‘புவி வெப்பமடைதல்’ – வரலாறு

ஜூன் 23, 1988-ல், நாசாவின் கீழ் உள்ள கோட்டார்ட் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (Goddard Institute for Space Studies) இயக்குநர் ஜேம்ஸ் ஹேன்சன், அமெரிக்க காங்கிரஸ் மாநாட்டில், ‘99 விழுக்காடு, புவி வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணம் ஒன்று உண்டு, அது மனிதச் செயல்கள்தான், குறிப்பாக தொழில் துறைகளிலிருந்து வெளியேற்றம் காணும் கரிமம்,’ என்று விளக்கம் அளித்தார். அப்போதிருந்து, புவி வெப்பமடைதல் பிரச்சினைகள் உலகின் முக்கியக் கவனமாகிப் போனது.

டாக்டர் ஜேம்ஸ் ஹேன்சன்

1988-ஆம் ஆண்டின் அதே மாதத்தில், அறிவியலாளர்களும் கொள்கை வகுப்பாளர்களும் டொராண்டோவில் மாறிவரும் வளிமண்டலம் குறித்த உலக மாநாட்டை நடத்தினர். புவி வெப்பமடைதல் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென்றும், கரிம வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டுமென்றும் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் கருதினர். கரிம உமிழ்வைக் குறைப்பதற்கான இலக்கு விவாதிக்கப்படுவது இதுவே முதல் முறை. நவம்பர் 1988-ல், புவி வெப்பமடைதலின் அச்சுறுத்தலைப் பெரும்பாலான நாடுகள் அங்கீகரித்ததன் விளைவாக, ​​ஐக்கிய நாடுகள் சபை, மாறிவரும் பருவநிலைகள் குறித்து, கொள்கை வகுப்பாளர்களுக்கு உண்மையான தகவல்களை வழங்க ‘அரசாங்கங்களுக்கு இடையிலான காலநிலை மாற்றக் குழு’வை (Intergovernmental Panel on Climate Change, IPCC) அமைத்தது.

1990-களில், ஐ.நா.வினால் ஒழுங்கமைக்கப்பட்ட பல்வேறு மாநாடுகள், காலநிலை மாற்றச் சிக்கல்களைக் கையாளத் தவறிவிட்டன. எனவே, 2015-ம் ஆண்டு, பாரிஸ் நடந்த ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டில் ‘பாரிஸ் ஒப்பந்தம்’ முன்வைக்கப்பட்டது. பாரிஸ் ஒப்பந்தம் 2°C-க்கும் குறைவான வரம்பில் புவி வெப்பமடைதல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டைக் கூறுகிறது; ஆனால், இது அவசரமாக நிர்ணயிக்கப்பட்ட ஓர் இலக்காகக் கருதப்படுகிறது.

2°C-க்கும் குறைவான வரம்பில் புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்தும் குறிக்கோள் 2009-ல் கோபன்ஹேகனில் நடந்த காலநிலை மாநாட்டில் அறிவிக்கப்பட்டபோது, ஆப்பிரிக்க நாடுகளின் பெரும்பாலான பிரதிநிதிகள் இது அவர்களுக்கு ஒரு “மரண தண்டனை” என்று விவரித்தனர். உண்மையில், சில தாழ்நிலத் தீவு நாடுகள், தங்களை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காக வெப்பநிலையை 1.5°C-க்கும் குறைவான வரம்பில் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோருகின்றன. இறுதியாக, பாரிஸ் ஒப்பந்தத்தில் அதன் உறுப்பு நாடுகள், “1.5°C-க்கும் குறைவான வரம்பில் வெப்பநிலை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த கடுமையாக உழைக்கும்” என்று ஒரு விதிமுறையை சேர்ந்துகொண்டன, இது ஒரு பிணைப்பு இல்லாத விதிமுறையாக மட்டுமே வழங்கப்பட்டிருந்தாலும்கூட.

அக்டோபர் 8, 2018-ல், ‘1.5°C புவி வெப்பமடைதல் சிறப்பு அறிக்கை’ (Special Report on Global Warming of 1.5 °CSR15) என்றத் தலைப்பில், ஐபிசிசி வெளியிட்ட அறிக்கை, புவி வெப்பமடைதல் 1.5°C-ஆக மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனக் கூறியது, 2°C வெப்பத்துடன் ஒப்பிடும்போது மனித நாகரிகம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஏற்படும் மோசமான விளைவுகளை இது குறைக்கும். ‘கரிம உமிழ்வை ஒரு பெரிய அளவில் குறைக்க முடியும்’ என்றால், புவி வெப்பமடைதலை 1.5°C வரம்பில், வெப்பநிலையின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவது உண்மையில் சாத்தியமாகும்; ஆனால், அதற்காக மனித சமூகம் “இதற்கு முன் இல்லாதப் பெரிய, திடீர் மாற்றங்களை அனுபவிக்க தயாராக இருக்க வேண்டும்.”

அறிவியலாளர்களிடமிருந்து கிடைத்த சிறந்த ஆய்வுகளின் கணிப்புகளை ஐபிசிசி சமர்ப்பித்தது. அப்படியிருந்தும், அது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படுவதற்கு முன்னர், அதன் உறுப்பு நாடுகளால் ஒப்புக்கொள்ளப்பட வேண்டும். அறிக்கையின் உள்ளடக்கங்கள் 6,000-க்கும் மேற்பட்ட ஆதாரங்களில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டு, நூற்றுக்கணக்கான ஆசிரியர்களால் நிறைவு செய்யப்பட்டுள்ளன. ஐபிசிசி 1.5 டிகிரி செல்சியஸுக்குக் கீழே வெப்பத்தைத் தக்கவைக்க, பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றது :

  1. உலகளாவிய கரிம உமிழ்வை 2030-க்குள் பாதியாகக் குறைக்க வேண்டும்.
  2. உலகளாவிய கரிம உமிழ்வை 2050-க்குள் சுழிய நிகர் அளவை எட்ட வேண்டும்.
  3. அனைத்து முகான்மை பொருளாதாரங்களும் மேற்கண்ட தரநிலைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  4. அனைத்து அம்சங்களிலும், இதற்கு முன்பு நிகழாத தீவிரமான மற்றும் பரவலான மாற்றம் சமூகத்தில் ஏற்பட வேண்டும்.

தற்போது, அதன் உறுப்பு நாடுகளால் செயல்படுத்தப்பட்டுள்ள கரிம உமிழ்வு குறைப்பு கொள்கைகளை மட்டுமே நாம் நம்பினால், கடல் மட்டங்கள் உயர்ந்து வரும்நிலையில், கடற்கரையோரத்தில் அமைந்துள்ள நகரங்களை அது வெள்ளத்தில் மூழ்கடிக்கும், பவளப்பாறைகள் அழிவை எதிர்கொள்வதோடு, நீடித்த வறட்சிகள் உலகெங்கிலும் பெருமளவில் பயிர்களை அழிக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுவோம்.

“கரிம வரி” சேகரிப்பு போன்ற தொழில்நுட்ப அணுகுமுறைகள், ஒரு குறிப்பிட்ட தீர்வை கொடுக்கும் என ஐபிசிசி அறிக்கை உறுதிபடுத்தி இருந்தாலும், கரிம உமிழ்வை விரைவாகக் குறைக்கும் இலக்கை அது அடையவில்லை. உண்மையில், சமூகம் மாற்றங்களை விரைவில் செய்ய வேண்டும், ஆற்றலை உருவாக்கும் விதம், உணவை உற்பத்தி செய்யும் விதம், நகர்த்தும் விதம் மற்றும் வீடுகளைக் கட்டும் விதம் உள்ளிட்ட அனைத்திலும்.

கிரெட்டா துன்பெர்க்கி

இந்த நூற்றாண்டின் இறுதிக்குள், 3-5°C புவி வெப்பமடைதல் வெப்பநிலையை அதிகரிப்பதை நோக்கி நமது உலகம் செல்லும் என்று உலக வானிலை அமைப்பு (World Meteorological Organization) கூறுகிறது. இதன் அர்த்தம் என்ன?

இந்தக் கட்டுரையின் முடிவாக, 1.5°C-க்குக் கீழே வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்ட ஓர் இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க்கியின் கூற்றை நான் மேற்கோள்காட்ட விரும்புகிறேன் :

இந்தச் சிக்கலை நீங்கள் ஆராயும் வரை, நமக்கு புதிய அரசியல் தேவை என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். குறைந்து வரும் மற்றும் வரையறுக்கப்பட்ட கரிம வரவுசெலவு திட்ட (கரிம பட்ஜெட்டின்) அடிப்படையில், நமக்கு ஒரு புதிய பொருளாதாரத் திட்டம் தேவை. ஆனால், அது மட்டும் போதாது. நமக்கு புதிய சிந்தனைகள் தேவை… நாம் ஒருவருக்கொருவர் போட்டியிடுவதை நிறுத்த வேண்டும். நாம் ஒன்றாக வேலை செய்யத் தொடங்க வேண்டும், முக்கியமாக, கிரகத்தின் வளங்களை நியாயமான முறையில் பகிர்ந்துகொள்ள வேண்டும்.


பிரைய்ன் கோவ், மலேசிய சோசலிசக் கட்சியின், சுற்றுச்சூழல் பிரிவு செயற்பாட்டாளர்

தமிழாக்கம் :- சாரணி சூரியமதன்