அவசரகாலம் : `அம்னோ தும்மினால், நாட்டிற்கே காய்ச்சல் வரும்`

எஸ் அருட்செல்வன் | ஒவ்வொரு முறையும் அம்னோ நெருக்கடியை எதிர்நோக்கும் போது, நாட்டில் அவசரகாலம் பிரகடனம் செய்யப்படுவது ஆச்சரியத்திற்குரிய ஒன்றல்ல. அதேபோல, ஒவ்வொரு முறையும் அவசரகாலத்தைப் பிரகடனம் செய்வதற்காக சொல்லப்படும் காரணங்களையும் நீங்கள் நம்பிவிடாதீர்கள்.

அம்னோவில் மகாதீர்-ரசாலிக் நெருக்கடியின் போது, நாட்டில் ஐ.எஸ்.ஏ. கடும் நடவடிக்கையான ஒப்பராசி லாலாங் வெடித்தது; நாட்டின் தலைமை நீதிபதி பணி நீக்கம் செய்யப்பட்டார், அம்னோ கட்சி கலைக்கப்பட்டது, செமாங்காட் 46 உருவானது. அம்னோவில் மகாதீர்-அன்வார் நெருக்கடி <em>ரிஃபோர்மாசி</em> (சீர்திருத்த இயக்கம்) போராட்டத்தை வெடிக்க வைத்தது; நாட்டின் காவல்துறை தலைவர் அன்வாரின் கண்களைக் குத்திய சம்பவத்தோடு, மக்கள் நீதி கட்சியும் உருவானது. ஆக, ஒவ்வொரு முறையும் அம்னோவில் நெருக்கடி நிகழும் போது, நமது நாட்டில் நெருக்கடி உருவாகிறது. இப்போது அம்னோ நெருக்கடியில் உள்ளதா? ஆம்.

நாட்டில் பிரதமரும் ஆட்சியாளர்களும் அவசரகாலச் சட்டத்தை, அவர்களைத் தற்காக்கும் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். 1948-ல் அவசரகாலம் அமல்படுத்தப்பட்ட போது, கம்யூனிசவாதிகளை முறியடிக்கப் போவதாகச் சாக்குபோக்கு சொல்லி, புத்ரா-ஏ.எம்.சி.ஜெ.ஏ. அரசியல் கூட்டணியை அழித்தனர். அந்தக் காலகட்டத்தில், பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து, நாட்டின் சுதந்திரத்திற்காக தீவிரமாகப் போராடியது இந்தப் புத்ரா- ஏ.எம்.சி.ஜெ.ஏ.-தான்.

1964-ல், அவசரகாலம் அமல்படுத்தப்பட்ட போது, இந்தோனேசியா மீதான மோதல் என்று துங்கு அப்துல் இரஹ்மான் அறிவித்தார். ஆனால், இந்த அவசரகாலத்தின் உண்மையான காரணம் இடதுசாரி கட்சிகளான தொழிலாளர் கட்சியையும் (Parti Buruh) மக்கள் கட்சியையும் (Parti Rakyat) முடக்குவதுதான் என்று அன்றைய அரசியல் ஆய்வாளர்கள் கூறினர். அக்காலகட்டத்தில், பனிப்போரின் போது மேற்கத்திய ஆதிக்கத்திற்குப் பெரிய எதிர்ப்பைத் தெரிவித்த இவ்விரண்டு கட்சிகளையும் அடக்கத்தான் இந்த அவசரகாலம் பிரபிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

1969-ல், மே 13 இனக்கலவரம் என்ற பேரில் அவசரகாலம் பிரபிக்கப்பட்டது. ஆனால், உண்மையில் நடந்தது என்னவென்றால் முதன் முறையாக அம்னோ மற்றும் பெரிக்காத்தான் கட்சி தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளை இழந்ததுதான்; 5 மாநிலங்கள் கைவிட்டுப் போயின, தலைநகரமான கோலாலம்பூரை எதிர்கட்சியினர் கைப்பற்றினர்.

இன்று 2021-ல், கோவிட் என்ற சாக்கில் அவசரகாலம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

2021 அவசரகாலமும், மூன்று முக்கியக் கூறுகளும்

பிரதமர் முஹிடின் யாசின் அவசரகாலத்தை அறிவித்ததற்குக் கோவிட்-19 சூழ்நிலை ஒரு முக்கியக் காரணமாக இருப்பினும், அதைவிடுத்து மூன்று முக்கியக் கூறுகளாக அமைவது,

  1. நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறாது
  2. பொதுத்தேர்தல் நடத்த முடியாது
  3. நீதித்துறை எப்போதும் போல செயல்படும்.

இதை வேறு விதமாக சொல்வதானால் – நீங்கள் நாடாளுமன்றத்தின் மூலமோ, பொதுத்தேர்தல் மூலமோ அரசாங்கத்தைக் கவிழ்க்கவோ அல்லது மாற்றவோ முடியாது, ஆனால், அம்னோ தலைவரான ஜாஹிட் ஹமிடி மற்றும் இன்னும் பலர் மீதான நீதிமன்ற வழக்குகள் தொடரும்.

இதற்கு முன் கடந்த 23 அக்டோபர் 2020-ல், முஹிடின் யாசின் அவசரகாலத்தை அறிவிக்க அனுமதி கேட்டார். நாட்டின் வரவுசெலவு விவாதத்தின் போது, எங்கே ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்ற பயத்தினால், நாடாளுமன்றத்தைத் தள்ளிவைக்கவே இந்த முயற்சியை அவர் மேற்கொண்டார். ஆனால் அந்தச் சமயத்தில் மாட்சிமை தங்கிய மாமன்னர் அதற்கு அனுமதி வழங்காமல், மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பட்ஜெட்டை ஆதரிக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆக, அன்றிலிருந்து இன்றுவரை, கோவிட்-19 சூழ்நிலையைப் பயன்படுத்தி பிரதமர் அவசரகாலத்தைக் கோருவதன் உள்நோக்கம் நாடாளுமன்றத்தையும் பொதுத்தேர்தலையும் தள்ளி போடதான்.

ஒப்பிட்டுப் பார்த்தால், இன்று அறிவிக்கப்பட்டுள்ள அவசரகாலத்தை விட, முதல் முறை அமலாக்கம் செய்யப்பட்ட நடமாட்டுக் கட்டுப்பாட்டு ஆணை மிகவும் இறுக்கமானதாக இருந்தது என்பதுதான் உண்மை.

அம்னோ நெருக்கடி

இந்தக் கட்டுரையில், அம்னோவில் நடக்கும் நெருக்கடிதான் இன்றைய அவசரகாலத்திற்குக் காரணம் என நான் கூறுகிறேன். ஒருபுறம், அம்னோவின் தலைவர் அவரைக் காப்பாற்றிக்கொள்ள பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றிருக்க, மறுபுறம் அம்னோ துணைத்தலைவரும் முஹிடினின் அமைச்சரவையில் இருப்போரும், டாக்டர் அமாட் ஜாஹிட் ஹமிடி-க்கு நீதிமன்றம் சீக்கிரம் தண்டனை வழங்கவேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறது.

ஜாஹிட் ஹமிடி-க்குத் தண்டனை வழங்கப்பட்டால், அவர் தேர்தலில் போட்டியிட முடியாது, அதோடுமட்டுமின்றி, அம்னோ ஆட்சியைப் பிடித்தாலும், அவர் பிரதமராக முடியாது. நாட்டின் அரசியலமைப்பு சட்டம் 48 (5)-ன் கீழ், ஒருவருக்கு 2000 ரிங்கிட்டுக்கு மேல் தண்டம் அல்லது ஒரு வருடத்திற்கும் மேலான சிறை தண்டணை விதிக்கப்பட்டிருந்தால் அவர் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்து விடுவார். வழக்கு மேல் முறையீடு செய்யப்படிருந்தாலும் தேர்தலில் போட்டியிட முடியாது.

ஜாஹிட் நீதிமன்ற வழக்கில் தோற்றுபோனால், அம்னோவில் அதிகாரத்தைக் கைப்பற்ற ஒரு பெரிய போட்டியை இது ஏற்படுத்தும். காரணம், அம்னோவில் தலைவருக்கு அதிக அதிகாரம் இருக்கிறது, பொதுத்தேர்தலில் யார்யார் போட்டியிடலாம், யார்யார் முடியாது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் அவருக்கே உள்ளது. ஆக, வேட்பாளராக வேண்டுமானால் – தலைவரைப் பகைத்துக் கொள்ளக்கூடாது.

இப்போது பொதுத்தேர்தல் வந்தால், அம்னோ பாஸ் கட்சியுடன் ஒன்றிணைந்து ஆட்சியை பிடிக்கும் என்று வானிலுள்ள எல்லா நட்சத்திரமும் சொல்கிறது. அதனால்தான், ஜாஹிட் இப்போது தேர்தல் வைக்க வேண்டும் என்று கோருகிறார், அப்போதுதான் ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்கலாம் – அம்னோவில் தலைவருக்கு எதிரானவர்களின் கதையை முடிக்கலாம், நாடாளுமன்ற அதிகாரத்தைக் கைப்பற்றலாம் மற்றும் நீதிமன்ற வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளலாம்.

ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் நிலையில் தற்போது பாஸ் உள்ளது. அதனால்தான், அம்னோவும் பெர்சத்துவும் மாறி மாறி பாஸ்-ஐக் கவரவும் அரவணைக்கவும் போட்டி போடுகின்றனர்.

அம்னோவில் இருக்கும் ஜாஹிட்டை எதிர்க்கின்ற முஹிடின் யாசினும் அவரைச் சார்ந்தவர்களும் தேர்தலைத் தள்ளிப்போட்டி, நீதித்துறை தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். நோக்கம் தெளிவாக உள்ளது, இரண்டு சகோதரர்கள், ஒரு நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் ஒரு சட்டத்துறைத் தலைவர் ஆகியோர் அரசாங்கத்தைக் காக்க, நாட்டின் நீதித்துறை ஆட்சியில் இருக்கும் கட்சியின் நோக்கத்தை நிறைவேற்றும்.

எதிர்வரும் 30 மற்றும் 31 ஜனவரியில் நடக்கவிருந்த, அம்னோ ஆண்டுக் கூட்டத்தையும் இந்த அவசரகாலம் வெற்றிகரமாக நிறுத்தியுள்ளது. அந்தக் கூட்டத்தில் ஒரு முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்தது – அதாவது பெர்சத்துவுடனான கூட்டணியை முடிவுக்குக் கொண்டுவர அம்னோ உறுப்பினர்கள் காத்திருந்தனர். அம்னோவின் சரித்திரத்தில் அவர்களுடன் கைக்கோர்க்கும் எந்தவொரு சிறு கட்சியையும் கலற்றிவிடுவதில் அம்னோ இரக்கம் காட்டியதில்லை – அன்று செமாங்காட் 46, பிறகு நீதிக்கட்சி, இன்று பெர்சத்து.

இந்தத் தீர்மானம் அம்னோ உச்சமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது, இருப்பினும், தேசிய ஆண்டு கூட்டத்தில் அதனை உறுதிப்படுத்த வேண்டும். முஹிடின் யாசின் அரசாங்கத்தைக் கவிழ்க்க, அம்னோவில் நஜிப்-ஜாஹிட் கூட்டணியின் அழகாக ஒருங்கிணைக்கப்பட்ட திட்டம் இது. இப்போதே ஆளும் கட்சிக்கு ஆதரவு குறைந்து வருவது நாம் அறிந்ததே. தெங்கு ரசாலிக் (குவா மூசாங்), அமாட் ஜஸ்லான் யாக்குப் (மாச்சாங்) மற்றும் நஸ்ரி அசிஸ் (பாடாங் ரெங்காஸ்) ஆகியோர் முஹிடினுக்கு ஆதரவு தர மறுத்ததன் காரணமாக, தற்போது முஹிடினுக்கு மக்களவையில் 108 பெரும்பான்மைதான் இருக்கிறது. பேராக் மாநிலத்தின் அனுபவத்திலிருந்து பார்க்கும் போது, முஹிடின் அரசாங்கத்தைக் கவிழ்ப்பது அம்னோவுக்கு முடியாத காரியமல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது.

அம்னோ தொடர்ந்து அதிகாரத்திலிருக்கும்

அன்வர் இப்ராஹிம் மற்றும் பக்காதான் ஹராப்பானைப் பொறுத்தவரை, அம்னோவின் ஆதரவு இருந்தால் மட்டுமே அவர்களால் ஆட்சிக்கு வர முடியும். அம்னோவின் ஆதரவை எதிர்பார்க்கும் அன்வரின் நிலை கவலைக்கிடமானதுதான், “ஆட்டுக் கொட்டகைக்குப் போனால் கத்த வேண்டும், எருதுவிடம் போனால் எக்காளமிட வேண்டும்,” இதுதான் தற்போது அன்வரின் நிலை.

எப்படிப் பார்த்தாலும் – அம்னோவின் சித்தாந்தத்திற்குக் கண்டிப்பாக செல்வாக்குள்ளது. யார்தான் இந்த அம்னோ?? 1951-ல், அம்னோவின் மதப் பிரிவிலிருந்து வெளியேறிய ஒரு குழு பாஸ் ஆனது; 1998-ல் அம்னோவை எதிர்த்த ஒரு குழு – நீதிக் கட்சியானது; 2016-ல் அம்னோவை விட்டு வெளியேறிய மற்றுமொரு குழு பெர்சத்து கட்சியை உருவாக்கியது.

ஆக, தேர்தலில் அம்னோ வென்றாலும் தோல்வியுற்றாலும், அதன் சித்தாந்தம் புது கூட்டணி உருவில் அல்லது பெயரில் – பாரிசான் நேசனல், பெரிக்காத்தான் நேசனல் அல்லது பக்காத்தான் ஹராப்பான் எனத் தொடர்ந்து உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்.

கோவிட்`டும் புதிய அரசியல் விதிமுறையும்

அவசரகாலச் சட்டத்தை அமலாக்கம் செய்வதில் கோவிட் வெறும் அலங்காரப் பொருளே. ஆனால், கோவிட் தொற்று உண்மை – நாட்டின் சுகாதாரத்தையும் பொருளாதாரத்தையும் அது தீவிரமாகத் தாக்கி வருகிறது. வருகிற காலத்தில் மக்கள் பொதுத்தேர்தலை எதிர்நோக்குவர். அப்போது மக்கள் அவர்களின் அடிப்படை பிரச்சனையைத் தீர்க்கும் அரசாங்கத்தை, அதாவது வேலை உத்தரவாதம், சுகாதார உத்தரவாதம் மற்றும் வீட்டுரிமை உத்தரவாதம் கொடுக்க முடிந்த அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இன்று பிரதமர் பெர்மாய் திட்டத்தை அறிமுகப்படுத்தியப் போது, அதனுடன் அமைச்சர்கள், அரசாங்கத் தொடர்பு நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து, அந்தப் பணத்தைக் கோவிட் உதவித் தொகை உண்டியலில் சேர்க்கப்படும் என அறிவிப்பு செய்வார் என்று நான் எதிர்ப்பார்த்தேன், ஆனால் அது நடக்கவில்லை. ஏனெனில் அவர்களுக்கு இந்தப் பணம் எதிர்வரும் தேர்தலுக்குத் தேவைப்படும், இதை வைத்துதான் ஓட்டு வாங்கப் போகின்றனர்.

அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி, தனியார் மருத்துவமனைகளின் உதவியை நாடப்போவதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால், உண்மையில் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் அரசாங்கத் தொடர்புடைய நிறுவனங்களின் கீழ்தான் செயல்பட்டு வருகின்றன. நீஙகள் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று – ஜ.ஜே.என்., சுபாங் ஜெயா மெடிக்கல் செண்டர், பந்தாய், பிரின்ஸ் கோர்ட், க்ளெனிகல்ஸ் மற்றும் கே.பி.ஜே. ஆகிய தனியார் மருத்துவமனைகள் அரசாங்கத் தொடர்புடைய நிறுவனங்களின் கீழ்தான் செயல்பட்டு வருகின்றன.

நாம்தான் நம்மைப் பாதுகாத்து கொள்ளவேண்டும். கோவிட்-19 நம் வாழ்க்கை முறையை மாற்றியிருக்கிறது.

அதே கோவிட்-19 நம் நாட்டை ஆட்டிப் படைக்கும் அம்னோ அரசியலையும் மாற்றுமா?


எஸ் அருட்செல்வன்  மலேசிய சோசலிசக் கட்சியின் தேசியத் துணைத் தலைவர்

தமிழாக்கம் : சிவரஞ்சனி மாணிக்கம்