கெடா மாநில விவகாரம் நமக்கு ஒரு படிப்பினை! ~இராகவன் கருப்பையா

கடாரம் என்ற கெடாவை ‘ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பதில் என்ன குறை’ என்று நாம் கேட்கவில்லை. நமது உரிமை பரிக்கப்படுவதை தடுப்பதற்குதான் கடந்த 2 வாரங்களாக இப்படிப்பட்ட போராட்டம்.

இந்து கோயில்களுக்கு சல்லி காசு கொடுக்க முடியாது என சட்டமன்றக்கூட்டத்தில் பகிரங்கமாக அறிவித்த போதே கெடா மந்திரி பெசார் சனுசி எப்படிப்பட்டவர் என்று நம்மால் ஓரளவு யூகிக்க முடிந்தது.

அதனைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் நூற்றாண்டுகால இந்துக் கோயில்களை உடைத்தத் தரைமட்டமாக்கியதை கொஞ்சம் கூட பரிவு இல்லாமல் தற்காத்துப் பேசியதும் நாம் அறிந்த ஒன்றே.

இந்நிலையில்தான் கெடாவுக்கான இவ்வாண்டின் தைப்பூச விடுமுறையை ரத்து செய்து பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டு நாடலாவிய நிலையில் இந்தியர்கள் மட்டுமின்றி பிற இனத்தவரின் சினத்துக்கும் அவர் ஆளாகிவிட்டார்.

இவ்வாறு செய்தது தவறு, எனவே முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என இந்திய அரசியல் தலைவர்களோடு மலாய்க்கார, சீன அரசியல்வாதிகள் மட்டுமின்றி மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ், பல்வேறு சமைய அமைப்புகள், அரசு சாரா இயக்கங்கள் மற்றும் மனித உரிமை போராட்டவாதிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கோரிக்கை விடுத்துள்னர். முன்னாள் பிரதமர் நஜிபும் கூட தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

ஆனால் சனுசியை பொருத்த வரையில் அவையெல்லாமே ‘செவிடன் காதில் விழுந்த சங்கு’தான்.

‘தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்’ என்பதைப் போல முரட்டுத்தனமான  தனது முடிவிலிருந்து ஒரு அங்குலம் கூட விலகாமல் அடம் பிடித்துக்கொண்டிருக்கும் அவருடைய தரங்கெட்ட போக்கை நாம் ஒரு படிப்பினையாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பல்லின மக்களைக்கொண்ட மலேசிய அரசியல் சூழலை கொஞ்சம் கூட புரிந்து வைத்திருக்காத ஒருவரிடம் ஏன் இப்படி நாம் தலைகுனிந்து கெஞ்சிக்கொண்டிருக்க வேண்டும்?

தொடர்ந்தாற்போல் அவர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைப் பார்த்தால் இந்தியர்களுக்கு எதிராக ஒருவித காழ்ப்புணர்ச்சியை நஞ்சாக அவர் வளர்த்துக்கொண்டுள்ளதைப் போல் தெரிகிறது.

எனவே இதோடு அவரை புறக்கணித்துவிட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முடுக்கிவிடுவதே விவேகமான செயலாகும்.

இந்நாட்டில் காலங்காலமாக நம்முடைய போராட்டங்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. உரிமைகளுக்காக எவ்வளவுதான் போராடுவது!

தற்போதைய வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவராக இருந்த  காலத்தில் அக்கட்சியின் பொதுப் பேரவையின் போது மலாய்க்காரர் அல்லாதாரை மிரட்டும் தோரணையில் ‘க்ரிஸ்’ எனும் பாரம்பரிய மலாய்க்கார ஆயுதத்தை உயர்த்திக்காட்டிய சம்பவத்தை நாம் மறந்திருக்க வாய்ப்பில்லை.

அதற்கு அடுத்து நடைபெற்ற பொதுத் தேர்தலில்  மலாய்க்காரர்கள் அல்லாதாரின் வாக்குகளை  அம்னோ பெருமளவில் இழந்ததும் ஹிஷாமுடின் தனது செயலுக்கு பிறகு மன்னிப்புக் கோரியதும் நமக்கு இன்னும் ஞாபகம் இருகிறது.

ஆக மணிதாபிமானமற்ற சனுசியிடம் மண்டியிட்டு கெஞ்சிக் கூத்தாடுவதை நிறுத்திக்கொண்டு அடுத்து என்ன செய்வது என்று கவனமாக சிந்திக்க வேண்டிய தருணம் இது.

அடுத்த பொதுத் தேர்தலில் சனுசிக்கு ம.இ.கா. ஆதரவு வழங்காது என அக்கட்சித் தலைவர் விக்னேஸ்வரன் விடுத்துள்ள மிரட்டலெல்லாம் பலிக்காது. இருமாப்புக் கொண்ட சனுசிக்கு இத்தகைய மிரட்டலெல்லாம் ஒரு எரும்புக் கடியைப் போல்தான்.

இவ்வளவு நடந்தும் பாஸ் கட்சியின் தேசியத் தலைவர் ஹாடி அவாங் சாவகாசமாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதுதான் வியப்பாக உள்ளது. ஒரு இனம்ன கேவலப்படுத்தப்படும் போது பொருப்புள்ள ஒரு முத்தத் தலைவர் இப்படியா எனோ தானோ என்றிருப்பார்?

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதற்கு ஏற்ப இந்தியர்களின் நலன்  மீது பாஸ் கட்சியினரின் நிலைப்பாடு என்னெவென்று இதன் வழி நன்றாகவே புலப்படுகிறது.

ஆக அடுத்த பொதுத் தேர்தலில் நாடு முழுவதிலும் பாஸ் கட்சி வேட்பாளர்கள் அனைவரையும் ம.இ.க. புறக்கணிக்கும் என்று சூளுரைக்க விக்னேஸ்வரனுக்கு துணிச்சல் வேண்டும்.

அப்படி அதிரடியாக ஒரு அறிவிப்பு செய்தால்தான் நம்மை அவர்கள் சற்று திரும்பிப் பார்ப்பார்கள். இலலையெனில் அதிகமானத் தொகுதிகளில் இந்தியர்களின் வாக்குகள்தான் வெற்றியாளர்களை நிர்ணயிக்கின்றன என்று வெருமனே பிதற்றித் திரிவதில் அர்த்தமில்லை.

அது மட்டுமின்றி இந்த விவகாரத்தை ஒரு படிப்பினையாகக்கொண்டு தைப்பூசத்திற்கு தேசிய விடுமுறை பெற்றுத் தருவதற்கான முயற்சிகளையும் ம.இ.க. மேற்கொள்ள வேண்டும். மாநில ரீதியாக விடுமுறை அங்கீகரிக்கப்படுவதால்தான் சனுசி போன்ற தகுதியற்ற அரசியல்வாதிகள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றனர்.