தரிசில் தேடும் நீதி – ஓர் அலசல் (updated)

கி.சீலதாஸ்   மலேசியா அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞர் டான் ஶ்ரீ டோமி தோமஸ் கடந்த ஜனவரி திங்களின் இறுதியில் வெளியிட்டுள்ள தமது “என் கதை – நீதி வனாந்தரத்தில்” என்ற தலைப்புடைய நூலில், தம்மின் இருபது மாத தலைமை வழக்குரைஞராகப் பணியாற்றியபோது கிட்டிய அனுபவங்களை விளக்கியுள்ளார். “நீதி வனாந்தரத்தில்” என்ற தலைப்பு, துன் டாக்டர் மகாதீர் முகம்மது 1981ஆம் ஆண்டு முதல் 2003ஆம் வரை பிரதமராக இருந்த பொழுது நீதித்துறை எப்படி இயங்கியது என்பதை நினைக்கச் செய்கிறது.

1988ஆம் ஆண்டில் நீதித்துறையின் நீதிமன்றங்களின் நீதிசார் அதிகாரத்தை நீக்கி அரசமைப்புச் சட்டத்தின் 112ஆம் உறுப்பில் மாற்றம் ஏற்படுத்தியது; நீதி பரிபாலனத்தில் குழப்பம் விளைவித்த இஸ்லாம் குறித்த செருகல், அதனால் ஏற்பட்ட குழப்பத்திற்கு யாதொரு சீர்வழியும் காண விரும்பாத அணுகுமுறை போன்றவை நீதியானது வனாந்தரத்தில் குடிகொண்டிருந்ததாகவே நம்ப வேண்டியிருந்தது. எனவே, 2018ஆம் ஆண்டில் இருந்துதான் நீதி வனாந்தரத்தில் சுழன்று கொண்டிருந்தது என்று சொல்ல இயலாது. மாறாக, மகாதீர் முகம்மது பிரதமராக இருந்த காலத்தில் இருந்தே நீதி வனவாசத்தை அனுபவித்து கொண்டிருந்தது என்பதே உண்மையான நிலை. மகாதீரின் நீண்ட ஆட்சி காலத்திலேயே நீதித்துறையின் சுதந்திரம் கேள்வி குறியாகவே இருந்தது.

2018ஆம் ஆண்டு நடந்த பதினான்காம் பொதுத் தேர்தலின்போது நம்பிக்கை கூட்டணியோடு இணைந்த மகாதீர் முகம்மது நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் அறிக்கையை முழுமையாக ஆதரித்தார். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் எல்லா உறுதிமொழிகளும் நிறைவேற்றப்படும் எனவும் மறு உறுதி செய்தார். தேர்தல் பிரச்சாரத்தின்போது தமது ஆட்சி நிர்வாக காலத்தில் நிகழ்ந்த குறைகளை – தவறுகளை ஏற்றுக்கொண்டார். நேர்மையான, நாணயமான அரசியலைக் காண்பதற்குத் தயாராகி செயல்படத் தொடங்குவதாக அறிவித்தார். யாவரும் நம்பினர்.

தேர்தல் அறிக்கை ஒரு கட்சியின் நாட்டு நிர்வாகத்தைக் குறித்த விளக்கங்களும், முந்தின ஆட்சியில் நிகழ்ந்த தவறுகளை, அநீதிகளை நீக்கவும் உறுதிபூண்டு, துணிந்து செயல்படும் உற்சாகத்தை, அணுகுமுறையை விளக்குவதாக இருக்க வேண்டும்.

ஆளுங்கட்சியைத் திட்டிக்கொண்டே இருந்தால் போதாது, அதன் குறைகளை மட்டும் சொல்லிக்கொண்டே இருந்தால் போதாது, புது திட்டம் என்ன? நாடு எவ்வாறு செழிப்புறும், எல்லா மக்களின் நலனில் எத்தகைய கரிசனம் காட்டப்படும்? இவையாவும் மக்கள் எதிர்பார்க்கும், எதிர்பார்ப்பவைகளாகும்.

பதினான்காம் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி பெற்ற வெற்றி எதைக் குறிக்கிறது? ஊழல் ஆட்சிக்குப் பதிலாக ஊழலற்ற ஆட்சி; அடக்குமுறை ஆட்சிக்குப் பதிலாக நீதி வழியிலான ஆட்சி; ஆட்சியாளர்கள் விரும்பியபடி ஆட்சிசெய்வதை விடுத்து, சட்டமுறை ஆட்சிக்கு மதிப்பளித்து, செயல்படுவது. மக்களின் தீர்ப்பு எதை விழைந்தது? நல்லாட்சி. நீதிக்கு மதிப்பளிக்கும் ஆட்சி, அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்ட ஆட்சி. 1981ஆம் ஆண்டிலிருந்து 2003ஆம் ஆண்டு வரை நீதிதேவதையை வனவாசத்திற்கு அனுப்பிய மகாதீர் முகம்மது மீண்டும், அதாவது ஏழாவது பிரதமராகப் பதவி ஏற்றபொழுது, மக்கள் அவரை மன்னித்து, ஏற்றுக்கொண்டனர்.

உயர் பதவிகளுக்கான நியமனம். அதில் அரசின் தலைமை வழக்குரைஞரும் அடங்குவார். டோமி தோமஸுக்குப் பல திசைகளில் இருந்து எதிர்ப்புகள் வந்தன. சட்டத்துறை ஒழுங்காகச் செயல்பட்டால்தானே, நீதித்துறை செழுமையாகச் செயல்பட முடியும். மக்களும் அதை தானே விரும்புவார்கள். இந்தப் பதவி ஒதுக்கும் நடவடிக்கையில் மகாதீர் முகம்மது நடந்துகொண்ட முறை போற்றத்தக்கதாக இருப்பினும் அவர் எடுத்த நல்ல முடிவுகளைத் தற்காக்கும் ஆளுமையைக் கைவிட்டார் என்பது தெளிவாகிறது.

அமைச்சரவைக்கு அமைச்சர்களைத் தெரிவு செய்வது பிரதமரின் பொறுப்பு. அவரின் ஆலோசனையின்படிதான் பேரரசர் நியமிப்பார். அதுபோலவே, அரசின் தலைமை வழக்குரைஞரைத் தெரிவுசெய்யும் பொறுப்பு பிரதமருக்கு உண்டு; அவரின் நியமனத்தைத் தற்காக்கும் பொறுப்பும் பிரதமருக்கு உண்டு; அதில் தயக்கம் காட்டிய பிரதமரைத்தான் நாடு கண்டது.

பதவி ஏற்ற சில மாதங்களிலேயே தாய்மொழி கல்வியைப் பற்றி தமது பழைய பல்லவியைப் பாடினார் மகாதீர் முகம்மது. தாய்மொழிப் பள்ளிக்கூடங்கள் இயங்குவதால் நாட்டின் ஒருமைப்பாட்டை வளர்க்க தடையாக இருக்கிறது என்றார். இது தவறு என்பதை இந்தப் பகுதியில் முன்பே குறிப்பிட்டிருக்கிறேன்.

ஜாகீர் நாயக் விஷயத்திலும் மகாதீரின் போக்கு கவலைக்குரியதாகவே இருந்ததை மறக்க முடியாது. இது குறித்து நம்பிக்கை கூட்டணியில் முக்கிய பங்கு கொண்டிருந்த கட்சித் தலைவர்களுடன் நான் பேசியபோது அவர்கள், மகாதீர் கவனித்துக் கொள்வார் என்று சொன்னார்கள். அதுமட்டுமல்ல, பேச்சுரிமையைப் பற்றி அவர்கள் சொன்னது வேதனைக்குரியதாக இருந்தது. இந்த நாட்டு குடிமக்கள் கூட பேச தயங்கும் கருத்துக்களை ஜாகீர் நாயக் சர்வசாதாரணமாக வெளியிட்டுக் கொண்டிருப்பதை வேதனையுடன் கையைப் பிசைந்து கொண்டு இருக்க வேண்டுமா? என்பதே மக்களின் கேள்வி. இதை இம்மியளவும் கவனிக்க தவறியவர்களை அடையாளம் காண முடிந்தது.

ஜாகீர் நாயக்கைப் பிற நாடுகள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனவாம். இந்தப் பிற நாடுகள் யாவை? சவூதி ஆரேபியா, இந்தோனேஷியா மற்றும் ஏனைய முஸ்லிம் நாடுகள். நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் தராகரத்தைக் கொண்டிருந்தது ஜாகீர் நாயக்கின் நடவடிக்கைகள். மகாதீர் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டிராமல் தமது சொந்த அரசியல் லாபத்தைக் கவனத்தில் கொண்டு நாட்டின் நலனைப் புறக்கணித்தார் என்று சொல்லப்படுவதை அவரால் துணிந்து மறுக்க முடியவில்லை. எனவே, நாட்டின் நலன், மக்களின் ஒற்றுமை உணர்வைப் பற்றி மகாதீர் முகம்மது கொண்டதாகத் தெரியவில்லை. மகாதீரின் நடவடிக்கைகள் யாவும் அவருடைய சொந்த நலனில்தான் கரிசனம் என்பது மெய்யாகிவிட்டது.

இவையாவும் நடந்து கொண்டிருக்கையில் கோலாலம்பூரில் முதியோர்களின் நலன் தொடர்பாக ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அந்த நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர் உரை ஆற்றினார். அவரின் பேச்சில் மகாதீரின் கொள்கைகளைச் சற்று விமர்சித்தார். சிறிது நேர இடைவேளையின் போது அவரோடு பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜி ஜெர்மனி ஐரோப்பாவை ஆக்கிரமித்து வெற்றி காண்பதில் மும்மரமாக இருந்தது. ஹிட்லரின் எதிர்ப்பில் இங்கிலாந்துடன் உடன்படிக்கை காண விரும்பியது ஸ்டாலின் இரஷ்யா. அப்பொழுது பிரதமராக இருந்த நெவில் செம்பர்லேய்ன் இரஷ்யாவுடன் உடன்பாடு காண்பதைத் தள்ளி வைத்தது மட்டுமல்ல, ஹிட்லரின் ஆக்கிரமைப்பை அடிக்கடி கண்டித்து, எச்சரிக்கை விடுத்து கொண்டிருந்த சர் வின்ஸ்டன் சர்ச்சலின் ஆலோசனைகள் யாவும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் இருந்தது. ஹிட்லர் பிரிட்டனைத் தாக்க தொடங்கியதும் இரஷ்யாவுடன் தன் உறவை முறித்துக்கொண்டு அதன் மீது போர் தொடுத்தபோது போர் நிலவரம் மாறியது. பிரிட்டனில் போர்க்கால கூட்டணி அரசு நியமிக்கப்பெற்றது. வின்ஸ்டன் சர்ச்சில் பிரதமராகப் பொறுப்பேற்றார். பரம எதிரியான இரஷ்யாவுடன் இணக்கம் காணப்பட்டது. பிரிட்டனின் நட்பு நாடுகளுடன் இணைந்து ஹிட்லர் முறியடிக்கபட்டார்.

ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. போரின் விளைவுகள், துயர்கள் அகற்றப்படாத நிலையில் பிரிட்டன், அமெரிக்கா, ஃபிரஞ்சு ஆகிய நாடுகள் கம்யூனிஸ இரஷியாவின் மீது தங்கள் கவனத்தைத் திருப்பின. காலங்காலமாக கம்யூனிஸ்த்தை எதிர்த்தவர்கள் போர் முடிந்ததும் அந்தத் தத்துவம் பரவுவதைத் தடுக்க வேண்டும் எனக் கங்கணம் கட்டிக்கொண்ட இந்த நட்பு நாடுகள் இரஷ்யாவின் மீதான எதிர்ப்பை வலுப்படுத்தின. (காண்க: மூன்றாம் ராய்க்கின் (அரசின்) எழுச்சியும் வீழ்ச்சியும், வில்லியம் ஷரர்)

அடுத்து, மலாயாவில் ஜப்பானியர்களின் படையெடுப்பு. மலாயா பிரிட்டிஷாரின் பாதுகாப்பாக இருந்தபோதிலும் அது ஜப்பானிய ஆக்கிரமப்பைத் தடுக்கும் சக்தியைக் கொண்டிருக்கவில்லை. ஜப்பானின் நடவடிக்கையைக் கவனித்து வந்த மலாயா கம்யூனிஸ்ட் கட்சி அன்றைய பிரிட்டிஷ் தூதரோடு தொடர்புகொண்டு ஒத்துழைப்பு வழங்க முன்வந்தது; அதை ஏற்கவில்லை அன்றைய பிரிட்டிஷ் அரசு.

பின்னர், ஜப்பானிய படை மலாயாவைக் கைப்பற்றி ஆட்சி நடத்தும்போது அதற்கு எதிர்ப்பான நடவடிக்கையில் இறங்கியது மலாயன் ஜப்பானியர்கள் எதிர்ப்பு இயக்கம். இதில் மலாயா கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து போராடியதை வரலாறு கூறுகிறது. ஜப்பான் சரணடைந்தது, மலாயாவும் பிரிட்டிஷார் திரும்புவதற்குள் மலாயா கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பூர்வமாக இயங்க தொடங்கியது. அது நீடிக்கவில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு, மலாயா கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. அது தனது போராட்டத்தைக் காட்டிலிருந்து நடத்த தீர்மானித்தது. தோல்வியும் கண்டது.

இந்த இரு நிகழ்வுகளும் பிரிட்டனின் ராஜதந்திரத்தை வெளிப்படுத்தின. அதன் நடவடிக்கைகள் அதன் நன்மைக்காக மட்டும்தானே தவிர மற்றவர்களின் நன்மைக்காக அல்ல. அதுபோல மகாதீரின் நடவடிக்கைகள் யாவும், தன் சொந்த நலனைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மேற்கொண்டவையே அன்றி நாட்டு நலனிலோ, மக்கள் நலனிலோ அல்ல! மகாதீர் முகம்மதுடன் இணைந்து செயல்பட்ட கட்சிகள் ஒட்டகத்தின் திமிலை நேர்படுத்த முயன்று தோல்வி கண்டது போல அமைந்துவிட்டதை என்னவென்பது! அந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என் ஒப்பீட்டை ஒப்புக்கொண்டார்.

டோமி தோமஸின் நூல் மனக்கிளர்ச்சியை எழுப்பும் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயத்தில் பல சர்ச்சைகள், சட்ட சிக்கல்கள் முளைக்கும் என்பதும் திண்ணம். அதிகாரத்தில் இருந்தபோது அவரால் சட்டப்பூர்வமாகச் செயல்பட முடியவில்லை. இப்பொழுது தாம் செயல்பட முடியாமற் போனதற்கான காரணத்தைச் சொல்லுகிறார். அதுவும் குற்றமே என்பார்கள். இதுவே நாகரிக கால அரசியல்.