தடுப்புக் காவல் மரணம்: கொலையல்ல என்பதை அரசாங்கம் நிருபிக்க வேண்டும்,

இராகவன் கருப்பையா- நம் நாட்டில் தடுப்புக்காவல் கைதிகள் அடையும் மர்மமான மரணங்களுக்கு இன்னமும் தீர்வு காணமுடியாமல் இருப்பது மிகவும் வருத்தமளிக்கக்கூடிய ஒன்றாகவே உள்ளது.

ஆகக் கடைசியாக கடந்த வாரத்தில் 40 வயதுடைய கணபதியின் இறப்பு இந்த சோகக்தொடருக்கு மேலும் உரமூட்டியுள்ளது.

ஏழு வயது மற்றும் ஐந்து வயதுடைய இரு குழந்தைகளுக்குத் தந்தையான அவர் சந்தேகத்தின் பேரில் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

தடுப்புக் காவலில் இருந்த போது அவருடைய கால் துண்டிக்கப்படும் அளவுக்கு அவர் தாக்கப்பட்டுள்ளார் என குடும்பத்தினர் ஏற்கெனவே போலீஸில் புகார் செய்துள்ளனர்.

கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணபதி சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தது, தடுப்புக்காவல் மரணங்கள் தொடர்பான மர்மங்களுக்கு கண்ணுக்கு எட்டிய வரையில் தீர்வு இருப்பதாகத் தெரியவில்லை என்பதையே புலப்படுத்துகிறது.

குறிப்பிடத்தக்க அளவு இந்திய இளைஞர்கள் இத்தகைய அவலத்திற்கு ஆளாகிவருவது நமக்கு கவலையளிக்கும் ஒரு விசயம்.

ஒவ்வொரு முறையும் மனித உரிமை இயக்கங்களும் சமூகவாதிகளும் இதர அரசு சாரா இயக்கங்களும் கண்டனக்குரல் எழுப்புகிற போதிலும் அதுவெல்லாமே இறுதியில் ‘செவிடன் காதில் ஊதிய சங்கு’தான்.

அரசியல்வாதிகளும் கூட ஏனோதானோ என்றுதான் இருக்கிறார்களேத் தவிர இத்தகைய அராஜகத்திற்கு ஒரு முடிவுகட்ட முயற்சிகள் மேற்கொள்வதாகத் தெரியவில்லை.

பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலோர் பி40 தரப்பினர்களாக இருப்பதால் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் இத்தகைய முறைகேடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேலடுத்துச் செல்ல இயலாமல் இருக்கின்றனர் என்று நம்பப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் குற்றவாளிகள் கிஞ்சிற்றும் தயக்கமின்றி தங்களுடைய முரட்டுத்தனத்தை தொடர்ந்துகொண்டே இருக்கின்றனர்.

சுமார் 9 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இதேபோன்ற பிறிதொரு சம்பவத்தில் சந்திரன் எனும் ஒரு இளைஞர் தலைநகர் டாங் வாங்ஙி காவல் நிலையத்தில் மரணமடைந்தார்.

இவ்வளவு நாள்களுக்குப் பிறகு கடந்த வாரம்தான் கூட்டரசு நீதிமன்றம் அவருடைய குடும்பத்திற்கு 200,000 ரிங்கிட் இழப்பீடு வழங்க அரசாங்கத்தை உத்தரவிட்டது.

சந்திரனின் குடும்பத்திற்கு நீதி கிடைத்துள்ள போதிலும் அந்தத் தீர்ப்பு தடுப்புக்காவல் மரணங்களை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும் என்று உறுதியாக சொல்ல முடியாது.

ஏனென்றால் மரணத்திற்கு காரணமாக இருந்தவர்கள் நேரடியாக தண்டிக்கப்படவில்லை. அவர்களுக்கு எவ்விதமான இழப்பும் இல்லை.

அவர்கள் புரிந்த குற்றச்செயலுக்கு மக்களின் வரிப்பணம்தான் இழப்பீடாக வழங்கப்படுகிறது.

ஆக மரணத்திற்கு காரணமாக இருப்பவர்கள் நேரடியாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு முறையாக தண்டிக்கப்படவில்லையென்றால் இப்பிரச்னைக்கு நிச்சயம் தீர்வுகாண முடியாது.

காவல் துறையினர் புரியும் குற்றங்களை விசாரிப்பதற்கு சிறப்பு விசாரணை ஆணையம் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டு ஆண்டுகள் பல ஓடிவிட்டன. ஆனால் அதன் அமலாக்கமும் இன்னும் செயல்வடிவம் பெறவில்லை.

பண பலமும் செல்வாக்கும் இல்லாதவர்களின் உயிர்களும் கூட சரிசமமாக மதிக்கப்பட வேண்டும் என்ற நிலையை முன்னெடுத்து தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும்.

இல்லையெனில் காவல் நிலையங்களில் நிகழும் இத்தகைய மர்ம மரணங்கள் ஒரு தொடர்கதையாகவே இருக்கும். இவை கொலைகள் அல்ல என்பதை அரசாங்கம் நிருபிக்க வேண்டும்