கு அவ்வாறே வழங்கப்படும் எனவும்; 8 ஏக்கரை கோரும் பிற மக்களுக்கு நிச்சயமாக அவ்வாக்குறுதி நிறைவேற்றப்படும் எனவும் உறுதியளித்ததாக தமிழ் நாளேடுகளான மலேசிய நண்பனும் மக்கள் ஓசையும் செய்தி வெளியிட்டன.

பி.எஸ்.எம். பலமுறை இந்த வாக்குறுதிக்கான அதிகாரப்பூர்வ அறிக்கையைப் பெற முயற்சித்தது; ஆனால்,  ‘வெளிப்படையான’ அரசாங்கம் என்று கூறிக்கொள்ளும் நம்பிக்கை கூட்டணி பல சந்தர்ப்பங்களில் அதை மறுத்துவிட்டது. அவர்கள் முதலில் எங்களை அறிக்கை தயார் செய்ய சொன்னார்கள். நாங்கள் தயார் செய்த பிறகு, அதைக்கொண்டு என்ன செய்ய விரும்புகிறோம் என்பதை எங்களிடம் கேட்டனர். நாடாளுமன்ற அறிக்கைகள் கூட, பொதுமக்களால் எளிதில் பெறப்படும்போது அவர்கள் பாதுகாக்க விரும்பும் இரகசியம்தான் என்ன? மாநிலத்தின்  கூட்டங்கள் மற்றும் விவாதங்கள் ஏன் பொதுவில் நடைபெறகூடாது.

2018-ம் ஆண்டு நிறைவேறாத வாக்குறுதிகளுடன் முடிவுற்றது

13 அக்டோபர் 2018-ல், பி.கே.ஆர்.-ஆல் கட்டாயப் படுத்தப்பட்ட ஓர் இடைத்தேர்தலில், அன்வர் இப்ராஹிம் வேட்பாளராக நின்று வெற்றிபெற்றார். பிரச்சாரக் காலத்தில், சில பி.கே.ஆர். ஆதரவாளர்கள் கெட்கோ குடியேற்றவாசிகளை நம்பிக்கை கூட்டணிக்காகப் பிரச்சாரம் செய்ய அழைத்து வந்தனர், அதுமட்டுமின்றி, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திகொண்டு, கெட்கோ மக்களுக்கான 8 ஏக்கர் வாக்குறுதியை நிறைவேற்றாததற்காக தேசிய முன்னணியை அவர்கள் சாடினர்.

2018 இறுதிவாக்கில், கெட்கோ பிரச்சனைக்கு நம்பிக்கை  கூட்டணியால்  தீர்வு கொண்டுவர முடியாது என்பதைப்போல் தோன்றியது. எனவே, 29 நவம்பர் 2018-ல், பி.எஸ்.எம். மாநிலத் தலைவர் காந்தி மற்றும் ‘8 ஏக்கர் கோரிக்கை’ குழுவினரின் செயலாளர் ஜோன் கண்டியூஸ் ஆகியோருடன் நான் வீரப்பனைச் சந்திக்கச் சென்றிருந்தேன். குறிப்பிட்ட காலத்திற்குள் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போனால், அதற்கான விளக்கக் கடிதம் ஒன்றை கெட்கோ வாழ் மக்களுக்கு வழங்குமாறு நாங்கள் கேட்டுக்கொண்டோம். அவர் முதலில் 4 ஏக்கர் மற்றும் 2 ஏக்கர் நிலங்களை வழங்கிய பின்னர், 8 ஏக்கர் கோரிக்கை நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும் அவர், 8 ஏக்கர் நிலத்தைப் பெற்றுத்தர முயற்சிப்பேன் என்றும் ஆனால், அது உறுதியல்ல என்றும் கூறினார். நிலத்தை வாங்கியவர்களுக்கு 8 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் எனக் கேட்பது நியாயமற்றது என்றார். நாங்களும் அதை ஆமோதித்தோம். குடியேறிகளுக்கு 8 ஏக்கரும் வாங்கியவர்களுக்கு 4 ஏக்கரும் வழங்குவதுதான் சரியானதாக இருக்கும் என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டோம். நாங்கள் அங்கிருந்து புறப்படுவதற்கு முன், சிலருக்கு 4 மற்றும் 2 ஏக்கர் நிலம் வழங்கிவிட்டு, அதன்பிறகு சிலருக்கு 8 மற்றும் 4 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டால்  மக்களிடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதே என்று கேட்டோம். அதற்கு அவர், 4 மற்றும் 2 ஏக்கர் நிலத்தைப் பெறுபவர்கள், பி.என். ஆட்சி காலத்தில் அவர்களுடன் ஒப்புக்கொண்டனர், இனி அதில் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை எனக் கூறினார்.

எனவே, இந்தக் கூட்டத்தில், வீரப்பனின் நிலைப்பாடு என்னவென்றால், அவர்கள் முதல் குழுவிற்கு நிலத்தை வழங்கியப் பின்னர்,  வாக்குறுதியளித்தபடி இரண்டாவது குழுவிற்கு 8 ஏக்கர்களைப் பெற முயற்சிப்பார்கள். 2018-ம் ஆண்டு இறுதிக்குள் அவர்களால் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போனால், எங்களிடம் தெரிவிப்பதாகவும் அவர் உறுதியளித்தார். ஆனால், நிர்ணயிக்கப்பட்ட காலகெடுவுக்குள் நிறைவேற்ற முடியாது என்பதை மீண்டும் மீண்டும் அவர்கள் நிரூபித்தனர்.

அடுத்தகட்டப் போராட்டமும் எம்.பி.-உடனான சந்திப்பும்

12 பிப்ரவரி 2019-ல், 100-க்கும் மேற்பட்ட குடியேறிகள் ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்தனர், தங்கள் பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்க வேண்டும், மந்திரி பெசாரைச் சந்திக்கும் வரை அங்கிருந்து விலக மாட்டோம் எனக்கூறி, நெகிரி செம்பிலான் மாநிலச் செயலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் அமர்ந்தனர். 6 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தபின், நெகிரி செம்பிலான் எம்பியுடன் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்து, வீரப்பன் அவர்களுக்கு ஒரு கடிதத்தை வழங்கினார். 20 பிப்ரவரி 2019-ல், எம்.பி. ஹாஜி அமினுதீன் பின் ஹருனுடனான சந்திப்புக்கு 10 கெட்கோ வாழ் மக்கள் அழைக்கப்பட்டனர். அவர்கள் பல பிரச்சினைகள் குறித்து கேள்விகள் எழுப்பினர், குறிப்பாக இரப்பர் மரங்களுக்கான   குத்தகை யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது பற்றி வினவினர். இந்த இரப்பர் மரங்கள் கெட்கோ மக்களின் வியர்வையால் நடப்பட்டது, எனவே, அவர்களுக்குச் சரியான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனக் கேட்டனர்.

அப்போதைய மக்களிடையே, வறுமையை ஒழிப்பதற்காக இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டதால், மீதமுள்ள நிலத்தை தாமரை நிறுவனத்திடமிருந்து மீட்க, மாநில அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். எம்.பி. இது குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க 10 நாள் காலஅவகாசம் வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

7 மார்ச் 2019-ல், மாண்புமிகு ரவி மீண்டும் கெட்கோ குழு தலைவருடனும்  எம்பியுடனும்  ஒரு சந்திப்பை மேற்கொண்டார். முன்னாள் மந்திரி பெசார் முஹமட் ஹசான்  வெற்றியை நீதிமன்றம் இரத்து செய்ததால், ரந்தாவ்  இருக்கை காலியானதைத் தொடர்ந்து, மாநிலத்தில் மீண்டும் ஓர் இடைத்தேர்தல் வந்தது. அதனால், இந்த நேரத்தில் போராட்டங்கள் ஏதும் நடந்தால், அது மாநில அரசுக்கு எதிராக முடியும் என்பதால், போராட்டங்களைத் தடுக்கத்தான் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மக்கள் நம்பினர்.

அந்தக் கூட்டத்தில் தற்போதைய மந்திரி பெசார், முந்தைய பி.என். அரசு  நிலம் தருவதாக உறுதியளித்தது ஓர் அரசியல் விளையாட்டு என்று கூறினார். அதுபோல் தனது அரசாங்கத்தில் நடக்காது என உறுதியளித்தார். 31 ஆகஸ்ட் 2019-க்குள் 4 மற்றும் 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் எனவும்; அதைத்தொடர்ந்து 8 ஏக்கர் நிலம் வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார். எம்.பி. மக்களைப் பொறுமையாக இருக்குமாறும், இந்தப்   பிரச்சினையைத் தீர்க்க அவகாசம் கொடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார். மார்ச் 30-ம் திகதி, முந்தைய எம்.பி. மாட் ஹாசன் மீது கெட்கோ நிலப் பிரச்சனை தொடர்பாக ஊழல் வழக்கு பதிவுசெய்ய சொல்லி நம்பிக்கை கூட்டணி கெட்கோ மக்களின் ஆதரவை நாடியது. ஆனால், ரந்தாவ் இடைதேர்தலுக்காக நம்பிக்கை கூட்டணி, கெட்கோ மக்களைப் பயன்படுத்துகிறது என்பதை   நாங்கள் உணர்ந்தோம். அதனால், பி.எஸ்.எம் இந்த நடவடிக்கையிலிருந்து விலகி கொண்டது.

ஆயினும்கூட, நம்பிக்கை கூட்டணி  உறுப்பினர்களின் ஊக்கத்தோடு, கெட்கோ மக்கள்  28 மார்ச் 2019-ல் மாட் ஹாசனுக்கு எதிராக வழக்கு  பதிவு செய்தனர். இந்த வழக்கு சுமார் 40 கெட்கோ வாழ் மக்களால்  செப்டம்பர் 2-ம் தேதி காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.

முதல் கட்டம் வழங்கப்பட்ட நிலங்கள்

முதலில் 4 மற்றும் 2 ஏக்கர் நிலங்கள் வழங்கப்படும் பின்னர் 8 ஏக்கர் நிலங்கள் வழங்கப்படும் என்பதையே தாரக மந்திரமாக கூறி வந்த நம்பிக்கை கூட்டணி அரசு, இறுதியாக 4 மற்றும் 2 ஏக்கர் நிலங்களை 29 நவம்பர் 2019-ல் வழங்கியது. அப்போதும் கூட 8 மற்றும் 4 ஏக்கர் நிலங்கள் வழங்கப்படுவதற்கான காலம் குறிப்பிடப்படவில்லை. ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டன.

எண்கள் சமமாக இல்லை

8 ஏக்கர் நிலத்திற்குப்  போராடி வந்த மக்கள்  அமைதியற்றவர்களாக மாறத் தொடங்கினர். ஏனென்றால், லோட்டஸ் நிறுவனத்திடமிருந்து கூடுதல் நிலம் பெறப்படாவிட்டால், 8 ஏக்கர் நிலத்தைக் கேட்கும் மக்களுக்கு  நம்பிக்கை கூட்டணி  அரசாங்கத்தால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்பது அனைவரும் அறிந்த  உண்மை.

எங்கள் கணக்கீட்டின் அடிப்படையில், இரண்டாவது கட்ட நில விநியோகத்திற்கு 888 ஏக்கர் நிலம் தேவைப்படும், இதில் 82 அசல் குடியேறிகள் மற்றும் 56 பேர் நிலத்தை வாங்கியவர்கள் முறையே 8 மற்றும் 4 ஏக்கர் பெறுவார்கள். தாமரை மாநில அரசுக்கு 1206 ஏக்கர் கொடுத்துள்ளதால், இதில் 594 ஏக்கர் முதல் தொகுதிக்கு வழங்கப்பட்டது; எனவே, நிலப் பற்றாக்குறை இருக்கும் என்றும், வாக்குறுதியை நிறைவேற்ற கூடுதலாக 275 ஏக்கர் நிலம் தேவைப்படும் என்றும் நாங்கள் மதிப்பிட்டோம்.

கூடுதல் நிலம் இருக்கிறதா என்பது ஒரு பிரச்சனையாக இருக்கக்கூடாது, ஏனெனில் தாமரை கையகப்படுத்திய நிலத்தின் அசல் அளவு 4,700 ஏக்கர். இதை முன்னிலைப்படுத்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை 14 ஜனவரி  2020-ல்  கோலாலம்பூரில்  ஏற்பாடு செய்தோம். இதற்கு முன்னர் எங்கள் நண்பர்களாக  இருந்த நம்பிக்கை கூட்டணி தலைவர்கள், குறைவான ஒத்துழைப்பையே நல்கினர். இறுதியாக, மந்திரி  பெசாருக்கு 12 ஜூன் 2020-ல் ஒரு கடிதம் எழுதினோம்; முந்தைய வாக்குறுதிகள் மற்றும் முந்தைய விவாதங்கள் அனைத்தையும் மீண்டும் வலியுறுத்தினோம். கூடுதல் நிலங்களை மாநில அரசு கையகப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் நாங்கள் எடுத்துரைத்தோம்.

வீரப்பன் தொடர்ந்து  மக்களைக் கூட்டத்திற்கு அழைப்போம் என்று கூறிவந்தார். பின்னர் ஒரு கட்டத்தில்,  கெட்கோ வாழ் மக்கள்  தாங்களை அசல் குடியேறிகள் என்று நிரூபிக்க, ஜெம்போலில் ஒரு முகப்பை திறக்கவுள்ளதாகவும் அவர் சொன்னார்.  ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

இறுதியாக, பி.என். அரசாங்கத்தைப் போலவே, அதே 4 மற்றும் 2 ஏக்கர் வாக்குறுதியைத் தந்து, மக்களைப் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாக்கியது நம்பிக்கை கூட்டணி. நம்பிக்கை கூட்டணி அரசு முற்றிலும் நம்பகத்தன்மை அற்றது என்பது  இறுதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு காலகட்டத்தில், அவர்கள் நின்று போராடியதற்கு எதிராக இன்று அவர்கள் சென்றது மற்றுமின்றி, அதை நியாயப்படுத்துகிறார்கள். வீரப்பனை மட்டும் இதில் குற்றம் சாட்டிவிடமுடியாது, மற்ற நம்பிக்கை கூட்டணி தலைவர்களும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

இந்த விஷயத்தை ஆராயும்போது நமக்கு புரிவது, கெட்கோ மக்களுக்கு தற்போது நிகழ்ந்திருக்கும் ஏமாற்றம் 40 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டதை விட கொடுமையானது. ஆரம்பத்தில் 10 ஏக்கராக இருந்த நிலம், பின்னர்  8-ஆக குறைக்கப்பட்டு, இப்போது நம்பிக்கை கூட்டணி  அதை வெற்றிகரமாக 4 ஏக்கராக இன்னும் குறைத்துள்ளது.

பின்னணி

‘கெட்கோ’ என்பது ‘தி கிரேட் அலோனியனர்ஸ் டிரேடிங் கார்ப்பரேஷன்’ (The Great Alonioners Trading Corporation Bhd – GATCO) ஆகும். 1977-ஆம் ஆண்டில் அதன் உறுப்பினர்களுக்கான நில மேம்பாட்டுத் திட்டத்தை எளிதாக்க தேசியத் தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தால் (NUPW) இணைக்கப்பட்டது. இது ஒரு ஃபெல்டா (FELDA) திட்டத்தைப் போன்றது. ஆனால், ஃபெல்டா திட்டத்தில் பங்கேற்கும் பெரும்பான்மையினர் மலாய்க்காரர்கள், ஆனால், கெட்கோ திட்டத்தில் பங்கெடுத்தவர்கள் அதிகமானோர் இந்தியர்கள். ஆகவே, மலேசிய இந்தியர்களின்  மிக முக்கியமானப் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று.

4,700 ஏக்கர் நிலத்தை உள்ளடக்கிய இந்தக் குடியேற்றம் நெகிரி செம்பிலான் அரசால் வழங்கப்பட்டது. இது நெகிரி செம்பிலானில் பிறந்து வளர்ந்த மற்றும் தேசியத் தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் பொது செயலாளருமாக இருந்த பி.பி. நாராயணன் மற்றும் அப்போது மாநில முதல்வராக இருந்த இசா சமாட்டுக்கும் இடையில் நடந்த ஒப்பந்தமாகும். தேசியத் தோட்டத் தொழிலாளர்கள் சங்கம் அதன் உறுப்பினர்களை நாடு முழுவதும் இந்த நிலத்திற்கு அணிதிரட்டியது, அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்குவதாக உறுதியளித்தது. ஒவ்வொருவரும் தலா RM7,600 செலுத்த வேண்டியிருந்தது. அப்பொழுது இந்தப் பணம் மிகப்பெரிய தொகையாகும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீட்டுவசதிக்கு ஓர் ஏக்கர் நிலமும் கரும்பு நடவு செய்வதற்குப் பத்து ஏக்கரும் வழங்கப்பட்டு 66 வருடக் குத்தகை வழங்கப்பட்டது.

மொத்தம் 430 குடியேறிகளில்; 280 குடியேறிகள் இந்தியர்கள், 120 மலாய்க்காரர்கள் மற்றும் 30 சீனர்கள் அடங்வர். கம்போங் கெட்கோ என அழைக்கப்படும் இவ்விடம், ஜெம்போல், நெகிரி செம்பிலான்   அருகே அமைந்துள்ளது. இது பஹாங் எல்லையிலிருந்து 60 கிலோமீட்டர் தெற்கே அமைந்துள்ள ஒரு கிராமப்புற இடமாகும்.

1980-களின் முற்பகுதியில் கரும்பு விலை  சரிந்தது. கெட்கோ  பின்னர் இரப்பர் மரங்களை நடவு செய்வதற்கும் செலவை ஈடுசெய்வதற்கும் ஒரு புதிய ஒப்பந்தம் கையெழுத்திட்டது. ஒவ்வொரு குடியேறிகளும் 2 ஏக்கர் நிலத்தை ஒப்படைக்க வேண்டும், இது இழப்புகளைத் தீர்க்கவும், அங்கு இரப்பர் மரங்களை மறுநடவு செய்யவும் பயன்படும். ஆகவே 10 ஏக்கர், 8 ஏக்கராக மாறியது.

தவறான நிர்வாகம் தொடர்ந்து கேட்கோவை மூழ்கடித்தது, அது 1983-ம் ஆண்டில் திவாலானதாக அறிவிக்கப்பட்டது. தற்போது சி.ஐ.எம்.பி. (CIMB) வங்கியிடம் கடன்களைத் தீர்க்கத் தவறிவிட்டது. பின்னர் அந்நிலம் ‘பெங்குருசன் டானஹார்த்தா நேஷனல் பெர்ஹாட்’ (Danaharta) விடம்  ஒப்படைக்கப்பட்டது. 1996-ல், சிங்கம் & யோங் நிர்வாகக் கலைப்பு நிறுவனம் (liquidators) அதனைப் பெற்றது.

அசல் ஒப்பந்தத்தில், நிலம் விற்பனைக்கு வந்தால், அதை வாங்குவதற்கான முதல் வாய்ப்பைத் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று இருந்தது. ஆனால், அந்த நிலம் திடீரென நிர்வாகக் கலைப்பு நிறுவனத்தால் விற்கப்பட்டது. குடியேறியவர்கள் தங்கள் நிலத்தை வாங்கத் தயாராக இருந்தபோதிலும், லோட்டஸ் ஹோல்டிங்ஸ் அந்த நிலத்தைச் சந்தை விலைக்கும் கீழே பின்கதவு வழியாக வாங்கியது.

செப்டம்பர் 2017-ல், தாமரையின் 2 இயக்குநர்கள் கெட்கோ  நிலம் தொடர்பாக ஊழல் தடுப்பு ஆணையத்தால் (MACC) தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

லோட்டஸ், அந்நிலத்தை சிங்கம் & யோங் நிறுவனத்திடமிருந்து 16 மில்லியனுக்கு (ஏக்கருக்கு RM4,000) மட்டுமே வாங்கியது. அங்கு நடப்பட்ட இரப்பர் மரங்களின் மதிப்பைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாத நிலத்தின் அசல் விலை இதுவாகும். நிலத்தில் உள்ள இரப்பர் மரத்தின் மதிப்பு ஏக்கருக்கு RM 6000. அதனால்தான்,  தாமரைக்கும் குடியேறிகளுக்கும் இடையிலான முக்கியப் போர்க்களமாக இரப்பர் மாறிவிட்டது. குடியேறியவர்கள் கைது செய்யப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம்.

2017-ம் ஆண்டு ஜூலை 18 மற்றும் ஜூலை 24 ஆகிய தேதிகளில், 28 பேரும் அதைத் தொடர்ந்து கெட்கோவைச் சேர்ந்த 30 பேரும் கைது செய்யப்பட்டு, சங்கிலியால் பிணைக்கப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டனர். அவர்கள் ஒன்றாக சங்கிலியால் பிணைக்கப்பட்டு நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்ட வீடியோ பொதுமக்களிடையே அனுதாபம், கோபம் மற்றும் எதிர்ப்பைப் பெருமளவில் வெளிப்படுத்தியது. அந்தப் புகைப்படங்கள் நவீன கால அடிமைத்தனத்திற்கு சான்றாக இருந்தது. இரப்பர் மரத்தை எடுத்துச் செல்லும் லாரிகளைத் தடுத்ததற்காக குடியேறிகள் கைது செய்யப்பட்டனர். அந்த இரப்பர் மரங்கள் தங்களுக்குச் சொந்தமானவை என்றும், அதை அகற்றுவது அவர்களின் வாழ்வாதாரத்திற்கான உரிமை மீறல் என்றும் அவர்கள் வாதாடினர். இதன் விளைவாக பல கைதுகள், லாரிகள், கார்கள் போன்றவைத் தீக்கிரையாக்கப்பட்டன, கட்டிடங்கள் உடைக்கப்பட்டன, இந்த வன்முறைகளுக்கு இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிகொண்டனர்.

திடீரென மாநில அரசு நிறுவனமான பி.கே.என்.என்.எஸ்., நில குத்தகையை 99 ஆண்டுகளாக நீட்டித்தபோது ஒரு திருப்பம் ஏற்பட்டது. லோட்டஸ் 1200 ஏக்கர் நிலத்தை மீண்டும் மாநில அரசாங்கத்திடம் ஒப்படைத்தது. இதன் விளைவாக, 15 ஜூன் 2015 அன்று, நெகிரி செம்பிலான் எம்பி, முகமாட் ஹசன், 4 மற்றும் 2 ஏக்கர் நிலம் கெட்கோ வாழ் மக்களுக்கு வழங்கப்படும் எனவும், கெட்கோவில் 4 தசாப்த கால பிரச்சினை தீர்க்கப்பட்டதாகவும் அறிவித்தார்.

அப்போதிருந்து கெட்கோ மக்கள் இரு தரப்புகளாகப் பிரிந்தனர் – 4 மற்றும் 2 ஏக்கர் நிலத்தைப் பெற ஒப்புக்கொண்டவர், 8 மற்றும் 4 ஏக்கர் நிலத்தைப் பெறக் கோரியவர்கள் என. 8 ஏக்கருக்குத் தங்களுக்கு உரிமை உண்டு என்று அவர்கள் நம்புகிறார்கள். மேலும், லோட்டஸ் நிறுவனத்தை நீதிமன்றத்தில் நிறுத்தியதோடு, கெட்கோ நிலத்தில் அந்நிறுவனம் மேற்கொண்ட பணிகளையும் அவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இறுதியாக, நம்பிக்கை கூட்டணி அரசு அவர்கள் துயரை முடிவுக்கு கொண்டு வரும் என நம்பினார்கள். ஆனால், அவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம்தான். பி.என். அரசைப் போலவே நம்பிக்கை கூட்டணி அரசும் நிலத்தை லோட்டஸ்க்கு  வழங்கி, மக்களை ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது.


எஸ் அருட்செல்வன்  பி.எஸ்.எம். தேசியத் துணைத் தலைவர்

நன்றி :- மலேசிய சோசலிசக் கட்சி (தமிழ்) முகநூல் பக்கம்