எஸ் அருட்செல்வன் : கட்சி தாவல் எதிர்ப்பு சட்டங்கள் வரும்வரை, தேர்தல்கள் வேண்டாம்

கருத்து | மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் மக்களின் விருப்பத்தை மதிக்கவில்லை என்றால், நமக்கு எதற்கு தேர்தல்? ஷெராட்டன் நகர்வுக்குப் பிறகு, துரோகம் மற்றும் முதுகில் குத்திவிட்டனர் என்ற முழக்கங்கள் பெருமளவில் எதிரொலித்தன.

கெடா, மலாக்கா மற்றும் பேராக் மாநில அரசாங்கங்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, மீண்டும் அதே குரல்கள், துரோகம், முதுகில் குத்திவிட்டனர் என்ற கூச்சல் ஆங்காங்கே கேட்டது. பின்னர் சபா மாநிலத் தேர்தல், வழக்கமான அதே முழக்கங்கள் மற்றொரு சுற்று வலம் வந்தது.

இப்போது, ​​ஷெராட்டன் இயக்கத்தின் ஓராண்டு நிறைவைக் கடந்தபோது, ​​தெப்ராவ் எம்.பி. ஸ்டீவன் சோங் மற்றும் ஜூலாவ் எம்.பி. லாரி ஸ்ங் கப்பலில் இருந்து குதித்ததை மீண்டும் கேள்விப்படுகிறோம்.

மீண்டும் அதே பாடல் இசைக்கப்படுவதை நாம் கேட்கிறோம். இது எப்போது முடிவடையும்?

கடந்த பொதுத் தேர்தலில், மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) மோசமாக தோல்வியடைந்தபோது, ​​நாங்கள் மகிழ்ச்சியாகவே இருந்தோம், ஏனெனில் 60 வயதுக்கு மேலான அம்னோ மேலாதிக்கம் வீழ்ந்தது என்று.

பி.எஸ்.எம். கட்சியின் டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார், சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர், கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தபோது.. ​​தனது வைப்புத்தொகையைக் கூட இழந்தபோதும், ​​நாம் மக்களை ஒருபோதும் குறை சொல்லக்கூடாது என்று அவரால் சொல்ல முடிந்தது. காரணம், மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்தனர், அதுவே நமது முகான்மை நோக்கம்.

இன்று, மக்கள் உணர்ந்த அல்லது மக்களுக்குத் தெரிந்த ஒரே படம், எந்த அரசியல்வாதியையும் அல்லது எந்த அரசியல் கட்சியையும் நம்ப முடியாது என்பதுதான்.

மக்களின் பணி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வாக்குப்பதிவு செய்துவிட்டு, வாக்களித்த உடனேயே அந்த உரிமையை இழப்பது என்றாகிவிட்டது.

ஒரு நபர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கள் பிரதிநிதிகளை மக்களால் அணுக முடியவில்லை, மக்களின் வரிப் பணம் எம்.பி.க்கள் மற்றும் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களுக்குச் சம்பளம் கொடுக்கப் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் மக்கள் அவர்களின் முதலாளிகள் அல்ல.

மக்களின் உரிமைகள் மற்றும் தேர்வுகள் மதிக்கப்படவில்லை என்றால், மக்கள் எதற்காக வாக்களிக்கச் செல்ல வேண்டும்? இது தேர்தலை ஒரு வேடிக்கை விளையாட்டாகவும் நமது ஜனநாயகத்தைப் பரிகாசம் செய்யும் விதமாகவும் மாற்றுகிறது.

மற்றொரு பொதுத் தேர்தலை நடத்துவதற்கு முன்னர், நாம் முதலில் கட்சி தாவல் எதிர்ப்புச் சட்டங்களைக் கொண்டுவர வேண்டிய நேரம் இது.

தங்களுக்கு வழங்கப்பட்ட ஆணையை மீறும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவியை மீட்டெடுக்கும் உரிமை மக்களுக்கு உண்டு.

தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு பிரதிநிதியும் அவரவர் விருப்பத்திற்கு, அவரவர் மனம் போன போக்கிற்குக் கட்சி மாற முடியாது.

இந்த அவசரநிலை காலங்களில், சட்டங்களை எளிதில் இயற்ற முடிந்த நேரத்தில், அமலாக்கம் செய்ய வேண்டிய, முக்கியத்துவம் வாய்ந்த ஒரே சட்டம் கட்சி தாவல் எதிர்ப்பு சட்டம்.


எஸ் அருட்செல்வன், பி.எஸ்.எம். துணைத் தலைவர்