கி.சீலதாஸ் – இந்த நாட்டில் வாழ்ந்ததாக, வாழ்வதாகச் சொல்லப்படும் இந்தியர்கள், அவர்களின் நன்மைக்காக, உரிமைக்காக உழைத்தவர்கள் தங்களின் வாழ்க்கையையும் வாழ்நாளையும் எவ்வித சலனமும் இன்றி, கைமாறு எதுவும் எதிர்பார்க்காமல், நினைக்காமல் வாழ்ந்தவர்கள் யார்? இந்தியச் சமுதாயம் மனிதருள் மனிதராக வாழ வேண்டுமென ஏங்கினவர்கள் யார்? அவர்களின் நல்ல சிந்தைகள் கைகூடாது போனபோது மனம் துவண்டு ஏங்கியவர்கள் யார்?
இந்த நாட்டில் இந்தியர்கள், அதிலும் குறிப்பாகத் தமிழர்கள் அனுபவிக்கும் அவல நிலையைச் சிந்தித்துப் பார்க்கும்போது அவர்கள் ஏதோ ஒரு வகையில் தங்கள் வாழ்க்கையை ஓட்டிச் செல்கிறார்கள் அல்லது கழிக்கிறார்கள் என்றால் அதுதானே வேதனை நல்கும் கசப்பு மிகுந்த உண்மை!
ஒரு சிலர் தங்களின் திறமையால், துணிவான மனப்போக்கால் வாழ்வில் முன்னேற்றம் கண்டிருக்கலாம்; ஆனால், பெரும்பான்மையினர் போதுமான பொருளாதார, சமுதாயப் பாதுகாப்பு இன்றி இயங்கி கொண்டிருந்தார்கள் என்பதே உண்மையான நிலை. இந்தியச் சமுதாயத்தில் மறுமலர்ச்சி காண முற்பட்டவர்கள் யார்?
இரமணி
அவ்வாறு மறுமலர்ச்சி காண முற்பட்டவர்கள் எத்தகைய சிரமங்களை அனுபவிக்க நேரிட்டது! அவர்கள் தமிழ்ச் சமுதாயத்தின் நலனில் கண்ணுங் கருத்துமாக இருந்தார்கள், உழைத்தார்கள். அவர்கள் அடையாளம் இல்லாமல் போனவர்கள் என்றால் தகுமா? அவ்வாறு அடையாளம் இழந்தவர்களில் தமிழர்கள் மட்டுமல்ல பொதுவாக இந்தியர்கள், பிற இனத்தவர்களும் அடங்குவர் எனின் மறுப்பார் யார்?
கணபதி
ஆனால், பிற இனத்தவர்கள் தங்களின் நலனுக்காகப் பாடுபட்டவர்களை ஒரு போதும் மறப்பது கிடையாது. அதே மனப்பக்குவத்தைத் தமிழர்களிடம் எதிர்பார்ப்பது கடினமே! கற்பனை உலகில் சஞ்சரிப்பதை ஒரு பண்பாடாக நிச்சயித்துவிட்ட சமுதாயம் தமிழ்ச் சமுதாயம். சங்கடமாக இருக்கிறதா? சங்கடப்பட்டு அதை ஓர் ஊன்று கட்டையாகப் பயன்படுத்த தமிழ்ச் சமுதாயம் தயங்குவதில்லையே!
நம் சமுதாயத்துக்காக உழைத்தவர்களை, பாடுபட்டு அவதிப்பட்டவர்களை, அவமதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து பார்க்கிறோமா? கிடையாது. அவர்களின் பெயர்களை வரலாற்றுச் சுவடுகளில் பதிவு செய்ய முயற்சிக்கிறோமா? இல்லை. ஒரு வேளை பதிவு செய்யப்பட்டிருந்தால் அதில் பழுது இருக்கும் அல்லது உண்மையைத் திரித்து கட்டுக்கதைக்கு மெருகேற்றுவார்கள், மெருகேற்றிக் கொண்டே இருப்பார்கள். இந்த அவல நிலையைத்தான் நாம் காலங்காலமாகக் கண்டு கொண்டிருக்கிறோம். நம்மிடம் சிந்திக்கும் ஆற்றலும், துணிவும் இருக்கிறது. ஆனால், அவற்றைப் பயனற்ற விஷயங்களில் பயன்படுத்தி நாமே வீணாகி போகிறோம் என்றால் தவறாகுமா? சிந்தித்துப் பாருங்கள்.
வீரசேணன்
இந்த நாட்டு இந்தியர்களின் வரலாறு எனும்போது அது பெரும்பான்மை தமிழர்களைத் தான் குறிக்கும். இந்த நா
டு உய்வுபெற தமிழ்ச் சமுதாயத்தின் பங்கு அளப்பரிது என்பதைப் பேசி கொண்டிருந்தால் பலன் தருமா? தமிழ்ச் சமுதாயத்தின் பங்களிப்பு இந்நாட்டின் செழிப்பான நிலைக்கு உதவியது என்பது உண்
மை. ஆனால், அது பழைய கதை. இந்த நாட்டின் வளத்திற்கும், இந்தியச் சமுதாயத்தின் பாதுகாப்புக்கும், நலனுக்கும் உழைத்தவர்கள் யார்? அவர்களை அடையாளம் கண்டோமா? காண முற்படுகிறோமா?
இந்த நாட்டில் தோட்டத் தூண்டாடல் நடந்தபோது பெரும்பான்மையான தமிழ்ப் பாட்டாளி மக்கள் பாதிப்புற்றனர். அவர்களுக்கு உதவியவர்கள் யார்? பல்லாயிரத் தமிழ்த் தொழிலாளர்கள் தோட்டத் துண்டாடலினால் தங்களின் வேலை வாய்ப்பை இழந்தார்கள். 1969ஆம் ஆண்டு நிகழ்ந்த இன கலவரத்தின் போது எல்லா இனத்தவர்களும் பாதிப்புற்றனர்.
ஆனால், தமிழர்களின் நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது. ஆமாம், சிவப்பு அடையாளச் சீட்டு கொண்ட மலேசிய குடியுரிமை இல்லாதவர்கள் வேலை இழந்தார்கள். அவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட மாட்டார்கள். பெரும்பான்மை தோட்டத் தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள். சீரழிந்த வாழ்க்கை, சிதறிய சமுதாயம். இந்திய அரசு அவர்களுக்கு கை கொடுக்கவில்லை. அதுபோலவே தமிழகமும் தமிழகத் தலைவர்களும் மவுனம் காப்பதில் திறமையுடையவர்களாகக் காணப்பட்டனர்.
சுபாஷ் சந்திர போஸ்
நம் நாட்டுத் தலைவர்களை மறக்கலாமா!ந்த நாட்டு இந்தியத் தொழிலாளர்கள், அதில் பெரும்பான்மை கொண்ட தமிழ்ச் சமுதாயத்தின் இந்தியச் சுதந்திரத்துக்கான பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட முடியுமா? சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய இராணுவத்திற்குத் தலைமை ஏற்றபோது தமிழ்த் தொழிலாளர்கள் மட்டுமல்ல மற்ற இந்தியச் சமுதாயத்தினர் தங்களின் சேமிப்புகளை, பொன்னாபரணங்களை வாரி, வாரி வழங்கினார்கள். ஜப்பான் சரணடைந்தது. இரண்டாம் உலகப்போர் முடிவு கண்டது. “சலோ டெல்லி” என்ற முரசத்தை எழுப்பிய சந்திர போஸ் விமான விபத்தில் இறந்தார்.
இந்நாட்டு இந்தியர்களின் அர்ப்பணிப்பும் கருகி சாம்பலாயிற்று. ஆனால் உணர்ச்சி பிழம்பில் நம்பிக்கை கொண்ட தமிழர்கள் சந்திர போஸின் இறப்பை ஏற்க மறுத்தனர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இறக்கும் வரை சந்திரபோஸ் உயிரோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையைக் கைவிடவில்லை. ஐம்பதுகளில் தமிழகம் கடும் புயலால் பாதிப்புற்றபோது இங்கும் சிங்கையில் வாழும் தமிழர்களிடமிருந்து நிதி திரட்டினார் தமிழவேள் சாரங்கபாணி.
இவர்களுக்கிடையே வாழ்ந்தவர்களில் முற்போக்கு சிந்தனையுடன் தொழிலாளர்களின் காவலனாக விளங்கிய வீரசேணன் மற்றும் கணபதியும் அடங்குவர்.
தோட்டத் துண்டாடலின்போது வேலை வாய்ப்பை இழந்த தமிழ்ச் சமுதாயம் இழப்பதற்கு வேறு என்ன இருந்தது? தொழிலாளர் ஊழியர் சேமிப்பு நிதியில் இருந்த சொற்ப பணத்தை மீட்டுக் கொண்டனர். இதைப் பெறுவதற்குத் தங்களின் மலேசிய குடியுரிமையைத் துறந்தார்கள். கிடைத்த பணத்தோடு தமிழகம் சென்றார்கள். அங்கே பிழைப்புக்கு வழியில்லை. கையில் இருந்த சொற்ப பணமும் கரைந்தது; பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளானார்கள்.
துன் வி.தி. சம்பந்தன்
நம் நாட்டுத் தலைவர்களை மறக்கலாமா!டு திரும்பிய, அல்லல்பட்ட தமிழ்ச் சமுதாயத்திற்கு உதவ தமிழக அரசோ, தமிழ்த் தலைவர்களோ, கோடீஸ்வர தமிழ்ச் சினிமா நடிகர்களோ முன் வரவில்லை. ஒதுக்கப்பட்ட சமுதாயம் ஒதுங்கியே கிடந்தது. நல்ல வேளை மலேசிய இந்தியர் காங்கிரஸின் அன்றைய தலைவர் துன் வி.தி. சம்பந்தன் அவர்தம் ஆதரவாளர்களின் கடும் முயற்சியால் தேசிய நில கூட்டுறவு சங்க அமைப்பு உருவாக்கப்பட்டு, தோட்டங்கள் வாங்கப் பெற்றன. தமிழ்த் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு கிடைத்தது. இன்றும் தேசிய நில கூட்டுறவு இயக்கம் நல்ல தலைமையின் கீழ் செம்மையாக இயங்குகிறது. இதுவன்றோ போற்றத்தக்க வரலாறு!
பி.பி. நாராயணன்
தேசிய நில கூட்டுறவுச் சங்கத்தின் வரலாறு, அதன் அமைப்பாளர்களின் வரலாறு, அதை இன்றளவும் வழி நடத்துவோரின் வரலாறு யாவும் பதிவு காண வேண்டியவையாகும். அவர்களின் வரலாறு போலவே தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம், அதன் அமைப்பாளர்களில் முன்னோடியான பி.பி. நாராயணன். இவர்கள் அல்லவா இந்த நாட்டு இந்திய மக்களின் நல்வாழ்வுக்கும், இந்தியர்களின் எதிர்காலத்துக்கும் உழைத்தார்கள். அவர்களை மறந்துவிட்டு நம்மைப் பேச்சில் மயக்கியவர்களை, மயக்குபவர்களை நம்புகிறோம். அவமானம்! அவலம்!
ஶ்ரீனிவாசக சகோதரர்கள்
அரசியலை எடுத்துக்கொண்டால் கே.எல்.தேவாசர்; இவர் ம.இ.கா.வின் தலைவராக இருந்தவர். மஇகாவை அன்றைய கூட்டணியில் இணைக்க வழிகாட்டியவர். அந்த வழியில் நடக்கத் துணிந்தவர் வி.தி.சம்பந்தன். மஇகா தலைவர்களில் டான் ஶ்ரீ வி.மாணிக்கவாசகத்தின் உழைப்பைப் புறக்கணிக்க முடியுமா? எதிர்க்கட்சியில் இருந்தாலும் அரசியல் நாகரிகம், சிறுபான்மையினரின் உரிமைகளுக்குச் சிங்கம் போன்று கர்ஜித்த ஈப்போ ஶ்ரீனிவாசக சகோதரர்களை மறப்பது நியாயமாகுமா? அவர்கள் போலவே மக்கள் உரிமைக்காகப் போராடிய வி.டேவிட், கரம் சிங் வரலாற்று நாயகர்கள். மலேசியா அமைக்கப்பெற்ற காலகட்டத்தில் எழுந்த கடும் எதிர்ப்பைச் சமாளிக்க காலஞ்சென்ற சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ கடுமையாக உழைத்தார். அதே வேளையில் ஐக்கிய நாடுகள் அவையில் மலேசியாவின் நியாயத்தை முன்வைத்தவர் வழக்குரைஞர் இரமணி இராதாகிருஷ்ணன் – இவர்களை எல்லாம் மறந்துவிடும் சமுதாயமும், நாடும் நன்றி மறந்தவர்கள் வரிசையில் சேர்க்கப்பட வேண்டியவர்கள்.
இரமணி – கணபதி – வீரசேணன்
திருவள்ளுவர் சொல்வதை எப்பொழுதும் மனத்தில் இருத்திக் கொள்வது நன்றியற்ற தரத்தைத் துறக்க உதவும்.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. (குறள் 110
இந்த நாட்டுக்காக, இந்த நாட்டில் சுதந்திரத்தின் போது கடுமையாக உழைத்தவர்கள் எண்ணற்றோர். அவர்களை எல்லாம் தேடிப் பிடித்து இந்த நாட்டு வரலாற்றுச் சுவடுகளில் பதிய வேண்டும். அதிகாரப்பூர்வமான வரலாறுகள் என்று சொல்லப்படுபவை அரசியல் நோக்கத்துடன் வெளியிடப்படலாம், உண்மைகள் மறைக்கப்படலாம். அதற்காக நாம் உண்மையைச் சொல்லாமல் இருப்பதும் தவறே. எதிர்காலம் நம்மைக் காறி உமிழாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும். இதை உணர்ந்து செயல்பட்டால் எதிர்கால சமுதாயம் நம்மை மதிக்கும்.
note- photos are obtained from internet – without permission – kindly advise if any of these infringe copyright violations – we will remove them/it with an appropriate apology – editor