இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகள் குழப்பம் மிகுந்ததாகவும் உலகத் தலைவர்கள் பலரின் கொலைகளுக்குப் புகழ் கொண்டதாகத் திகழ்கின்றன என்பது கண்கூடு. ஜனவரி மாதம் 1961ஆம் ஆண்டு கொங்கோ நாட்டின் பிரதமர் பெட்ரீஸ் லுமும்பா கொல்லப்பட்டார். அமெரிக்காவின் அதிபர் ஜோன் கென்னடி 1963ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் கொல்லப்பட்டார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் டாக் ஹம்மர்ஷோல்ட் செப்டம்பர் திங்கள் 1961ஆம் ஆண்டு விமான விபத்தில் இறந்தார் என்ற போதிலும் பின்னர், ஒருவர் தாம்தான் அவரின் மரணத்தை விளைவித்ததாகக் கூறினார். 1968ஆம் ஆண்டில் இரண்டு படுகொலைகள் நிகழ்ந்தன. ஆப்ரில் மாதத்தில் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரும், அதே ஆண்டு ஜூன் மாதத்தில் ரோபர்ட் கென்னடியும் கொல்லப்பட்டனர். ரோபர்ட், ஜோன் கென்னடியின் இளவலாவார்.
ஜோன் கென்னடிதான் அமெரிக்காவின் முதல் ரோமன் கத்தோலிக்க அதிபர். தமது அதிபர் காலத்தில் சமுதாயத்தில் முன்னேற்றம், வெளிநாட்டு உறவுகளில் மாற்றம் காண வேண்டுமென விரும்பினார். அதோடு இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த இரு உலகப்போர்களைப் போன்று இனிமேலும் நிகழக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அவர் தமது கொள்கைகளை நிறைவேற்றும் முன் கொல்லப்பட்டார். எதற்காகக் கொல்லப்பட்டார் என்ற கேள்விக்கான விடைகள், காரணங்கள் கணக்கிலடங்கா. அந்த ஆய்வு தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அவருடைய இளவல் சொன்ன ஒரு கருத்து அமெரிக்காவின் இனப்பிரச்சனையைத் தெள்ளத் தெளிய விளக்குவதாக அமைந்திருந்தது. தமது அண்ணன் அதிபராக இருந்தபொழுது, “நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ரோமன் கத்தோலிக்கர் அமெரிக்க அதிபராக வருவார் என்று எவரும் நம்பவில்லை, எதிர்பார்க்கவும் இல்லை. அது நிறைவேறியது. இன்று (அறுபதுகளில்) கருப்பர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். ஆனால், நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு கருப்பர் அதிபராவார்” என்றார். இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் கருப்பரான பராக் ஓபாமா அமெரிக்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் துணை அதிபராக வெள்ளைக்காரர் அல்லாத கமலா ஹாரிஸ் வென்றுள்ளார். இதுவும் ஒரு மாற்றத்தைச் சுட்டுகிறது எனலாம்.
மார்ட்டின் லூதர் கருப்பர்களின் முன்னேற்றத்தை மட்டும் கருத்தில்கொண்டு செயல்படவில்லை. அடக்குமுறையை எதிர்த்தார். அடக்குமுறையால் பாதிப்புற்றிருக்கும் சமுதாயங்களின் முன்னேற்றத்திற்காகப் போராடினார். மனிதன் நாகரிகமாக, கவுரவத்துடன் நடத்தப்பட வேண்டும் என்று போராடினார். சற்றுமுன்பு குறிப்பிடப்பட்டவர்கள் யாவரும் இனப்பகைமை, அடிமைத்துவத்தை, அடிமைத்துவ சாயல் கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடினர் என்பது தெளிவு.
அண்ணன் விட்டுச்சென்ற பணியைத் தொடரும் பொருட்டு அதிபர் தேர்தலில் போட்டியிட முன்வந்த ரோபர்ட் கென்னடி கொல்லப்பட்டதானது கென்னடி சந்ததியினர் ஏதோ ஒரு சாபத்துக்கு உட்பட்டதுபோல் கருதப்பட்டது. இறந்த கென்னடிகளின் இளவல் எட்வர்ட் கென்னடி, அதிபர் தேர்தலில் போட்டியிடவில்லை காரணம் தம் அண்ணன்மார்களுக்கு ஏற்பட்ட கொடுமையான முடிவு தனக்கும் வந்து சேரும் என்ற அச்சமாகக் கூட இருக்கலாம்.
கொங்கோ நாட்டுப் பிரதமர் லுமும்பா சுதந்திர நாட்டின் முன்னேற்றத்தில் கவனம் கொண்டிருந்த இடதுசாரி அரசியல்வாதி. கருப்பு கண்டமென வர்ணிக்கப்பட்ட ஆப்பிரிக்காவுக்கு விடுதலை வழங்க முன்வந்த வெள்ளை காலனித்துவவாதிகள் அந்தந்த நாடுகளில் அமைதி நிலவுவதற்கான திட்டங்கள் ஏதும் வகுக்கவில்லை என்பது ஒரு புறமிருக்க, விடுதலையான நாட்டு மக்களிடையே பகைமை உணர்வை வளர்ப்பதில் உற்சாகமாக இருந்ததை வரலாறு தெளிவுபடுத்துகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் டாக் ஹம்மர்ஷோல்ட் வெளியிட்ட கருத்து நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. அறுபத்து ஒன்றாம் ஆண்டில், அதாவது தாம் இறப்பதற்கு முன் பெரும்பான்மையான ஆப்பிரிக்க நாடுகள் விடுதலை பெற்றன. இதை வைத்து, அடுத்த பத்து ஆண்டுகளில் அதாவது “எழுபதுகள்” ஆப்பிரிக்காவுக்குச் சொந்தமானது அல்லது அணுகுண்டுக்குச் சொந்தமாகலாம் என்றார். அதாவது சுதந்திர ஆப்பிரிக்கா உலக விவகாரங்களில் முன்னிலை வகித்து உலக அமைதிக்கு துணைநிற்கும் என்பதே அவரின் எதிர்பார்ப்பு. அது நடைபெறாவிட்டால் அணுகுண்டு மூலம் வன்முறை பெருகலாம் என்ற எச்சரிக்கையும் விடுத்தார்.
எழுபதுகளில் ஆப்பிரிக்கா செழிப்புடன் இயங்கும் என்ற நம்பிக்கை ஹம்மர்ஷோல்ட் கொண்டிருந்தார். பொருளாதார நிபுணரான அவர் தனது கணிப்பில் ஆப்பிரிக்காவின் செல்வம் அதன் மக்களின் நல்வாழ்வுக்குப் பயன்படும் என்ற நம்பிக்கை ஒருபுறம், அந்த நல்வாழ்வு உலகெங்கும் பரவும் என்பது மறுபுறம். எனவே, உலகம் உய்வுபெறும் என்ற நம்பிக்கையாகவும் இருக்கலாம். அந்த நம்பிக்கை நிறைவேறியதா? இல்லை. இன்று ஆப்பிரிக்கா கண்டம் பல சிக்கல்களில் சிக்கித் தவிக்கிறது. பிற நாடுகளின் பொருளாதார ஆதிக்கம் ஆப்பிரிக்க நாடுகளை மீண்டும் பொருளாதார காலனித்துவத்திற்கு உட்படுத்திவிட்டது என்ற சந்தேகம் வலுபெறுகிறது என்றால் மிகையாகாது. பொருளாதாரம் பாழடைந்துவிட்டால் என்னவாகும்? அளவில்லா பிரச்சனைகள் எழலாம். அதுதானே ஆப்பிரிக்க கண்டத்தில் நடக்கிறது.
எழுபதுகளில் இருந்து ஆப்பிரிக்க கண்டம் மட்டுமல்ல, பல ஆசிய நாடுகள் கூட பொருளாதார காலனித்துவத்திற்குப் பலியாகிவிட்டன என்ற கருத்து பரவுவதைக் கவனிக்காமல் இருந்தால் ஆப்பரிக்க கண்டத்தில் பிரச்சனைகள் எழ வாய்ப்பு உண்டு. புதுவிதமான காலனித்துவம் உருவெடுக்கிறது என்ற விவாதம் பலம் பெறுவதையும் நாம் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். பிற நாடுகளின் ஆதிக்கத்திற்கும் செல்வாக்கிற்கும் இடமளித்து, ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் தங்களின் சுதந்திரத்தை இழந்துவிட்டார்கள் என்றால் மிகையாகாது. ஆசியாவும் அந்த நிலைக்குப் போய்விடக்கூடாது. இதற்குப் பல காரணங்களைச் சொல்லலாம். ஆனால், சுதந்திரத்துக்குப் பின்னர் பேராசைமிக்க தலைவர்களின் ஏற்றம், அதைப் பயன்படுத்திய வெளிநாட்டவர்கள், கடந்தகால காலனித்துவத்தைத் துறக்காமல் புது ஆக்கிரமிப்புக்குத் தயாராகிவிட்டதைக் காணலாம். இப்படிப்பட்ட சூழ்நிலை மக்களையும் பாதித்துவிட்டதை ஏற்க மறுப்பதுதான் அதிசயம்.
ஆப்பிரிக்க கண்டத்தில் சமயப் பிரச்சனையும் மிகுந்து காணப்படுவதால் அணுகுண்டு முக்கியத்துவம் பெறும் என்றால் தவறாகுமா? அல்லது அது மிகைப்படுத்தும் கருத்தா? இயற்கை செல்வம், வளமிக்க நாடு, பொருளாதாரப் பிரச்சனைகளால் துவண்டு கிடக்கிறது எனின் உள்நாட்டுச் சண்டை, பகைமையை வளர்க்கும் திட்டங்கள், கொள்கைகள், எல்லா மக்களையும் அரவணைக்கும் தரமற்ற அரசியல், நாட்டைக் குட்டுச்சுவராக்கிவிடுமே!
நம் நாடும், பிற நாடுகளில் நிகழ்ந்த தவறான கொள்கைகளால் நேர்ந்த துன்பங்களைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், புரிந்துகொள்ள முயற்சிக்காவிட்டால், எதிர்காலம் சூன்யமாகத்தான் இருக்கும். அதுமட்டுமா? நாட்டின் செல்வத்தைச் சூறையாடுகிறவர்கள் அப்பாவிகளைத் திருப்திபடுத்தும் பொருட்டு சில்லறைகளைத் தருவார்கள். அதை ஏற்றுக்கொண்டால், மக்கள் விழிப்புணர்வு கொண்டிருக்கவில்லை என்றுதானே பொருள். அதோடு, என்றைக்கு மக்கள் அரசியல் தலைவர்களிடம் கையேந்தி நிற்கிறார்களோ அதுவே நாட்டின் அழிவுக்கு அடித்தளமாக அமைந்துவிடும். நாட்டின் வளம் குன்றும்போது செல்வத்தில் மிதந்தவர்கள் அப்பாவி மக்களின் துளி அளவு செல்வத்திலும் கை வைக்க தவறமாட்டார்கள். இது நடக்கும்போது மக்கள் ஏமாறுகிறார்கள். ஏமாற்றப்படுகிறார்கள்! அதே சமயத்தில் மக்கள் விழித்துக் கொண்டால் அரசியல் சந்தர்ப்பவாதிகளின் கதி அதோகதிதான். நம் மக்களும், நாடும் இதை எல்லாம் உணர்ந்ததா என்றால் மக்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.
ஜோன் கென்னடி, மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர் கண்ட கனவு கனவாகவே இருக்கிறது. அந்தக் கனவுகளுக்கு உயிர் கொடுக்கப்படுமா அல்லது அழிக்கப்படுமா? என்ற கேள்விகள் ஒரு முடிவுபெறா தொடர்.