இந்த நாட்டு அரசியல் இக்கட்டான சூழ்நிலையை நெருங்கி கொண்டிருக்கிறது அல்லது அடைந்துவிட்டது என்பது பொதுவான கருத்தாகும். இந்தக் கருத்து மலேசியர்கள் மட்டுமல்ல மாறாக வெளிநாட்டவர்களும் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, வெளிநாட்டு முதலீட்டார்களும் மலேசிய அரசியல் சூழ்நிலையை மிகுந்த கவனத்துடன் கவனிக்கிறார்கள் என்பது தெளிவு.
இப்படிப்பட்ட சங்கடமான நிலைக்கு யார் காரணம் என்பதை ஆழ்ந்து சிந்திக்கும்போது என்றைக்குத் துன் டாக்டர் மகாதீர் முகம்மது அம்னோவின் தலைமைப் பொறுப்பையும் நாட்டின் பிரதமராகவும் செயல்படத் தொடங்கினாரோ அப்பொழுதே தொடங்கிவிட்டது என்ற கருத்தும்; அதே வேளையில் அரசியல் அதிகாரத்தை, நாட்டுப் பொருளாதாரத்தை நியாயமான முறையில் வழிநடத்த தவறியதைத்தான் உணர்த்துகிறது என்ற கருத்தும் பலமாகவே பவனி வந்தது. அவர் விட்டுச்சென்ற அரசியல் பாரம்பரியத்தை முழுமையாக ஏற்க மறுத்தவர் துன் அப்துல்லா அமாட் படாவி. ஆனால், அவரின் பாரம்பரியத்தை விஞ்சும் அளவுக்கு நடந்து கொண்டவர் டத்தோ ஶ்ரீ நஜீப் அப்துல் ரசாக் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள். இன, சமய அரசியலுக்கும் மலாய்க்காரர்கள் மட்டும் ஆட்சி செய்ய வேண்டும் என்ற கருத்தை வலுப்படுத்துவதில் காட்டிய கரிசனம் உலகமே அறிந்த உண்மையாகும். நஜீப் ரசாக்கை பிரதமராக்கியதில் டாக்டர் மகாதீரின் உற்சாகமான பங்கை மறக்க முடியுமா?
டாக்டர் மகாதீர் முகம்மது அன்றும், இன்றும் கூட இனப் பகைமையை உற்சாகப்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதைக் கவனிக்கலாம். அவரைப் பின்பற்றுகிறவர்கள் பெரும்பான்மை இனத்தின் பெருமையை, கவுரவத்தை வலியுறுத்த தவறியதில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலை நம்பிக்கை கூட்டணி அதிகாரத்தை இழப்பதற்குக் காரணமாக இருந்தவர்களில் டாக்டர் மகாதீர் முன்னிலை வகித்தார் என்றால் அதில் தவறு இருக்க வழியில்லை. இந்தக் கருத்தை அவர் மறுக்கலாம். ஆனால், அவர் நடந்துகொண்ட முறை, இன்றளவு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அவர் மீது ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை நீக்க உதவவில்லை.
கடந்த ஆண்டு பிப்ரவரி திங்கள் 22ம் நாள் அரங்கேற்றப்பட்ட அரசியல் நாடகம், மக்களால் ஒதுக்கப்பட்டவர்களுடன் இணைந்து நடத்திய அநாகரிகமான அரசியல், டான் ஶ்ரீ முகைதீன் யாசின் தலைமையில் நாட்டை ஆளத் தொடங்கியது சிறுபான்மை நடுவன் அரசு. அதோடு நின்றுவிடவில்லை. பல மாநிலங்களில் நம்பிக்கை கூட்டணி அரசுகள் கவிழ்க்கப்பட்டன. சூழ்ச்சி அரசியல் கலாச்சாரத்தில் வளர்ந்தவர்கள் நேர் வழியில் ஆட்சியைக் கைப்பற்ற இயலவில்லை எனும்போது மாற்று வழியில் அதைக் கைப்பற்ற முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்கள் ஏராளம். அதுதான் 22 பிப்ரவரியில் நடந்தது. எனவே, அம்னோ, பாஸ் கட்சிகளின் உறுப்பினர்களுக்குப் போதுமான அரசியல் அதிகாரத்தை வார்த்துக் கொடுத்தவர் முகைதீன். இறுதியில் நடந்தது என்ன? ஊழல்வாதிகள் என்று மக்கள் அடையாளம் காணப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் மறுபடியும் ஆட்சி பீடத்தில் அமர்ந்தார்கள். நாட்டில் நிலவரம் முன்னேற்ற பாதையை நோக்கி செல்ல முடிந்ததா? இல்லை! சிறுபான்மை அரசு (மைனாரிட்டி அரசு) எப்படியோ தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஆட்சியில் வீற்றிருக்கிறது. எத்தனை காலத்துக்கு இந்த ஊழல் ஆட்சி நீடிக்கும்? என்று மக்கள் கேட்கிறார்கள்.
இப்பொழுது நிலவும் அரசியல் சூழ்நிலையைப் பார்க்கும்போது, அம்னோ மலாய்க்காரர்களை மட்டும் கொண்ட ஆட்சியைத் தற்காத்துக் கொள்ள தத்தளிக்கிறது என்றால் மிகையாகாது. முகைதீனுக்கு நிம்மதியாகத் தூங்க முடியாதபடி அம்னோ தனது எதிர்ப்பை வலுப்படுத்தி கொண்டிருக்கிறது என்பது வெளிச்சமாகிவிட்டது. டத்தோ ஶ்ரீ அன்வர் இபுராஹீம் பிரதமராக வருவதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டே போகிறது என்பதை மக்கள் கருதுகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அம்னோ பதினைந்தாம் பொதுத்தேர்தலை நடத்தும்படி கட்டாயப்படுத்துகிறது. அது நடக்குமானால், மக்களின் நிலைப்பாடு என்ன? அம்னோ மலாய்க்காரர்கள் ஆட்சி மட்டும் என்ற அரசியல் நிலையை நிலைநிறுத்தும். பாஸ் கட்சியுடன் தொடர்ந்து செயல்படுமா? பாஸ் கட்சி அம்னோவுடன் தொடர்ந்து உறவு கொண்டிருப்பதை விரும்புமா? இரு கட்சிகளும் மலாய் தேசியம், இஸ்லாம் ஆகிய இரண்டு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இணைந்தால் நாட்டில் சமாதானம் நிலவ வழியுண்டா? என்ற கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன.
அம்னோவும் பாஸ் கட்சியும் இணைந்து மலாய்க்காரர்கள் மட்டும் என்ற அரசியல் ஆட்சியைப் பலப்படுத்தினால் சிறுபான்மையினரின் நிலை என்ன? மலேசிய சீனர் சங்கம், மலேசிய இந்தியர் காங்கிரஸ் மற்றும் தேசிய முன்னணி உறுப்பு கட்சிகளின் நிலைப்பாடு என்ன? சுதந்திரத்துக்கு முன்பு காணப்பெற்ற ஒப்பந்தத்தை அம்னோ மதிக்குமா அல்லது மலாய்க்காரர் மட்டும் ஆட்சி என்ற புது அரசியல் தத்துவத்திற்கு முதலிடம் தருமா? அதோடு இதுகாறும் வழங்கப்பட்டு வந்த சிறுபான்மையினரின் மொழி, கலாச்சாரம், பாதுகாப்பு என்னவாகும்?
2018ஆம் ஆண்டு நம்பிக்கை கூட்டணி டாக்டர் மகாதீர் தலைமையிலான அரசை அமைத்தபோது, கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் தரமாட்டான் என்ற பழமொழிக்கு ஒப்ப மக்கள் தீர்ப்பு தெளிவாய் இருந்தபோதிலும், காலங்காலமாகப் பழக்கப்பட்டுப்போன நிர்வாகப் பழக்க வழக்கங்களைக் கைவிட மறுத்தவர்களை நாடு கண்டது. இன்று, தம்முடைய செல்வாக்கினால்தான் நம்பிக்கை கூட்டணி வெற்றி வாகை சூடியது என்கிறார் டாக்டர் மகாதீர். வெறுப்படைந்த மக்கள் தந்த தீர்ப்பே தேசிய முன்னணியின் தோல்விக்குக் காரணம் என்பதை அவர் உணர மறுப்பது அவருள் இருக்கும் அகங்காரத்தை வெளிப்படுத்துகிறது.
இதை எல்லாம் சிந்தித்துப் பார்க்கும்போது இன்றைய காலகட்டத்தில் அம்னோவை யார் நம்புவார் என்ற கேள்வி ஒரு பக்கம்; மக்கள் அம்னோவை நம்ப வைக்கும் அளவுக்கு அதனிடம் பண பலம், ஊடக பலம் இருப்பதை மறந்துவிட கூடாது. அதே சமயத்தில் இன்றைய சிறுபான்மை நடுவன் அரசு, இதுவரை ஊழலை வெறுப்பவர்களாகவோ, அதை ஒழிப்பதில் உற்சாகம் கொண்டவர்களாகக் காட்டிக்கொள்ளாமல் மவுனம் மேற்கொள்வது நாட்டின் எதிர்காலத்து நலனைக் கருத்தில் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.
அம்னோ தனது அரசியல் நோக்கத்தை மாற்றி எல்லா இனத்தவர்களும் அவர்களின் சமயங்களும், மொழிகளும், கலாச்சாரங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை மறு உறுதி செய்யுமா? அம்னோ தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில் புதிதாக எதையும் சிறுபான்மையினர் கேட்கவில்லை. நடைமுறையில் இருக்கும் சிறுபான்மையினரின் மொழி, சமயம், கலாச்சார உரிமைகளுக்கு எந்தக் குந்தகமும் ஏற்படாது என்பதைத்தான் இங்கே மறு உறுதி எனப் பொருள்படும்.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பத்திற்கும் நிரந்தரமற்ற நிலைக்கும் அம்னோதான் காரணம் என்பதை யாவரும் உணருவர். எனவே, நாட்டுக்கு அம்னோ தேவையா? என்ற கேள்வி எழும்புகிறது. அம்னோ அதிகாரத்துக்காக எதையும் செய்யும் என்ற கருத்து பரவலாக இருப்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அம்னோ நாட்டை மீண்டு ஆள வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. அது ஜனநாயக கோட்பாடு. ஆனால், தனது முன்னைய ஆட்சி காலத்தில் நிகழ்ந்த பல கொடுமையான நிகழ்வுகளுக்குப் பரிகாரம் காண்பதை அம்னோ விரும்புகிறதா? விரும்பி செயல்படும் கரிசனத்தை அது கொண்டிருக்கிறதா? அம்னோ தனது கொள்கைகளை அரசியல் மனோத்துவத்தை மாற்றிக் கொண்டால்தான் அதற்கு மறுவாழ்வு கிடைக்கும் என்று நினைப்பதில் தவறு ஏதும் கிடையாது.
நாட்டுக்கு நல்ல ஆட்சி தேவை, அதை வழங்க அம்னோ தவறியதை மக்கள் உணர்ந்தனர். அதனால்தான் அதைக் கழற்றிவிட்டனர். மறுபடியும் அதனிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டால் அதை பொன் போல் பாதுகாக்குமா? அல்லது எல்லா பொன்களையும் தனதாக்கி கொள்ளுமா? அம்னோதான் இந்தக் கேள்விகளுக்குத் தக்க பதில்களைத் தர வேண்டும்.