இராகவன் கருப்பையா- நம் நாட்டின் அரசியல் வரலாற்றில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேல் அம்னோவின் தோழமை கட்சியாக பின்னி பிணைந்து உறவாடிய ம.இ.கா. தற்போது தீர்க்கமான ஒரு முடிவு செய்யவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதாகத் தெரிகிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பக்காத்தான் அரசாங்கத்தை கவிழ்த்து கொல்லைப்புற ஆட்சியமைத்த களிப்பில் உல்லாசமாக உறவுப்பாலம் அமைத்து அதனை கொண்டாடிய அம்னோவும் பிரதமர் முஹிடினின் பெர்சத்துவும் இப்போது எலியும் பூனையும் போலாகிவிட்டன.
தனது கட்சியையும் பெரிக்காத்தான் கூட்டணியையும் வலுப்படுத்த தார்மீகக் கொள்கைகளையும் புறந்தள்ளி் சுயநலமான வகையில் அரசியல் நகர்வுகளை மேற்கொண்டுவரும் முஹிடினின் போக்கினால் சினமடைந்துள்ள அம்னோ அந்த கூட்டணிக்கான தனது ஆதரவை மீட்டுக்கொள்வதாக கடந்த மாதம் அறிவித்தது.
இந்நிலையில் ம.இ.கா.வை பாரிசானிலிருந்து பிரித்து தனது கூட்டணியில் இணைத்துக்கொள்ள பெரிக்காத்தான் முயற்சி மேற்கொள்கிறது என செய்திகள் கசிந்தன.
ஒரேயொரு தொகுதியை மட்டுமே கொண்டுள்ள ம.இ.கா, அவர்களைப் பொறுத்தவரையில் ஒரு சிரிய துரும்புதான் என்ற போதிலும் பெரிக்காத்தான் பல்லின கட்சிகளைக்கொண்ட ஒரு கூட்டணி எனும் தோற்றத்தை உருவாக்குவதற்கு இந்தத் ‘துரும்பு’ தேவைப்படுவதை போல் தெரிகிறது.
தனது பொதுப் பேரவைகளின் போது பிரதான உரை நிகழ்த்த காலங்காலமாக அம்னோ தலைவர்களையே அழைத்துவந்த ம.இ.கா. இவ்வாண்டு முஹிடினா அல்லது அம்னோ தலைவர் அஹ்மட் ஸாஹிட்டா எனும் சிக்கலான முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானது.
கடைசியில் அக்கட்சி முஹிடினுக்கு முக்கியத்துவம் அளித்ததைத் தொடர்ந்து மக்களின் யூகங்கள் வலுக்கத் தொடங்கிவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும்.
சிவராஜா போன்ற அதன் குட்டித் தலைவர்களும் கூட அம்னோவை நேரடியாகவே தாக்கிப்பேசியது மக்களின் சந்தேகங்களுக்கு மேலும் உரமூட்டுவதைப் போல் அமைந்துள்ளது.
எது எப்படியாயினும் பெரும்பான்மை இந்தியர்களின் ஆதரவை இழந்து ஏற்கெனவே நலிந்துபோயிருக்கும் ம.இ.கா. இந்த விசயத்தில் கவனமாக முடிவெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது.
அதிக அளவிலான அரசியல் தவளைகளையும் சந்தர்ப்பவாதிகளையும் தன் வசம் இழுத்துக்கொண்டு திடீர் பலசாலியாக காட்சியளித்து ஆட்சியமைத்துள்ள பெர்சத்து அடுத்த பொதுத் தேர்தலோடு அஸ்தமனமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அதுமட்டுமின்றி 47 ஆண்டுகளுக்குப் பிறகு அரசாங்கத்தில் இடம்பெற தங்களுக்குக் கிடைத்துள்ள அரிய வாய்ப்பை உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டு பெர்சத்துவுக்கு துதிபாடும் பாஸ் கட்சியின் தீவிரவாத போக்கையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது.
மதத்தை முன்வைத்தே அனைத்து நகர்வுகளையும் மேற்கொள்ளும் அக்கட்சி ம.இ.கா.வையும் இந்தியர்களின் நலனையும் எவ்வாறு பேணிக்காக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.
முஹிடினின் கூட்டணி மலாய்க்கார ஆதிக்கமுடைய ஆட்சியை அமைப்பதையே குறிக்கோளாகக்கொண்டு செயல்படுவதையும் நாம் இங்கு நினைவுக் கூறத்தான் வேண்டும்.
இதற்கிடையே ஊழல் மிகுந்து கட்சி என பட்டயம் பூசப்பட்டுள்ள போதிலும் அம்னோவில் மனிதாமிக்கத் தலைவர்களும் இருக்கிறார்கள். அதன் துணைத் தலைவர் முஹமட் ஹசான் மற்றும் அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் போன்ற ஆற்றல்மிக்க தலைவர்களும் அந்தக் கட்சியில் இருக்கிறார்கள்.
பலம் குன்றிவிட்டது என்பதற்காக அக்கட்சியிடமிருந்து தூர விலகி நிற்க நினைத்தால் ம.இ.கா.வுக்கு அது விபரீதமாகக் கூட அமையலாம்.
மான் கொம்பு வந்தவுடன் மாட்டுக் கொம்பை மறப்பதா?
பொதுத் தேர்தலில் அம்னோ ஆதரவின்றி தனித்தே போட்டியிட தாங்கள் தயார் என ம.இ.கா.வின் சில குட்டித் தலைவர்கள் அண்மையில் சூளுரைத்த போதிலும் அது நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒரு வெந்துப் பேச்சு என எல்லாருக்குமே தெரியும்.
அம்னோவைவிட்டு ஒருபோதும் விலகமாட்டோம் என ம.இ.கா. தலைவர் விக்னேஸ்வரன் சமீபத்தில் அறிவித்திருந்த போதிலும் தற்போதைய அரசியல் சூழலில் எதுவுமே சாத்தியம் என்பதையும் மறுப்பதற்கில்லை.
ஆக எந்த கூட்டணியில் அவர்கள் இணைந்தாலும் கடந்த காலங்களில் சிரம்தாழ்த்தி கைகளை முத்தமிட்டு அடிமைப்பட்டு நின்றததைப் போல் இல்லாமல் சமுதாயத்திற்காக நெஞ்சுயர்த்தி துணிச்சலாக செயல்பட்டால்தான் இழந்த தனது பலத்தை ஓரளவாவது அக்கட்சி மீட்க வாய்ப்பிருக்கிறது.
அதன் பலம் இனி விசுவாசம் என்பதில் இல்லை. இந்தியர்களின் பிளவு பட்ட வாக்குகளை பெற வேண்டுமானால், மஇகா இதர கட்சிகளுடன் போட்டி போட வேண்டும். இது ம.இ.காவுக்கு மட்டுமல்ல பொதுவாகவே இந்தியர்களுக்கும் உருவாக்கப்பட்டிருக்கும் அரசியல் பலவீனமாகும்.
சிதறி கிடக்கும் இந்தியர்களின் வாக்குகள், நமது உரிமை கோரிக்கைகளுக்கு குரல் எழுப்பும் ஆற்றலை இழந்து விட்டன. இந்த இக்கட்டான திக்கற்ற அரசியல் சூழலில் நமது யுக்திதான் என்ன என்பதை நாம் தான் அலச வேண்டும்!