பதினான்காம் பொதுத் தேர்தலில் அம்னோ தமது அரசியல் அதிகாரத்தை இழந்தது. அம்னோவை வீழ்த்தியவர்கள் அதன் முன்னாள் தலைவர்கள். குறிப்பாக டத்தோ ஶ்ரீ அன்வர் இபுராஹீம், துன் டாக்டர் மகாதீர் முகம்மது, டான் ஶ்ரீ மையுதீன் யாசின் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் அம்னோ அரசியல் கலாச்சாரத்தைக் கைக்கழுவிட்டு புது அரசியல் கொள்கையைப் பேணத் தயாரானார்களா என்பது இன்று வரை தெளிவற்ற நிலையாகவே இருக்கிறது. அன்வரிடம் மாற்றம் காணப்பட்டாலும் அது போதுமா என்ற சந்தேகம் நீங்குவதாக இல்லை.
அன்வர் இபுராஹீம் பல்லின மக்களைக் கொண்ட நீதிக்கட்சியை ஆரம்பித்தபோதிலும், அவர் அம்னோவில் இருந்தபோது சிறுபான்மையினரைப் பாதிக்கும் அளவுக்கு மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகள் (இதற்கு மகாதீர் உடந்தையாக இருந்தார் என்பதை மறக்க இயலாது), இன்றளவும் அந்தக் காயங்களை நீக்கும் தரத்தைக் கொண்டிருக்கவில்லை. இது ஒரு புறம் இருக்க, இன்று அம்னோவின் நிலை என்ன? இதற்கான பதிலை அறிய வேண்டுமானால் சில வரலாற்று உண்மைகளை நினைவுபடுத்திக் கொள்வது சாலச் சிறந்ததாகும்.
அம்னோ ஆரம்ப காலத்திலிருந்தே மலாய்க்காரர்கள் மட்டும் நாட்டின் சுதந்திரப் பேச்சில் பங்குபெற வேண்டும், நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் தகுதி அம்னோ கொண்டிருந்தது என்பதில் தெளிவாக இருந்தது. உலக அரசியல் சூழ்நிலை மாறும் பொழுது லண்டனில் மனமாற்றம் ஏற்பட்டது. மலாய்க்காரர்களோடு மட்டும் சுதந்திரப் பேச்சுவார்த்தை என்பது பல்லின மக்களின் அரசியல் நிலையைப் புறக்கணிப்பது போல் அமைந்துவிடும். இந்தியத் துணைகண்டத்தில் நிகழ்ந்த அனுபவம் லண்டனின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
இந்தியாவில் முகம்மது அலி ஜீன்னா தலைமை வகித்த முஸ்லிம் லீக் (Indian Union Muslim League) ஒரு கருத்தை முன்வைத்ததாம்; அது என்ன தெரியுமா? பிரிட்டிஷார் முஸ்லிம் முகலாயர்களை வீழ்த்தி வெற்றி கண்டனர். எனவே, பிரிட்டிஷார் திரும்பும்போது யாரிடம் இருந்து நாடு பறிக்கப்பட்டதோ அவர்களிடமே திரும்ப ஒப்படைப்பதே நியாயம் என்றார்களாம். [காண்க: நள்ளிரவில் விடுதலை; டொமினிக் லேப்பியேர், லேரி காலின்ஸ்].
அதே கொள்கையை அம்னோ முன்வைக்கவில்லை என்றாலும் மலாய் சுல்தான்கள், மலாய்க்காரர்கள் நாடு என்பன போன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி எந்தப் பேச்சாக இருந்தாலும் அது அம்னோவுடன்தான் இருக்க வேண்டும் என்பதில் அந்த இயக்கம் உறுதியாக இருந்தது. ஆரம்பத்தில் லண்டன் இந்த அணுகுமுறைக்கு இணங்கிய போதிலும் காலப்போக்கில் அதன் எண்ணத்தில் மாற்றம் காணப்பட்டது.
1952ஆம் ஆண்டு சில இடங்களில் ஊராட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இது மலாயாவில் தன்னாட்சிக்குச் செப்பனிடும் பயிற்சியாகக் கருதப்பட்டது. கோலாலம்பூரில் நடத்தப்பட்ட ஊராட்சித் தேர்தலில் அம்னோவும் மசீசவும் இணைந்து போட்டியிடும் என்ற அறிவிப்பு அவ்விரு இயக்கங்களிடையே அரசியல் உறவின் பிறப்புக்கு உதவியது. கோலாலம்பூரில் ஏற்பட்ட இந்த உறவு அன்றைய அம்னோ தலைவர் அப்துல் ரஹ்மானுக்கு ஆச்சரியமாக இருந்ததாகக் குறிப்பிட்டார். ஆனால், அது சாதகமான முன்னேற்றம் என்றும் கூறினார். [காண்க: இளவரசர், பிரதமர் ஹெரி மில்லர்]
அரசியல் ஏற்பாடு, பேச்சுவார்த்தை என்றால் அது மலாய்க்காரர்கள் மட்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து மாறுபட்ட மனப்பக்குவத்தைப் பிற்காலத்தில் துங்கு அப்துல் ரஹ்மானிடம் காண முடிகிறது. நாட்டின் சுதந்திரப் பேச்சுவார்த்தையில் இந்தப் பல்லின கூட்டணிக்கு நல்கப்பட்ட அங்கீகாரத்தை மறக்க இயலாத வரலாற்றுச் சான்றுகளாகும்.
துங்குவின் தலைமையில் இயங்கிய கூட்டணி காலப்போக்கில் அவரின் கட்டளைக்குப் பணிந்துபோகும் தன்மையாகக் கொண்டிருந்ததைச் சில சம்பவங்கள் உறுதிப்படுத்தின. ஆனால், துங்கு கூட்டணியின் தலைவராக இருந்தபோதும் எல்லோரையும் அரவணைக்கும் அரசியலைக் காண முடிந்தது. அதுவே எதிர்கால மலேசியாவுக்கு உகந்த அணுகுமுறை எனப் பாராட்டப்பட்டது. அவருக்குப் பின் வந்த துன் ரசாக்கின் போக்கில் மாற்றங்கள் தென்பட்டன. அவை மலேசியாவின் பல்லின நல்லெண்ணத்தை வளர்க்கும் தரத்தைக் கொண்டிருந்ததா என்ற வினாவுக்கு இன்றளவும் பதில் கிடைக்கவில்லை. அடுத்து, துன் ஹுசேன் ஓன். இவர் தன் தந்தை டத்தோ ஓனைப் பின்பற்றி பல்லின இணக்கத்திற்கு முக்கியத்துவம் தந்தார் என்பது தெளிவு.
அவருக்குப் பின் வந்த துன் டாக்டர் மகாதீர் முகம்மது, துங்குவிடம் காணப்பெற்ற எல்லோரையும் அரவணைத்துச் செயல்பட வேண்டும் என்ற இலக்கணத்தைக் கொண்டிருக்கவில்லை. இன, மொழி, சமய வேறுபாடுகள் இருந்தபோதிலும் அவை தீவிரமாகி மலேசிய பல்லின நல்லெண்ணத்துக்கு உலை வைக்கும் தரத்தை அடைந்ததை நினைவுகொள்ள வேண்டும். அம்னோவில் பல்லின இனங்களோடு இணைந்து நாட்டில் முன்னேற்றத்தைக் காண்போம் என்பதை விடுத்து தவறான அரசியல் கொள்கை வளர்வதற்குக் காரணியானார் மகாதீர் என்ற குற்றச்சாட்டு இன்றும் ஓயவில்லை.
அதிகாரத் திமிர், பணப் பலம் அரசியல் ஆயுளைக் கூட்டும் என்ற தவறான எண்ணம் பலமடைந்தது. நாட்டில் பல பிரச்சினைகள் எழுந்தன. ஊழல், அதிகார துஷ்பிரயோகம், கட்டுக்கடங்காத இன, சமயப் பிரச்சினைகள் – இவற்றிற்கு எதிராகத் தகுந்த நடவடிக்கைகள் எடுக்காதது யாவும் மக்களைச் சங்கடத்தில் ஆழ்த்தியது. மலேசியா ஓர் ஊழல் நாடு என்ற அந்தஸ்தையும் பெற்றது. இப்படிப்பட்ட சூழல்கள்தான் 9.5.2018ஆம் மக்கள் தங்கள் தீர்ப்பை நல்கினர். அம்னோவின் தலைமைத்துவத்தைத் தலைகுனியச் செய்தனர் மக்கள். அப்போதும் அவர்கள் தங்களின் குற்றங்களை, தவறுகளை உணர்ந்ததாகத் தெரியவில்லை. அதிகாரம் பறிப்போனதே என்ற கோபம் தான் ஓங்கியிருந்தது. மலாய்க்காரர்கள் கூட அம்னோவின் தலைமைத்துவத்தைக் கடிந்தனர்.
இன்று என்ன நடக்கிறது? அம்னோவில் உள்ள இளையர் சமுதாயமே அம்னோவில் மாற்றம் வேண்டுமெனப் போர்க் கொடி ஏந்திவிட்டது. இது எப்படிப்பட்ட மாற்றமாக இருக்க வேண்டும் எனச் சிறுபான்மையினர் கேட்காமல் இருக்க முடியாது! துங்குவின் அரவணைத்துச் செல்லும் அரசியலா அல்லது பெரும்பான்மையினரின் கூற்றும், கூத்தும் முடிவானது என்ற நிலைப்பாடா? முக்கியமாக, அம்னோ சிறுபான்மையினரின் விஷயத்தில் எப்படி நடந்துகொள்ள திட்டமிட்டிருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
பெரும்பான்மை சபா, சரவாக் மக்கள் கூட சிறுபான்மையினர் குழுமத்தில் இணைக்கப்பட்டு தங்களுடைய பல நூற்றாண்டுகளாக அனுபவித்த உரிமைகளை இழக்கும் தருவாயில் இருக்கின்றனர். இது மலேசியாவின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் உதவாது என்பதை அம்னோ உணர வேண்டும். அவர்களின் புரிதலைத் தங்களின் நட்பு கட்சிகளுக்கும் உணர்த்த வேண்டும். அப்பொழுதுதான் மலேசியாவின் தோற்றத்திற்கு அர்த்தம் இருக்கும், அம்னோவுக்கும் எதிர்காலம் இருக்கும்.
ஒரு அரசியல் கட்சியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்றால் இழந்த அந்த நம்பிக்கையை மீட்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால், அம்னோ பலம் வாய்ந்த இயக்கம். திருத்திக்கொள்ளும் ஆற்றல் கொண்டது. அந்த ஆற்றலை நல்ல முறையில் பயன்படுத்துமா என்பதே கேள்வி. ஊழலற்ற ஆட்சி, இன சமய துவேஷமற்ற ஆட்சி, நேர்மையான அரசு நிர்வாகம்; இவற்றை அம்னோ பேணுமா? இவற்றிற்கான விடைகள் அம்னோவிடம்தான் உண்டு.