இந்நாட்டில் திராவிட தேசியம் தேவையா? – கி.சீலதாஸ்

இந்த 2021 ஆம் ஆண்டு ஓர் அற்புதமான சங்கமத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. பொதுவாகவே தெலுங்கு புத்தாண்டான உகாதி பண்டிகை மார்ச் அல்லது ஆப்ரில் மாத காலத்திலும், வைசாக்கி தினம் ஆப்ரில் பதிமூன்றாம் தேதியிலும், மலையாளப் புத்தாண்டு விஷு ஆப்ரில் பதினான்காம் தேதியிலும் கொண்டாடப்படுவது வழக்கம். நேப்பாளத்திலும் பதினான்கு ஆப்ரில் தான் நேப்பாளப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

இவ்வாண்டு எல்லோருடைய புத்தாண்டும் பதினான்கு ஆப்ரிலில் இணைந்தது வானவியல் அற்புதம்தான். அதே சமயத்தில் இஸ்லாமியர்களின் புனித ரம்ஜான் பதிமூன்றாம் தேதி ஆப்ரிலில் ஆரம்பமானது வானவியல் கணக்கில் இன ஒற்றுமைக்கு இடம் உண்டு என்று நினைக்கத் தோன்றுகிறது அல்லவா? ஆனால், இணைந்து போகும் குணத்தின் தரத்தைச் சிலர் களங்கப்படுத்துகின்றனர் என்பது கண்கூடு.

பெரும்பான்மையான தமிழர்கள் சித்திரை முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள். மலேசியாவில் மட்டும் ஒரு சாரார், இவர்கள் சிறுபான்மையினர், சித்திரை முதல் தேதி தமிழ்ப் புத்தாண்டு அல்ல; தை முதல் தேதியே தமிழ்ப் புத்தாண்டு என்று வாதிடுவது மட்டுமல்ல அதை பெரும்பான்மை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆதாரமற்ற முரசத்தை எழுப்புகின்றனர்.

தை மாத முதல் தேதிதான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கான சான்று எங்கிருக்கிறது என்ற கேள்விக்கு கலைஞர் மு.கருணாநிதி, தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்த 2008ஆம் ஆண்டில் சட்டமாக்கினார் என்று பதில் சொல்கிறார்கள். அதோடு, மறைமலை அடிகள் ஐந்நூறு புலவர்களைக் கொண்டு நடத்திய ஒரு நிகழ்வில் தை முதல் தேதியே தமிழ்ப் புத்தாண்டு என்று நியமிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். இது ஒரு புறமிருக்க சிங்கையிலும், மலேசியாவிலும் தை முதல் தேதியில் தமிழர் திருநாள் கொண்டாடப்பட்டது. இது ஐம்பதுகளில் ஆரம்பிக்கப்பட்ட திருநாள்.

இதை ஆரம்பித்தவர் தமிழ் முரசு ஆசிரியர் தமிழவேள் கோ.சாரங்கபாணி. இந்த விழாவை அறிமுகப்படுத்திய போது அது தமிழர்களின் புத்தாண்டு எனத் தமிழவேளும் சரி தமிழ்நாட்டில் இருந்து வந்த எண்ணற்ற பேராசிரியர்கள், தமிழ் அறிஞர்கள் எவரும் சொல்லவில்லை. முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் கூட தமிழின் பெருமை, தமிழரின் பண்டைகால நாகரிகம், தமிழர்கள் எவ்வாறு முன்னேற்றம் கண்டார்கள் என்பதை விளக்கினாரே அன்றி சர்ச்சையைக் கிளப்பும் தமிழ்ப் புத்தாண்டைப் பற்றி எந்தக் கருத்தையும் அவர் முன்வைக்கவில்லை.

தை மாத முதல் தேதியில் பொங்கல் விழா வருவதால் பொங்கலைக் கொண்டாடினால் போதும், தமிழர் திருநாள் வேண்டாம் என்ற கருத்தும் சிங்கையில் பரப்பப்பட்டது. இந்தக் கருத்துக்கு முன்னிலை வகித்தவர் காலஞ்சென்ற இரா. வெற்றிவேல். ஒரு சமயத்தில், தமிழகத்தில் தமிழர் திருநாளின் போது உருவான கடும் புயலினால் பெரும் சேதம் ஏற்பட்டது. பெருநாளைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செவ்வென நடந்து கொண்டிருந்தன. இதை வெற்றிவேல் கடுமையாகக் கண்டித்தார்.

லண்டனில் இரயில்துறை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் அவதிப்படும்போது தமது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்தார் எலிசபெத் அரசியார் என்பதைச் சுட்டிக்காட்டி, அதே முறையை இங்கேயும் பின்பற்ற வேண்டும் என்றார். சாரங்கபாணி தமிழகப் புயல் நிதி நிவாரணம் ஒன்றை அமைத்து, பணத்தைத் திரட்டி தமிழக அரசிடம் ஒப்படைத்தார். இதுவும் வரலாறு!

சாரங்கபாணி ஒருபோதும் தை முதல் தேதியே தமிழ்ப் புத்தாண்டு எனச் சொன்னதில்லை. அவரைப் போலவே மலேசிய திராவிடர் கழகமும், அதன் பொதுச் செயலாளர், மறைந்த கே.ஆர். இராமசாமி ஒரு பொழுதும் தை மாத முதல் தேதியே தமிழ்ப் புத்தாண்டு என்று சொன்னதும் இல்லை, விவாதிக்கவும் இல்லை.

நான் இதற்கு முன்பு சில கட்டுரைகளில் குறிப்பிட்டிருப்பது போல் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு பிரச்சினையைக் கருணாநிதி தமிழக முதல் அமைச்சராக இருந்த 2008ஆம் ஆண்டில் தான் பிள்ளையார் சூழி போட்டார். அறிஞர் அண்ணாவுக்குப் பிறகு, முதலமைச்சர் பதவியை ஏற்ற கருணாநிதி ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்தார். அப்போதெல்லாம் தமிழ்ப் புத்தாண்டு பற்றி எதுவும் சொல்லாமல் இறுதியில் 2008ஆம் ஆண்டில் தை மாத முதல் தேதியைத் தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்தபோது சித்திரை மாத புத்தாண்டை என்ன செய்தார்?

விடுமுறைகள் மாநில அதிகாரத்துக்கு உட்பட்டது என்றாலும் தேசிய ஆண்டுக் குறிப்பேட்டிற்கு முரணாக மாநிலம் நடந்து கொள்வதால் பல பிரச்சினைகள் எழ வழியுண்டு. இதைத் தானே முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு குறிப்பிட்டார். (காண்க: ஆண்டுக் குறிப்பேடு சீர்த்திருத்தக் குழுவின் அறிக்கை, நேருவின் 18.2.1953 தேதியிட்ட செய்தி). இந்தியாவுக்குப் பொது ஆண்டு குறிப்பேடு தேவை என்ற கருத்துக்கும், கொள்கைக்கும் இடம் தராத கருணாநிதியின் போக்கு ஒற்றுமை உணர்வை வளர்க்க உதவாது என்பது மட்டுமல்ல குறுகிய தேசிய உணர்வைப் பலப்படுத்த மேற்கொண்ட முயற்சியாகும்.

இந்த நாட்டைப் பொறுத்தவரையில் எந்த இரு இந்தியப் புத்தாண்டுக்கும் பொது விடுமுறை கிடையாது. தீபாவளி தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்ட போதிலும் அது சரவாக்கில் பொது விடுமுறையாக அனுசரிக்கப்படவில்லை. ஜொகூர், கோலாலம்பூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, பேராக், புத்ரா ஜெயா, சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில்தான் தைப்பூசத் திருவிழாவுக்குப் பொது விடுமுறை வழங்கப்படுகின்றது. இந்தப் பொது விடுமுறையை அறிவிக்கும் அதிகாரத்தை மலேசிய அமைச்சரவை, பிரதமர் துறை கொண்டிருக்கின்றது.

இதில் மாநில அரசுகளையும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. எனவே, இந்தத் தமிழ்ப் புத்தாண்டு விஷயத்தில் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சு வெளியிட்டிருக்கும் கருத்தானது ஆதாரப்பூர்வமான தடயங்களுக்குப் புறம்பானதாகும். அதோடு, மலாயாப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களின் கருத்தே அமைச்சரின் கடிதத்திற்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது என்கிறார்.

சித்திரை முதல் தேதியை இந்து புத்தாண்டு என்று அறிவிக்க வேண்டும் என்று கூறவோ, உத்திரவிடவோ, அபிப்ராயம் கூறவோ அந்த அமைச்சுக்குத் தகுதியும் இல்லை, அதிகாரமும் இல்லை. எனவே, தகவல் தொடர்பு அமைச்சு வெளியிட்ட கடிதம் சவாலுக்குரியதாகும்.

நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அது வழிகோலுகிறது. இந்தக் கடிதம் வந்த பின்னரும் தமிழர்கள் சித்திரை முதல் தேதியைத் தமிழ்ப் புத்தாண்டு எனப் பிரமாதமாகக் கொண்டாடியதை அமைச்சு கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ் – திராவிட தேசியம், எல்லா தேசிய கோட்பாடுகளின்படி தங்களின் கருத்து பொய்மையை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் அதுவே உண்மை என்று நிரூபிக்க முற்படுவது ஒன்றும் புதினம் அல்ல. தேசிய உணர்வுக்குத் தவறான, ஆதாரமற்ற தகவல்கள் அடித்தளமாக அமைந்துவிடுகிறது. அங்கே பிடிவாதம்தான் மிகுந்து காணப்படும். அந்தப் பிடிவாதம் வரலாற்று சான்றுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கா.

மாறாக, சீர்த்திருத்தம் என்ற போர்வையின் கீழ் தனது சிறுபான்மை கருத்தைத் திணிக்க முற்படுவது இயல்பே. நியாயமற்ற உணர்வு, அர்த்தமற்ற கருத்துக்கள், சான்றுகளற்ற நிகழ்வுகள் போன்றவை குறுகிய தேசிய உணர்வு வளர்ச்சிக்கு உதவும். ஆனால், அது ஆபத்தைத் தருவிக்கும். இதற்குச் சுயமரியாதை என்ற முலாம் பூசப்படுவதும் இயல்பே. அது ஆபத்தான விளைவுகளுக்கு வித்திடும்.