இந்துத்துவ இந்திய அரசியல், இங்கே வேண்டாம்! – கி.சீலதாஸ்

இந்த நாட்டின் தூண்கள் எனப்படும் ருக்குன் நெகாரா நாட்டின் தனித்தன்மை கொண்ட இலட்சியங்களை உள்ளடக்கியதாகும். ருக்குன் நெகாரா தேசிய தத்துவம் என்றும் அழைக்கப்படுகிறது. அது எதை உறுதிப்படுத்துகிறது? இறைவன் மீது நம்பிக்கை வைத்தல், பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல், அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடித்தல், சட்டம் முறைப்படி ஆட்சி நடத்துதல், நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பேணுதல் ஆகியனவே மலேசியத் தேசியக் கோட்பாட்டின் இலக்குகளாகும்.

1969 – நாட்டில் நடைபெற்ற மே மாத இனக்கலவரத்துக்குப் பின்னர் இனங்களிடையே ஒற்றுமையும் புரிந்துணர்வும் வலுப்பெற வேண்டும் என்பதற்காக அறிமுகப்படுத்தப்பெற்ற இந்தத் தேசிய விழுமியங்களை ஒரு கணமும் மறக்க கூடாது.

இரண்டாம் உலகப்போரும் தேசிய உணர்வும்  

அரசியல் எனும்போது நாம் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்திற்குச் செல்ல வேண்டும். குறிப்பாக, இந்த நாட்டு அரசியலைப் பற்றிப் பேசுவோர் இரண்டாம் உலகப்போர் தலைமுறையினர்க்குத் தேசிய உணர்வு மிகுந்து இருந்ததைக் கவனிக்க வேண்டும். மலாய் தேசியம், சீன தேசியம், இந்திய தேசியம் என வெவ்வேறு தேசிய உணர்வுகள் மிளிர்ந்து கொண்டிருந்த காலம் அது. அன்றைய சூழ்நிலை அவர்களை அவ்வாறு செயல்படச் செய்தது.

இந்திய அரசியல்

இந்தியர்களை எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு இந்திய அரசியல்தான் முக்கியமானதாகப் பட்டது. இந்திய சுதந்திரம், அதற்கான உதவிகளை எவ்வாறு செய்வது என்ற நோக்கம் பரவலாகவும் ஆழமாகவும் பதிந்து இருந்தது. இந்தியாவில் என்ன நடக்கிறதோ அதையே தங்கள் பிரச்சினையாக நினைத்துச் செயல்பட்டனர் என்பதும் தெளிவு. சீனர்கள் கூட சீனாவில் நிகழும் அரசியலை உன்னிப்பாகக் கவனித்து வந்தனர் என்பதை வரலாறு நிறைய சான்றுகளைக் கொண்டு நினைவுறுத்துகிறது. மலாய்க்கார தேசிய உணர்வு இந்தோனேஷிய தேசிய உணர்வின் சாயலைக் கொண்டிருந்ததையும் கவனிக்க வேண்டும். இவை ஒரு பக்கம் இருக்க தலைமறைவு இயக்கமாக விளங்கிய மலாயா கம்யூனிஸ்ட் கட்சியும் மலாயாவின் அரசியலில் தனது நடவடிக்கைகளைப் பதிவு செய்யாமல் இல்லை. அது கம்யூனிஸ தத்துவத்தைப் பரப்பத் தயங்கவில்லை.

இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற பிறகும், இந்த நாட்டில் இந்திய தேசிய இராணுவத்தின் மகிமையைப் போற்றாதவர்கள் கிடையாது. அதுமட்டுமல்ல, திரையரங்குகளில் திரைப்படம் ஆரம்பமாகும் முன் இந்திய தேசிய கீதம் முழங்க, சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய கொடிக்கு வணக்கம் செலுத்தும் காட்சியும் திரையிடப்பட்டது. இது வெகு காலம் நீடிக்கவில்லை.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு, தென் ஆசிய, தென்கிழக்காசிய பிரதேசங்களில் நடந்த அரசியல் சம்பவங்கள் இந்த நாட்டையே தங்கள் நாடாக ஏற்றுக்கொள்வதா அல்லது இந்தியாவுக்குத் திரும்புவதா என்ற மனக்குழப்பத்தில் இந்தியர்கள் இருந்தார்கள். இது தவறான கருத்து என்று முத்திரை குத்திவிட முடியாது. காரணம், பல இந்தியச் செல்வந்தர்கள் தங்களின் அசையா சொத்துகளை விற்றுவிட்டு இந்தியாவுக்குத் திரும்ப எடுத்துக்கொண்ட முயற்சிகள், நடவடிக்கைகள் இன்றும் நினைவில் பசுமையாக இருக்கின்றன.

விடுதலையும் தேசிய உணர்வும்

மலாயாவுக்குச் சுதந்திரம் வழங்குவது எனத் தீர்மானித்துவிட்ட பிரிட்டிஷ் அரசு மலாயாவில் பொருளாதாரச் செழிப்புக்குக் காரணமாக இருந்த சீன, இந்திய சமுதாயங்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் தனது மலாய் சுல்தான்கள், மலாய்க்காரர்களின் தேசிய இயக்கமான அம்னோவுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்துவதை அனுகூலமான செயலாகக் கருதியதை நிறுத்திவிட்டு எல்லா இனங்களும் இணைந்து சுதந்திரம் பெற்றால்தான் நாட்டில் இயற்கை வளம் பாதுகாக்கப்படும், அதன் பலனை உலகமே அனுபவிக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தது.

இப்படிப்பட்ட நோக்கங்கள், கொள்கைகள்தான் பல்லின அரசியல் அணுகுமுறைக்கு வழிகோலியது. சுதந்திரத்துக்கு முன்னர், அம்னோ, மசீச, மஇகா ஓர் அரசியல் கூட்டணியைக் கண்டு அரசியல் வாழ்வை ஆரம்பித்தன. எனினும், அவை மலாய் தேசியம், சீன தேசியம், இந்திய தேசியம் என்று பிரிந்து வளர்ந்தன என்பதையும் தெரிந்திருப்பது நல்லது. இந்தியர்களைப் பொறுத்தவரையில் காலப்போக்கில் தமிழ்நாட்டு அரசியலை அடிப்படையாகக் கொள்ள ஆரம்பித்ததையும் காண முடிகிறது. வட இந்தியா, தென்னிந்தியா என்று பிரித்துப் பேசும் அரசியல் வலுவடைந்து கொண்டிருந்தது.

தமிழக அரசியல்

தமிழ்நாட்டில் ஈ.வெ.இராமசாமி நாயக்கர் கண்ட சமுதாய சீர்திருத்த இயக்கம் திராவிடர் கழகம். அந்த இயக்கத்தில் அறிஞர் அண்ணாதுரை, ஈ.வெ.ராவின் நெருங்கிய உறவினர் ஈ.வெ.கி.சம்பத், நாவலர் இரா.நெடுஞ்செழியன், பேராசிரியர் க.அன்பழகன், என்.வி.நடராசன் ஆகியோர் அங்கம் வகித்தனர்.

ஈ.வெ.ராவின் வயதில் பாதி வயதுடைய, இளமையான மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டதனால் அந்த இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிறப்புக்கு உதவியது.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, திமுக அரசியலில் பங்குபெறுவது என முடிவெடுத்தது. இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாட்டு அரசியல் கலாச்சாரம் மலாயா, சிங்கப்பூர் ஆகிய பிரதேசங்களில் பரவியதைக் கவனிக்க வேண்டும். அதே சமயத்தில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த செல்வாக்கு குறைவதற்கான காரணியாக அமைந்து இருந்தது திமுக. இதில் விசித்திரம் என்னவெனில் அரசியலில் தலையிடுவதில்லை என்ற கொள்கையைப் பேணிய ஈ.வெ.ரா, தேர்தல் காலங்களில் காங்கிரஸ் கட்சியின் கர்ம வீரர் காமராஜூக்கு ஆதரவு திரட்டினார்.

ஈ.வெ.ரா கண்ட, தலைமை தாங்கிய திராவிட கழகத்தின் அடிப்படை கொள்கை என்னவாக இருந்தது? சமுதாயச் சீர்திருத்தம் பிராமணீய எதிர்ப்பு. அந்தக் கொள்கையை இந்த நாட்டிலும் பின்பற்றியவர்கள் இருந்தார்கள், இன்றும் இருக்கிறார்கள். ஈ.வெ.ரா இந்து கடவுள்களைக் கேலி செய்தார். பிள்ளையார் சிலை உடைப்பு இயக்கம் நடத்தினார். இந்துக்கள் பேணும் வழிமுறைகளைக் கண்டித்தார். மூடநம்பிக்கை இந்து மதத்தில் மட்டுமா தலைவிரித்தாடுகிறது? மனித குலமே இன, சமய, மொழி, பண்பாட்டு வேறுபாடின்றி மூடநம்பிக்கையில் இன்றளவும் உழன்று கொண்டு இருக்கிறது என்றால், அது மிகைப்படுத்துவதாகக் கருத இயலாதே!

ஜனநாயகம் என்றால் சட்டம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளுக்கு மதிப்பளித்து, ஒருவர் தன் கருத்துக்களை வெளியிடலாம்.  அதே சமயத்தில் பிறர் மனம் வேதனைப்படும் அளவுக்கு நடந்துகொள்வது, பேசுவது எந்த விதத்தில் நியாயமாகும்? ஈ.வெ.ராவின் சீர்திருத்த கொள்கை நியாயமானதாக இருக்கலாம். ஆனால், அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் பிறரைப் புண்படுத்துவதாக இருந்ததையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஈ.வெ.ராவும் அவரின் சிஷ்யர்களும் இந்து மதத்தையும் அதன் கோட்பாடுகளையும் கண்டித்தார்களே அன்றி பிற சமயங்களில் காணப்பெறும் குறைகளைக் கண்டுகொள்ளாமல் செயல்பட்டது நியாயமான செயலா என்ற கேட்கத் தோன்றும். அது ஒரு புறம் இருக்க, நாத்திக கொள்கைக்கு முதலிடம் தந்த ஈ.வெ.ராவின் கொள்கையை ஏற்றுக்கொள்ளாமல் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என அண்ணாதுரை வலியுறுத்தியதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பிராமணீய எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு, கோயில்களில் சமஸ்கிருதகம் வேண்டாம் என்பன போன்ற கருத்துக்கள் எவற்றைக் குறிக்கின்றன? கடவுள் உள்ளார் என்பதைத்தானே உறுதிப்படுத்துகிறது. இந்த நாட்டில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்குத்தான் பிராமணர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பான்மை தமிழர்களோடு போட்டிப் போடவில்லை. இந்தியாவில் பிராமணர்களின் உயரிய நிலையை இங்கே நினைவுப்படுத்துவதில் என்ன நியாயம்? அங்கே வளர்க்கப்படும் பிராமணீய எதிர்ப்பை இங்கே இறக்குமதி செய்வதில் என்ன பலனைக் காண முடியும்?

இந்திய அரசியல் நமக்குத் தேவையா?  

இந்திய அரசியல், தமிழ்நாட்டு அரசியல் யாவும் எல்லா நாட்டு அரசியலைப் போல படித்து தெரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். பொது அறிவு வளர்ச்சிக்கு உதவலாம். ஆனால், பிற நாட்டு அரசியலை இங்கே புகுத்த நினைப்பது தவறாகும். அறுபதுகளில் அண்ணாதுரை ஹாங்காங்கில் நடந்த காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பும்போது சிங்கை, மலேசியா நாடுகளுக்கு வருகை புரிந்தார். அவரின் மலேசிய வருகையை எதிர்த்தவர்களும், தடைசெய்ய கோரியவர்களும் இருந்தார்கள். ஆனால், அரசு அதைப் பொருட்படுத்தவில்லை. அண்ணாதுரை மலேசிய பயணத்தைச் சிறப்பாக முடித்துவிட்டுச் சென்றார்.

இன்று நடப்பது என்ன? இந்த நாட்டு இந்துக்கள் பல திசைகளில் இருந்து எழும் பல சங்கடங்களை அனுபவிக்கின்றனர் என்பது உண்மை. இது போதாது என்பது போல் இந்தியாவில் பேசப்படும் இந்துத்துவ கொள்கையை இங்கே பரப்பப்படுவதாகச் சிலரின் புனைவுகள் பரப்பப்படுகிறது. இந்த நாட்டில் இந்துக்கள் சிறுபான்மையினர். அவர்கள் பிற சமயத்தினரைக் கவரும் பொருட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவும் இல்லை, ஈடுபடவும் இல்லை. ஈழத் தமிழ்ப் பிரச்சினையோடு ஒப்பிட்டு அப்பாவிகளைச் சிறைவாசம் அனுபவிக்கச் செய்த கொடுமை இன்றும் நம்மை உறுத்தும்போது அபாண்ட பழிகளைச் சுமத்துவது அழகல்ல, நியாயமும் அல்ல.

நமக்கு சமய அரசியல் ஆளுமையற்றது  

இன்று ஏழு விழுக்காடுக்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட இந்தியச் சமுதாயம் பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது. இந்த ஏழு விழுக்காட்டில் இந்துக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்; ஆனால், அது தனது சமயத்தைப் பாதுகாப்பதில் கவனம் கொண்டிருக்குமே அல்லாது அரசியல் குழப்பத்துக்கு வித்திடும் ஆளுமை கிடையாது என்பதை உணர்ந்தால் நல்லது. சிறுபான்மையினரின் வாழ்வுக்கு ஆபத்து ஏற்படும்போது சமய வேறுபாடுகள், ஆஸ்திகம், நாஸ்திகம் போன்றவற்றிற்கு முதலிடம் கொடுக்காமல் இன ஒற்றுமைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இயல்பு. தமிழ்ச் சமுதாயம் இந்த உண்மையை உணர்வது எக்காலத்துக்கும் பொருந்தும். அரசியல் என்றால் அங்கே சதித்திட்டங்களுக்குக் குறைவு இருக்காது என்பார்கள். நேர்மையான வாழ்வுக்கு சதி அரசியல் தேவை இல்லை.