ருசிகண்ட புலி பூனையான கதை!

இராகவன் கருப்பையா – மலேசியாவை அரை நூற்றாண்டுகளுக்கும் மேல் முன்னின்று நிர்வகித்தது மட்டுமின்றி காலங்காலமாக அரசியல் ‘புலி’யாகத் திகழ்ந்த அம்னோ தற்போது மக்களின் கேலிக்கூத்துக்கு இலக்காகியுள்ள ஒரு ‘பூனை’யாகிவிட்டது என்றால் அது உண்மையா அல்லது நடிப்பா!

அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அதன் தலைவர்களின் சுயநலப் போக்கினால் கடந்த சில மாதங்களாக அக்கட்சி தரைமட்டத்திற்கு இழுத்துத் தள்ளப்பட்டுள்ளது என்பது யதார்த்தம்.

அம்னோவில் உள்ள மொத்தம் 191 பிரிவுகளில் குறைந்தபட்சம் 141 பிரிவுகள் பெர்சத்து கட்சியுடனான எல்லா உறவுகளையும் துண்டித்துக்கொள்ள வேண்டும் என இவ்வாண்டுத் தொடக்கத்தில் தீர்மானங்களை நிறைவேற்றின.

அதற்கேற்றவாறு கடந்த வார இறுதியில் தலைநகரில் நடைபெற்ற அதன் பொதுப் பேரவையின் போது அக்கட்சியின் உச்சமன்றம் பெர்சத்துவுடன் இனிமேல் ஒத்துழைப்புக் கிடையாது என முடிவெடுத்தது.

கட்சியின் எல்லா நிலைகளிலும் இவ்வாறு உறுதியானதொரு முடிவெடுக்கப்பட்டுள்ளதால் அரசாங்கத்தில் உள்ள எல்லா அமைச்சர்களும் உடனே பதவி விலக வேண்டும் என அதன் மூத்தத் தலைவர்கள் தெங்கு ரஸாலி மற்றும் நஸ்ரி அஸிஸ் உள்பட பல்வேறு தரப்பினர் வலியுறுத்துகின்றனர்.

ஆனால் இந்த பதவி விலகல் தொடர்பாக அக்கட்சியின் தேசியத்தலைவர் அஹ்மட் ஸாஹிட் தீர்க்கமான ஒரு அறிவிப்பை செய்ய முடியாமல் தடுமாறுவதை உணரலாம்,

மொத்தம் 47 ஊழல் வழக்குகளை தலையில் சுமந்து நீதிமன்ற வாசல்களை ஏறி இறங்கும் அவர் இதுநாள் வரையிலான அம்னோ தலைவர்களிலேயே மிகவும் பலம் குன்றியவராகக் கருதப்படுகிறார்.

இதன் காரணமாகவோ என்னவோ அமைச்சரவையில் உள்ள மொத்தம் 15 அமைச்சர்கள் மற்றும் துணையமைச்சர்களோடு 14 அரசாங்க நிறுவனங்களில் உயர் பதவிகளை வகிக்கும் இதரத் தலைவர்களையும் பதவி விலகச் சொல்ல துணிச்சல் இல்லாமல் தவிக்கிறார்.

இந்த சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ள அந்த 29 பேரும் இப்போதைக்கு தங்களுடைய பதவி சுகபோகங்களை விட்டுக்கொடுக்க தயாராய் இல்லை என்றனர்.

கடந்த ஒரு ஆண்டு காலமாக கோறனி நச்சலினால் நாடே முடங்கிக் கிடக்கும் சூழலில் வேலையும் அதிகம் இல்லாத பட்சத்தில் பெருமளவிலான ஊதியத்தையும் அலவன்ஸ்களையும் இதர வசதிகளையும் அனுபவித்து வரும் அவர்கள் அனைவருமே ‘ருசிகண்ட பூனை’களை போலத்தான்.

அவர்களில் பெரும்பாலோர் தங்களுடைய வாழ்நாளில் கிஞ்சிற்றும் எதிர்பார்க்க முடியாத அளவிலான சுகபோகங்களை தற்போது அனுபவித்து வருகின்றனர்.  நிலையில்லாத இந்த அரசாங்கத்தில் இதுவெல்லாம் இன்னும் எவ்வளவு நாள்களுக்கு என்று யாருக்குமே தெரியாது. அவர்களும் இதனை நன்கு உணர்ந்துள்ளனர்.

‘காற்றுள்ள போதே தூற்றி’க்கொள்” என்றால் அதற்கு நடைமுறை உதாரணமாகி விட்டது இந்த அரசியல் நிலைமை.

பிரதமர் பதவியில் நூலிழையிலான பெரும்பான்மையில் தொங்கிக்கொண்டிருக்கும் முஹிடினும் தனது நிலையை தற்காத்துக்கொள்ளும் பொருட்டு இவர்கள் கேட்பதையெல்லாம் வாரிவழங்குகிறார் என்று நம்பப்படுகிறது.

இந்த 29 பேரும் நடந்துகொள்வதைப் பார்த்தால் தங்களுடைய கட்சியைவிட பெர்சத்து மேல்தான் அதிகம் பரிவு காட்டுவதைப் போலவும் அஹ்மட் ஸாஹிட்டை விட முஹிடின் மீதுதான் விசுவாசம் அதிகம் போலவும் தெரிகிறது.

கட்சியின் உச்சமன்றம் ஏகமனதாக செய்த முடிவைத் தொடர்ந்து தங்களுடைய தலைவரை சந்திக்காமல் முஹிடினின் ஆலோசனையை மட்டுமே அவர்கள் நாடியுள்ளது வேடிக்கையாகவே உள்ளது.

இதற்கிடையே அம்னோ பொதுப் பேரவையில் தீர்மானம்தான் நிறைவேறியதேத் தவிர தங்களை அது பதவி விலகச் சொல்லவில்லை என கட்சியின் உதவித் தலைவரும் பாதுகாப்புத்துறை அமைச்சருமான இஸ்மாயில் சப்ரி காரணம் காட்டியது நகைப்புக்குள்ளான ஒன்றுதான்.

கோறனி நச்சிலை கட்டுப்படுத்துவதற்கும் பொருளாதாரத்தை மீட்சி பெறச்செய்வதற்குமாக அம்னோ அமைச்சர்களுக்கு  பொறுப்பு அதிகம் உள்ளதால் அவர்கள் பதவி விலகமாட்டார்கள் என்ற கோமாளித்தனமான சாக்கு போக்கை உதிர்த்தார் சுகாதார அமைச்சர் அடாம் பாபா.

நோயை கட்டுப்படுத்துவதற்கும் பொருளாதார மீட்சிக்குமான இவர்களுடைய லட்சணம் பலத்த விமர்சனதிற்கு ஆளானதாகும்.

இதனிடையே ‘பிராசாரானா’வை நாட்டின் சிறந்ததொரு போக்குவரத்து நிறுவனமாக உருவாக்கவிருப்பதாகவும் அதனால் அந்நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து தாம் விலகப் போவதில்லை என்றும் அம்னோவின் தேர்தல் குழுத் தலைவர் தாஜூடின் ஒரு கூத்தடித்தார்.

இப்படியாக, பதவி விலகலைத் தவிர்ப்தற்கு  அந்த 29 பேரும் தனித்தனியாக சுயமாகவே தங்களுக்கு ஏற்றவாறான வியாக்கியானங்களை உருவாக்கிக்கொண்டிருந்த போதிலும் ஒளிந்திருக்கும் உண்மை மக்களுக்குத் தெரியாமல் இல்லை.

எனினும் உச்சமன்ற முடிவு, பதவி விலகல் மற்றும் பெர்சத்துவுடனான உறவு துண்டிப்பு போன்ற அக்கட்சியின் நிலைப்பாடு எல்லாமே முஹிடினிடம் மேலும் அதிகமான வாய்ப்பு வசதிகளை சுரண்டுவதற்கான ஒரு நாடகமேத் தவிர வேரொன்றும் இல்லையென அமானா கட்சியின் உதவித் தலைவர் காலிட் சாமாட் வெளியிட்ட கருத்தையும் நாம் நிராகரிக்க முடியாது.