‘உங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புங்கள்!’ – வான்மித்தா ஆதிமூலம்

2000, ஏப்ரல் 9, ஈப்போவில், திரு ஆதிமூலம் திருமதி ஜெயந்தி தம்பதியருக்கு, இளைய மகளாகப் பிறந்து, கிள்ளானில் வளர்ந்த வான்மித்தா, நாசாவில் விண்வெளி ஆராய்ச்சிக்குத் தகுதி பெறுகிறார்.

நாசாவின் கிளையான ADVANVINGX-இன் வானவியல் ஆய்வின் உலகளாவிய நிலை போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள இவர் யார்?

தமது 20-வது அகவையில், வானளவு சாதனைப் புரியும் மலேசியர். இதுனால் வரையில், இவரை அறிந்திராத சமூகம், இன்று போற்றி புகழ்கிறது. சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் ஆரம்பக் கல்வியையும், மெதடிஸ்ட் பெண்கள் பள்ளியில் இடைநிலைக் கல்வியையும் பயின்று, தற்போது மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் வானவியல் பொறியியல் பயிலும் மாணவி இவர்.

மலேசியர்கள் மெச்சும் மங்கை, இவரைப் பற்றியக் குறிப்புகள் சமூக வலைத்தளங்களிலும் நாளிதழ்களிலும் உலா வருவதை நாம் பார்த்து, வியந்து, வாழ்த்தி நகர்ந்திருப்போம். அவரைப் பற்றி சில குறிப்புகள்.

வான்மித்தாவின் பெற்றோர் தனியார் நிறுவனத்தில் செயனிகளாக (Operator) பணிபுரியும் இயல்பான குடும்பத்தினர். 2007-ல், சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் தமது ஆரம்பக் கல்வியை இவர் தொடங்கினார். யு.பி.எச்.ஆர். தேர்வில் 6ஏ 1பி பெற்றார். 2015-ல், படிவம் மூன்றின் ‘பிடி3’ தேர்வில் 9ஏ பெற்று அசத்தினார். அதுமட்டுமின்றி, 2017-ம் ஆண்டில், படிவம் ஐந்தின் எச்.பி.எம் தேர்வில் 10ஏ பெற்று, 2018-ம் ஆண்டு கிளாந்தான் மெட்ரிகுலேசன் அரசு பல்கலைக்கழக நுழைவு கல்லூரியில் பயிலத் தேர்வானார்.

இவர் எச்.பி.எம். தேர்வில் தமிழ் மற்றும் தமிழ் இலக்கியத்தைத் தேர்வுப் பாடமாக எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் வானவியல் பொறியியல் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவி இவர்.

பள்ளிப் பருவங்களில், தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியாளராகவும் தமிழ்ப் பேச்சுப் போட்டியாளராகவும் பங்கேற்று வாகை சூடியுள்ளார். தற்போது தேசிய அளவிலான செயற்கைக்கோள் ஆய்வு போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தேர்வுப் பெற்றுள்ளார்.

தனது பெற்றோர், அண்ணன் மற்றும் அண்ணி புவனேஸ்வரன் போஷாயித்திரி மற்றும் அண்ணன் சத்யபிரபாகரன் ஆதிமூலம் என அனைவரின் தூண்டுதலும் ஊக்கமும் தனது இந்நிலைக்கு பெரும் உந்துதலாக இருந்ததாக வான்மித்தா தெரிவித்தார்.

அவருடனான கலந்துரையாடலில் ஒரு சிறு பகுதி ….

தினா : தங்களைப் போன்ற சக மாணவர்களுக்கு, மாணவராக தாங்கள் வலியுறுத்துவது என்ன?

வான்மித்தா : உங்களுக்கென நீங்கள் நிலைநிறுத்தியிருக்கும் வாழ்வியலில், மனதளவில் மிக உறுதியாகவும் திடமாகவும் இருங்கள். நீங்கள் கொண்டிருக்கும் கொள்கையில் சற்றும் தளராமல், துணிவாக முன்னேறுங்கள். ‘என்னால் முடியாது’ என நீங்கள் நினைக்கும்போது, தொடங்கிய போது இருந்த மன வலிமையை நினைவுருத்திப் பாருங்கள்.

தினா : மலேசிய இந்தியரான நீங்கள் நம் சாமூகத்திற்கு என்ன சொல்ல விழைகிறீர்கள்?

வான்மித்தா : நம் சமூகத்தின் பெரும் வெற்றிக்குத் தொடக்கம் தமிழ்ப்பள்ளிகள்தான். உங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புங்கள். வானளவில் அவர்களின் சாதனைக்கு வழிவகுத்திடுங்கள். நான் பயிலும் வானவியல் பொறியியல் துறையில், உங்கள் பிள்ளைகளும் பயில வழிகள் நிறைய உண்டு. அனுப்புங்கள், வழிக்காட்டியாக என்றென்றும் நான் இருப்பேன்.

வானத்திற்கு எல்லை என்பதில்லை – அதுபோல

நமது குறிக்கோளுக்கும் எல்லையில்லை…

நமது குறிக்கோளும் வானம் போன்றதுதான்!


  • ச.அ.இலெ.தினகரன் சங்கரன், மலேசியாகினி வாசகர்