இளம் மலேசியர்கள் சோசலிசத்திற்குத் திரும்புவது, எழுட்சியா? புரட்சியா?

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில், சோசலிசம் என்ற வார்த்தையே  வலதுசாரி அரசியல்வாதிகளால் சர்ச்சைக்குரியதாக  பார்க்கப்படுகிறது.எடுத்துக்காட்டாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்களும் அனைத்து குடிமக்களுக்கும் சுகாதார சேவையை உறுதி செய்வதில் அரசாங்கத்தை ஈடுபடுத்த முயன்றதற்காக அது “சோசலிசம்” என்று பராக் ஒபாமாவை தாக்கினர். இந்த கோர்ப்பாட்டோடு மோதுவதற்கு பதிலாக, கல்வியாளர்களும் ஊடகங்களும் சோசலிசத்தின் மீது  இருண்ட பார்வையை பரப்புகின்றனர்.

சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் போன்ற கம்யூனிஸ்ட் சர்வாதிகாரங்களின் செயலால் இந்த வார்த்தை எதிர்மறை கருத்துகளை கொண்டிருப்பதை நியாயப்படுத்தவில்லை .இன்றும் கூட  கருத்தியல் ரீதியாக வேறுபட்ட பல இடதுசாரிஅரசியல் கட்சிகள் உள்ளன. அவர்களில் பலர் ‘சோசலிசம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர்.

ஒருபுறம்  வட கொரியா போன்ற  சர்வாதிகார ஆட்சிகளையும், சீனா மற்றும் வியட்நாம் போன்ற  சோசியலிசத்தை பேசிக்கொண்டு விரைந்த வளர்ச்சியை நோக்கி செல்லும் முதலாளித்துவ நாடுகளையும் பார்க்கிறோம் .மறுபுறம், 2000 களின் முற்பகுதியில் லத்தீன் அமெரிக்க இடதுசாரி அரசாங்கங்களின் அலை இருந்த அதே நேரத்தில்  முற்போக்கான, இளம், பெண் பிரதமர்களான நியூசிலாந்தின் ஜசிந்தா ஆர்டெர்ன், பின்லாந்தின் சன்னா மரின் மற்றும் டென்மார்க்கின் மெட்டே போன்றவர்களின் மூலம்  மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும்,1960களில் மலேசியாவில் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தை பரவலாகப் பயன்படுத்தி பிரதான எதிர்க்கட்சியான  பாரிசான் சோசலிஸ் ரக்யாட் மலேசியா அதிகாரிகளை கைதுசெய்து தடுத்து வைத்த பிறகு இந்த சித்தாந்தம் விளிம்பு நிலையிலேயே உள்ளது.

மேலும், இந்நாளில் நன்கு வளர்ந்த கருத்தியல் தளம் மற்றும் போராட்டத் திட்டம் இருந்தபோதிலும், மலேசியா சோசியலிசகட்சி  (பிஎஸ்எம்) ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பெரும்பாலும் ஒரு முழுமையான தேசிய கட்சியின் பிரதிநிதிகளாக இல்லாமல், தொழிலாளர் ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களாகவே கருதப்படுகிறார்கள்.

வார இறுதியில், 22 வது பிஎஸ்எம் பொது மாநாடு இணையதள நிகழ்நிலையில்  நடைபெற்றது. முன்னாள் சுங்கை சிபுட் எம்.பி. டாக்டர் மைக்கேல் ஜெயகுமார் தேவராஜ், துணைத் தலைவர் எஸ்.அருட்செல்வன் மற்றும் பொதுச்செயலாளர் ஆ. சிவராஜன், அத்துடன் இப்போது ஓய்வுபெற்ற நீண்ட காலத் தலைவர் டாக்டர் நசீர் ஹாஷிம் மற்றும் முன்னாள் துணைத் தலைவர் எம் சரஸ்வதி ஆகியோர் மலேசியா சோசியலிச கட்சியில் நன்கு அறியப்பெற்றவர்கள் .

பி.எஸ்.எம்இளைஞர் அணி தலைவர் நிக் அஜீஸ் அஃபிக் (கடந்த ஆண்டு செமனிஹ் இடைத்தேர்தலில் நின்ற  வேட்பாளர்) மற்றும் கே.எஸ். பவானி போன்ற இளைய தலைமுறை  ஆர்வலர்களும் இந்தக் கட்சியில் உள்ளனர். இதில்  குறிப்பிடத்தக்கவை என்னவென்றால், பல புதிய இளைஞர்களை  பி.எஸ்.எம் ஈர்த்துள்ளது.

20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பி.எஸ்.எம்  கட்சியில் சேர்வதற்கு எது அவர்களை ஈர்த்துள்ளது   என்பதைக் கண்டறிய ஒன்பது இளம் கட்சி உறுப்பினர்களுடன் பேசினோம்.

பி.எஸ்.எம் அடிமட்டத்திலிருந்து பணியாற்றுகிறது

பலரைப் போலவே, ஐ.டி வணிக ஆய்வாளர் வென்னுஷா பிரியா ( 26வயது)  தன் கல்லூரி காலங்களில் முதன்முதலில் பி.எஸ்.எம் கட்சியில் இணைந்துள்ளார்.

“நான் எப்போதும் சமுதாயத்திற்கு பங்களிக்க ஆர்வமாக இருந்தேன், சில சிறிய தொண்டு வேலைகளை செய்து வந்தேன்.நான் இலவச கல்வியை ஆதரிக்கும் ஒரு மாணவர் இயக்கத்தில் சேர்ந்தேன். பின்னர் இதை வழிநடத்தும் முக்கிய குழு பி.எஸ்.எம்-மின் மாணவர் முன்னணி குழு என்பதை அறிந்தேன். பின்பு 2017 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக பி.எஸ்.எம்-மில்  சேர்ந்தேன், ” என வென்னுஷா கூறினார்.

20 வயதான யாப் ஜின் யிட் தற்போது பல்கலைக்கழக மாணவராக இருக்கிறார். அவர்  இந்த ஆண்டு தொடக்கத்தில் கட்சியில் சேர்ந்தார். பி.எஸ். எம் இதுவரை செய்த சேவைகள் அனைத்தும் பாராட்டுக்குரியது என கூறினார்.

“நான் இந்த கட்சியில் இணைந்ததன் முக்கிய  காரணம் எல்லா மலேசியர்களுக்கும், குறிப்பாக ஊனமுற்றோருக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்க போராட வேண்டும் என்று எண்ணினேன். பி.எஸ்.எம் அதற்கான நம்பிக்கையை அளித்துள்ளது என யாப் மலேசியாகினியிடம் கூறினார்.

“பி.எஸ்.எம் நடத்திய தனித்து வாழும் தாய்மார்கள் உடனான  பி பி ஆர்  வீடு திட்டத்தில் சேர்ந்த பிறகுதான், முதன்முதலில் இக்கட்சியால்  நான் ஈர்க்கப்பட்டேன்,” என்று 22 வயதான அஹ்மத் யாசின் நினைவு கூர்ந்தார்.

பி.எஸ்.எம் உறுப்பினர்கள் பிபிஆர் வீடுகளில் வாழும் சமூகத்துடன் யாருடைய அறிவுறுத்தலுமின்றி சுயமாக முன்வந்து அவர்கள்  எதிர்கொள்ளும் சமூக மற்றும் பொருளாதார சவால்களுக்காக  பணியாற்றியதை கண்டு  தாம் பெரிதும்  ஈர்க்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த மார்ச் மாதத்தில் கட்சியில் சேர்ந்த 28 வயதான ஐன் ஜாபிரா முஹமட்  சைட், 2019 செப்டம்பரில் ஒரு சமூக வலைதளத்தில் அவர் ஒரு    கருத்து தெரிவித்ததற்காக  மூன்று நாட்கள் தடுத்து வைக்கப்பட்டதை  தொடர்ந்து  தனது அரசியல் விழிப்புணர்வு வளர்ந்ததாக கூறுகிறார்.

“இந்த தடுப்புக்காவல் மனித உரிமை பிரச்சினைகள் குறித்த எனது விழிப்புணர்வைத் தூண்டியது. ஒரு சாதாரண குடிமகனும் ஒரு கட்சியின்  மூலம் அடிப்படை உரிமைகளுக்காக மிக சரியான வழியில் போராட முடியும்  என்பதை நான் உணர்ந்தேன்.”

“ஒரு பொது ஊழியராக எனது அனுபவங்களின் மூலம், பல அநியாயங்கள்  நடப்பதை  கண்டேன். ஊதியம் வழங்காத முதலாளிகள் அல்லது பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே பதவி  துஷ்பிரயோகம் செய்வதை கண்டேன்.

“நம்மில் பெரும்பாலோர் இதை அனுபவிக்கிறோம், ஆனால் பலவீனமாகவும் உதவியற்றவர்களாகவும் இருப்பதால்  அமைதியாக இருக்கவேண்டிய சூழல் நிகழ்கிறது. நான் பி.எஸ்.எம்மில் சேர காரணம்  இந்த கட்சி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், குறிப்பாக தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளில், வர்க்கம் , இனம், மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அவர்களுக்காக  கடினமாக உழைக்க தயாராக இருப்பதாக நான் நம்புகிறேன், ”என்று ஐன் ஜாபிரா கூறினார்.

சோசலிச எதிரான  மூலைச் சலவை- டேனியல் ஹக்கீம்

அரசு ஒப்பந்த ஊழியர் தன்னார்வ அமைப்பு தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் 25 வயது டேனியல் ஹக்கீம் அஸ்மான் இவர்களின் வேலைகள் தனியார் ஒப்பந்தக்காரர்களுக்கு குத்தகை விடப்பட்டதால் இத்தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாக கூறுகிறார்.இந்நிலையில்,அத்தகைய உரிமையை இழந்து தவிக்கும் தொழிலாளர்களுக்காக சம்மதப்பட்ட அரசு வளாக ஊழியர்களுக்காக போராடுவதாக கூறுகிறார்.

இத்துறை சார்ந்த ஊழியர்கல் அரசு மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளர்களாகவும், பாதுகாப்பு காவலர்களாகவும்,தோட்டக்காரர்களாகவும் உள்ளனர்.கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் இவர்கள் பெரும் பங்காற்றியிருந்த நிலையிலும் அவர்களுக்கான சலுகைகள் மற்றும் சிறப்பு உரிமைகள் எதுவும் இங்கு வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில்,சமூகக் கட்டமைப்புகள் பல காரணங்களுக்காக இங்கு சோசலீச சிந்தனைகளுடம் முரண்படும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளதாக தாம் நம்புவதாகவும் அவர் கூறினார்.மேலும், “பிரதான ஊடகங்கள் முதலாளிகளின் நலனுக்காகவும் ஏகபோக உரிமையிலும் உள்ளன; அதிகப்படியான சொத்து குவிப்பு செயல்முறையை பாதிக்கக்கூடிய மாற்று அல்லது முரண்பட்ட வாக்குகளுக்கு எந்த இடத்தையும் வழங்கவோ அனுமதிக்கவோ அஃது இல்லை.

“அதிகப்படியான சொத்துகளுடன் ஒப்பிடுகையில் சுற்றுச்சூழலின் நன்மைக்காக (தனிநபர்கள் உட்பட) முன்னுரிமை அளிக்கும் ஒரு அமைப்பு, தங்கள் சொந்த நலன்களைக் கொண்ட சில  தரப்பினர்களுக்கு எதிராக துணிந்து போராடும் ஒரு கட்சி எனவும் அவர் தெரிவித்தார்.

முதலாளிகளுக்கு ஒத்து ஊதும் தரப்பும் முதலாளிகளுக்கும் தங்களின் சுயநலத்தை தொடர்ந்து மெய்ப்பித்துக் கொள்ள சித்தாந்தத்தின் பலவீனத்தை சுட்டிகாட்டி சோசலீச  சிந்தனைகள் தோல்வியடைவதை எடுத்துக்காட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள்.

மேலும், “பொதுமக்களுக்கு பரவியிருக்கும் போதனையின் எதிர்மறை வட்டம் ஒரு நுகர்வோர் சமுதாயத்தையும் உருவாக்குகிறது, அது முதலாளித்துவ செல்வாக்கின் ஊடகங்களுக்கு மட்டுமே வெளிப்படும், இது எப்போதும் சோசலிசத்தைப் பற்றிய ஏமாற்றத்தை பரப்புகிறது.

“ஆனால் என் கருத்துப்படி, தொழிலாளர்கள் தாங்கள் சுரண்டலை எதிர்கொள்கிறார்கள் என்பதை அறிந்திருக்கிறார்கள், உணர்ந்துள்ளனர்.ஆனால், தங்கள் நலனைப் பற்றி கவலைப்படுவதில்லை என்பதையும் அவர்கள் அறிவார்கள், மேலும் அவர்களுடைய பணி அவர்களால் அனுபவிக்கப்படாது என்பதையும் அவர்கள் அறிவார்கள்.

அதுமட்டுமின்றி,தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன.ஆனால், முதலாளித்துவத்திற்கு எதிரான மாற்று செயல்பாட்டினை கையாள அவர்கள் தயங்குகின்றனர் என்றும் டேனியல் அமாட் தெரிவித்தார்.

26 வயதான அர்விந்த் ஸ்ரீரங்கன் கதிர்தெல்வன், 2018 -ல் பி.எஸ்.எம்-மில் இணைந்தார்.  மாற்றம் மற்றும் உருமாற்ற மேலாண்மை நிர்வாகியாக இருக்கிறார்.

” சோசலிசத்திற்கு எதிர்மறையான பெயர்  முதலாளித்துவவாதிகளின் தவறான பிரச்சாரங்களால் கொடுக்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சோசலிசத்தை சர்வாதிகாரமாகவும் தோல்வியாகவும் சித்தரிக்க, பெரும் பிரச்சார முயற்சிகளை கையாண்டன.

“அவர்கள் சொல்லாதது என்னவென்றால், அவர்கள் சிலியில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சோசலிச தலைவர்களை எவ்வாறு தீவிரமாக பதவி நீக்கம் செய்தார்கள், கியூபா மற்றும் வெனிசுலா போன்ற நாடுகளின் பொருளாதாரங்களை அவர்கள் இட்ட தடைகள் மூலம் எவ்வாறு அழித்தார்கள் என்பதுதான்.

“எதிர்ப்பாளர்களைப் பொறுத்தவரை, நான் ஒரே ஒரு விஷயத்தைச் சொல்கிறேன்: மூலதன ஆதாயங்களுக்காக சுரண்டப்பட்டவர்களுக்கு போராடும் ஒரே சித்தாந்தம் சோசலிசம்தான்.

விவசாயிகள், குறைந்த ஊதியத்திற்காக நீண்ட நேரம் உழைப்பவர்கள், வீட்டுவசதி அல்லது சுகாதார சேவையை வாங்க முடியாதவர்கள் ; இம்மக்கள் அனைவரையும்,  பெரிய முதலாளிகள் தங்கள் சொந்தப் பைகளை கொழுக்கச்  உழைப்பைச்சுரண்டியுள்ளனர். இந்தக் கடைநிலை மக்களுக்குப் போராட நாம் ஏன் வெட்கப்பட வேண்டும்? ”  அர்விந்த் இவ்வாறு தெரிவித்தார்.

மலேசியாவின் இடதுசாரி வரலாறு புதைக்கப்பட்டுள்ளது

வரலாறு என்பது வெற்றியாளர்களால் எழுதப்பட்டது. மற்றும் இந்த இளம் பிஎஸ்எம் உறுப்பினர்களின் கூற்றுப்படி, மலேசிய அரசியலில் இடதுச் சாரி இயக்கத்தின் பங்கை வரலாற்று புத்தகங்கள் பதிவு செய்யவில்லை.

இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடுவதில்  ஒரு பங்கைக் கொண்டிருந்த மலாயா கம்யூனிஸ்ட் கட்சி, அப்போராட்டத்தில் வன்முறை ஒரு முக்கிய பிரச்சினையாக இருந்தது – பின்னர் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் புதிதாக சுதந்திரமான மலாயாவின் அரசாங்கத்திற்கும் எதிராகவும்  போர் நடந்தது.

இது ஒருபுறம் இருக்க, மலேசியாவின் இடதுசாரி வரலாற்றில் பல முக்கிய நிகழ்வுகளும் உள்ளன …

1947 –ஆம் ஆண்டு புத்ரா-ஏ.எம்.ஜே.சி.ஏ ஏற்பாடு செய்த பொது வேலைநிறுத்தம்,

1950 களின் பிற்பகுதியிலும் 1960 களின் முற்பகுதியிலும் சோசலிஸ முன்னணியின் தேர்தல் வெற்றி –

பின்னர் விசாரணையின்றி நீண்ட கால தடுப்புக்காவலால்  முடங்கிப்போனது,

1970 களில் ஹமீத் துவா தலைமையிலான விவசாயிகள் போராட்டங்கள்.

பி.எஸ்.எம் தங்கள் இளைஞர்களுக்கு தங்கள் கடந்த காலத்தை அறிமுகப்படுத்த வரலாறு மற்றும் கருத்தியல் வகுப்புகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.

29 வயதான மஹிரா கைரியா, சந்தைப்படுத்தல் மற்றும் வணிக மேம்பாட்டு துறையில் பணிபுரிகிறார். கணினி வடிவமைப்பாளர் மற்றும் புகைப்படக் கலைஞரான இவர்,  ஏப்ரல் 2019 இல் கட்சியில் சேர்ந்தார். வரலாற்று வகுப்புகளில் பங்கேற்பவர்களில் இவரும் ஒருவர்.

“பி.எஸ்.எம் இன் தற்போதைய உறுப்பினர்களை நான்  கவனித்து வருகிறேன், ஏனென்றால், மக்களின் அன்றாட  வாழ்வியல் போராட்டங்களுக்கு உதவுவதற்காக அவர்கள் மேற்கொள்லும்  முயற்சிகளும் சவால்களும்  மக்களுக்காக போராடுவதில் தொடர்ந்து இருக்கின்றன.

” எங்களுக்குக் கற்றுக் கொடுத்த பாடங்களை கேள்வி கேட்கவும் நிராகரிக்கவும் நேரம் எடுக்கும், ஆனால் உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது. நாங்கள் நிச்சயமற்ற ஒரு சகாப்தத்தை நெருங்குகிறோம்;  வளங்கள் குறைந்து வருகின்றன; பொருளாதார இடைவெளி விரிவடைகிறது, முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய ஆட்சிகளின் கீழ் இந்த  நெருக்கடி முடிவடையாது.’’

‘’ இதன் காரணத்திற்காகவே,  தீர்வுகளுக்காக சக்திவாய்ந்தவர்களை நம்புவதை விட, மாற்றத்திற்காக போராடுவதில் பொதுமக்களே தீவிரமயமாக்கியுள்ளனர்.

“வெகுஜன ஆர்ப்பாட்டங்கள், சர்வதேச பிரச்சாரங்களைக் கொண்டயை இணையப் பிரச்சாரங்கள், போன்றவை பொதுமக்களை ஒன்றிணைத்து கற்றல் இடமாக மாறும்.

“(இதுவும்) முதலாளித்துவ அமைப்பின் தோல்வி குறித்த விழிப்புணர்வைத் திறக்கிறது – ஊதியம், பாலினம், வர்க்கம், இன சமத்துவம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கூட விழிப்புணர்வு ஏற்படுகிறது. முதலாளித்துவ அமைப்பு ஏழைகளை முன்னேறத் தடுத்து,  பணக்காரர்களுக்கு மட்டுமே பயனளிக்கிறது”என்று அவர் கூறினார்.

முகநூல் வழியாக பி.எஸ்.எம்-ஐ  கண்டுக்கொண்ட  மஹிரா, முதலாளித்துவ அமைப்பிற்கு எதிராக, தொழிலாளர்கள் , நகர்ப்புற ஏழைகள், மற்றும்  சமூகத்திலிருந்து விலகி இருப்பவர்களான  மாற்று பாலினத்தவர்  மற்றும் LGBT போன்ற ஓரங்கட்டப்பட்ட சமூகத்தினருக்காக கட்சி முன்னெடுக்கும் போராட்டத்தில்  ஈர்க்கப்படுவதாகக் கூறினார்.

காந்திபன் நாதன் கோபாலன் 24 வயதுடைய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானியாவார்.கடந்த 2017இல் பி.எஸ்.எம் கட்சியில் இணைந்தார்.பனிப்போர் காலத்தில் உலகின் சில பகுதிகளில் சோசலிச எதிர்ப்பு பிரச்சாரங்கள் விஸ்பரூபம் எடுப்பதாக கூறினார்.

மேற்கத்திய நாடுகளும் அவற்றின் நட்பு நாடுகளும் இடதுசாரி நாடுகள் மீதான தாக்குதல்கலை நியாயப்படுத்தவும் பிரச்சாரங்களை பரப்புவதற்கும்  ஊடகங்களை பயன்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த மூலோபாயம் இன்றைக்கும் பொருந்தும்.கியூபா,வெனிசுலா போன்ற நாடுகளின் மீதான தாக்குதல்கள் மற்றும் முன்னாள் அரசியல் ஜனாதிபதி லூலா டா சில்வா,முன்னாள் இங்கிலாந்து தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெர்மி கோஃர்பின் மற்றும் முன்னாள் பொலிவியா ஜனாதிபதி ஈவோ மோரல்ஸ் போன்ற சோசலிச தலைவர்களின் படுகொலைகளை காணலாம் என்கிறார்.

மேலும்,சில நேரங்களில் இடதுசாரி தலைவர்கள் எடுக்கும் தவறான அரசியல் முடிவுகள் கூட சோசலிசத்தின் நற்பெயரை சேதப்படுத்தியுள்ளன என்றும் காந்திபன் நினைவுக்கூர்ந்தார்.

வி கேசவன், 27 வயது.  சோசலிசக் கட்சியில்  இளைஞர் பிரிவில் இருக்கும் இவர் இன்னும் கல்வி பயின்று வருகிறார். பேராக் கிராமப்புற மாணவர்கள் குழுவை நிர்வகித்து வருகிறார்.  இவர். எஸ்.டி.பி.எம் தேர்வுக்குப் பிறகு பி.எஸ்.எம் உறுப்பினராக பதிவுசெய்தார். ஏனெனில்  வறுமையை ஒழிப்பதற்கான தீர்வைக் காண சரியான மற்றும் நேர்மையான ஒரு கட்சியில் சேர விரும்பியதாக அவர் தெரிவித்தார்.

“மலாயாவின் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் இடதுச் சாரி இயக்கங்களின் பங்களிப்பு குறித்து எனக்குத் தெரியும், நான் அஹ்மத் போஸ்டாமம் மற்றும் முன்னாள் சிபிஎம் தலைவர் சம்சியா ஃபகே ஆகியோரால் ஈர்க்கப்பட்டேன், ”என்று கேசவன் கூறினார்.

1948 அவசரநிலைக்கு முன்னர், சம்சியா, பி.கே.எம்.எம் பிரிவு, Angkatan Wanita Sedar (Awas) ஐ வழிநடத்தினார், பின்னர் சிபிஎம்மில் சேருவதற்கு முன்பு ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தினார்.

தேசிய முன்னணி மற்றும் பக்கத்தான் ஹரப்பான் – வேறுபாடா? அப்படி  என்ன?

பல சோசலிச இளைஞர்கள் பகிர்ந்து கொள்ளும் கருத்து என்னவென்றால், பாரிசான் நேஷனல் அரசாங்கத்தின் எதேச்சதிகார அம்சங்கள், ஊழல் மற்றும் ஒடுக்குமுறைக்கு நீண்டகாலமாக ஆட்சேபனை தெரிவித்திருந்தாலும், கடந்த பிப்ரவரியில் சரிந்த பக்காத்தான் ஹரப்பன் அரசாங்கம் ஒரு சிறந்த மாற்று அரசாங்கமாக இல்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

“தேசிய முன்னணி நிர்வகிக்கும் முறையை மாற்ற  பக்கத்தான் ஹரப்பான் முயற்சிக்கக்கூடும் என்று நான் நினைத்தேன், ஆனால் இறுதியில், எதுவும் மாறவில்லை.

“என்னைப் பொறுத்தவரை, இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது, வயது குறைந்தவர்கள் திருமணம் தொடர்பான சில சட்டங்கள் எளிதில் மாற்றப்படலாம்.

“அரசியல்வாதிகள் மக்களால் நியமிக்கப்பட்டுள்ளனர், மக்களின் நலன்களைப் பற்றி சிந்திப்பதன் மூலம் தங்கள் வேலையை அவர்கள் செய்திருக்க வேண்டும், அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதை நோக்கமாகக் கொண்டது  ‘அரசியல் முடிவுகள் அல்ல,”  இவ்வாறு வென்னுஷா கூறினார்.

யாப் வென்னுஷாவின் கூற்றை ஏற்றுக்கொண்டார்.  இரண்டு கூட்டணிகளும் முதலாளித்துவ புதிய தாராளமயக் கொள்கைகளுக்கு அதிக ஆதரவளிப்பதாகவும், அவை தொழிலாளர்களின் அரிசிப் பானைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் என யாப் தெரிவித்தார்.

என்னைப் போன்ற இளைஞர்கள் பக்காத்தான் ஹரப்பான் மற்றும் தேசிய முன்னணி போன்ற பெரிய கட்சிகளின் செயற்பாடுகளால் நீண்ட காலமாக சோர்வடைந்துவிட்டோம். அதிகாரத்தைப் பெறுவதற்கு இன மற்றும் மதப் பிரச்சினைகளைப் பயன்படுத்துவதில் அவர்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள், எனவே அவர்கள்தான் நன்மைகளையும் பலனையும்  பெறுகிறார்கள், மக்கள் அல்ல, ”என்று ஜாபிரா பகிர்ந்து கொண்டார்.

“சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான சிறந்த வழி இடதுசாரியான சோசலிச போராட்டத்தின் முடிவுகளிலிருந்தே வரும், பிரதான கட்சிகளில் இருந்து அல்ல” என்று ஜாபிரா தெளிவு படுத்தினார்.

ஓர் எறும்பாக இருந்தாலும், காரணங்களுக்காக கடிக்கும் கட்சி

தீபகற்ப மலேசியாவில் இந்திய சமூகத்திற்கு வெளியிலிருந்து ஆதரவைப் பெற சோசலிசக் கட்சி தவறியது பி.எஸ்.எம்மின் பெரிய தடைகளில் ஒன்றாகும்.

பிஎஸ்எம்-மின் முக்கியத் தலைவர்களில் பெரும்பாலோர் இந்தியர்களாக இருக்கிறார்கள்.  சிலாங்கூர் மற்றும் பேராக் மாநிலங்களிலிருந்து வந்தவர்கள்.

பி.எஸ்.எம் ஒருமுறை பக்காத்தான் ராக்யாட் கூட்டணி காலத்தில் (பக்காத்தான் ஹரப்பானுக்கு முன்பு)  பாராளுமன்ற உறுப்பினராக இருந்தது. இருப்பினும்  14 –வது பொதுத்தேர்தலில் பி.எச் கூட்டணியில் சேராமல் போட்டியிடும் போது தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள அதனால் முடியவில்லை.இதன் காரணமாக பி.எஸ்.எம் ஓரங்கட்டப்பட்டு, இது ஒரு ‘எறும்பு கட்சி’ என்று வர்ணிக்கப்பட்டது.  அதன் தோல்வி சிறிய தாக்கத்தையும் மட்டுப்படுத்தப்பட்ட முறையீட்டையும் கொண்டிருந்தது

“14 –வது பொதுத்தேர்தல்  முடிவுகளில் சற்று ஏமாற்றம்  அடைந்ததாக” கேசவன் கூறினார்.

கடந்த பொதுத் தேர்தலில், பி.எஸ்.எம் ஐந்து நாடாளுமன்ற இடங்களுக்கும் 14 மாநில இடங்களுக்கும் போட்டியிட்டது, ஆனால் ஒரு வெற்றி கூட இல்லாமல் மோசமாக தோற்றது, இதில் டாக்டர் ஜெயகுமார் சுங்கை சிபுட் தொகுதியைப் தற்காத்து நின்றார். ஆனால் தோற்றார்.

14 –வது பொதுத்தேர்தலில்   போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்கள் வைப்பு பணத்தை இழந்தனர்.12 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளில் 3,782 வாக்குகள் மட்டுமே பிஎஸ்எம் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கையாகும்.

“ஆனால் கட்சி பல போராட்டங்களை வென்று பல பிரச்சாரங்களை ஒழுங்கமைத்தது. எடுத்துக்காட்டாக, 90 களில் இருந்து கட்சி போராடி வரும் பிரச்சினைகளில் குறைந்தபட்ச ஊதியச் சட்டங்கள் மற்றும் பணியாளர் காப்பீட்டுத் திட்டங்கள் ஆகியவை அடங்கும்.

“எங்கள் இளைஞர் பிரிவு இந்தியரல்லாத மேலும்  பல புதிய உறுப்பினர்களைப் கொண்டிருக்கிறது, எனவே நாங்கள் எங்களின் சிறப்பான பணியைத் தொடர முடியும் என்று நினைக்கிறோம். பட்டணங்களை விட்டு வெளியில் இருக்கும் இளைஞர்களுடன் கலந்துரையாடல்கள்,  அமர்வுகள், பட்டறைகள் மற்றும் மன்றங்களும் கட்சியில் இருக்க வேண்டும்” என்று கேசவன் கூறினார்.

சில நேரங்களில் நான் விரக்தியடைகிறேன், ஏனென்றால் நாங்கள் ஒரு சிறிய கட்சி (உறுப்பினர்களைப் பொறுத்தவரை), என்றாலும் இந்த சிறிய எண்ணிக்கையுடன், பிஎஸ்எம் நாட்டிற்கு கொண்டு வந்த நேர்மறையான தாக்கத்தை நான் கண்டிருக்கிறேன்.

“எங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் மற்றும் இன்னும் அதிக சக்தி இருந்தால் நாங்கள் இன்னும் அதிகமாக மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்று எனக்குத் தெரியும்,” வென்னுஷா  இவ்வாறு கூறினார்.

பிஎஸ்எம் வளர்ந்து வருவதாக யாப் கருதுகிறார், மேலும் பிஎஸ்எம் செய்யும் வேலையை அதிகமான மக்கள் பாராட்டுகிறார்கள்.

இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளான தரமான கல்வி, கல்வி பண உதவி, வேலையின்மை, காலநிலை நெருக்கடி உள்ளிட்ட விஷயங்களுக்கு போராடுவது மிகவும் அவசியம்” என்று அவர் கூறினார்.

” அனைத்து இனங்களுக்கும் பி.எஸ்.எம் மீது  ஒரு ஈர்ப்பு உள்ளது.  ஆனால் சுரண்டப்படும் தொழிலாளர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள், எனவே இந்த கட்சி இந்தியர்களுக்குதான் முதல் அங்கிகாரம் கொடுக்கிறது என்று இந்தியர்கள் அல்லாதவர்கள் நினைப்பது ஆச்சரியமல்ல” என்று யாப் மேலும் கூறினார்.

இளைய தலைமுறையினரின் தேவைகளை, குறிப்பாக காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடி தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது என்று டேனியல் கூறினார்.

“அடக்குமுறையை எதிர்ப்பதிலும் போராடுவதிலும் மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்படும் தனிநபர்களின் ஒரு குழுவை நான் பார்த்ததில்லை.

“கடந்த தேர்தலின் போது பி.எஸ்.எம் இடங்களை வெல்லவில்லை என்றாலும்,  அவர்கள் முன்னெடுக்கும் மக்கள் போராட்டம் நிறுத்தப்படுவதில்லை.  வேலை இழந்து, பணியிடத்திலிருந்து வெளியேற்றப்படும்  நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; “தற்கொலை வழக்குகள் மற்றும் தற்கொலை முயற்சிகள் அதிகரித்துள்ளன” என்றும் அவர் கூறினார்.

டேனியலின் கூற்றுப்படி, சக்திவாய்ந்த அரசியல் கட்சிகள் இன்னும் செயல்படவில்லை, அரசியல் மாற்றத்தின் தேவை மிகவும்னவசியமானது மற்றும் அவசரமானது என்பதை தொடர்ந்து நிரூபிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பது உணரமுடிகிறது.

“தற்காலிக அடிப்படை வருமானத்தை முன்மொழிதல் மற்றும் அரசாங்கத்திற்கு” பசுமை “வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் மக்களின் மனநல சுகாதார செலவினங்களை அதிகரித்தல் மற்றும் பல அடிமட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற பல முக்கிய பணிகளை பிஎஸ்எம் செய்துள்ளது” என்று டேனியல் கூறினார்.

மீம்ஸ் மற்றும் சமூக ஊடகங்களின் கலாச்சாரம், கட்சிக்கு ஒரு முக்கியமான பிரச்சார கருவியாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

பி.எஸ்.எம் தனது சித்தாந்தத்தை மக்களுக்குப் பரப்புவதற்கு சமூக ஊடகங்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் மஹிரா ஒப்புக்கொண்டார். வாசகர்களின் கவனத்தை ஈர்க்க பிஎஸ்எம் சரியான முறையீட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றும் மஹிரா கூறினார்,

” இடதுச்சாரி  சித்தாந்தத்தைப் பேசுவதால் எதிர்ப்பைப் பெற்றாலும் அதைப் பற்றி பேச நாங்கள் பயப்படுவதில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் மாற்றத்தைக் கொண்டுவருவதில் உறுதியாக இருக்கும் நபர்களை பி.எஸ்.எம் தேட வேண்டும்.

“பழைய அரசியல் கட்சியால் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதில் சோர்வடைந்து, மக்களை ஒடுக்குகின்ற ஒரு கட்சிக்கு இன்னும் பலியாகி வருபவர்கள், பிஎஸ்எம் பற்றி மேலும் தெரிந்து கொள்ளும்படி நான் கேட்டுக்கொள்கிறேன், ஏனென்றால் நீங்கள் போராட விரும்பும் விஷயங்களுக்காக நாங்கள் போராட தயாராக இருக்கிறோம்.

“இந்தியர் அல்லாதவர் என்ற முறையில், மலேசியாவின் சிறந்த எதிர்காலத்திற்காக போராட விரும்புவோரை வரவேற்க பிஎஸ்எம் தயாராக உள்ளது என்ற எனது தனிப்பட்ட அனுபவத்தை என்னால் வெளிப்படுத்த முடியும்” என்று மஹிரா கூறினார்.

– மொழிபெயர்ப்பு : யோகி, கௌசல்யா, சிவா லெனின் 

(https://www.malaysiakini.com/news/555553)