மலேசியாவின் ஊழல் நிலை – கி.சீலதாஸ்

அனைத்துலக வெளிப்படைத்தன்மை இயக்கம் தமது தலைமையகத்தை பெர்லின் நகரில் (ஜெர்மனி) கொண்டிருக்கிறது. அதன் நோக்கம் எங்கெல்லாம் ஊழல் தலைவிரித்தாடுகிறதோ அதை வெளிப்படுத்துவதாகும். ஊழல் நடவடிக்கைகள் நாட்டுக்கும், மக்களுக்கும் பாதிப்பை விளைவிக்கும். அதிகாரத்தில் இருக்கும் ஒரு சிலரின் பேராசையானது நாட்டைப் பாதிக்கும். நாடு பாதிப்படைந்தால் மக்கள் பாதிப்புறுவர்.

இந்த உண்மையைப் பகிரங்கப்படுத்தி ஊழலை முறியடிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தைக் கொண்டிருக்கிறது அனைத்துலக வெளிப்படைத்தன்மை இயக்கம். மக்கள் ஊழலைக் குறித்த எல்லா தகவல்களையும் தெரிந்து, உணர்ந்து செயல்பட வேண்டும், வாழ வேண்டும் என்பதே அதன் தலையாய நோக்கம் என்று கூட சொல்லலாம். உலக நாடுகளில் ஊழல் எந்த அளவு ஊடுருவி உள்ளது என்பதை இந்த அனைத்துலக வெளிப்படைத்தன்மை வெளிப்படுத்துவதோடு ஊழலைத் தடுப்பதற்கான வழிமுறைகளைத் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்கிறது. மலேசியாவிலும் அனைத்துலக வெளிப்படைத்தன்மை இயக்கம் பதிவுபெற்று இயங்குகிறது. அது அரசு சாரா சுயேச்சையான இயக்கமாகும்.

இந்த அமைப்பு ஆண்டுதோறும் உலக நாடுகளில் ஊழல் எந்த அளவில் இருக்கிறது என்பதை புலப்பாடு அறிகுறியின் மூலம் வெளியிடுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகள் அனைத்துலக வெளிப்படைத்தன்மையின் புலப்பாடு  அறிகுறியின்படி டென்மார்க், நியூசிலாந்து ஊழலற்ற நாடுகளாக முதன்மை வரிசையில் திகழ்கின்றன. நமது அண்டை நாடான சிங்கப்பூர் மூன்றாம் இடத்தை வகிக்கிறது. 2019ஆம் ஆண்டு 51ஆம் இடத்தில் இருந்த மலேசியா இப்பொழுது 57ஆம் இடத்தில் இருக்கிறது.

இந்த நிலை எதைக் குறிக்கிறது? ஊழல் அதிகரித்துவிட்டது. அதைக் கட்டுப்படுத்த போதுமான, ஆக்ககரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளாதது மட்டுமல்ல ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டதில் அரசியல் நோக்கம் இருப்பதாகவும் தெரிகிறது. அதுவும் ஊழல் தன்மையே. ஊழலுக்கு ஆதரவு நல்குகிறது.

மேலும், இதுவரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாவரும் கடந்த ஆட்சிகாலத்தில், அதாவது தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் பொறுப்பான பதவிகளில் இருந்தவர்கள் என்பதைக் கவனிக்கும்போது அவர்களோடு தொடர்பு வைத்துக்கொண்டு தமது சிறுபான்மை அரசைத் தற்காத்துக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார் பிரதமர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் என்ற குற்றச்சாட்டை முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகம்மது முன்வைத்திருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

இதை சற்று கவனமாகச் சிந்திக்கும்போது ஊழல்வாதிகள் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசைக் கவிழ்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டிய தலையாய பொறுப்பு மகாதீருக்கு இருந்தது என்பதை அவர் மறுக்க இயலாது. ஊழலற்ற ஆட்சியைத் தருவோம் என்றுதானே அவர் மக்களிடம் சொன்னார். மக்களும் நம்பினார்கள். அவர் ஏற்றுக்கொண்ட பொறுப்பைத் தூய மனசாட்சியுடன் அவர் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதையும் கவனிக்க வேண்டும்.

ஊழல் இந்த நாட்டை மட்டும் பாதிக்கவில்லை, மாறாக உலகில் பல நாடுகளில் அது ஊடுருவுகிறது என்பது கண்கூடு. ஆனால், எந்த அளவுக்கு அது நாட்டுக்கும், மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதே கேள்வி.

இந்த நாட்டைப் பொறுத்த வரையில் ஊழலானது சமுதாயத்தின் எந்த ஒரு கோணத்தையும் விட்டுவைத்ததாகத் தெரியவில்லை. அரசில் இருந்து சாதாரண வியாபாரிகள் கூட ஊழலில் திளைத்துவிட்டார்கள் என்றால் மிகையாகாது. அப்படியானால், ஊழல் எந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று கேட்கலாம்! அதிகாரத்தில் இருப்பவர்கள் நாட்டு நலனையும், மக்கள் நலனையும் கவனிக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பொறுப்பைக் கவனிப்பதற்காக அவர்களுக்கு ஊதியம் கொடுக்கப்படுகிறது.

அவர்களுக்குக் கொடுக்கப்படும் ஊதியம் மக்களின் பணமாகும். மக்கள் செலுத்தும் வரிப்பணம்தான் அரசு ஊழியர்களின் வாழ்க்கையைப் பாதுகாக்குகிறது. அப்படிப்பட்டவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பெற்ற பொறுப்பை நாணயத்துடன் செய்து முடிப்பதை விடுத்து சுயநலத்தை மனத்தில் கொண்டு பணத்துக்காகக் கையூட்டு பெறுவது நாட்டுக்கு இழைக்கப்படும் துரோகம் என்றால் என்ன தவறு? மக்களை ஏமாற்றினார்கள் என்றால் என்ன தப்பு? தவறான முறையில் அதிகாரத்தைப் பெற முயல்பவர்கள் பணத்தை அல்லது கவுரவம், வருமானம் ஈட்டித்தரும் பதவிகளை வாரி வழங்குவார்கள். இதுவும் ஊழல் ரகத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றால் என்ன தவறு?

ஊழல் என்ன என்பதை சட்டம் தெளிவாக்கி இருக்கிறது. ஆனால், ஊழல் சமய வழியில் வரையறுக்கப்பட வேண்டும் என இஸ்லாமியக் கட்சி தலைவர் டத்தோ ஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் கூறுகிறார். ஒருவரின் வாழ்க்கை முறை, அவருடைய வருமானம், அவருடைய சமுதாய அந்தஸ்து எதுவுமே ஊழல் செய்வதற்குக் காரணமாக ஏற்றுக்கொள்ள இயலாது. ஒருவரின் பண தொல்லைதான் தாம் செய்த ஊழலுக்குக் காரணம் என்ற வாதம் ஏற்றுக்கொள்ளப்படாமல், “நான் என்ன செய்வேன்! என் வருமானம் போதவில்லை!” என்று காரணம் கூறுவோரின் எண்ணிக்கை கூடும் அல்லவா? இதை உணர மறுப்பவர்கள் யார்? அவர்களும் ஊழலில் திளைத்தவர்கள் தான் என்று கூறுவதில் தயக்கம் இருக்காதே.

இது ஒரு புறமிருக்க, துன் டாக்டர் மகாதீர் முகம்மதும் நடப்பு அரசின் அரசியல் நடைமுறையே நாட்டில் ஊழல் அதிகரித்து விட்டதாகக் கூறுகிறார். ஊழலைத் தடுக்கும் பொறுப்பும் வாய்ப்பும் அவரிடம் இருந்தது. ஆனால், குறுகிய தேசிய, சமய உணர்வுகளுக்கு இடமளித்து நாட்டைப் பாழ் நிலைக்குப் போக விட்டார் என்ற பழியை அவர்தான் சுமந்தாக வேண்டும்.

ஒவ்வொருவரின் விருப்பங்களுக்கும், அபிலாஷைகளுக்கும், ஆடம்பரத்துக்கும் இடமளித்தால் சட்டம் மதிப்பை இழந்துவிடும். ஊழல் பலரின் வாழ்க்கையைச் சீரழித்து விடும். இது மிகைப்படுத்தப்பட்ட கருத்து என்று சொல்வோர் இருப்பார்கள். அதிகாரத்தில் இருப்பவர்களின் கெடுமதி, அவர்களின் அளவற்ற பேராசை, கொடுக்கப்பட்ட பொறுப்பை கடமையுணர்வுடன் நிறைவேற்றுவதைத் தவிர்த்து, சொந்த நலனில் குறியாக இருந்தால் லஞ்சம் கொடுப்பவர் தன் நலனை மனத்தில் கொண்டு தமக்குக் கொடுக்கப்படும் பொறுப்பை ஒழுங்காகச் செய்து முடிக்கமாட்டார் என்பது திண்ணம். அவர் தமது வேலையில் மட்டுமா பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வார்?

கிடையவே கிடையாது.  தவறான தொழில்முறையில் பழக்கப்பட்டவர், ஏற்ற பொறுப்பைத் தவறான முறையைக் கடைபிடித்து செய்து முடிப்பார். இப்படிப்பட்ட பழக்க வழக்கங்கள் நாட்டில் பரவி வருவது நாட்டுக்கு நல்லது அல்ல. இங்கே மற்றுமொரு விஷயத்தை மனத்தில் கொண்டிருக்க வேண்டும். பல நாடுகள் கூட தங்களின் செல்வாக்கைப் பெருக்கிக்கொள்ளும் பொருட்டு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் உண்மையே!

பண்டை காலத்தில் மன்னன் ஒருவன் தமது ஆட்சியில் ஊழல் இருக்க கூடாது என விரும்பி, அதைத் தடுக்கும் பொருட்டு தமது நாணயத்தைப் பெரும் சக்கர வடிவத்தில் வெளியிட்டாராம். அதை எப்படி மூடி மறைப்பது? நம் நாட்டில் ஊழல் அழிக்கப்பட வேண்டுமானால் அதனால் விளையும் கேடுகளைப் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் ஊழல்வாதிகளை அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டும். அப்போதுதான் நம் நாடு ஊழல் அற்ற அல்லது ஊழல் குன்றிய நாடு என்ற பெருமையைப் பெற முடியும்.