மார்ச் 2020 -இல் தனது அமைச்சரவையை அறிவித்த முஹிடின் இன்னமும் அரசியலில் நிலைத்திருப்பது அவரின் பலம் என்பதை விட பெரும்பான்மை பெற்றும் கோட்டைவிட்ட அரசியல் சாணக்கியர்களின் பலவீனம் என்பதே சரியாகும்.
ஏறக்குறை 46 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அமைச்சரவையில் இடம் கிடைத்த களிப்பில் அந்த அரிய வாய்ப்பை பாலைவன சோலையாக பாஸ் கட்சியினர் ஏற்றுக்கொண்ட போதிலும், அமைச்சரவை நியமனங்களில் அம்னோ திருப்தியடையவில்லை.
இந்த பதவி சுகபோகங்கள் பாஸ் கட்சியினருக்கு அத்திப் பூத்தாற்போல்தான் – சற்றும் எதிர்பாராமல் வந்து அமைந்த ஒரு அதிர்ஷ்டம்.
ஆனால் அன்று தொட்டு அவ்வப்போது அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக்கொள்ளப் போவதாக மிரட்டி வந்த அம்னோவின் விசமத்தனம் கடந்த 2 வாரங்களுக்கு முன்
ஒரு உச்சத்தை அடைந்தது என்றே சொல்ல வேண்டும்.
எண்ணிலடங்காத ஊழல் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் எதிர்நோக்கியிருக்கும் அம்னோ தலைவர்கள் விடுவிக்கப்படவேண்டும் என்பதே அவர்களுடைய கோரிக்கையாகும்.
அக்கட்சியின் பொதுச்செயலாளர் அஹ்மட் மஸ்லான் இதனை வெளிப்படையாகவே குறிப்பிட்டதுதான் வேடிக்கை. முன்னாள் ரதமர் நஜிப், அவருடைய மனைவி ரோஸ்மா, கட்சித் தலைவர் அஹ்மட் ஸாஹிட் மற்றும் மஸ்லான் உள்பட மொத்தம் 8 பேரின் ஊழல் வழக்குகள் தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
இவர்கள் யாரும் குற்றம் புரியவில்லை, மாறாக பக்காத்தான் ஆட்சியின் போது சட்டத்துறைத் தலைவராக இருந்த தோமி தோமஸ், ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக இருந்த லத்திஃபா கோயா மற்றும் துன் மகாதீரின் சதிவலைதான் இது என அம்னோ வாதிடுகிறது.
‘முழு பூசனிக்காயைச் சோற்றில் மறைக்க’ முற்படும் இவர்களுடைய நடவடிக்கை முற்றிலும் கேலிக்கூத்தான ஒன்று என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.
இவர்கள் அனைவருக்கும் எதிரான வழக்குகளை முஹிடின் மீட்டுக்கொள்ளவேண்டும் மற்றும் அமைச்சரவையில் முக்கியமான பதவிகள் தங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதே அக்கட்சியின் பிரதானக் கோரிக்கை இப்போது.
ஜனநாயகம் மற்றும் சட்டதிட்டம் போன்ற அனைத்தும் இவர்களுக்கு ஏதோ கிள்ளுக்கீரையாக இருப்பது வியப்பாகத்தான் உள்ளது. பிரதமராக இருக்கும் ஒருவர் எப்படி வேண்டுமானாலும் தனக்கு ஏற்றவாறு சட்டவிதிகளை வளைத்துக்கொள்ளலாம் என்று இவர்கள் நினைப்பது மிகவும் வருத்தமான ஒரு விசயமாகும்.
முன்னாள் பிரதமர் நஜிபும் அதனைத் தொடர்ந்து மகாதீரும் பல வேளைகளில் நடந்துகொண்ட விதம் ஒரு முன்னுதாரணமாக அமைந்துவிட்டதோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது.
ஆக அரசாங்கத்தைக் கவிழ்த்து திடீர் தேர்தலுக்கு வழிவகுக்கும் ஒரு சூழலை ஏற்படுத்த அம்னோ தயாராகி விட்டது என்றே சொல்ல வேண்டும்.
தற்போதைய கோவிட் காலகட்டத்தில் நிறைய நாடுகள் தேர்தல்களை நடத்தியுள்ளன என்றும் உணவுக்கு வரிசை பிடித்து நிற்கும் நமது மக்கள் ஏன் வாக்களிக்க வரிசை பிடித்து நிற்க முடியாது என்றெல்லாம் அவர்கள் வியாக்கியானம் பேசியதும் நாம் அறிந்த ஒன்றே.
நாடு தழுவிய நிலையில் உள்ள அம்னோவின் 191 பிரிவுகளில் மொத்தம் 141 பிரிவுகள் அரசாங்கத்திற்கான ஆதரவை திரும்பப்பெறவேண்டும் என தீர்மானங்களைக் கொண்டு வந்துள்ளன.
அம்னோவுக்கு இதுவரையில் இருந்த தேசியத் தலைவர்களிலேயே சற்று பலம் குன்றியவராகக் கருதப்படும் அஹ்மட் ஸாஹிட் வேறு வழியின்றி தீர்க்கமான ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதும் நாம் அறிந்த ஒன்றுதான்.
இம்மாத இறுதி வாக்கில் அரசாங்கத்தில் உள்ள எல்லா அம்னோ அமைச்சர்களும் தங்களுடைய பதவிகளைத் துறக்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்ட அவர், அதன் பிறகு நடைபெற்ற உச்சமன்றக் கூட்டத்தைத் தொடர்ந்து தனது நிலைப்பாட்டைச் சற்று மாற்றிக்கொண்டார். அதாவது இம்மாதம் 31ஆம் தேதியன்று நடைபெறும் அம்னோ பொதுப் பேரவையில் இது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அறிவித்தார்.
இந்த சூழ்நிலையில்தான் முஹிடின் சுதாரித்துக்கொண்டதாகத் தெரிகிறது. அம்னோ பொதுப் பேரவையில் எம்மாதிரியான முடிவெடுக்கப்படும் என்று அவருக்கும் நன்றாகவே தெரியும்.
31ஆம் தேதிக்குப் பிறகு ஏறக்குறைய அரசாங்கம் கவிழ்வது உறுதி என்ற நிலையில்தான் புதிய நடமாட்டக் கட்டுப்பாடும் அவசரக்காலமும் ஒருசேர அறிவிக்கப்பட்டது.
நோய்த் தொற்று கடந்த 2 மாதங்களுக்கு முன்பே 4 இலக்கை தொட்டுவிட்ட போதிலும் இப்போதுதான் அரசாங்கத்திற்கு ஞானம் பிறந்ததா என பொது மக்கள் ஆதங்கப்படுவதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.
இரண்டு வாரகால நடமாட்டக் கட்டுப்பாடு வரும் 26ஆம் தேதியன்று நிறைவுபெறும் என்ற போதிலும் மேலும் இரு வாரங்களுக்கு அந்த ஆணை நீட்டிக்கப்படும் சாத்தியம் அதிகமாகவே உள்ளது.
அப்படி நீட்டிக்கப்பட்டால் அம்னோ தனது பொதுப் பேரவையை நடத்த இயலாது – அரசாங்கமும் கவிழாது!
ஒரு வேளை அவ்வாணை நீட்டிக்கப்படாமல் பொதுப் பேரவை நடைபெற்று அம்னோ அமைச்சர்கள் விலக வேண்டும் என முடிவெடுக்கப்பட்டாலும் அரசாங்கம் கவிழாது. ஏனெனில் நாடு முழுமைக்கும் அவசரக்காலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகினாலும் சிறுபான்மை அரசாங்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அவசரக்காலம் முடிவடையும் வரையில் பிரதமர் வைத்ததுதான் சட்டம்!
எனவே எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி வரையில் அல்லது பேரரசர் மாற்று முடிவெடுக்கும் வரையில் முஹிடின் அரசாங்கம் தலை தப்பியிருக்கும் – அவர்கள் நிம்மதி பெருமூச்சு விடலாம்.
எது எப்படியாயினும் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு நடமாட்டக் கட்டுப்பாடும் அதன் தொடர்பான நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளும் மட்டுமே போதும், அவசரக்கால பிரகடனம் தேவையில்லை என்பதே வெகுசன மக்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.
மூட்டைப் பூச்சிகளைக் கொல்ல வீட்டைக் கொளுத்திய கதையாக இருக்கக் கூடாது என பொது மக்கள் கருதுவதும் நியாயமான ஒன்றுதான்!