கோவிட்-19 -க்கு எந்த தடுப்பூசி நல்லது?  

இராகவன் கருப்பையா- இவ்வாண்டு இறுதி வாக்கில் மலேசிய மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினருக்கு கோறனி நச்சிலுக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டிருக்கும் என்ற கணிப்பு உண்மையிலேயே வரவேற்கத்தக்க ஒன்று.

தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சம் தொடக்கத்தில் நிலவிய போதிலும் இன்னும் 2 மாதங்களில், பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கையை விட அதன் கையிருப்பு சற்று அதிகமாகவே இருக்கும் என அமைச்சர் கைரி செய்துள்ள அறிவிப்பு நாட்டு மக்களுக்கு இனிப்பான செய்திதான்.

கடந்த வாரம் இறுதி வரையில் ஏறத்தாழ 8.6 மில்லியன் மலேசியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தங்களை பதிவு செய்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல்வாதிகள் மற்றும் முன்னிலை பணியாளர்கள் உள்பட கிட்டத்தட்ட 6 இலட்சம் பேருக்கு இதுவரையில் இந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் பெரும்பாலோருக்கு ‘ஃபைஸர்’ எனப்படும் அமெரிக்க நிறுவனத்தின் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள போதிலும் அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு தேவையான தடுப்பூசிகளை சீனாவிலிருந்து மலேசியா இறக்குமதி செய்கிறது.

இதுவெல்லாமே நமக்கு நல்ல செய்திதான் என்ற போதிலும் சீனத் தயாரிப்பிலான தடுப்பூசிகளின் ஆற்றல் 50.4 விழுக்காடுவரை உள்ளது என பிரேஸில் நாட்டின் மருத்துவ வல்லுநர்கள் செய்த அறிவிப்பு ஒன்று நமக்கு ஓரளவு ஐயப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.

சீன தடுப்பூசித் துறையின் உயர் அதிகாரி ஒருவர் இந்தக் கூற்றை ஒப்புக்கொண்டுள்ளார்.

சீனாவின் தனியார் துறை தயாரிப்பான ‘சைனோவிக்’ எனப்படும் அந்தத் தடுப்பூசி 60 வயதிற்கும் மேற்பட்ட மலேசியர்களுக்கு பாதுகாப்பான ஒன்றுதான் என கைரி அறிவித்துள்ள போதிலும் அதன் குறைவான வீரியம் குறித்து அவர் கருத்துரைத்ததாகத் தெரியவில்லை.

‘சைனோவிக்’ – வின் வீரியம் குறைவாக இருப்பதால் அதை ஏன் மலேசியா சீனாவிடமிருந்து பெற்று 60-வயதுக்கும் மேலானவர்களுக்கு செலுத்த வேண்டும் என்ற வினாவும் எழுகிறது.

இருப்பினும் தரமான தடுப்பூசி மருந்துகள் விரைவாக கிடைக்க இயலாது எனபதும், இருபதைக்கொண்டு பயன் பெறுவது என்ற அடிப்படையில் மலேசியா உள்ளதாக தோன்றுகிறது.

இதற்கிடையே ரஷ்ய தயாரிப்பான ‘ஸ்புட்னிக்’ எனும் தடுப்பூசியையும் தருவிக்க மலேசியா ஏற்பாடு செய்து வருகிறது.

உகலாவிய நிலையில், இந்தியா உள்பட 50கும் மேற்பட்ட நாடுகள் 91 விழுக்காடு ஆற்றலுடைய இந்த தடுப்பூசியை அங்கீகரித்துள்ளன.

அதற்கான தேவை இவ்வாறு இருக்கும் நிலையில் மலேசியாவுக்கு அது எப்போது வந்து சேரும் என்று தெளிவாகத் தெரியவில்லை.

உலகின் ஆகப்பெரிய மருந்தகம் என்று அழைக்கப்படும் இந்தியாவில் இம்மாதம் நோய்த்தொற்று திடீரென அதிகரித்துள்ளதால் அந்நாடும் கூட ‘ஸ்புட்னிக்’ பக்கம்தான் திரும்பியுள்ளதேத் தவிர ‘சைனோவிக்’கை எட்டிப்பார்க்கவில்லை.

இதுவரையில் மொத்தம் 105 மில்லியன் பேருக்கு தனது சொந்தத் தயாரிப்பான ‘பாரத் பயோட்டெக்’ மற்றும் பிரிட்டனின் ‘அஸ்ட்ரா ஸெனெக்கா’, ஆகியவற்றைக்கொண்டு இந்தியா பாதுகாப்பு வழங்கியுள்ளது.

எதிர்பாராத வகையில் திடீரென பற்றாக்குறை ஏற்பட்டுள்ள போதிலும் ‘சைனோவிக்’கை பற்றி அவர்கள் கொஞ்சம் கூட சிந்திக்கவே இல்லை என்பதை நாம் கருத்தில்கொள்ளவேண்டும்.

ஆக, ஏற்கெனவே பக்கவிளைவுகள் தொடர்பான பீதியில் உறைந்து கிடக்கும் ஒரு சாராரை சமாதானப்படுத்தும் அதே வேளை ‘சைனோவிக்’ கொண்டு வந்துள்ள புதிய ஐயப்பாட்டையும் கலைவது அரசாங்கத்தின் கடமையாகும்.

எதை கொடுத்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் அல்லது ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் எனும் நிலைப்பாட்டில் அரசு செயல்படக்கூடாது.