எஸ் அருட்செல்வன் | அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுதீனுக்கு நான் எதிரி அல்ல. உண்மையில், தற்போதைய அமைச்சரவையில் உள்ள சிறந்த அமைச்சர்களில் அவர் ஒருவர் என்று நான் நினைக்கிறேன். சாலையில் இருந்த ஒரு குழியின் காரணமாக, நேற்று அவர் சைக்கிளில் இருந்து விழுந்து காயமடைந்ததாக அறிந்தேன், விரைவில் அவர் குணமடைய விரும்புகிறேன்.
சாலையில் இருந்த ஒரு குழியுடனான அவரது அனுபவம், நான் கையாண்ட ஒரு வழக்கை என் நினைவுக்கு மீண்டும் கொண்டு வந்தது, இவை அனைத்தும் ஒரு சாலைக்குழியின் காரணமாக தொடங்கியது. அதன்பிறகு, அந்தப் <em>பெட்ரோன்</em>
பெட்ரோல் நிலையத்திற்கு அருகில், நான் அந்தச் சாலையைக் கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும், அந்தக் குழி என் நினைவுக்கு வரும்.
அக்டோபர் 29, 2014, அதிகாலை 6 மணிக்கு, 63 வயதில், பாதுகாவலராக இன்னும் பணிபுரிந்து கொண்டிருந்த ஒருவர் விபத்துக்குள்ளானார்.
நடராஜன் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார், இருட்டில் சாலையில் இருந்த குழியைப் பார்க்க முடியாத காரணத்தால், வண்டியை அதில்விட்டு கீழே விழுந்தார். கடுமையான ஒரு விபத்துதான் அது, மயக்க நிலையில் இருந்த நடராஜன் கஜாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அதிர்ஷ்டவசமாக விபத்தைப் பார்த்த இருவர் ஆம்புலன்சை வரவழைத்தனர். அவரது மகன் ஆனந்தனுக்கு தெரிவிக்கப்பட்டது, அவர் மருத்துவமனைக்கு விரைந்து சென்றார், மருத்துவமனையை அடைந்த அவர், மருத்துவ ஊழியர்கள் அவரது தந்தையின் பணி சீருடையை அகற்றுவதைக் கண்டார்.
காஜாங் நகராட்சி மன்றத்தின் (எம்.பி.கே.ஜே.) மீது வழக்குத் தொடுப்பது குறித்து அப்போது யாரும் சிந்திக்கவில்லை, ஒரு முதியவர் தனது உயிருக்காகப் போராடி கொண்டிருந்தபோதும்…. இன்று வரை யாரும் அதற்கு மன்னிப்பு கேட்கவில்லை.
63 வயதான ஒருவர் ஏன் இன்னும் வேலை செய்கிறார்? ஆமாம், வறுமை, மோசமான ஊதியம் மற்றும் சேமிப்பு பற்றாக்குறை ஆகியவைப் பல மலேசியர்களை ஓய்வூதிய வயதைக் கடந்தும் வேலை செய்ய நிர்பந்திக்கின்றன. அவர் சிஸ்கோ (ம) சென். பெர்ஹாட்டின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனத்தில் பாதுகாவலராகப் பணியாற்றினார், அது 12 மணி நேர வேலை. சில சமயங்களில் அவருக்கு மாற்றாக அடுத்த பணியாளர் வரவில்லையென்றால், அவருடைய வேலையையும் இவரேப் பார்க்க வேண்டும், இவரது பணிநேரத்துக்கு அப்பால்.
அவரது பணி வருகை அனைத்தும் ஒரு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது – வேலை தொடங்கும் நேரம் மற்றும் முடியும் நேரம் – மேலும், ஒரு மேற்பார்வையாளர் அவ்வப்போது அதைப் பார்வையிட வந்தார். அவர் பணிபுரிந்த இடம், புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஒரு பெட்ரோன்
பெட்ரோல் நிலையம், அதன் அருகில் வேறு எந்தக் கட்டிடங்களும் இல்லை, ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் அது இருந்தது. அருகிலுள்ள உணவகம் சுமார் 45 நிமிடங்கள் தொலைவில் இருந்தது, அவர்களுக்கு வேலையிடையில் ஓய்வு இல்லை.
இதுதவிர, அவரது பணியிடத்தில் தண்ணீர், மின்சாரம் மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை. நடராஜன் இதுபோன்ற நிலையில் இருந்த ஓர் இடத்தில்தான் பணியாற்றினார்.
விபத்தில் தப்பி, காயங்களில் இருந்து மீண்ட பிறகு, நவம்பர் 26, 2014 அன்று, நடராஜன் ஒரு போலீஸ் புகாரைப் பதிவு செய்தார். விபத்துக்குப் பிறகு, அவரது முதலாளி அவர் மீது அக்கறை காட்டாததால், அவர் வேலையையும் இழந்தார். எனவே, டிசம்பர் 8, 2014-ல், சமூகப் பாதுகாப்பு அமைப்புக்குச் (சொக்ஸோ) சென்று ஒரு விண்ணப்பம் செய்தார்.
செமினியில் உள்ள எனது சேவை மையத்தில் (பி.எஸ்.எம். செமினி), அவர் என்னைச் சந்தித்தபோது அவருக்கு கிடைத்த ஒரே வழி இதுதான் – சொக்ஸோ இரண்டு முக்கிய திட்டங்களைக் கொண்டுள்ளது – விபத்து திட்டம் மற்றும் உடல் செயலிழப்புத் திட்டம். அவர் 60 வயதிற்கு மேற்பட்டவர் என்பதால், இரண்டாவது திட்டத்திகு அவர் தகுதி பெறவில்லை, அதேசமயம் வேலையின் போது அல்லது வேலை இடத்திலிருந்தோ அல்லது வேலை இடத்துக்கோ பயணம் செய்யும் போது விபத்து ஏற்பட்டால் அவருக்கு விபத்து திட்டத்திற்கான சலுகைகளைப் பெற உரிமை உண்டு.
வேலையிலிருந்து வரும் வழியில் நடந்ததால் அவர் விபத்து திட்டத்திற்கு விண்ணப்பித்தார், அவர் சீருடை அணிந்திருந்தார். நடராஜன் மாலை 4 மணி முதல் அதிகாலை 5.40 மணி வரை பணிபுரிந்ததாக கூறினார். அவர் வேலையிடத்திலிருந்து வெளியேறியபோது, ஒரு பாகிஸ்தான் சக ஊழியர் இருந்தார். அவர் வழக்கம் போல் பதிவு புத்தகத்தில் கையெழுத்திட்டார். அந்த நாளில், அவர் 12 மணி நேரத்திற்கும் மேலாக, கிட்டத்தட்ட 14 மணி நேரம் வேலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நான் அவரது முதலாளியைத் தொடர்புகொண்டு, சொக்ஸோவில் விண்ணப்பித்து அவருக்கு இழப்பீடு வழங்க உதவ முடியுமா என்று கேட்டேன். நடராஜன் எங்களிடம் (பி.எஸ்.எம்.) வந்து புகார் கொடுத்ததால் அவரது முதலாளி வருத்தப்பட்டார். நடராஜன் தனது ஊழியர் அல்ல என்றும், நடராஜன் ஒரு குடிகாரன் என்றும், ‘பாக்கெட் காசு’க்காக அவ்வப்போது வேலை செய்வார் என்றும் அவர் என்னிடம் கூறினார். இந்திய ஆண்கள் பெரும்பாலும் குடிக்காரர்கள் எனும் பொதுவான ஒரு மனநிலையில் அவர் என்னிடம் பேசினார்.
ஆனால், நடராஜன் அதை மறுத்தார், ஒரு வருடத்திற்கும் மேலாக அங்கு பணிபுரிவதாகவும், ‘பெட்ரோனு’க்கு மாற்றப்படுவதற்கு முன், தனது வேலை இடத்தை என்னிடம் கூறினார். நான் சாட்சிகளையும் ஆதாரத்தையும் கேட்டேன். பின்னர், அவர் ஒரு சக ஊழியரான, யு.என்.எச்.சி.ஆர். அட்டை வைத்திருந்த பார்த்தீபனை அழைத்து வந்தார்.
மலேசியச் சட்டத்தின் கீழ் அகதிகள் வேலை செய்ய அனுமதிக்கப்படாததால், பார்த்தீபன் சட்டபூர்வமாக வேலை செய்ய முடியாது. எனவே, அவர் இச்சிக்கலில் நடராஜனுக்கு உதவத் தயங்கினார். நடராஜனின் முதலாளி கூறியதை நான் அவரிடம் சொன்னபோது, பார்த்தீபனுக்கு மிகுந்த கோபம் வந்தது.
நடராஜன் குடிக்கமாட்டார், புகைக்கமாட்டார்; அவர் மிகவும் ஒழுக்கமான நபர் என்று அவர் கூறினார். அவர் நீண்ட நேரம் வேலை செய்வார், பெரும்பாலான நேரங்களில் பார்த்தீபன் கூட நடராஜனை வீட்டிற்குச் செல்லுமாறும், ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தியதாகக் கூறினார்.
ஒரு தொழிலாளி பற்றாக்குறை ஏற்பட்டபோது, அவருக்கும் நடராஜனின் பணி அட்டவணையும் மாறிவிட்டதாக பார்த்தீபன் கூறினார். காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் அவரும், நடராஜன் மாலை 4 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலும் பணியாற்றியதாக அவர் தெரிவித்தார்.
துரதிர்ஷ்டவசமாக, நடராஜனின் சொக்ஸோ விண்ணப்பம் மார்ச் 6, 2015 அன்று நிராகரிக்கப்பட்டது. அவர் அங்கு பணியாற்றும் ஒரு தொழிலாளி இல்லை என்பதால் இது வேலை தொடர்பான விபத்து அல்ல என்று சொக்ஸோ கூறியது – பின்னர், நடராஜன் அவர் விருப்பப்படி வேலை இடத்திலிருந்து வெளியேறினார், அவர் காலை 7 மணிக்கு மட்டுமே அங்கிருந்து வெளியேறி இருக்க வேண்டும் என கதை மாற்றப்பட்டது.
சொக்ஸோ முதலாளியின் கதையை முழுவதுமாக எடுத்துகொண்டது என்று தோன்றியது. சட்டப்படி தொழிலாளிக்கு சொக்ஸோ பணம் செலுத்த தவறியதால், முதலாளி பொய் சொல்கிறார் என்று தெரிகிறது. எனவே, அதிலிருந்து தப்பிப்பதற்காக, நடராஜன் தனது ஊழியர் அல்ல அல்லது அவர் ஒரு நிரந்தர பணியாளர் அல்ல என்று கதை சொல்வது முதலாளிக்கு வசதியாகி போனது.
சொக்கோவின் அறிவிப்பு எங்களுக்கு வருத்தத்தைத் தந்தது. முதலில் நான்கு பாதுகாப்புக் காவலர்கள் இருந்தனர், அவர்கள் 12 மணி நேர ஷிப்டில் பணிபுரிந்தனர், அந்த நேரத்தில் இரண்டு ஷிப்டுகள் மட்டுமே இருந்தன – காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஒன்று, மற்றது இரவு 7 மணி முதல் காலை 7 வரை. பின்னர், ஒரு தொழிலாளி வேலையிலிருந்து வெளியேறினார், எனவே மூன்று பேர் மட்டுமே பணியில் இருந்தனர், வேலை அட்டவணை மாற்றப்பட்டது.
இந்தக் கட்டத்தில், நடராஜனின் ஷிப்ட் மாலை 4 மணி முதல் அதிகாலை 5.40 மணி வரை ஆனது. ஒரே விதி என்னவென்றால், எல்லா நேரங்களிலும் குறைந்தபட்சம் ஒருவராவது பணியிடத்தில் இருக்க வேண்டும், மாற்று பணியாளர் இருந்தால் மட்டுமே அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியும்.
இந்த நேர மாற்றங்கள் முதலாளிக்குத் தெரிந்திருந்தன, அங்கு வருகை புத்தகத்தில், அனைத்து பதிவுகளும் மேற்பார்வையாளர் வேணி’யால் சரிபார்க்கப்பட்டு இருந்தன. அந்தத் துன்பகர நாளில், நடராஜன் பணியிடத்திலிருந்து வெளியேறியது, அடுத்த பணியாளரான பாகிஸ்தானிய சக ஊழியர் வந்தது, அனைத்தும் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தன.
ஆகையால், நாங்கள் டிசம்பர் 14, 2015 அன்று, சொக்ஸோ மேல்முறையீட்டு வாரியத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தோம். இந்தமுறை, பார்த்தீபன் வாக்குமூலம் அளிக்க ஒப்புக்கொண்டார், மேலும் என்னுடைய மற்றும் நடராஜனின் உறுதிமொழி வாக்குமூலம் ஆகியவற்றோடு நாங்கள் முறையீடு செய்தோம்.
மேல்முறையீட்டு வாரியம், அல்லது தீர்ப்பாயம், இந்த வழக்கை ஆகஸ்ட் 12 மற்றும் அக்டோபர் 14, 2016-ல் விசாரித்தது. இரண்டு ஒத்திவைப்புகளுக்குப் பிறகு நடராஜன் அழைக்கப்பட்டார். துரதிர்ஷ்டவசமாக, நடராஜன் தனது தொழிலாளி என்று முதலாளி ஏற்கனவே ஒப்புக் கொண்டதால், நானும் பார்த்தீபனும் சாட்சியமளிக்க தேவையில்லை என்று அவர்கள் சொன்னார்கள்.
பார்த்தீபனின் சாட்சியம் பதிவு செய்யப்படவில்லை என்பது வருத்தமான ஒரு விஷயம். சக ஊழியரான அவரால் பணி அட்டவணையை விளக்கியிருக்க முடியும். விசாரணையில், முதலாளி திடீரென ஒரு திருப்பத்தைக் கொண்டுவந்தார், முக்கியச் சான்று – வருகை பதிவு புத்தகம் – தொலைந்துவிட்டது என்று கூறினார்.
நடராஜன் ஒரு நிரந்தர தொழிலாளி என்ற உண்மையை மறைக்க முதலாளியின் புனைகதை இது என்பது தவிர வேறொன்றுமில்லை, புத்தகத்தின் திடீர் மர்ம கதையை நம்புவது கடினம். மேற்பார்வையாளர் வேணி கையெழுத்திட்டிருக்கும் நடராஜனின் வேலை முறைகளைக் காட்டவும் அவர் ஒரு நிரந்தர தொழிலாளி என்பதை நிரூபிக்கவும் இனி முடியாது.
அதற்கு முன்னர், தன்னிடம் தெளிவான பதிவுகள் இல்லை என்று முதலாளி ஒப்புக்கொண்டதாலும், பெரும்பாலான கேள்விகளில் தடுமாறியதாலும், வெற்றி பெறுவதில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தோம், ஆனால், முடிவு வேறு மாதிரியாக இருந்தது.
டிசம்பர் 6, 2016 அன்று, தனது வேலை நேரம் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை என்றும், அனுமதியின்றி அதிகாலை 5 மணியளவில் தனது பணியிலிருந்து நடராஜன் வெளியானதால் மேல்முறையீட்டு குழு மீண்டும் நிராகரித்தது. முதலாளியின் குற்றச்சாட்டை நிரூபிக்க துணை ஆவணங்கள் எதுவும் இல்லை, ஆனால் முதலாளியின் இந்தக் கதை வாரியத்தால் வாங்கப்பட்டது.
இந்த முடிவை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரே வழி, வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வதேயாகும், அதற்கு அதிகப் பணம் தேவைப்பட்டது. நடராஜன் வெற்றி பெற்றிருந்தால், ஒருவேளை அவர் RM2,000-க்கும் குறைவாகவே பெற்றிருப்பார். ஆனால், இந்த வழக்கை நாங்கள் தொடர விரும்பினோம், கொள்கை மற்றும் நீதிக்காக போராட வேண்டும் என்று நாங்கள் உணர்ந்தோம்.
இந்த வழக்கு ஏப்ரல் 2017-ல் சிரம்பான் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நாங்கள் சிரம்பானில் வழக்கறிஞர்களைப் பெற முயற்சித்தோம், ஆனால், அவர்களில் பெரும்பாலோர் சொக்ஸோ தொடர்பான வழக்குகளில் அறிமுகமில்லாதவர்கள். அதிர்ஷ்டவசமாக, பெட்டாலிங் ஜெயாவைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர் தினேஷ் முத்தால் எங்களிடம் இருந்தார், அவர் இந்த வழக்கை ‘புரோபோனோ’ செய்யத் தயாராக இருந்தார்.
ஆனால், உயர்நீதிமன்றத்தில் இந்த முறை நடராஜன் எதிராக வழக்காடியது யார் தெரியுமா? இந்த சிறிய வழக்கிற்காக, மலேசியாவின் பணக்காரச் சட்ட நிறுவனங்களில் ஒன்றான ‘ஸ்க்ரைன் & கோ’-வை சொக்ஸோ நியமித்தது. தொழிலாளர்கள் மற்றும் அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் சொக்ஸோ, ஒரு முதியவரின் வழக்கை எதிர்த்துப் போராடுவதற்காகப் பணக்காரத் தனியார் நிறுவனங்களில் ஒன்றைப் பயன்படுத்தியது. நடராஜன் கோரிய இழப்பீட்டை விட ஸ்க்ரைன் கேட்ட கட்டணம் பல மடங்கு அதிகமாக இருக்கலாம்.
ஜூலை 23, 2018 அன்று, சிரம்பான் உயர் நீதிமன்றத்தில் வழக்கில் தோல்வி கண்டோம். உயர்நீதிமன்றத்தில், ஸ்க்ரைன் சட்ட நிறுவனத்தின் மூத்த வழக்கறிஞர், நாங்கள் சட்டத்திற்குத் தேவையான கேள்விகளை எழுப்ப வேண்டும் என்றும், எங்கள் இளம் வழக்கறிஞர் எழுப்பியவை அனைத்தும், காணாமல் போன வருகை பதிவு புத்தகம், சொக்ஸோ வாரியத் தலைவர் தனது முடிவில் ஒருதலைபட்சமாக இருந்தார், சாட்சியமளிக்க இலங்கை யு.என்.எச்.சி.ஆர். அட்டை வைத்திருந்தவரை அனுமதிக்கவில்லை மற்றும் முதலாளியின் குற்றச்சாட்டை நிரூபிக்க எந்த ஆவணத்தையும் தயாரிக்கவில்லை என்பதாக மட்டுமே இருந்தன, இவை அடிப்படை கேள்விகள் என்று கூறினார்.
சிரம்பான் உயர்நீதிமன்ற நீதிபதி, நடராஜனின் விபத்து சொக்ஸோவின் கீழ் ஒரு வேலை விபத்து என்று கருத முடியாது, ஏனெனில் காலை 6 மணிக்கு அவர் பணியிடத்தில் இருந்து வெளியேறியுள்ளார், ஆக, நடராஜன் தனது வேலையை (பொந்தேங்) தவிர்த்துள்ளார் என்பதை அது குறிக்கிறது என்று தீர்ப்பளித்தார், வழக்கை நிராகரித்து, வாரியத்தின் முடிவை ஏற்றுக்கொண்டார்.
பல தொழிலாளர்கள் உயர்நீதிமன்றத்தில் இதுபோன்ற வழக்கை சவால் செய்திருக்க மாட்டார்கள். எங்கள் தரப்பில் வழக்கை விசாரிக்க சில வழக்கறிஞர்கள் தயாராக இருந்ததால், நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். ஆயினும்கூட, அமைப்பு மற்றும் சமூக பாதுகாப்பை எவ்வாறு நம் சமூகத்தில் ஒரு தரப்பினருக்குச் சார்புடையதாகவும் ஏழைகளுக்கு எதிராகவும் இருக்கிறது என்பதை இந்த வழக்கின் தோல்வி காட்டுகிறது.
இந்த வழக்கிற்காக, நடராஜன் தனது மோட்டார் சைக்கிளில் செமினியிலிருந்து சிரம்பான் வரை சென்றார். வழக்கு முடிந்த பிறகு, அவர் மிக மோசமான ஒரு அனுபவம் இதுவென்று உணர்ந்தார், எங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்பினார் – வழக்கறிஞர் தினேஷ், சிரம்பான் பிஎஸ்எம் ஆர்வலர் தீனா, சிவரஞ்சனி (பி.எஸ்.எம். தொழிலாளர் பிரிவு ஒருங்கிணைப்பாளர்) மற்றும் எனக்கு.
பணம் கிடைத்திருந்தால், அதை எங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பியதாக அவர் கூறினார். நான் அவரிடம் சொன்னேன், ஒருபோதும் அது எங்கள் நோக்கம் அல்ல, அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்பினோம். அவர் இன்னும், தான் “பொந்தேங் கெர்ஜா” செய்யவில்லை என்றும், வருகை பதிவு புத்தகத்தைத் தேடும்படியும் எங்களைக் கேட்டுக்கொண்டார்.
வழக்கை இந்த நிலைவரை கொண்டு வந்ததற்காக, அவர் ஒரு போராளி என்று கூறி, அவரை ஆறுதல்படுத்த மட்டுமே எங்களால் முடிந்தது, ஆனால் அரசாங்கத்தின் முழு அமைப்பும் முதலாளியின் பதிவை மட்டுமே கேட்டது, மிக வருத்தமான ஒரு விஷயமாக இருந்தது.
இது சாலையில் இருந்த ஒரு குழியின் காரணமாகத் தொடங்கியது. ஆனால், அது நம் சமூகத்தில் ஆழப் பதிந்துள்ள வர்க்க முரண்பாட்டைப் பிரதிபலிக்கிறது. நம் அமைப்பு முறைகளிலேயே குழிகள் நிறைந்துள்ளன. வயது போன, ஓய்வூதிய வயதில் இருக்கும் ஒருவர் எவ்வாறு வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார், சொக்ஸோ அவருக்கு இரண்டாவது அடியை எவ்வாறு வழங்கியது மற்றும் நீதிமன்றங்கள் எப்படி அவரின் இலக்கைத் தகர்த்தன என்பதுதான் இந்தக் கதை.
எஸ் அருட்செல்வன் பிஎஸ்எம் துணைத் தலைவர்