நஜிப் நடந்த பாதையில் முஹிடினும் பயணம்!

இராகவன் கருப்பையா- நம் நாட்டில் தற்போதைய கொள்ளைப்புற அரசாங்கத்தின் தவணைகாலம் எதிர்வரும் 2023ஆம் ஆண்டில்தான் நிறைவுபெறும்.  அதனுடன் இணைந்துள்ள அரசியல் கட்சிகள், எரியும் வீட்டில் குளிர் காய்வது போல் நடந்து கொள்வது, அடுத்த பொதுத் தேர்தல் எப்போதும் நடைபெறலாம் என்றே தொன்றுகிறது.

அநேகமாக இன்னும் 5 அல்லது 6 மாதங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி அவசரகால சட்டம் நிறைவடைந்தவுடன், முஹிடினின் அடுத்த நகர்வு தெரியும்.

இதற்கிடையே இந்த இடைப்பட்ட காலத்தில் தனது பலத்தை அவர் பல வகையிலும் அதிகரித்து வருவதும் நமக்குத் தெரியாமல் இல்லை.

‘யார் என்ன சொன்னால் எனக்கென்ன’ என்ற நிலைப்பாட்டில் சில நடவடிக்கைகளை திரைமறைவில் அவர் மேற்கொள்வதாகவும் தெரிகிறது.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது 14ஆவது பொதுத் தேர்தலுக்கு முன் 2017ஆம் ஆண்டு மற்றும் 2018ஆம் ஆண்டு முற்பகுதியில் முன்னாள் பிரதமர் நஜிப் போட்ட களியாட்டம்தான் நமக்கு ஞாபகம் வருகிறது.

பக்காத்தான் கூட்டணி கடந்த 2015ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட போதிலும் 2018ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் தேதி தேர்தல் நடைபெறும் வரையிலும் கூட அதற்கு அரசாங்க அங்கீகாரம் கிடைக்கவில்லை.

அந்த சமயத்தில் உள்துறை அமைச்சராக இருந்த தற்போதைய அம்னோ தலைவர் அஹ்மட் ஸாஹிட்டின் மூலமாக பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி பக்காத்தானின் அதிகாரப்பூர்வ பதிவை நஜிப் தடுத்து வந்ததை மக்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள்.

வேறு வழியில்லாமல் ஜ.செ.க., அமானா மற்றும் மகாதீரின் பெர்சத்து உள்பட எல்லா பங்காளிக் கட்சிகளும் பி.கே.ஆர். கட்சியின் சின்னத்தில் ஒரே அணியாகப் போட்டியிட்டு நஜிப்பின் திட்டத்தை புரட்டிப்போட்டன.

இதே போல மேலும் பல விஷமத்தனமாக நடவடிக்கைகளினால் பக்காத்தான் கூட்டணியை அவர் முடக்க முற்பட்டது நம் எல்லாருக்குமே தெரியும்.

அவர் காட்டிய வழியோ என்னவோ, இப்போது முஹிடினின் நடவடிக்கைகளும் ஏறக்குறைய அப்படிதான் இருக்கிறது.

சுமார் 7 மாதங்களுக்கு முன் மகாதீர் தொடக்கிய ‘பெஜுவாங்’ கட்சியும் கிட்டத்தட்ட அதே காலக் கட்டத்தில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் சைட் சாடிக் தோற்றுவித்த ‘மூடா’ எனும் இளையோர் கட்சியும் இதுநாள் வரையில் பதிவுபெற முடியாமல் இருப்பதற்கும் திரைமறைவில் யார் காரணகர்த்தாவாக இருக்கக்கூடும் என்ற விவரம் மக்களுக்குத் தெரியாதா என்ன!

ஆகக் கடைசியாக இப்போது 18 வயதுடைய இளையோர் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகுதான் பொதுத் தேர்தலில் வாக்களிக்க இயலும் என தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் கனி செய்த திடீர் அறிவிப்பு எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அப்துல் கனியை பின்னால் இருந்து யார் ஆட்டிப் படைக்கிறார் என்ற அவலமும் கூட வெள்ளிடை மலைதான்.

18 வயதுடைய இளையோர் இயல்பாகவே பதிவு செய்யப்பட்டு வாக்குரிமையைப் பெறுவதற்கு கடந்த 2019ஆம் ஆண்டில் மக்களவை அதிக பெரும்பான்மையில் அங்கீகரித்தது.

அதனைத் தொடர்ந்து இவ்வாண்டு ஜூலை மாத வாக்கில் இந்த சட்டம் அமலாக்கம் பெறும் என சட்டத்துறை அமைச்சர் தக்கியுடின் கடந்த நவம்பர் மாதத்தில் உறுதியளித்ததாக எதிர்க்கட்சித் தலைவர்கள் வாதிடுகின்றனர்.

இத்தகைய திடீர் திருப்பங்களும் எதிரணியினரை காரணமில்லாமல் முடக்கும் நடவடிக்கைகளும் முஹிடின் அரசாங்கத்திற்கு பாதகத்தையே கொண்டுவரும் என வரலாறு காட்டுகிறது.

உலகில் சுமார் 90% நாடுகளில் வாக்களிக்கும் வயது 18ஆக இருக்கும் வேளையில் நம் நாட்டில் மட்டும் ஏன் இந்த பின்னடைவு என்பதன் அடிப்படையில் கடந்த சில தினங்களாக நாடாளுமன்ற வளாகத்தில் இளைஞர்கள் அமைதி மறியலில் ஈடுபட்டுள்ளதையும் நம்மால் காண முடிகிறது.

‘மூடா’ கட்சியை அங்கீகரித்து, 18 வயதுடையோரை வாக்களிக்கவும் வகை செய்தால் தேர்தலில் தனது ஆட்சிக்கு ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை முஹிடின் நன்கு அறிந்துள்ளார்.

யாரும் எதிர்பார்க்காத அளவில், ஒரு ‘பெரும்பான்மையற்ற’ கூட்டணியை சாணக்கியமாக ‘பெரும்பான்மையாக்கி’ ஆட்சி நடத்தும் ஓர் அபூர்வ அரசியல்வாதியாக முஹிடின் திகழ்கிறார்.

பெரும்பான்மை இனத்தின் பிளவுகளும், அரசியல் விரிசல்களும் அதனிடையே ஊடுருவியுள்ள பண அரசியலும் ஊழலும் நாட்டுக்கு நல்லதல்ல என்பதை வெகுசன மக்கள் உணர வேண்டும். அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்ள தார்மீக உணர்வு கொண்ட அரசியல்வாதிகள் தேவை. அவர்களை தேடும் பணி மக்களிடம்தான் உள்ளது. அது தானே சனநாயகம்.