குழப்புவதில் உள்ள உற்சாகம், நல்லெண்ணத்தை வளர்க்க வேண்டும் – கி.சீலதாஸ்

உலகத்தில் பல இனங்கள், பல மொழிகள், பல சமயங்கள், பல்வேறுபட்ட பண்பாடுகள், மாறுபட்ட வாழ்க்கை நெறிமுறைகள், வாழ்க்கை தரங்கள், பலதரப்பட்ட அரசியல் கோட்பாடுகள் எனப் பல பிரிவினைகள் இயங்குகின்றன. எல்லாமே ஏதோ ஒரு வகையில் குழப்பத்தைத் தருகின்றனவே அன்றி நிம்மதியையோ அல்லது புரிந்துணர்வை வளர்க்கும் தரத்தையோ கொண்டிருக்கவில்லை என்றால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. வேறுபாடுகளில் இருக்கும் நெளிவு சுளிவுகளைப் பெரிதுபடுத்தி சாதாரண மக்களைக் குழப்புவதில் காட்டப்படும் உற்சாகம், நல்லெண்ணத்தை வளர்க்க வேண்டும் என்பதில் காட்டப்படுவதில்லை.

ஒவ்வொரு இனத்தையும் சமயத்தையும் மொழி, கலாச்சாரம் ஆகியவற்றைக் கவனத்தில் கொள்ளும்போது ஒவ்வொரு சாராரும், அதாவது, ஓர் இனத்தை எடுத்துக்கொண்டால் தம் இனமே உயர்ந்தது, பழமையானது, நாகரிகமானது, எதற்கும் முன்னோடியாக இருந்தது என்று வாதிடுவோரின் பிடிவாதம் உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனோபாவத்தைக் காட்டுகிறது. இப்படிப்பட்ட மனப்பாங்கு அறிவு வளர்ச்சிக்கு உதவாது. அதுபோலவே, ஒவ்வொரு சமயமும் தமது கோட்பாடே சிறந்தது, உயர்ந்தது, தனித்துவம் கொண்டது எனவும் அதற்கு ஈடு வேறு ஏதும் கிடையாது என்பது மட்டுமல்ல இறைவனோடு தொடர்பு கொள்வதற்கான பாலத்தை அமைக்கும் ஆற்றல் அதற்கு மட்டுமே உண்டு என்று கூறுவது, நம்ப செய்வதில் மிகுந்த கவனம் இருப்பதையும் வேதனையுடன் பார்க்க வேண்டியுள்ளது.

மொழியை விட்டுவைத்தார்களா? இல்லை. என் மொழியே தொன்மை வாய்ந்தது. என் மொழியிலிருந்துதான் பிறமொழிகள் பிறந்தன என்பனவோடு நின்றுவிடாமல், பிறமொழிகளைக் கேலி செய்வது, அவற்றில் குற்றம் காண்பதும் சகஜமாகிவிட்டது. இப்படிப்பட்ட அறிவுக்கு ஒவ்வாத கருத்துக்கள் எப்படி உருவாயின, உறுதியாயின என்பதை ஆராயும்போது சில உண்மைகளை நாம் கவனிக்க வேண்டும். அதற்கு முன் மொழிகளின் தோற்றத்திற்கான காரணத்தை ஆராயும்போது, அது மனிதர்களிடையே சர்வசாதாரணமாகக் காணப்படும் பிணக்குகளைக் களைய தோன்றின என்றால் மிகையாகாது. ஒரு மொழி பிறரோடு தொடர்புகொள்ள உதவுகிறது. அதன்வழி நட்பை, புரிந்துணர்வை வளர்க்கிறது; சச்சரவுகளைத் தவிர்க்க உதவுகிறது என்று கூட சொல்லலாம்.

விஞ்ஞானம் முன்னேற்றம் கண்டிராத காலகட்டத்தில் மொழிகளின் படைப்புகள் ஒரு நாட்டைவிட்டு வேறு நாடுகளுக்குப் போவதில் முட்டுக்கட்டைகள் இருந்தன. எனவே, மொழி என்று எடுத்துக்கொண்டால் ஒரு நாட்டின் அதிகார மொழி, அந்த நாட்டின் எல்லைக்குள்ளேயே நின்றுவிட்டிருக்கும். அந்த மொழி வேறு நாடுகளுக்குச் செல்கிறது என்றால் அது படையெடுப்பு, பிற நாட்டை ஆக்கிரமிப்பு போன்ற நடவடிக்கைகளால் ஏற்பட்டிருக்கலாம். அப்படி பார்க்கும்போது இந்தியத் துணைகண்டத்தில் சிறப்பும் ஆதிக்கமும் கொண்டிருந்த சமஸ்கிருதம், தென்கிழக்காசிய நாடுகளில், குறிப்பாக இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளில் அரசின் அதிகார மொழியாக இயங்கியது. சமஸ்கிருத சொற்கள் இன்றளவும் மேலே குறிப்பிடப்பட்ட நாடுகளின் அதிகாரத்தில் வீற்றிருப்பதைக் காண முடிகிறது.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், வரலாற்று உண்மைகள் மறைக்கப்படலாம். ஆனால், வாழையடி வாழையாகப் பழக்கப்பட்டுப்போன பழக்க வழக்கங்கள், அதிலும் குறிப்பாக மொழி விஷயத்தில், மன்னராட்சியும் அதிலிருந்து விலகி மக்களாட்சியாக மாறின நாடுகளில் கூட பண்டை காலத்தில் பயன்படுத்தப்பட்ட அதிகார மொழியின் செல்வாக்கை கைவிடவில்லை. எவ்வளவுதான் பழமையில் இருந்து ஒதுங்கவோ அல்லது மறைக்கவோ முற்பட்டாலும், குறிப்பாக அரசில் பயன்படுத்தப்பட்ட சொற்களைக் கைவிட தென்கிழக்காசிய நாடுகள், இந்தோனேஷியாவும் மலேசியாவும் தயங்குவதைக் காணலாம்.

மதம் மனமாற்றத்தைக் கொணரலாம். ஆனால், பாரம்பரிய பழக்க வழக்கங்களை மாற்றாது. இந்த உண்மையை அறிய வேண்டுமானால் தமிழ்நாடு, கேரளம், கிறிஸ்த்தவர்கள், முஸ்லிம்கள் ஆகியோரின் திருமணச் சடங்குகளில் தாலி இன்றளவும் பயன்படுத்துகின்றனர். சமயம் இறைவனை அடைவதற்கான பாதையைத் திறக்கவில்லை மாறாக நெறிதவறாமல், ஒழுங்குடன் வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன. இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல் இறைவனின் பெயரைத் தவறாகப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பெருகுவது நல்லெண்ணத்திற்கு ஒரு போதும் வழிகாட்டாது.

அரசியல், பொருளாதார, சமுதாய சூழ்நிலைகள் மாறி வருகின்றன. சுதந்திரத்திற்கு முன்பு இருந்த வாழ்க்கைமுறை வேறு. அதற்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் எல்லா இனங்களையும் ஒன்றுபடுத்த வழிகாண வேண்டுமென பேசப்பட்டது. அது அரசியல் பேச்சளவோடு நின்றுவிட்டதா? அடிக்கடி இன, மொழி, சமய போன்றவற்றின் உயர்ந்த நிலையைப் பற்றிப் பேசுவோர் எப்படிப்பட்டவர்கள் என்பதை ஆய்ந்துப் பார்த்தால், ஜப்பானிய தவளைகள் இரண்டின் ஞாபகம்தான் வருகிறது.

ஒசாகாவில் வாழ்ந்த தவளை, வழிபோக்கர்கள். கியோத்தோ நகரைப் பற்றிப் புகழ்ந்து பேசியதைக் கேட்டு, அந்த அழகிய நகரைக் காண ஆவல் கொண்டது. அதே சமயத்தில் கியோத்தோவில் வாழ்ந்த மற்றொரு தவளை ஒசாகாவைப் பற்றி கேள்விபட்டிருந்தது. எனவே, ஒசாகா தவளை கியோத்தோவைக் காண புறப்பட்டது. அதுபோலவே கியோத்தோ தவளையும் ஒசாகாவைக் காண புறப்பட்டது.

இருவரும் மலை உச்சியை அடைந்து தாங்கள் காண விரும்பிய நகரைப் பார்த்தனர். ஒரே ஏமாற்றம். “இதென்ன நான் வாழ்ந்த ஒசாகாவைப் போல் இருக்கிறதே கியோத்தோ!” என்றது ஒசாகா தவளை. கியோத்தோ தவளையும் ஒசாகா தவளை போலவே நினைத்தது. “ஒசாகா, நான் வாழும் கியோத்தோவைப் போலவே இருக்கிறது. வித்தியாசம் இல்லையே!” இருவரும் தங்களின் பழைய இடத்துக்கே திரும்பினர். என்ன நடந்தது?

தவளைகளின் கண்கள் பின்புறம் அமைந்திருக்கும். எனவே, ஒசாகா தவளை மலை உச்சியை அடைந்ததும் நேராகவே பார்த்தது. அதாவது ஒசாகாவைப் பார்த்தது. புதினம் இல்லை என்று தீர்மானித்தது. அதுபோலவே கியோத்தோ தவளையும் தாம் வாழ்ந்த கியோத்தோவைப் பார்த்தது. அது ஒசாகா எனத் தீர்மானித்தது. இதிலிருந்து என்ன தெரிந்துகொள்ள முடிகிறது?

நம் சிந்தனையில் மாற்றம் தேவை. மலை உச்சிக்குப் போன தவளைகள் தங்கள் கண்களின் இயற்கை அமைப்பை நினைவுப்படுத்தி திரும்பிப் பார்த்து இருந்தால், ஒசாகா தவளை கியோத்தோவையும்; கியோத்தோ தவளை ஒசாகாவையும் பார்த்து இருக்கும். அந்தச் சிறு மாற்றத்தைச் செய்யாததால், பழையதில் இருந்து மாறாத எண்ணத்தைக் கொண்டு, பழைய நிலையிலேயே இருந்து விட்டனர்.

உலக வரலாறு எழுதப்பட்டபோது இன்று கிடைக்கும் விஞ்ஞான வசதிகள் கிடையாது. கற்பனை வளம் மிகவாக வரலாற்றினைப் படைக்க உதவின. இன்று உண்மையை அறிந்துகொள்ளும் வாய்ப்பு நிறைய இருக்கின்றன. இந்த முன்னேற்றங்களை மனத்திற் கொண்டு, பல நாடுகளின் இலக்கியங்களை, தத்துவ கருவூலங்களைப் புரட்டிப் பார்ப்போமேயானால், நம் கருத்து முதன்மையானது அல்ல என்ற உண்மை புலப்படும். தவறான கருத்துகளைத் திருத்திக் கொண்டு நல்ல அறிவு வளர்ச்சிக்குத் தயாராக வேண்டும். அதைத்தான் விஞ்ஞானம் உணர்த்துகிறது; புதிய அணுகுமுறையை வலியுறுத்துகிறது. எனவே, நம் சிந்தையில் தெளிவும் மாற்றமும் தேவையே!