தமிழ்ப் புத்தாண்டை அரசியலாக்குவதா? -கி.சீலதாஸ்

இந்தியா சுதந்திரம் பெற்றபோது அது பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியிருந்தது. அவற்றில் ஒன்றுதான் இந்திய ஆண்டுக் குறிப்பேடுகள் (காலண்டர்கள்). அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் முப்பது விதமான ஆண்டுக் குறிப்பேடுகள் இருந்தன; அவை ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருந்தன. இதைப்பற்றி குறிப்பிட்ட அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு, இந்த வேறுபாடுகள் இயல்பானவை, ஏனெனில் அவை இந்தியாவின் பண்டைகால அரசியல், பண்பாட்டு வரலாற்றையும் நாட்டில் நிலவிய அரசியல் பிரிவுகளைப் பிரதிபலித்தன என்றார்.

தொடர்ந்து, நாம் சுதந்திரம் அடைந்துவிட்டதால் நமது பொது, சமுதாய நடவடிக்கைகளுக்கு ஆண்டுக் குறிப்பேடுகளில் ஒற்றுமை தேவைப்படுகிறது. அதைப் பெற விஞ்ஞான ரீதியில் தீர்வு காண வேண்டும். வழக்கில் இருக்கும் கிரேக்க ஆண்டுக் குறிப்பேட்டை (கிரெகொரியன் காலண்டர்) அரசு மற்றும் ஏனைய சமுதாய தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட போதிலும் அனைத்துலக ரீதியில் பயன்படுத்துங்கால் குறை தென்படுகிறது என்றார் நேரு. மக்களுக்குப் பழக்கப்பட்டுப்போன ஆண்டுக் குறிப்பேட்டில் மாற்றம் காண்பது கடினம்தான்,

ஆயினும் மாற்றம் கண்டே ஆக வேண்டும். எது எப்படி இருந்தாலும் நமது ஆண்டுக் குறிப்பேட்டினால் இன்று இயங்கும் குழப்பத்தை நீக்க வேண்டும் என்று திட்டவட்டமாக வலியுறுத்தினார் பிரதமர் நேரு. ஐக்கிய நாடுகள் கூட உலக ஆண்டுக் குறிப்பேட்டைக் காண முயன்று வெற்றி பெறவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவின் தேசிய ஆண்டுக் குறிப்பேடு

இந்திய ஆண்டுக் குறிப்பேடுகளில் விஞ்ஞான ரீதியில் ஒற்றுமையைக் காணும் பொறுப்பை இந்தியாவின் விஞ்ஞானம் தொழில்நுட்ப ஆய்வு மன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த மன்றம் வானியற்பியல் நிபுணர் பேராசிரியர் மேகநாத் சாஹாவை ஆண்டுக் குறிப்பேடு சீர்திருத்தக் குழுவின் தலைவராக நியமித்தது. அந்தக் குழுவில், மற்றும் அறுவர் நியமிக்கப்பட்டனர்.

இந்தக் குழு தம் பணியைத் தொடங்குவதற்கு உற்சாகமும், ஆதரவும் தரும் வகையில் அமைந்திருந்தது பிரதமர் நேருவின் மேலே குறிப்பிட்டச் செய்தி. இந்தச் செய்தி “ஆண்டுக் குறிப்பேட்டின் வரலாறு” என்ற நூலில் காணலாம். [காண்க: 18.2.1953 தேதியிட்ட நேருவின் செய்தி]

இந்தக் குழு தம் பணியை மேற்கொண்டபோது இந்தியாவில் பயன்படுத்தப்படும் எல்லா ஆண்டுக் குறிப்பேடுகளையும் விஞ்ஞான ரீதியிலே ஆய்ந்துப் பார்த்தது. அவற்றில் கிரெகொரியன் ஆண்டுக் குறிப்பேடு, இஸ்லாமிய ஆண்டுக் குறிப்பேடு, இந்திய ஆண்டுக் குறிப்பேடுகள் யாவும் அடங்கும். இந்திய ஆண்டுக் குறிப்பேடு எனும்போது அது இந்து, புத்த, சமண, சீக்கிய சமயங்களின் ஆண்டுக் குறிப்பேடுகளையும் ஆய்வில் சேர்த்துக் கொள்ளப்பட்டன.

இவை அன்றி பண்டைக்கால நாகரிகங்களின் ஆண்டுக் குறிப்பேடுகளும் ஆய்வில் சேர்த்துக்கொள்ளப்பட்டன. ஆண்டுக் குறிப்பேட்டின் பலன் என்ன? அது பொது நடவடிக்கைகளுக்கும், சமய நடவடிக்கைகளுக்கும் உதவும். அவை விஞ்ஞானத்தையும், மனிதனால் உருவாக்கப்பட்ட பழக்க வழக்கங்களையும் உள்ளடக்கியதாகும். இவற்றை மட்டும் ஆய்வில் கொண்டிராமல் மேலும் வேறு பல நாடுகளின், பல சிறந்த விஞ்ஞானங்களின் கருத்துகளையும் கருத்திற்கொண்டு இந்தியாவுக்கான தேசிய ஆண்டுக் குறிப்பேட்டை அறிமுகப்படுத்தியது. அதுதான் ஆர்யபாத்தாவின் காலந்தொட்டு நடப்பில் வழங்கி வரும் சாகா காலத்து ஆண்டுக் குறிப்பேடு.

தமிழ்நாடு சித்திரை மாத முதல் தேதியைப் புத்தாண்டாக அறிவித்தது.

ஆண்டுக் குறிப்பேடு சீர்திருத்தக் குழுவின் பரிந்துரை 10.11.1955ஆம் நாள் நடுவண் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது; ஏற்றுக்கொள்ளப்பட்டது. மாநில அரசுகளும் ஏற்றுக்கொண்டன. அப்போது அகில இந்தியக் காங்கிரஸ் இந்தியாவின் பல மாநிலங்களில் ஆட்சி செலுத்தியது, தமிழ்நாடு உட்பட. தமிழ்நாடு சித்திரை மாத முதல் தேதியைப் புத்தாண்டாக, பொது விடுமுறை நாளாக அறிவித்தது. அந்த நிலையே இன்றளவும் நீடிக்கின்றது. இந்தியாவின் தேசிய ஆண்டுக் குறிப்பேடு இன்றும் நடப்பில் இருக்கிறது.

தமிழ்நாடு மற்ற மாநிலங்களைப் போல் அல்லாமல் சித்திரை மாதத்தை முதல் மாதமாகத் தெரிவு செய்ததை, குறிப்பிட்ட அந்தக் குழு தமிழ் வானூலார்கள் ஏன் சித்திரையைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதற்கான காரணம் விளங்கவில்லை என்றும் அது பண்டை காலத்திலிருந்து வரும் பழக்கத்தைத் தொடர விரும்புவதாக இருக்கலாம் என்றது. [காண்க: ஆண்டுக் குறிப்பேட்டின் வரலாறு அறிக்கை, 242ம் பக்கம்]

தமிழ்நாட்டில் சித்திரை முதலாம் நாள் எப்பொழுதும் போல் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாள் பொது விடுமுறை. சில காலமாகவே எது தமிழ்ப் புத்தாண்டு என்ற சர்ச்சை எழுந்து கொண்டே இருக்கிறது. மலேசியா, சிங்கப்பூரைப் பொருத்தவரையில் சித்திரை முதல் தேதியே புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இது இந்துக்களுக்கு மட்டும் உரியது, தமிழர்களுக்கு அல்ல என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

சித்திரை முதல் தேதி தமிழ்ப் புத்தாண்டு அல்ல; தை முதல் தேதியே தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கான அடிப்படை என்னவென்று கேட்டால், சென்ற நூற்றாண்டின் இருபதுகளில் வேதாச்சலம் என்ற மறைமலை அடிகள் தலைமையில் ஐந்நூறு புலவர்கள் ஒன்று கூடி தை முதல் தேதியே தமிழ்ப்புத்தாண்டு என்று அறிவித்தார்களாம். இந்த அறிவிப்புக்கு அடித்தளமாக அமைந்தது எந்த விஞ்ஞானச் சான்று என்பது அறிவிக்கப்படவில்லை.

ஆனால், அப்படிப்பட்ட ஒரு கருத்தை 1952ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஆண்டுக் குறிப்பேடு சீர்திருத்தக் குழுவிடம் சமர்ப்பித்து இருக்கலாம். அப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான ஆவணம் எதுவும் கிடையாது.

அடுத்து, தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் தமிழின் பெருமை, அதன் முதுமை, அதன் சிறப்பு இலக்கிய வளம், நாகரிகம் போன்றவற்றை பற்றிப் பேச ஆரம்பித்தபோது, பிற மொழிகளைச் சாடுவதில் கரிசனம் கொண்டிருந்ததைக் கவனிக்கவும்,

ஆங்கிலத்தைத் தவிர. தூயத் தமிழ் வீரர் மறைமலை அடிகள், அவரைப் போல மற்றவர்கள் கூட வெள்ளைக்காரர்களுக்குச் சிறப்பு நல்கினார்களே அன்றி ஆங்கில மொழி தமிழைக் கொலை செய்வதைத் தடுக்கவில்லையே. இன்றளவும் அந்தக் கொலை நடந்து கொண்டுதானே இருக்கிறது.

கலைஞர் மு.கருணாநிதி – தை முதல் தேதியே தமிழ்ப் புத்தாண்டு

திராவிட இயக்கங்களின் அரசியல் நடவடிக்கைகளைக் கவனிப்போம். 1969ஆம் ஆண்டு மதராஸ் மாநிலத்தின் பெயரைத் தமிழ்நாடு என்று அறிஞர் அண்ணாதுரை மாற்ற காரணியாக இருந்தபோதிலும் தமிழ்ப் புத்தாண்டு பற்றிய சர்ச்சையில் கவனம் செலுத்தாதைக் கவனிக்கவும். அவரின் மரணத்துக்குப் பின் வந்த கலைஞர் மு.கருணாநிதி தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சையைக் கிளப்பாமல் இருந்தார்.

ஆனால், 2008ஆம் ஆண்டு அவர் தமிழ்நாட்டில் முதல் அமைச்சராக மீண்டும் பதவி ஏற்றபோது தை முதல் தேதியே தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்தார். ஆனால், சித்திரை முதல் தேதியைப் பற்றி அவர் கருத்து கூறாதது மட்டுமல்ல அந்தச் சித்திரை புத்தாண்டு விடுமுறையை ரத்து செய்யவும் இல்லை. சித்திரை மாத முதல் தேதி இந்துக்களின் புத்தாண்டா? அப்படியானால் தை முதல் தேதி மதச் சார்பற்ற தமிழர்களின் புத்தாண்டா?

ஜெயலலிதா தை முதல் தேதி தமிழ்ப் புத்தாண்டு என்பதை ரத்து செய்தார்

மதச் சார்பற்றவர்கள் என்றால் அது நாத்திகர்களைத்தான் குறிக்கும். கிறிஸ்த்தவர்கள் ஜனவரி முதல் நாளை தங்களின் புத்தாண்டாகக் கொண்டாடுவார்கள். இஸ்லாமியர்கள் முஹர்ரம் நாளை புத்தாண்டின் முதல் நாளாகச் சிறப்பிக்கிறார்கள். கிறிஸ்த்தவர்களும், இஸ்லாமியர்களும் இறை நம்பிக்கை கொண்டவர்கள். இறை நம்பிக்கையைப் புறந்தள்ளும் ஒரு நாளை தங்களின் புத்தாண்டாக ஏற்றுக்கொள்வார்களா? அது ஒரு புறம் இருக்க, கருணாநிதியின் ஆட்சி நீக்கப்பட்டதும் செல்வி ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். அவரின் முதல் நடவடிக்கையாக, தை முதல் தேதி தமிழ்ப் புத்தாண்டு என்பதை ரத்து செய்தார். புத்தாண்டு நிலைமை 2008ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்தது போலவே இன்றளவும் நீடிக்கிறது.

தமிழர்கள் தை மாத முதல் தேதியில் அதாவது ஜனவரி பதினான்காம் நாள் பொங்கலைக் கொண்டாடுகிறார்கள். தமிழகத்தில் அன்று பொது விடுமுறை. பொங்கல் தமிழகத்தில் மட்டும் கொண்டாடப்படவில்லை; இலங்கையிலும் தை மாத முதல் நாள் பொங்கல் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

அது சங்கராந்தி என இந்தியாவின் பல பாகங்களில் கொண்டாடப்படுவதையும் கவனிக்க வேண்டும். அதுவும் குறிப்பாக ஜனவரி பதினான்காம் நாள் கொண்டாடப்படுகிறது. தாய்லாந்தில் சோங்க்ரான் என ஏப்ரல் பதினான்காம் நாள் தொடங்குகிறது.

தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் இப்பொழுது சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடுவோம் என்று குறிப்பிட்டிருக்கிறதே அன்றி தை முதல் தேதியே தமிழ்ப் புத்தாண்டு என்ற கருத்தை முன்வைக்கவில்லை. தை மாத முதல் தேதியே தமிழ்ப் புத்தாண்டு என்ற தம் கருத்தைத் திமுக மாற்றிக்கொண்டுவிட்டது என்றால் பிசகாகாது.

இந்த நாட்டில் பொதுவாக இந்தியர்களின் நிலை என்ன?

இந்த நாட்டில் தமிழர்களின் புத்தாண்டு மட்டுமல்ல மலையாளிகள், தெலுங்கர்கள், சீக்கியர்கள் ஆகியோரின் புத்தாண்டின்போது பொது விடுமுறை அனுசரிக்கப்படவில்லை. அதுபோலவே, பொங்கலும் பொது விடுமுறை அன்று. சில மாநிலங்களில் மட்டுமே தைப்பூசத் திருநாளை முன்னிட்டு பொது விடுமுறை வழங்கப்படுகிறது. அதுபோலவே தீபாவளி பண்டிகைக்கும் மலேசியாவில் எல்லா மாநிலங்களிலும் விடுமுறை விடப்படுவதல்ல. இந்த ஆண்டு ‘கெடா’ மாநிலத்தில் தைப்பூச விடுமுறை ரத்து செய்யப்பட்டது.

அங்கே கோயில் இடிப்பு பணிக்கு விடுமுறை இல்லை. இதையெல்லாம் கவனிக்கும் திராவிட இயக்க நாத்திகவாதிகள் தைப்பூசம், தீபாவளி வேண்டாம். அவை பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டவை என்ற வாதத்தை முன்வைக்கும் பட்சத்தில், “உங்களிடத்திலேயே ஒற்றுமை இல்லை. எனவே, தைப்பூச, தீபாவளி விடுமுறைகள் இரத்து செய்யலாம்!” என்று ஆட்சியில் இருப்போர் நினைக்க வழி உண்டா இல்லையா?

இந்த நாட்டில் பொதுவாக இந்தியர்களின் நிலை என்ன? அவர்கள் நிம்மதியாக வாழ முடிகிறதா? இந்தியச் சமுதாயத்தின் பிரச்சினைகள் சாதாரணமானவையா? மொழி, சமயப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முற்படுகின்றனரா? சிந்தித்துப் பாருங்கள்.

போதைப்பொருளில் லயித்து, அழிந்து கொண்டிருக்கும் இளையர்களைப் பாருங்கள். நம் மாணவர் சமுதாயம் கல்வியில் பின்தங்கியிருக்கும் நிலைக்கான காரணம் என்ன? ஆரம்ப, இடைநிலைப்பள்ளியில் மட்டும் நல்ல முன்னேற்றம் கண்டுவிட்டால் போதுமா?

மேலும், மேலும் சிறப்பான கல்வியை அவர்கள் பெற வேண்டும். அதற்கான ஆக்ககரமான செயல்கள் தேவை. அவைதானே முக்கியம்! இவை அன்றி மற்றுமொரு சங்கடமான சூழ்நிலையையும் நாம் கவனத்தில் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

குண்டர் கும்பல் கலாச்சாரத்தில் நம் இளையர்கள் மயங்கி தங்களின் உண்மையான திறனைப் பாழடித்துக் கொண்டிருக்கின்றனர். இவற்றை எல்லாம் நினைக்கும்போது மனம் புழுங்குகிறது, குமுறுகிறது என் உறவினர்களே, என் இனத்தவர்களே. இக்கொடுமையால் மனம் ஏங்குகிறது. அழுகிறது! இவை அன்றோ நம்மைப் பிழிந்தெடுக்கும் வம்புகள், தொல்லைகள். இவற்றைப் புறக்கணித்துவிட்டு புத்தாண்டை அரசியலாக்குவது இங்கு தேவையா? அதுவா முக்கியம்?

பலனற்ற விஷயங்களில் தமிழர்கள் தனித்து நிற்பதில் காட்டும் உற்சாகமும், உத்வேகமும் பல நல்ல காரியங்களில் காட்டப்படுவதில்லை என்பதை நினைக்கும்போது வேதனைதான் மிஞ்சுகிறது.