சட்டத்தை மீறுவதும் சாதனைதானோ?

இராகவன் கருப்பையா -கோறனி நச்சிலின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நமது அரசாங்கம் விதித்திருக்கும் ‘எஸ்.ஓ.பி.’ எனப்படும் நிர்ணயிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை மீறும் ‘வி.ஐ.பி.’களின் எண்ணிக்கை அண்மைய காலமாக அதிகரித்து வருவது எல்லாருக்கும் பெரும் வியப்பாகவே உள்ளது.

அத்தகைய குற்றங்களுக்கு அவர்கள் தண்டிக்கப்படாமல் இருப்பதுதான் மக்களுக்கு மேலும் சினத்தை ஏற்படுத்துகிறது என்று சொல்லவேண்டும்.

பள்ளி மாணவர்களும் பரம ஏழைகளும் கூட 10,000 ரிங்கிட்  அபராதத்திற்கு உள்படுத்தப்படும் அதே வேளை குற்றம் புரியும் அமைச்சர்கள் மட்டும் சட்டத்தால் தீண்டப்படாமல் இருப்பது நமக்கெல்லாம் பெரும் அதிர்ச்சியளிக்கும் ஒரு விசயமாக இருக்கிறது.

தங்கள் மீது சட்டம் பாயாது என்ற துணிச்சலில் மேலும் மேலும் அதிகமான அமைச்சர்கள் பகிரங்கமாகவே விதிமுறைகளை மீறுவதை சமீப காலமாக நம்மால் காண முடிகிறது.

தெரிந்தோ தெரியாமலோ மூலத்தொழில் அமைச்சர் கைருடின்தான் இத்தகைய நிலைப்பாட்டுக்கு வழிகாட்டியாக அமைந்துவிட்டதைப் போல் உள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் துருக்கி நாட்டுக்கு சென்று திரும்பிய அவர் ‘எஸ்.ஒ.பி.’ விதிப்படி தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்ளாமல் உல்லாசமாக நாட்டை வலம் வந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது நாம் எல்லாரும் அறிந்த ஒன்றுதான்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி ஆளும் கூட்டணியைச் சேர்ந்த பல தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கடுமையானக் கண்டனம் தெரிவித்த போதிலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என சட்டத்துறைத் தலைவர் இட்ருஸ் ஹருன் அறிவித்ததை நாம் இன்னும் மறக்கவில்லை.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவின் போது ‘எஸ்.ஓ.பி.’ விதிமுறைகளை கிஞ்சிற்றும் கடைபிடிக்காமல் பத்துமலை சென்ற மனிதவள அமைச்சர் சரவணனும் மக்களின் கண்டனத்திற்கு உள்ளானார்.

அரசாங்க உத்தரவுப்படி எல்லா பக்தர்களுக்கும் கதவடைக்கப்பட்ட நிலையில் சரவணன் மட்டும் முககவசத்தை முறையாக அணியாமலும் கூடல் இடைவெளி இல்லாமலும் பத்துமலையில் இருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தன.

கோயில் நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் அங்கு சென்றதாக சமாதானம் கூறிய அவர் மீதும் எவ்வித நடவடிக்கையும எடுக்கப்படாதது மக்களுக்கு விரக்திதான்.

இதற்கிடையே கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அனுவார் மூசா இருமுறை சிக்கலில் மாட்டிக்கொண்டார்.

பொதுப் பூங்காக்களில் தனித்தனியாக மட்டுமே தேகப் பயிற்சிகளை மேற்கொள்ள முடியும் என்ற விதிமுறையை மீறி தனது இரு நண்பர்களுடன் கூடல் இடைவெளி இல்லாமல் அவர் உலா வந்தார்.

தற்செயலாக அவர்களை சந்தித்தேன் என்று அவர் சமாதானம் கூறிய போதிலும் பொது மக்களின் கண்டனத்தில் இருந்து அவரால் தப்ப இயலவில்லை.

அதனைத் தொடர்ந்து ஒருசில வாரங்கள் கழித்து பொது நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அவர் கொஞ்சமும் கூடல் இடைவெளி இல்லாமல் அமர்ந்துகொண்டு உல்லாசமாக உணவருந்தியக் காட்சிகள் அவரை மீண்டும் காட்டிக்கொடுத்தன.

இம்முறை காவல்துறையினர் அவரை விசாரித்து தொடர் நடவடிக்கைக்காக கோப்புகளை சட்டத்துறைத் தலைவரிடம் ஒப்படைத்துள்ள போதிலும் நாள்கள் வாரங்களாகி வாரங்கள் மாதங்களாகி காலம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது அதே அமைச்சின் துணையமைச்சர் சந்திரக் குமாரின் நடவடிக்கைதான்.

கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் தேதியில் இருந்து அவர் நாட்டில் இல்லை என்ற திடுக்கிடும் தகவலை ‘சரவாக் ரிப்போட்’ எனும் அனைத்துலக மின்னியல் செய்தி நிறுவனம் அம்பலப்படுத்தியது.

நியூஸிலாந்து நாட்டில் உள்ள தனது குடும்பத்தைக் காண பிரதமரின் அனுமதியுடன் 55 நாள்களுக்கு விடுப்பு எடுத்துச் சென்றுள்ளதாக அவர் சாக்குப் போக்குக் கூறிய போதிலும் பல்வேறு தரப்பினரின் சரமாரியான கேள்விகளுக்கு இன்னும் பதிலைக் காணோம்.

வெளி மாநிலங்களில் வசிக்கும் குடும்பத்தினரையும் வயதான பெற்றோரையும் காண வழியில்லாமல் மாநிலங்களுக்கிடையில் மட்டுமின்றி மாவட்டங்களுக்கிடையிலும் கூட பயணிக்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். இப்படிப்பட்ட கடுமையான விதிகளை மீறி எப்படி அவர் நாட்டை விட்டு வெளியேறினார் என்ற மக்களின் ஆதங்கம் நியாயமான ஒன்றுதான்.

நியூசிலாந்தின் குடிநுழைவு சட்ட விதிகளையும் மீறியுள்ளதாக நம்பப்படும் இவர் மீதும் எவ்வித நடவடிக்கையும் இதுவரையில் இங்கு பதிவு செய்யப்படாதது மக்களுக்கு ஏமாற்றமே.

ஆகக்கடைசியாக கடந்த சில தினங்களுக்கு முன் ஊராட்சி வீடமைப்புத் துறை அமைச்சர் ஸுரைடா கமாருடின் ‘சாவகாச சைக்கிள் சவாரி’ நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வைத்தார்.

இந்நிகழ்விலும் ‘எஸ்.ஒ.பி.’ கடைபிடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள போதிலும் யாரும் நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை.

இதனிடையே அரபு நாடுகளுக்கான சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங்கும் இவ்வாறான சலுகைகளை அனுபவிப்பதைப் போல் தெரிகிறது.

அண்மையில் கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றை குறை கூறிய அவர் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை.

ஆனால் இதே போன்ற ஒரு செயல்பாட்டுக்காக நாட்டின் முன்னணி மின்னியல் செய்தி நிறுவனமான மலேசியாகினிக்கு எதிராக கடந்த மாதம் 5 இலட்சம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதை மக்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள்.

ஆக ‘மாமியார் உடைத்தால் மண்சட்டி, மருமகள் உடைத்தால் பொன் சட்டி’ போன்ற இத்தகைய நிலைமை தொடர்ந்து நீடிக்குமானால் ஏற்கெனவே நலிவடைந்துள்ள, அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கை மேலும் மோசமாகும் என்பது திண்ணம்.