கி.சீலதாஸ் – பல இனங்கள் வாழும் நாட்டில் மொழி, சமய, கலாச்சார வேறுபாடுகள் மலிந்து பிரச்சனைகளாக உருவெடுப்பது விந்தையும் அல்ல, ஆச்சரியப்படத் தக்கதுமல்ல. பல இனங்களின் மாறுபட்ட கலாச்சாரங்களில் ஒரு வகை ஒற்றுமை உணர்வை ஏற்படுத்த முடியுமா? அல்லது பெரும்பான்மையினரின் கலாச்சாரமே நாட்டின் மூலக் கலாச்சாரமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமா? ஒரு நாட்டில் வேறுபட்ட கலாச்சாரங்கள் இயங்கும் போது தேசிய ஒற்றுமை வளர்க்க உதவாது என்ற சோடை மிகுந்த கருத்தை முன்வைக்க தயங்காதவர்கள் வரலாற்று உண்மைகளுக்கு மதிப்பளிக்காதவர்கள் என்றால் தகும். அதே சமயத்தில், ஒரு சாரார் தங்களின் கலாச்சாரமே தொன்மை வாய்ந்தது; மற்ற எல்லா கலாச்சாரங்களுக்கும் முதன்மை என்று சொல்வதும், தங்களின் மொழியே உலக மொழிகளுக்குத் தாய் என்று புலம்புவதும் இயல்பாகிவிட்ட இக்காலத்தில் எதையும் ஆய்ந்து பார்க்கும் ஆற்றலைத் துறந்து உணர்ச்சி பிழம்புகளுக்கு அடிமையாகிவிட்டவர்களைத்தான் காண்கிறோம். இதில் தமிழ்ச் சமுதாயம் விதிவிலக்கு அல்ல.
ஒரு நாட்டில் பல இனங்களின் கலாச்சாரங்கள் பரவலாக அனுசரிக்கப்படுகின்றன, ஏற்புடையதாகக் கருதப்படுகின்றன என்பதைக் காணும்போது அங்கே பகுத்தறிவுக்கும், இணைந்து போகும் தாராள மனப்பான்மையை வெளிப்படுத்துவது மட்டுமல்ல பகைமை உணர்வை வளர்வதைத் தடுக்கிறது என்று கூட சொல்லலாம்.
சில சமுதாயங்கள் இன, மொழி என்ற போர்வையின் கீழ் பகைமை உணர்வை வளர்த்து வருவது நாட்டின் மீதான பற்றை, மக்களிடையே ஒற்றுமையை வளர்க்க உதவாது என்பது மட்டுமல்ல பகைமை உணர்வுக்கு முதலிடம் தருவதையும் காண முடிகிறது.
கனடா, அமெரிக்கா நாடுகள் பல நாடுகளில் இருந்து குடியேற்பவர்களின் பல்லின சமுதாயமாக விளங்குகிறது. அமெரிக்காவில் குடி நுழைவை ஆதரித்த அமெரிக்கா, கனடா முன்னோடித் தலைவர்கள் ஐரோப்பியர்களை வரவேற்றனர். அதிலும் அவர்கள் கிறிஸ்த்தவர்களாக இருந்தால் சிறப்பு என்ற கருத்தும் பரவலாக இருந்தது என்று குறிப்பிடுகிறார் ஏ.கே. நீலகண்ட சாஸ்திரி. (காண்க: மலாயாவில் இந்தியத் தொழிலாளர்களின் பிரச்சினை)
தென்கிழக்காசிய நாடுகளுக்குத் தொழிலாளர்களைக் கொணர்ந்த ஐரோப்பிய காலனித்துவவாதிகள் அவர்களின் ஆதாயத்திற்காக வேறு நாட்டு மக்களைக் கருவியாகப் பயன்படுத்தினார்கள். ஐரோப்பாவில் இருந்து புலம்பெயர்ந்தவர்களிடம் இன ஒற்றுமையும், சமய, கலாச்சார ஒற்றுமையும் நிலவியது. அது பலம் பெறுவதை ஆதரித்தனர் காலனித்துவவாதிகள். ஆனால், தென்கிழாக்காசியாவில் பல நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு அவர்களின் மொழி, கலாச்சார பாதுகாப்புகளுக்கான வழிமுறைகளைக் காண முயற்சிக்கவில்லை என்பதையும் காணலாம். அந்தந்த இனங்களே தங்களின் பாரம்பரிய கலாச்சாரத்தைப் பாதுகாத்தனர். மொழியில் மட்டும் வித்தியாசம் இருந்ததா? அதுவும் இல்லை.
மொழியைப் பற்றிச் சொல்லும்போது நம்மவர் மொழியில் மட்டும் கவனம் செலுத்தியதால், நாட்டுப் பொருளாதாரத்தில் கோட்டை விட்டார்களா? என்ற சந்தேகம் எழுவதைத் தடுக்க முடியவில்லையே! இந்த நாட்டைப் பொறுத்தவரையில் நம் தலைவர்கள் மொழிக்குப் பாதுகாப்பு கோரி அதைப் பெற்றனர். அதே சமயத்தில், தங்களிடம் இல்லாத சொத்துரிமையை, சலுகைகளை விட்டுக்கொடுத்தனர் என்றால் விசித்திரமாக இருக்கிறதா? சிந்திக்க வேண்டிய நிலவரம் அல்லவா?
இந்த நாட்டில் மொழிப் பிரச்சினை தீர்ந்ததாக நினைக்கும்போது அது தீராத பிரச்சினை என்கிறார்கள் ஒரு சிலர். பொருளாதாரப் பிரச்சினையை எடுத்துக்கொண்டால் இந்திய சமுதாயம் இன்றளவும் பின்தங்கிய நிலையில் இருப்பதை மறுப்பதானது முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் தரத்தைக் கொண்டிருக்கிறது. இவ்வாறு மறைக்கப்படுவதையும் நம் சமுதாயம் ஏற்றுக்கொள்கிறது எனின் விந்தையாக இருக்கிறது. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனாரின், “மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே; இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை?” என்ற பாடல் ஞாபகத்துக்கு வருகிறது.
குடியுரிமை, தாய் மொழி பாதுகாப்பு, மொழி பாதுகாப்பு இருந்தால் போதுமா? பொருளாதாரப் பாதுகாப்பு, நேர்மையான கல்வி, உன்னதமான கல்வி தரம் ஒருவனின் கல்விக்கும், திறனுக்கும் மதிப்பளிக்கும் மனப்பாங்கு இவையாவும் மலேசிய உணர்வை வளர்க்க உதவலாம். இதை எல்லாம் கவனிக்காமல் செயல்பட்டவர்களை இதுகாறும் கண்டோம், இன்றும் கண்டு கொண்டு இருக்கிறோம். மொழி கொள்கையில் ஒற்றுமையைக் கண்ட போதிலும் அது தீராத பிரச்சினையாக இருந்து வருவது நமக்கு வேதனையை அளிக்கிறது. அடுத்து நம்மைச் சங்கடப்படுத்துவது என்ன? மொழிக்கு ஆபத்து என்றால் நம் கலாச்சாரத்துக்கும் ஆபத்து அல்லவா? இதைப் புரியாதவர்கள் ஏராளமானவோர். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைப்போரின் நடவடிக்கைகளும் நாம் ஒதுக்கிவிட கூடாது.
கனடாவில் உருவகமாகச் சொல்லப்படும் இரு வகை கலாச்சார அணுகுமுறையைக் கவனிக்க வேண்டும். ஒன்று காய்கறி, பழங்கள் கொண்ட கலவைக் கிண்ணம் (salad bowl); மற்றது உணவு பண்டங்களை மென்மையாக்கும் பானை (melting pot).
கலவைக் கிண்ணத்தில் பலவகை காய்கறிகள் அல்லது பழங்கள் சேர்க்கப்பட்டாலும் ஒன்றொன்றும் அதன் சுவையை, அடையாளத்தை இழக்காது. எனவே, பல இனங்கள் வாழும் நாட்டில் அவரவர் மொழியை, கலாச்சாரத்தைப் பாதுகாப்பது பலவகை காய்கறிகள் கொண்ட கலவைக் கிண்ணம் போன்றதாகும். பல்வேறு காய்கறிகள் ஒரே கிண்ணத்தில் இருந்தாலும் அவை தங்களின் அடையாளத்தை இழப்பதில்லை. அவற்றின் நன்மைகளும் கெடுவதில்லை.
மற்றது, பானையில் பல உணவுப் பண்டங்களைச் சேர்த்து மென்மையாக்குவது. இதன்வழி ஒவ்வவொரு பண்டமும் தனது சுவையை, தரத்தை இழந்து மற்ற பண்டங்களோடு கலந்து விடுகிறது. தனது சொந்த சுவையின் அடையாளத்தை இழந்து விடுகிறது. ஆகமொத்தத்தில், இவ்விரண்டில் எது முக்கியம்? நம் நாட்டுக்கு எது பொருந்தும்? நம் இனத்துக்கு எது பொருந்தும்? பல காய்கறிகளைக் கொண்ட கலவைக் கிண்ணம் பொருத்தமானதாகத் தென்படுகிறது அல்லவா?
பல இனங்கள், பல கலாச்சாரங்கள் வாழும் மலேசியாவில் கலவைக் கிண்ண முறை நியாயமானது என்றால் மிகையாகாது. அதாவது, பல கலாச்சாரங்கள் இருந்தாலும், பல காய்கறிகள் ஒரே கிண்ணத்தில் கலந்தாலும் அவற்றின் தனித்தன்மை குன்றாது. பண்டங்களை மென்மையாக்கும் பானை இயற்கை குணத்தை அழித்துவிடும்.
எல்லா இனங்களும் இணைந்து ஒவ்வொருவரின் மாறுபட்ட கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்வது பல்லின மக்கள் வாழும் நாட்டில் சுபிட்சத்தை வளர்க்க உதவும். ஒற்றுமையைக் காண நல்லெண்ணம் தேவை. நம்மை விட சிறந்தவர் எவரும் இல்லை என்கின்ற முரட்டு இறுமாப்பு நல்லிணக்கத்தை வளர்க்காது.