கி.சீலதாஸ் – இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் செழுமைக்கும் பலவகையில் கடுமையாக உழைத்தவர்கள்தான் இன்று சிறுபான்மையினர் என்ற கேலிக்குக் குறிவைக்கப்படும் சீனர்களும், இந்தியர்களும்.
இன்றைய அரசியல் சூழ்நிலையில் சபா, சரவாக் பூர்வீகக் குடியினர் கூட சிறுபான்மையினர் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தீபகற்ப மலாயாவை எடுத்துக்கொண்டால் ஒரு காலத்தில் பிழைப்பை நாடி வந்தவர்கள் சீனர்களும், இந்தியர்களும் என்பது உண்மையாக இருந்தாலும் இந்நாட்டு வரலாற்றின் உயிர்மிக்க நீரோட்டத்தில் அவர்கள் கலந்துவிட்டதை மறப்பது, மறைப்பது நியாயமாகாது.
இரண்டாம் உலகப்போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது அன்றைய அமெரிக்க அதிபர் ஃபிராங்கிளின் ரூஸ்வெல்ட், பிரிட்டிஷ் பிரதமர் சர் வின்ஸ்டன் சர்ச்சில் இருவரும் கனடா மாநிலமான நியூஃபவுண்ட்லேண்டில் சந்தித்து போர் முடிவுற்றதும் உலகத்தின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என ஆலோசித்து ஒரு முடிவெடுத்தனர்; அந்த முடிவே அட்லாண்டிக் பட்டயம் என்றழைக்கப்படுகிறது.
அது கொண்டிருந்த சிறப்புமிகு அம்சங்களில் உலகெங்கும் ஒரு நாட்டின் மக்கள் தங்களின் நாட்டைச் சுயமாகவே நிர்ணயிக்கும் உரிமை பெறவேண்டும் என்பதும் ஒன்று. அதாவது, ஒரு நாட்டின் மக்கள் தங்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் உரிமையைக் கொண்டிருக்க வேண்டும். இதன் நோக்கம் என்னவெனில் காலனி நாடுகள் சுய நிர்ணய உரிமை பெற்று சுதந்திரம் அடைய வேண்டும் என்பதாகும்.
போரில் வெற்றிபெற்ற நாடு என்ற அந்தஸ்த்தைக் கொண்டிருந்ததால் பிரிட்டன் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி மலாயாவில் புது நிர்வாக அமைப்பைக் காணமுற்பட்டது. அதுவே மலாயன் யூனியன். இந்த அமைப்பின் அறிவிப்பு பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியது. இங்கே முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவெனில் இந்த மலாயன் யூனியன் அமைப்பு ஒப்பந்தத்தில் எல்லா சுல்தான்களும் கையொப்பமிட்டிருந்தனர்.
மலாயன் யூனியன் அமைவதை ஏற்க மறுத்த மலாய்க்கார சமுதாயத்தின் முன்னோடித் தலைவராக விளங்கினார் டத்தோ ஓன் ஜஃபார். இந்தப் புது அமைப்பின் மீதான எதிர்ப்பு வலுவடைய காரணங்கள் யாவை என்பதைக் கவனித்தால் அது மலாய் சுல்தான்களின் அதிகாரத்தைக் குறைத்துவிடும்; மலாய்க்காரர்களின் சிறப்பு அம்சங்களுக்குச் சவாலாக அமைந்துவிடும். மலாய்க்காரர் அல்லாதாருக்கு நிபந்தனை அற்ற குடியுரிமை வழங்கப்பட்டால் சிங்கப்பூரில் ஏற்பட்டது போல் சீனர்களின் எண்ணிக்கை மலாய்க்காரர்களை விட விஞ்சிவிடும்.
இவை அன்றி மற்றும் சில மலாயன் யூனியன் அம்சங்கள் மலாய்க்காரர்களின் எதிர்ப்பை வலுவடைய செய்தது. இந்த மலாயன் யூனியன் எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்கியவர் டத்தோ ஓன் ஜஃபார். அதுதான் அம்னோ கட்சி – ஐக்கிய மலாய்க்காரர் தேசிய இயக்கம்.
மலாயன் யூனியன் பிரச்சினையைத் தீர்க்க பிரிட்டனுக்கும் மலாய் சுல்தான்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் அம்னோ மட்டும் கலந்து கொண்டது. மற்ற கட்சிகளுக்கு இடமளிக்கப்படவில்லை. மலாயன் யூனியனுக்குப் பதிலாக 1948ஆம் ஆண்டு மலாயா கூட்டரசு ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அமல்படுத்தப்பட்டது. இதுவரையில் பிரிட்டன் மலாய் சுல்தான்களோடு தமக்கு ஏற்புடைய, தம்முடைய அந்தஸ்த்துக்குத் தகுந்தவர்களோடு பேசி தீர்த்துக்கொள்ள விரும்பிய சூழ்நிலையைக் காணலாம்.
ஆனால், லண்டனில் இயங்கும் காலனி இலாகாவுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. பிரிட்டன் மலாய் சுல்தான்களுடனும் அம்னோவுடனும் பேச்சு நடத்துவது பலனளித்தாலும் நாட்டின் பொருளாதாரம் மலாய்க்காரர் அல்லாதார் கையில் இருப்பதை ஏனோ கவனிக்கத் தவறியதை உணர்ந்தனர். இந்தப் போக்கு சிறுபான்மையினரை அடக்க முடியும் என்ற அலட்சியமாகக் கூட இருக்கலாம். ஆனால், அட்லாண்டிக் பட்டயத்தைக் கூர்ந்து கவனித்தால், அதற்கு அடுத்தாற்போல் ஏற்படுத்தப்பட்ட ஐக்கிய நாடுகள், மனித உரிமை கொள்கைகள் யாவும் கவனத்தில் கொள்ள வேண்டி இருந்ததை நினைத்து இருக்கலாம்.
மலாயாவில் சீனர்களின் முதலீடு, இந்தியர்களின் பங்கீடு போன்றவை புறக்கணிக்கத்தக்கவை அல்லவே! அவர்களுக்கான பாதுகாப்பு என்ன? லண்டன் நினைக்க ஆரம்பித்தது. அதே வேளையில், டத்தோ ஓனின் சிந்தையிலும் மாற்றம் காணப்பட்டது. அம்னோ மலாய்க்காரர்களின் நலனில் மட்டும் கவனம் கொண்டிருக்க கூடாது; பிற இனத்தவர்கள் இந்த நாட்டைத் தங்களின் தாயகமாக ஏற்றுக்கொண்ட பின்னர் மலாயா அரசியல் நீரோட்டத்தில் அவர்களின் பங்கை ஓரங்கட்ட இயலாது என்பதைப் பகிரங்கமாகவே பேச ஆரம்பித்தார்.
அந்தக் காலக்கட்டத்திலேயே “மலாயர் மலாயா!” என்ற சுலோகத்துக்கு ஆதரவு தந்தவர் டத்தோ ஓன். (காண்க: ஸ்டோக்வெல் – மலாயன் யூனியன் அனுபவம் & பமேலா ஓங் – டத்தோ ஓன் -1). 1963ஆம் ஆண்டு சிங்கப்பூர், போர்னியோ (சபா, சரவாக்) பிரதேசங்கள் மலாயாவோடு இணைந்து மலேசியா கண்டபோது மக்கள் செயல் கட்சி, “மலேசியர் மலேசியா” என்ற சுலோகத்தைக் கிளப்பியது. அதற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டதுதான் துங்கு அப்துல் ரஹ்மானின் பூமிபுத்திரா – பூமிபுத்திரா அல்லாதார் என்ற இனப் பிரிவினை சுலோகம்.
எனவே, ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு என்பதை ஐக்கிய மலாயன் தேசிய அமைப்பு என்று மாற்றி பிற இனத்தவர்களை உறுப்பினர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற டத்தோ ஓனின் கருத்து கடுமையான எதிர்ப்புக்கு இடையே கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், அம்னோவை இனச்சார்பற்ற அரசியல் கட்சியாக மாற்ற வேண்டும் என்ற தமது கருத்தை ஏற்க மறுத்தபோது அக்கட்சியிலிருந்து விலகினார். மலாய்க்காரர்களுக்கு மட்டும்தான் சிறப்பு சலுகை என்பதை வலியுறுத்திய அம்னோ துங்கு அப்துல் ரஹ்மானைத் தலைவராக ஏற்றுக்கொண்டது.
அடுத்து நடந்த நாட்டுச் சுதந்திரத்துக்கான பேச்சுவார்த்தையில் மலாயா அரசியலில் காணப்பட்ட சில மாற்றங்களால் ஆரம்பத்தில் அம்னோ – மலாயா சீனர் சங்கம் இணைந்து கூட்டணி கண்டன. பின்னர், மலாயா இந்தியர் காங்கிரஸ் இணைத்துக் கொள்ளப்பட்டது. இக்கட்சிகள் கண்ட உடன்படிக்கையின்படி அரசமைப்புச் சட்டம் இறுதியில் வடிவம் கண்டபோது கூட்டரசின் சமயம் இஸ்லாம் என்றபோதிலும் பிற சமயங்கள் இயங்கலாம் என்ற புனித தன்மையைக் காண முடிந்தது. அதுபோலவே, சீன, தமிழ் பள்ளிகளுக்கு முழு ஆதரவும் அதற்கான உறுதியும் செயல் வகையில் காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இவையாவும் இந்நாட்டுக்குச் சிறுபான்மையினரின் பங்கு, அவர்கள் நல்கிய தியாகங்களின் அங்கீகாரம் என்றால் மிகையாகாது. ஆனால், இவற்றை எல்லாம் அரசியலாக்கி அதில் ஆதாயம் காண நினைத்தவர்களும் உண்டு. சிறுபான்மையினர் மொழி, கலாச்சாரத்தில், அவர்களின் பொருளாதார வாழ்க்கையைச் சரியாக கவனம் செலுத்தாதது போன்ற நடவடிக்கைகள், சிறுபான்மையினரை ஒதுக்குவது போன்ற செயல்கள் பற்பல சங்கடமான கேள்விகளை எழுப்பியது.
இந்த அலட்சிய மனப்பான்மை அல்லது சிறுபான்மையினரை ஒதுக்கும் பண்பு, அவர்களைக் கண்டுகொள்ளாமல் செயல்பட வேண்டும் என்ற நோக்கம் துன் டாக்டர் மகாதீர் முகம்மது காலத்தில் பரவியது என்று சொல்லப்படுகிறது. நன்கு ஆய்ந்து பார்த்தால் சிறுபான்மையினர்க்கு அவர் காட்டிய கரிசனம் மெச்சத்தக்கதாக இருக்கவில்லை.
இப்பொழுது, சிறுபான்மையினரைப் புறக்கணித்தால் நாட்டின் வளர்ச்சி தடைபடும் என்கிறார் துன் டாக்டர் மகாதீர். நாட்டில் வளர்ச்சி தடைபட்டு விட்டதை ஏற்க மறுக்கிறாரா?
வரலாற்றைச் சற்று கூர்ந்து கவனித்தால் சிறுபான்மையினர் இல்லாவிட்டால் நாடு சுபிட்சம் பெறாது என்பதை எப்பொழுதோ உணர்ந்து விட்டார்கள். ஒரு சிலரின் சுயநலத்துக்காகச் சிறுபான்மையினர் பலிகடவாக விளங்குகின்றனர் என்றால் தவறாகுமா? இக்காலகட்டத்தில் சிறுபான்மையினரின் பங்களிப்பைப் பற்றிப் பேசும் துன் மகாதீர் தனது பிரதமர் காலத்தில் எவ்வாறு செயல்பட்டார் என்று சிந்திக்க தோன்றுகிறது. டத்தோ ஶ்ரீ நஜீபு ரசாக்கைப் போற்றி பேசிய துன் சாமிவேலு சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது. “மகாதீர் கிள்ளித் தந்தார். நஜீபு அள்ளித் தந்தார்!” என்றார் அவர். கொடுக்கப்பட்ட உதவியின் அளவு அன்று முக்கியம். அவர்களின் மனோபாவம் எப்படிப்பட்டது? மகாதீர் சிறுபான்மையினரைப் பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளவில்லை. நஜீபோ சிறுபான்மையினரின் ஆதரவு தமக்கு தேவைப்படுவதால் பணத்தை வாரி இறைக்கத் தயாரானார். இவ்விருவரிடம் இன, சமய ஒற்றுமை உணர்வைக் காண முற்படும்போது அது வெறும் பேச்சு என்பது புலப்படும்.
எல்லா இனத்தவரின் ஒற்றுமை உணர்வு, பரஸ்பர நம்பிக்கை, எல்லோரையும் மதிக்கும் பண்பு போன்ற நல்ல எண்ணங்களால்தான் நாடு வளர்ச்சி காண முடியும். பெரிய பெரிய கட்டடங்கள் பார்க்க கம்பீரமாக இருக்கலாம்; அவற்றினுள் அதிகாரத்தைக் கொண்டிருப்பவர்கள் இருப்பார்கள். ஆனால், அந்த அதிகாரத்தைப் பாராபட்சமின்றி இயக்க தவறியவர்களைத்தான் காண்கிறோம். இதில் மாற்றம் காண வேண்டும். மலேசியர்களால் மட்டும்தான் வெற்றி காண முடியும். தனித்தனி இன, சமய வேறுபாடுகளைப் பாராட்டி, போற்றி வளர்ப்பதால் நல்லெண்ணம், ஒற்றுமை உணர்வு, நாட்டு வளர்ச்சி தடைபெறும்.