தைமாதமா, சித்திரையா, பெரியாரா, இந்துத்துவமா? எப்போது திருந்துவோம்!  

இராகவன் கருப்பையா- கடந்த இரு வாரங்களாக நம் சமூகத்திடையே எழுந்துள்ள ஒரு புதிய சர்ச்சை எங்கு போய் முடியுமோ என்று தெரியவில்லை.

மலேசிய இந்து சங்கம் ஒரு புறமும் அரசியல்வாதிகளும் அரசு சாரா இயக்கங்களும் தமிழ் ஆர்வலர்களும் சேர்ந்து மற்றொரு பக்கமுமாக வரிந்து கட்டி களமிறங்கி வாள்களைக் கொண்டு போரிடுவதைப் போல் உள்ளது நிலைமை.

என்றும் இல்லாத அளவுக்கு நமது சமுதாயத்தை தற்போது எண்ணிலடங்காதப் பிரச்னைகள் ஆட்கொண்டு உலுக்கிக்கொண்டிருப்பது நாம் எல்லாருமே அறிந்த ஒன்றுதான்.

இந்நிலையில் தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதல் நாளா அல்லது தை மாதம் ஒன்றாம் தேதியா என்று தற்போது மீண்டும் தலைதூக்கத் தொடங்கிவிட்ட குழப்பத்திற்குரிய சர்ச்சையா இப்போது முக்கியம்?

அதுமட்டுமின்றி திராவிட சித்தாந்தக் கொள்கை தமிழ்ப் பள்ளிகளில் பரப்பப்படுகிறது, மத சித்து விளையாட்டு, இந்து மதச் சாயம் பூசப்படுகிறது, தமிழ்நாட்டு அரசியல் ஊடுருவுகிறது, போன்ற குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக்கொண்டு தற்போது இவர்கள் மேற்கொண்டுள்ள சொற்போர் மிகவும் அவமானத்திற்குரிய ஒன்றாக உள்ளது.

இதில் மிகவும் கேவலமாக, பெரியார் சாமி சிலைகளை உடைப்பது போன்ற இந்தியாவில் எப்பொழுதோ வெளியான கேலிச்சித்திரம், தமிழ் பாட நூலில் உள்ளது போன்ற பொய்யான தகவலையும் சேர்த்து ஒரு மசாலா செய்தியும் புலனத்தில் வெளியானது.

அமைச்சர் முதல் துணை முதல்வர் மட்டுமின்றி இந்து சங்கம், அரசு சாரா இயக்கங்கள், தமிழ் சார்ந்த பல்வேறு அமைப்புகள் மற்றும் பல தமிழ் ஆர்வலர்களும் கூட பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக படம் போட்டுக்கொண்டு அறிக்கை விடுவதும் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிடுவதுமாக அரங்கேற்றிவரும் ‘நாடகங்கள்’ சமுதாயத்தை தலைகுனியத்தான் செய்கிறது.

ஏனெனில் இவ்வாண்டின் முதல் 2 மாதங்கள் முடியும் தறுவாயில் இருக்கும் இவ்வேளையில் நம் சமுதாயத்தின் நிலை அடுத்து வரும் மாதங்களில் மிகவும் சவால்மிக்கதாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல்வாதிகளின் பதவி போராட்டங்களுக்கிடையே நம் சமூகம் இத்தருணத்தில் கிட்டத்தட்ட ஒரு மறக்கப்பட்ட சமுதாயமாகிவிட்டது என்பதை சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை.

இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒரு சிரிய துரும்புதான் நமக்கு. இந்த குறைபாடு இன்னமும் நிவர்த்தி செய்யப்படவில்லை.

எத்தனை தடவை அரசாங்கம் மாறினாலும் பிறப்புப் பத்திரங்களும் அடையாள அட்டைகளும் இல்லாமல் அவதிப்படும் நம்மவர்களின் அவலம் இன்னமும் ஒரு தொடர் கதைதான்.

காவல்துறையின் தடுப்புக் காவல் மையங்களில் மர்மமான முறையில் மரணிக்கும் நம் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

தமிழ்ப் பள்ளிகளை இழுத்து மூடவேண்டும் எனத் தொடர்ந்து கொக்கரித்து வரும் ஜந்துகளின் மிரட்டல்களும் அதிகரித்தவண்ணமாகத்தான் உள்ளது.

நம் இளைஞர்களிடையே நிலவும் குற்றச் செயல்களைக் குறைப்பதற்கான உருப்படியானத் திட்டங்களை இன்னமும் காணோம்.

கோயில் உடைப்புகளுக்கு நிரந்தரத் தீர்வு பிறப்பதற்கான அறிகுறிகளையும் கூட கண்ணுக்கு எட்டிய வரையில் பார்க்கமுடியவில்லை.

நம் பிள்ளைகள் கல்வியில் சிறப்பான தேர்ச்சி பெற்றும் உயர்கல்வி நிலையங்களில் இடம் கிடைப்பது இன்னமும் குதிரைக் கொம்புதான்.

தனியார் உயர் கல்வி நிலையங்களில் கல்வியைத் தொடர வேண்டுமானால் பொருளாதார சிக்கல். உபகாரச் சம்பளம் கிடைப்பதிலும் சிரமம்.

அடிதட்டு மக்களின் பிள்ளைகள் நிறைய பேர் கணினி வசதியில்லாமல் இயங்கலை வாயிலாக கல்வி பயில முடியாமல் பரிதாபமாகத் தவிக்கின்றனர்.

இதுபோன்ற எண்ணற்ற பிரச்னைகளை சுமந்து, உதவி செய்ய ஒரு நாதியில்லாமல் அல்லப்பட்டுக்கொண்டிருக்கும் நம் சமுதாயத்தின் அவலம் தேர்தல் காலங்களில் மட்டும்தான் அரசியல்வாதிகளுக்குத் தெரிய வருகிறது.

எனவே மற்ற காலங்களில் நாம்தான் இதற்கான தீர்வுகளுக்கு வழிமுறைகளை கண்டறிய வேண்டியுள்ளது.

அதனை விடுத்து சில்லறைத்தனமான விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மலிவு விளம்பரம் தேடிக்கொள்வதில் அர்த்தமில்லை.குழம்பியக் குட்டையில் மீன் பிடிக்கத் துடிக்கும் இவர்கள் சமுதாயம் எதிர்நோக்கும் சிக்கல்களைத் கலைவதற்கு ஆற்றிய பங்குதான் என்ன?

ஆக இனிமேலும் இதுபோன்ற விவகாரங்களுக்கு அதி முக்கியத்துவம் கொடுத்து  சமுதாயத்தை சந்திக்கு இழுத்துச் செல்லாமல் நடப்புப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான அம்சங்கள் மீது அவர்கள் கவனம் செலுத்துவதே சாலச்சிறந்ததாக இருக்கும்.