எப்போது வரும் பள்ளிக்கூட நிதி? ம.இ.கா. பதிலுரைக்க வேண்டும் ~இராகவன் கருப்பையா

நீண்ட நாள்களுக்குப் பிறகு நாடளாவிய நிலையில் பள்ளிகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் பிள்ளைகள் மிகவும் உற்சாகமாக வகுப்பறைகளுக்குத் திரும்பியுள்ளதை பரவலாகக் காண முடிகிறது.

ஆனால் இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தமிழ், சீனப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு இல்லாத பட்சத்தில் நம் பிள்ளைகளிடையே அந்த உற்சாகம் எவ்வளவு நாள்களுக்கு நீடிக்கும் என்ற ஐயப்பாடு நம்மிடையே எழத்தான் செய்கிறது.

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை கடந்த நவம்பர் மாதத்தில் நிதியமைச்சர் தெங்கு ஸஃப்ருல் நாடாளுமன்றத்தில் அறிவித்த போது தமிழ், சீனப் பள்ளிகள் விடுபட்டுப் போனதை உணர்ந்த பல்வேறு தரப்புகள் மிகவும் உக்கிரமாக கண்டனம் தெரிவித்து விமர்சித்தது நாம் அறிந்த ஒன்றே.

ஆனால் அந்த விசயம் தற்போது சூடு ஆறிப்போய் கிடக்கும் சூழலில் அவசரமாக நிதித் தேவைப்படும் தமிழ்ப் பள்ளிகளின் நிலை இப்போது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

மூவினப் பள்ளிகளுக்கும் மொத்தமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அந்த சமயத்தில் சமாதானம் கூறிய ம.இ.கா. துணைத் தலைவர் சரவணன், தமிழ்ப் பள்ளிகளுக்கென பிரத்தியேகமாக எவ்வளவு ஒதுக்கப்பட்டது, அது எப்போது வழங்கப்படும், எப்படி வழங்கப்படும் போன்ற விவரங்களை தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே தமிழ்ப் பள்ளிகளுக்குத் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது ஒரு பெரிய குறைதான் என்றும் தங்களுக்கு இது மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்ட அக்கட்சியின் தலைவர் விக்னேஸ்வரன் கூடிய விரைவில் பிரதமரிடம் மனு சமர்ப்பிக்கப்படும் என அப்போது உறுதியளித்தார்.

இருப்பினும் தற்பொழுது 4 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், பிரதமரிடம் ம.இ.கா. அந்த மனுவை சமர்ப்பித்ததா என்று தெரியவில்லை.

அப்படி சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் பிரதமரின் பதிலுரை என்ன? இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்றால் ஏன் தாமதம் போன்ற கேள்விகளுக்கு விளக்கமளிக்க ம.இ.கா. கடப்பாடு கொண்டுள்ளது.

கோறனி நச்சில், நடமாட்டக் கட்டுப்பாடு, அவசரகாலச் சட்டம் போன்றவையெல்லாம் சாக்குப் போக்காக இருக்கக் கூடாது. ஏனென்றால் இது பிள்ளைகளின் கல்வி சம்பந்யப்பட்ட ஒரு விசயம்.

மது விற்பனை, சூதாட்டம், போன்றத் துறைகளில் இருந்து கிடைக்கும் வரிப்பணம் இஸ்லாமியர்களுக்கு ஆகாது என்பதால் அதன் கணக்கு விவரங்கள் அரசாங்கத்திடம் கேட்கப்படும் எனவும் அந்தத் தொகை மொத்தமாக மலாய்க்காரர் அல்லாதாருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்படும் என விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார்.

இந்த யோசனை நாட்டின் வரலாற்றில் இதுவரையில் அமல்படுத்தப்படாத ஒரு விசயம் என்பதால் இதன் மீதான அரசாங்கத்தின் முடிவை அறிவதற்கு மக்கள் மிகவும் ஆவலாக உள்ளனர் என்பதை ம. இ.கா. உணர வேண்டும்.

கடந்த காலங்களைப் போல இதுவும் ஒரு வெத்து வேட்டாகிவிடக் கூடாது.

ம.இ.கா. மட்டுமின்றி இதர எல்லா கட்சிகளுமே தற்போது 15ஆவது பொதுத் தேர்தலுக்கு தயாராகிக்கொண்டிருப்பது எல்லாருமே அறிந்த ஒன்றுதான்.

இத்தகைய பரபரப்பான ஒரு சூழலில் நம் பிள்ளைகளுடைய கல்வியின் நலன் புறக்கணிக்கப்படாமல் இருப்பதை ம.இ.கா. உறுதி செய்ய வேண்டும்.

கல்வி ஆண்டு தொடங்கி இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் எஞ்சியிருப்பது ஏறக்குறைய 8 மாதங்கள்தான்.

இதனிடையே பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டால் இதுபோன்றத் திட்டங்கள் புறந்தள்ளப்படக்கூடிய வாய்ப்பும் உள்ளது.

எனவே இனிமேலும் காலம் தாழ்த்தாமல் தமிழ்ப் பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான இந்த விசயத்திற்கு முன்னுறிமை வழங்க ம.இ கா. உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.