களவாடிய அரசை கட்டுபடுத்த, மக்களுக்கு அவசரகாலம், முஹிடினுக்கு வாய்ப்பு!

இராகவன் கருப்பையா- முஹிடினின் பெரிக்காத்தான் அரசாங்கம் தனது முதலாம் ஆண்டு நிறைவை நெருங்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் அடுத்த பொதுத் தேர்தலுக்கான வியூகங்களை வரைவதற்கு  இந்தக் காலக்கட்டத்தை அவர் நன்றாகவே பயன்படுத்திக்கொள்வார்.

ஆகஸ்ட் 1ஆம் தேதி வரையில் அவரகாலச் சட்டம் அமலில் இருப்பதால் அடுத்த ஐந்தரை மாதங்களுக்கு எவ்விதமான இடையூறும் இல்லாமல் தனது கட்சியை  பலப்படுத்துவற்கு தேவையான எல்லாவற்றையும் அவர் மேற்கொள்வார் என்று தாராளமாக நம்பலாம்.

அவசரகாலச் சட்டம் நிறைவடையும் வரையில் நாடாளுமன்ற அமர்வுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஆட்சி பறிபோகும் அபாயம் அறவே இல்லை, மக்களாட்சியற்ற நிலையில் முஹிடினுக்கு ஒரு நிம்மதி. மகிழ்ச்சி.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆட்சி அமைத்ததிலிருந்தே அம்னோவின் தொடர்ச்சியான நெருக்குதல்களுக்கு ஆளாகியிருந்த அவர், தனக்கு  தேவையான பல்வேறு அரசியல் விசயங்களை நிம்மதியாக பரிசீலிப்பதற்கு இதுதான் தருணம்.

சுமார் 4 ஆண்டுகளுக்கு முன் இரு முக்கிய அம்சங்களை முன்வைத்து அவருடைய பெர்சத்து கட்சி தோற்றுவிக்கப்பட்டது.

அதாவது அந்த காலக்கட்டத்தில் அம்னோவிலிருந்து நீக்கப்பட்டு தத்தளித்துக்கொண்டிருந்த முஹிடினுக்கும் தனது மகன் முக்ரிஸுக்கும் அரசியலில் மறுவாழ்வளிக்கும் நோக்கத்தில் மகாதீரின் முயற்சியில் அக்கட்சி தொடங்கப்பட்டது.

அதோடு அம்னோவுக்கு எதிராக மாற்றுக் கட்சி ஒன்று எதிரணியில் இருக்க வேண்டும் என்பது மகாதீர் கோடிக்காட்டிய மற்றொரு காரணமாகும்.

இத்தகைய சூழலில் உருவான அந்தக் கட்சி தற்போது அம்னோவுக்கு பெரும் சவாலாகவும் மிரட்டலாகவும் விளங்கும் அளவுக்கு வலுப்பெற்றிருப்பதற்கு அரசியல் சுயநலமும், பதவி ஆசையும்யும் தான்    காரணம் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

ஆனால் அரசாட்சியில் அதன் ஆதிக்கத்தை விரும்பாத அம்னோ தலைவர்கள் தொடுத்து வந்த நெருக்குதல்களை அவசரகாலச் சட்டத்தின் வழி சாமர்த்தியமாக முடக்கிவிட்டார் முஹிடின்.

ஆகஸ்ட் முதல் தேதி வரைதான் இந்நிலைமை என்ற போதிலும் அதற்கடுத்து என்ன நடக்கும் என்ற யூகங்கள் நிறையவே தற்போது வெளிவரத் தொடங்கிவிட்டன.

இதற்கிடையே 15ஆவது பொதுத் தேர்தலுக்கு தனது கட்சியை அவர் தயார்படுத்தி வருவதைப் போன்ற காணொலிகள் அசரல் புரவுள்ளாக புலனத்தில் வலம் வருவதை காணலாம்.

அம்னோவுக்கு ஆதரவாக இருக்கும் மலாய்க்காரர்களை தன் வசம் ஈர்க்க முற்படுவது ஒருபுறமிருக்க மலாய்க்காரர் அல்லாதாரின் ஆதரவு அவருக்கு கிடைக்குமா?

பெருத்த ஏமாற்றமளிக்கும் இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டம், தமிழ், சீனப் பள்ளிகளுக்கு எதிரான விஷக்கருத்துகள் மட்டுமின்றி கெடா கோயிலுடைப்பு மற்றும் தைப்பூச விடுமுறை போன்ற இதர சர்ச்சைகளினாலும் மலாய்க்காரர் அல்லாதார் நிறையவே அதிருப்தி அடைந்துள்ளனர்.

அண்மையில் அங்கத்திணர்கள் அற்ற ‘கெராக்கான்’ கட்சியை தனதுக் கூட்டணியில் இணைத்துக்கொண்டது அவரது பரிதாபத்தை காட்டுகிறது.

ஒரு காலக்கட்டத்தில் தேசிய முன்னணியில் சக்திமிக்கதொரு உறுப்புக் கட்சியாக இருந்த ‘கெராக்கான்’ தற்போது ம.இ.கா.வைப் போன்று வலுவிழந்துக் கிடக்கிறது. அதனிடம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட இப்போது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் ‘தேசிய ஒற்றுமைத் திட்டத்தை’ இவ்வாரம் அறிமுகப்படுத்திய முஹிடின் அதனை எவ்வாறு செயல்வடிவம் பெறச்செய்வார் என்று நாம் பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்

இருந்த போதிலும் கடந்த காலங்களில் இத்தகையத் திட்டங்கள் காளான்களைப் போல நிறையவே தோன்றி மறைந்துள்ளதையும் நாம் கண்டிருக்கின்றோம்.

அரசியலில் நிரந்தர பகைவரும் இல்லை, நிரந்தர நண்பர்களும் இல்லை, என்பதுதான் முஹிடின் அரசியல். அம்னோவை உடைக்கலாம், அன்வாரின் பிகேஆர் கட்சியையும் உடைக்கலாம், உடைந்து போன இதர கட்சிகளை மேலும் உடைக்கலாம். காரணம், அரசியல் என்பது சுயநலத்துடன் செயல்பட்டு பதவியையும் அதிகாரத்தையும் கைப்பற்றி முடிந்த அளவு நாட்டின் வளத்தை சூரையாடலாம், சொத்து சேர்க்கலாம்.

இனவாத பிரிவினையின் காரணமாக இதற்கு ஏற்ப மக்களும்  மாறிக்கொள்வார்களா, அல்லது நாட்டுபற்றின் ஈர்ப்பால் தேசியத்தன்மையுடன் ஊழல் அரசியலுக்கு எதிராக போராடுவார்களா?