கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் வெற்றிக்கதை – முனைவர் குமரன் வேலு

கோலாலம்பூரின் மையப்பகுதியில் இருந்து, 125 கி.மீ. தொலைவில் இருக்கிறது இந்தத் தோட்டப்புறப் பள்ளி. வடக்கு- தெற்கு தேசிய நெடுஞ்சாலையில் செல்வோர் இலெம்பா பெரிங்கின், வீடமைப்பு பகுதியில் புகுந்து பயணம் செய்தால் கெர்லிங் தமிழ்ப்பள்ளியை அடையலாம்.

1980-களில், இலெம்பா பெரிங்கின் வீடமைப்புத் திட்ட மேம்பாட்டுக்காக பிளட்டா ரிவெர் தோட்டம் விழுங்கப்பட்டதாம். அங்கிருந்த தமிழ்ப்பாட்டாளி மக்கள் பல இடங்களுக்குப் புலம்பெயர்ந்து சென்றனராம்.

பிளட்டா ரிவர் தோட்டத்தின் அருகில் இருந்த கெர்லிங் தோட்டத்தின் 3 பிரிவுகளில் இயங்கி வந்த தமிழ்ப்பள்ளிகள் இணைக்கப்பட்டபின், இப்போது 4.5 ஏக்கர் நிலத்தில் கெர்லிங் போகும் சாலையின் மருங்கில் அமைந்திருக்கின்றது கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி. இது ஓர் அரசாங்க பள்ளி, அரசின் முழு உதவிப் பெறும் பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 23, 2020, காலை மணி 10.30 அளவில் நான் அங்குப் போய்ச் சேர்ந்தேன். எனக்கு முன்பே, ஜொகூர் செம்பருத்தி தோழர்கள் ஒருங்கிணைப்பாளரும் மலேசியாகினி இயங்கலை ஊடகத்தின் பகுதிநேர நிருபருமான சாந்தா பெருமாள் அவரின் கணவருடன் சென்று சேர்ந்திருந்தார். பள்ளிக்கு ஆண்டிறுதி விடுமுறை விடப்பட்டிருந்த நேரம், குழந்தைகளின் ஆரவார அரவம் குறைவாயிருந்த நேரம்.

என்னுடைய மகிழுந்தை விட்டு இறங்கியதும் நான் கண்ட முதல் காட்சி, குட்டியூண்டு மாணவர்கள் இருவர் திடலில் கோல்ப் (golf) விளையாடிக் கொண்டிருந்த காட்சிதான்.

கோல்ப் விளையாடும் அளவுக்குத் தமிழ்ப்பள்ளிகள் முன்னேறி விட்டனவா என வியப்பு மேலிட்டது.

தலைமை ஆசிரியரைக் காண மேல் மாடிக்குச் செல்லும்போது மாணவர்கள் பாடம் படிக்கும் ஒலி காதை வந்து எட்டியது. அட! விடுமுறைக்காலத்திலும் பாடம் படித்துக்கொடுக்கும் ஆசிரியர் யாரது என்று தெரிந்துகொள்ளும் ஆவல் உந்த தலைமையாசிரியரை அணுகினேன்.

கோப்பு படம்

இடைநிலைப் பள்ளிக்குப் படிவம் 1-க்குப் போகப்போகும் மாணவர்களுக்கு மலாய்மொழியில் கணிதப்பாடம் முதல் மற்ற பாடங்களும் நடத்தப்படுவது அப்பள்ளியின் வழமையான சொந்த முயற்சி. இடைநிலைப்பள்ளியின் சூழலுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்தும் இந்த நன்முயற்சி அர்ப்பணிப்பு மிக்கது. கடப்பாடு மிகுந்த ஆசிரியரை உருவாக்குவதில் பள்ளித் தலைமை வெற்றிப் பெற்றிருக்கிறது என்பதை இது காட்டுகிறது.

வாயால் வடைசுடும் பலர் இருக்கும் இந்தக் கல்வியுலகில், தன்னலம் கருதாதப் பலரும் இருக்கத்தான் செய்கின்றனர் என்பதற்கு இப்பள்ளி நல்ல எடுத்துக்காட்டு.

ஒரு மழலையர் வகுப்பு, மாணவர் தங்கும் விடுதி, நூல்நிலையம், பெரிய விளையாட்டுத் திடல், கணினி அறை, ஆசிரியருக்கான அறை, பக்கத்தில் ஒட்டியபடி கருவள அறை எனக் கல்விக்கு ஊக்கம் அளிக்கும் பல வசதிகள்.

தலைமை ஆசிரியர் திரு குமார், வாரியத்தலைவர் டத்தோ ஆனந்தன், 110 மாணவர்கள், 12 ஆசிரியர்கள், வார்டன், துணை வார்டன், அதேப் பள்ளியில் படித்து பாதுகாவலர் பணியிலிருக்கும் ஒருவர் என எல்லோரும் கடப்பாடு மிகுந்தவர்களாக இருப்பது தெரிந்தது.

ஒரு பள்ளியின் நோக்கம் வெற்றிபெற 5 காரணிகள் முதன்மையானவை, அவை :

  1. தலைமைத்துவம்
  2. ஆசிரியர் தரம்
  3. மாணவரின் உள்ளாற்றல்
  4. பெற்றோர் & சமுகத்தின் ஈடுபாடு
  5. உட்கட்டமைப்பு & கட்டட வசதிகள்

தலைமைத்துவமும் ஆசிரியமும்

தலைமையாசிரியர் திரு குமார்

மலாய், ஆங்கிலம், தமிழ் என மூன்று மொழிகளிலும் தொடர்பாடல் ஆளுமையுடன் திகழ்கிறார் தலைமையாசிரியர் திரு குமார். அவரின் தந்தை திரு சிதம்பரம் இப்பள்ளியின் மேனாள் தலைமையாசிரியராம்.

தலைமையாசிரியரின் தனி ஆளுமைகளும், கடப்பாடும், தொலைநோக்கும், திட்டமிட்டு செயல்படும் திறனும், பெற்றோர், ஆசிரியர், மாணவர், வெளியாட்கள் எல்லோரையும் அரவணைக்கும் பாங்கும், தனக்கு வழங்கப்பட்டிருக்கின்ற தலைமையாசிரியர் எனும் பொறுப்புமிகுந்த அதிகாரத்தைச் சரியான விகித அளவில் பயன்படுத்தும் திறமையும் எல்லோரையும் கட்டுக்குள் வைத்து வெற்றியை நோக்கி நகர்த்தும் அந்தக் கலை கைவரப் பெற்றவரே சிறந்த நிருவாகத் தலைமை ஆசிரியராக இருக்க முடியும்.

மலாய் கல்வியதிகாரிகளுக்கு காரண காரியத்தோடு திறம்பட எடுத்து விளக்கி பள்ளியின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார் துணிச்சல் மிகுந்த அதிரடி திட்டங்களின் கதாநாயகன் திரு குமார்.

தன் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் மட்டும், யூ.பி.எஸ்.ஆர்.ரில் (UPSR)  7A, 8A, எடுத்து வெற்றிப் பெறுவதை விடவும், எல்லாப் பாடங்களிலும் எல்லா மாணவரும் 100 விழுக்காடு தேர்ச்சியைப் பதிவு செய்வது முக்கியம் என்கிறார் தொடக்கக் கல்வியின் உண்மை நோக்கத்தை அறிந்த இந்தத் தலைமை ஆசிரியர். இப்பள்ளியின் மாணவர்கள் எல்லோரும் படிவம் ஒன்றுக்கு நேரடியாகச் செல்ல வேண்டும் என்கிறார்.

மாணவரைத் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் அடிப்படை ஒழுங்கையும் ஒழுக்கத்தையும் பேணும் அறமிக்கவர்களாகவும் உருவாக்கும் பணியே மிகச் சிறந்தது என்கிறார் திரு குமார்.

தோட்டத் துண்டாடலுக்குப் பிறகு, நம்மின பாட்டாளிகள் பலர் வேலைக்காகப் புலம்பெயர்ந்து வேறு இடங்களுக்குச் சென்றபிறகு, 300 மாணவர்கள் பயின்ற இப்பள்ளி படிப்படியாக சரிவுகண்டு 58 மாணவர்கள் என்ற நிலையை அடைந்தது. திரு குமார் 2014-ல், இப்பள்ளிக்கு மாற்றலாகி வந்த பொழுது இருந்த நிலைமையிது.

பள்ளியின் சுற்றுப்புறச் சூழலை (environmental analysis) ஆய்வு செய்தபோது, ஏழ்மையின் பிடியில் மாட்டிக்கொண்ட பெற்றோர், பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்ப பேருந்து கட்டணம் செலுத்த சிரமப்படுவதையும், தோட்டப்புறச் சூழலில், பல தனிமனித கலாச்சாரப் பின்னடைவுகள் கொண்ட சூழலில், வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் பி40 வகை தமிழ்மாணவர்களைக் வாடிக்கையாளர்களாகவும் கொண்ட பள்ளிதான் இது என்பதைக் கண்டார். முதல் தேவை வயிற்றுக்கு உணவு, அடுத்து போக்குவரத்து வசதி, அதற்கடுத்து மாணவரின் அடிப்படை எண், எழுத்து, வாசிப்பு திறன், நடத்தை உறுமாற்றம், அதற்கு தங்கும் வசதி அவசியம் என்பதை உணர்ந்தார்.

தொலைநோக்கு (vision)

அப்போது உதித்ததுதான் இந்தத் தொலைநோக்கு. பள்ளியின் சூழலுக்கு ஏற்ற தொலைநோக்கு : எண், எழுத்து, வாசிப்பில் 100 விழுக்காடு தேர்ச்சி. அதை அடைவதற்கு பல்வேறு பயிற்சி நூல்கள் உருவாக்கம். பள்ளிக்கு வந்த 3 மாதத்தில் எல்லா மாணவரும் எழுத வாசிக்க தெரிந்திருக்க வேண்டும் என்ற கண்டிப்பு மிகுந்த இலக்கு.

பெற்றோரால் கைவிடப்பட்டு சுற்றித்திரிந்த ஒரு குட்டியூண்டு பையன், சிவா (9 வயது) எழுதவோ வாசிக்கவோத் தெரியாமல் இந்தப் பள்ளியின் தங்கும் விடுதியில் சேர்க்கப்படுகிறான். இரண்டு வாரத்தில் மூன்று மொழிகளில் வாசிக்கும் திறனைப் பெறுகிறான் என்பதை அந்த மாணவன் என்னிடம் வாசித்துக் காட்டியபோது வியப்படைந்தேன்.

சிவா, தலைமையாசிரியரின் கற்பித்தலின் கீழ் ‘லேடி பெர்ட்’ ஆங்கிலப் புத்தகத்தை முழுமையாக படித்துகாட்டியபோது..

இந்த 100 விழுக்காடு தேர்ச்சி இலக்கை அடைவதற்குத் தடையாய் இருப்பது மாணவரின் வருகையும் வறுமையும் என்பதைக் கண்டதும், மாணவர்களுக்கு இலவச காலை மற்றும் மதிய உணவும், போக்குவரத்து வசதியுடன் பெற்றோர்களுக்கு மளிகைப் பொருட்கள் உதவியும் ஏற்பாடு செய்யப்பட்டன.

பள்ளித் தொடங்கியதும் முதல் மாதம் முழுக்க, காலை 7.15 தொடங்கி 8.15 வரை விளையாட்டு. 100 வகையான விளையாட்டுகள் அறிமுகப் படுத்தப்பட்டன. தலைமை ஆசிரியர் என்பவர் பள்ளியின் கலைத்திட்டத் தலைவரும்கூட (curriculum leader) என்பதால் அவரிடம் பாட நேரம் தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் சில இருக்கின்றன. ஒவ்வொரு பாடத்தில் இருந்தும் 5 நிமிடங்கள் எடுக்கப்பட்டு, 1.00 மணி நேரம் விளையாட்டிற்கு ஒதுக்கப்பட்டது.

குழந்தைகளுக்கு விளையாட்டு என்பது உணவு போன்றது. அதுவே ஒரு கவர்ச்சியான ஈர்ப்புதான். இதனால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல துடிப்பு காட்டினர். இந்தப் பள்ளியின் புறப்பாடத் துணைத்தலைமை ஆசிரியர் திரு பிரபாகரன் பள்ளிக்குக் கிடைத்த ஒரு சொத்து (asset) என்பதை தலையாசிரியர் வாய்நிறையப் புகழ்ந்தபோது தெரிந்தது.

புறப்பாடத் துணைத் தலைமையாசிரிர் திரு பிரபாகரன்

மாணவர்கள் இருவரை தேசிய விளையாட்டு மன்றம் நடத்தும் விளையாட்டுப் பள்ளியில் சேர்ந்து படிக்க அழைப்பு வரும் அளவுக்கு உழைப்பைபோட்டு தேசிய அளவில் பல விளையாட்டுப் போட்டிக்கு மாணவர்களை வெற்றிகரமாக அனுப்பியுள்ள கடப்பாடு மிகுந்த ஆசிரியர் இவர். கோல்ப், கால்பந்து, கைப்பந்து, ஹாக்கி, நெடுந்தூர ஓட்டம் எனப் பள்ளியின் வெற்றிக்கு இவர்தான் முதுகெலும்பு.

மாணவர்களின் எதிர்கால வாழ்வாதாரம் விளையாட்டுத் துறையிலும் இருக்கிறது என்கிறார் கெர்லிங் தோட்டத்தில் பிறந்து வளர்ந்து ஆசிரியராக இருக்கும் திரு பிரபாகரன். குறுக்கு ஓட்டம் (cross country) எனும் ஓட்டப் பந்தயத்தில், இப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் இருவர் – முதல் நிலையில் சுகாஷினியும்  இரண்டாம் நிலையில் தனலட்சுமியும் –  தேசிய அளவில் வெற்றிவாகை சூடியிருக்கின்றனர். மேலும், சிலாங்கூர் மாநிலத்தைப் பிரதிநிதித்து 4 மாணவர்கள் இப்பள்ளியில் இருந்து தேர்வாகி உள்ளனர்.

மாணவர்கள் பள்ளிக்கு ஆர்வத்துடன் செல்ல விளையாட்டும் ஒரு காரணம். விளையாட்டு, உடலை முறுக்கேற்றி உடல் நலமும் மனவளர்ச்சியும் ஒருங்கே அமைய உதவும்.

பள்ளியின் குறுக்கோட்டப் போட்டி நம்பிக்கை நட்சத்திரங்கள் , பயிற்றுநர் / ஆசிரியர் பிரபாவோடு – இடதுகோடியில் தனலட்சுமி தேசிய அளவிலான 2-ம் நிலை வெற்றியாளர்

மாணவர்களின் உணவு, போக்குவரத்து பற்றி பெற்றோர்களுக்குக் கவலை இல்லை. காலை உணவும் மதிய உணவும் பள்ளியில் இலவசமாக கிடைக்கிறது. பத்திரமாக வீடு வருவதற்குப் போக்குவரத்து வசதியும் இலவசம். எனவே, மாணவர் வருகை சிக்கலில்லாமல் அதிகரிக்கவும் கற்றல் கற்பித்தல் விளைபயன் உயரவும் வழிவகுத்தது.

அரசாங்க மழலையர் வகுப்பு இருப்பதால், பெரும்பாலும் முதலாம் ஆண்டுக்கு மாணவர் கிடைப்பதில் இப்போது சிக்கல் இல்லை.

ஆயினும், மாணவர் எண்ணிகையை உயர்த்தும் ஒரு முயற்சியாகவும் சமூகக் கடமையாகவும் கைவிடப்பட்ட மாணவர்கள் இப்பள்ளியில் தங்கிப் படிக்க விடுதி அமைக்கப்பட்டது. இந்த விடுதிக்கான அனுமதியைப் பெறுவதற்குப் பல சிக்கல்களையும் தடைகளையும் எதிர்நோக்க வேண்டியிருந்தது. மிகுந்த மன உறுதியும் கடப்பாடும் கொண்டவர்களால் மட்டுமே இதைச் சாதிக்க முடியும்.

மாணவர் எண்ணிக்கையில் உயர்வு 

2014

201520162017201820192020
58658393103103

110

ஏறக்குறைய 90 விழுக்காடு மாணவர் எண்ணிக்கை உயர்வைப் பதிவு செய்கிறது இப்பள்ளி.

அதேவேளையில், பள்ளியின் யூ.பி.எஸ்.ஆர். தேர்ச்சி நிலை, 2019-ல் மலாய்மொழி (எழுத்து 92 %) தவிர, மற்ற அனைத்து பாடங்களிலும் 100 விழுக்காடு தேர்ச்சி.

பெற்றோர் & சமூக ஈடுபாடு

 மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்குடன் குருகுலம் போன்று அழகான நேர்த்தியான உறைவிடத்தை அமைத்திருக்கின்றன பள்ளி வாரியமும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும். மாதம் ரிம 2000 சம்பளத்துடன் வார்டன், அவருக்கு ஒரு துணை வார்டன் – மாதம் ரிம. 1200 சம்பளத்தில். மாணவர்கள் தூய்மையாகவும் ஒழுங்காகவும் உறங்க மெத்தை, தலையணை, விரிப்பு, குளியல் அறை, சுயக் கற்றல் அறை என மாதம் பல ஆயிரம் வெள்ளியை விழுங்கும் தங்கும் வசதியைப் பள்ளி நிருவாகம் , வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், முன்னாள் மாணவர் சங்கம் என கூட்டமைப்பு வழங்கி வருகிறது. கடந்த 2020/2021 பள்ளியாண்டில் பள்ளி வாரியம் செய்தச் செலவுத்தொகை மட்டும் ரிம 169,120 ஆகும்

பல தொண்டுள்ளம் படைத்தவர்கள், அருகில் இருக்கும் கோயில் நிருவாகங்கள், இளைஞர் அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், இயக்கங்களின் நிகராளிகள் இனம், மொழி, நிறம் கடந்து பள்ளியின் இந்த முயற்சிக்கு உதவி வருகிறார்கள்.

அவர்களைப் பள்ளியை நோக்கி இழுக்கும் அளப்பரிய முயற்சிகளைத் தலைமையாசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்கம், வாரியத் தலைவர் வழக்கறிஞர் டத்தோ ஆனந்தன், முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைமைகள் அடங்கிய கூட்டமைப்பு எடுக்கிறது. ஏழை எளிய மக்களின் குழந்தைகள் கல்வியில் பின் தங்கிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் எழுந்த அடைக்கலம்தான் இந்தக் குருகுல ஆசிரமம். வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிகொண்டு வந்து எல்லா முயற்சிக்கும் துணை நிற்கிறார் பள்ளியின் தலைமையாசிரியர்.

ஒரு தலைமை ஆசிரியர் எவ்வாறு செயலாற்ற வேண்டும் என்பதற்கு திரு குமார் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

‘ஏதோ நானும் கடமைக்குத் தலைமையாசியராக இருக்கிறேன், எந்த சவால்களும் வந்திடாத, பிரச்சனை இல்லாதப் பணியில் இருந்தேன், மகிழ்ச்சியாக ஓய்வு பெற்றேன்’ என வாழ நினைக்கும் தலைமையாசிரியர்களால் சமூக முன்னேற்றத்திற்குப் பெரிய பங்களிப்பு ஒன்றையும் அளித்துவிட முடியாது.

“எனக்கு பள்ளி வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், முன்னாள் மாணவர் சங்கம் போன்றவருடன் கருத்து வேறுபாடும் உராய்வும் ஏற்படுவதுண்டு. அவற்றை பேசித்தீர்த்துக் கொள்வோம். மாணவரின் நலனை விடவும் நமது கருத்து வேறுபாடுகள் முக்கியமல்ல,” என்று சொல்லி இதழ்கடை விரிய முறுவலித்தார் திரு குமார்.

குருகுலத்தில் மாணவர்கள் தங்கும் இடம்

டத்தோ ஆனந்தன், பள்ளியின் வாரியத் தலைவர், தன் தந்தையின் பெயரில் அறநிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் ஒவ்வொரு மாதமும் பள்ளிக்குத் தனிப்பட்ட நன்கொடையும் வழங்குகின்றார்.

மைசிகில் (myskill) தொண்டூழிய நிறுவனத்தின் தலைவர் வழக்கறிஞர் திரு பசுபதியும் பெருந்தொகையை நன்கொடையாகப் பள்ளியின் தங்கும் விடுதிக்கு வழங்கியதாகவும் குறிப்பிட்டார் தலைமையாசிரியர்.

‘தித்தியான் டிஜிட்டல்’ என்பப்படும் இயக்கமும் கணினி பாடநூலையும் வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. YTL நிறுவனம் வழங்கி வந்த இணையவசதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி சொந்தமாக இணைய வசதியை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

எனவே, பள்ளித் தலைமைகள் சமூகத்தின் பல பிரிவினரோடு இணக்கபோக்கையும் நட்புறவையும் மேம்படுத்திக் கொண்டால், ஈடுபாடு மிகுந்த சமூக ஒத்துழைப்பு கிடைக்கும் என்பதற்கு திரு குமார் மறுபடியும் எடுத்துக் காட்டாகிறார்.

அவர் வாயால் சொன்னது “Nothing is impossible, every child can read and write“. ஓர் அரசாங்கப் பள்ளியில் கல்வி அதிகாரிகளின் ஒத்துழைப்பும் முட்டுக்கட்டையும் இல்லாமல் திட்டங்கள் நிறைவேறாது. அதை எப்படி இலாவகமாகக் கையாளவேண்டும் என்பது ஒரு திறன். அதை தலைமையாசிரியர்கள் அறிந்திருந்தால் காரியம் கைகூடும்.

ஆளுமையும் உட்கட்டமைப்பு வசதியும்

எழுதவும் வாசிக்கவும் இன்னும் கைவராத ஏழைக் குழந்தைகள் வீட்டில் இருந்தபடியே சொந்தமாகக் கல்வி கற்று மேம்பாடடைவர் என்னும் கனவு நிறைவேறாது.

முறைசார் பள்ளிக்கூடம் கண்டிப்பாக அவர்களுக்கு வேண்டும். அதே நேரத்தில், பள்ளியில் கற்றுக்கொண்டதை வீட்டில் மேலும் மெருகேற்ற வேண்டும்.

பள்ளி விட்டு வீட்டிற்குச் சென்றதும், அங்கும் கற்றுக்கொள்வதற்கு உதவி செய்யும் சூழல் நிலவ வேண்டும். அதற்கான வாய்ப்பு ஏழ்மை சூழலில் வாழும் குழந்தைகளுக்குக் கிட்டாது. இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு உருவாக்கப் பட்டதுதான் ‘கதவருகே பள்ளித் திட்டம்’ (DoorStep schooling).

பெரும்பாலான மாணவர்கள் குறிப்பிட்ட இடத்தில் இருந்து வருவதால், அங்கு ஒரு கடைத்தெருவில் இரண்டு மாடி கடையொன்றை வாடகைக்கு எடுத்து, அங்கு இரவு வரை படித்துக் கொடுக்கத் தொண்டூழியரும், இணையக் கணினி வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்தது பள்ளியின் வாரியமும் மற்ற சங்கங்களும். மாணவர்கள் நடந்து சென்றே அங்குப் படிக்க முடியும். இப்படியாக அவர்களின் பாட ஆளுமை உயர வழிகாணப்பட்டது.

இந்தப் பள்ளியில் 100 விழுக்காடு ஏழை மாணவர்கள். வீட்டில் கணினி, இணைய வசதிகள் அறவே இல்லை. கோவிட் 19 காலகட்டத்தில் கற்றல் கற்பித்தல் இயங்கலை வழி நடப்பட வேண்டும் என்றால் அதற்கான கருவியும் வசதியும் மாணவர்களின் இல்லத்தில் இருக்க வேண்டுமே.

இந்த நேரத்தில் மிகுந்த உதவியாக இருந்தது doorstep school. இந்தப் பள்ளியின் தங்கும் விடுதியில் தங்கிப் படித்த, பெற்றோரால் கைவிடப்பட்ட ஆண் மாணவர்கள் இடைநிலைப் பள்ளிக்குச் சென்ற பிறகும் தங்கிப் படிக்க அதே இரண்டு மாடி கட்டடத்தின் கீழ்த்தளத்தில் உறைவிட வசதி (சூரியன் விடுதி) செய்து தரப்பட்டுள்ளது. முழுநேர நெறியாளர் ஒருவர் (கவுன்சலர்) தன்னார்வத்துடன் மாணவர்களைக் கவனித்துக் கொள்கிறார். அவருக்கு உதவியாக பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் சுற்றுவட்டார இளைஞர்களும் இருக்கின்றார்கள். ஒழுங்கு, ஒழுக்கம், கண்ணியம், கட்டுப்பாடு போன்ற விழுமியங்களை உள்வாங்கிய ஆளுமையாக மாணவர்கள் மிளிர இங்கு அந்த doorstep school பள்ளியில் பயிற்சி வழங்கப் படுகிறது.

மாணவரின் தன்னாளுமை வளர்ச்சி பள்ளியின் வெற்றிக்கு மேலும் வலுசேர்க்கிறது.

கெர்லிங் தமிழ்ப்பள்ளிப் போன்று ஒத்த சூழலில் இருக்கும் பல பள்ளியின் நிருவாகங்கள் தம்பள்ளியைத் தரம் உயர்த்த இங்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பயிற்சிகள் பற்றி அறிந்துகொள்வது நல்லது.

இப்பள்ளியிலிருந்து ஒரு 20 நிமிட செல்கை தொலைவில் இருக்கும் மைசிகிலுக்கும் (Myskill) ஒரு நடைபோய் அங்கு நடப்பதை அறிந்து கொள்ளலாம்.

குறையில்லாத மனிதர் கிடையாது. குறைகளே இல்லாத அமைப்பும் (system) கிடையாது. ஆனால், முயற்சிகளும் பயிற்சிகளும் மேம்பட வழிகள் அமைகின்றன. பொதுவாக, நம்மவர்கள் ஒற்றுமையாகச் செயல்படுவது குறைவு. கண்ணார் பட்டு சுற்றிப்போடும் அளவுக்குப் பள்ளி வாரியமும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும், முன்னாள் மாணவர் இயக்கமும், பள்ளி நிருவாகமும் இயங்குவது உண்மையில் மகிழ்ச்சியைத் தருகிறது.

குறைசொல்வதில் மேதாவிகள் போல் தட்டச்சு வீரர்கள் பலர் கருத்து சொல்வதில் கில்லாடிகளாக இருக்கின்றார்கள். பள்ளிக்கூடம் தேவையில்லை என்பார்கள். பள்ளிக்கூடங்களே கல்வி வாய்ப்பிழந்த ஏழைக் குழந்தைகளின் அடைக்கலம் என்பதையும் அதன் தேவை நீள்கிறது என்பதையும் அறியாத அப்பாவித் தனம் மிக்க, ஆனால் கற்றுவிட்டோம் என்ற கர்வத்தில் உளறும் மனிதர்களும் இருக்கின்றார்கள்.

தற்போது ‘சூரியன்’விடுதியில் தங்கியுள்ள, இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சிலர்

ஆனால், உண்மையில் களத்தில் இறங்கி பணிசெய்யும் தொண்டுள்ளம் கொண்டவர்கள் இருப்பதால் பல விளிம்பு நிலை மக்களின் வாழ்வில் விடியல் தோன்றுகிறது.

(பி.கு. இப்பள்ளிக்கு நன்கொடை வழங்க விரும்பும் அன்பர்கள் தலைமையாசிரியர் திரு குமார் அவரைத் தொடர்புக் கொள்க +60192732709)