நியமனத்தில் உள்ள அரசியல் கலப்பும்,   அக்ரில் சானியிடம் எதிர்பார்பதும்!

இராகவன் கருப்பையா – நாட்டின் 13ஆவது காவல்படைத் தலைவராக கடந்த 4ஆம் தேதியன்று பொறுப்பேற்ற அக்ரில் சானி மீது மக்களின் கழுகுப் பார்வை சற்று அதிகமாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது.

கடந்த காலங்களில் புதிதாக பொறுப்பேற்ற காவல்படைத் தலைவர்களை விட இவருக்கு தீர்வு காணப்படாத வேலைகள் நிறையவே காத்திருக்கின்றன.

கடந்த திங்கள் கிழமையோடு பதவி ஓய்வுபெற்ற காவல்படையின் முன்னாள் தலைவர் ஹமிட் பாடோர், அரசாங்கப் பதவிகளை துஷ்பிரயோகம் செய்யும் அமைச்சர்களையும் ஊழல் புரியும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் காவல்துறை அதிகாரிகளையும் அம்பலப்படுத்தியுள்ளதைத்  தொடர்ந்து புதிய தலைவர் அக்ரில் சானி வெறுமனே சும்மா இருந்துவிட முடியாது.

முன்னைய காவல்படைத் தலைவர்களைவிட  ஹமிட் பாடோர் சற்று வித்தியாசமானவர் என்றால் அது மிகையில்லை.

தனது அன்றாட பணிகளை சுதந்திரமாக மேற்கொள்ள முடியாத அளவுக்கு உள்துறை அமைச்சரின் அதிகப் பிரசங்கித்தன தலையீடு இருந்ததை மிகவும் துணிச்சலாக அம்பலப்படுத்தியது மட்டுமின்றி சட்டவிரோத சக்திகளுக்கு துணைபுரியும் சக காவல்துறை உறுப்பினர்களையும் பகிரங்கமாகவே அடையாளம் காட்டினார்.

ஆக இத்தகைய கீழறுப்பு வேலைகளுக்கு எதிராக அக்ரில் சானி எப்படி செயல்படப்போகிறார் என மக்கள் உன்னிப்பாக கவனிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

காவல்படைத் தலைவர் என்ற வகையில் தனது 2 ஆண்டுகால சேவையில் சபாவுக்கும் சரவாக்கிற்கும் செல்ல முடியாமல் போனது மட்டுமே பெருத்த ஏமாற்றமளிக்கிறது என ஹமிட் பாடோர் குறிப்பிட்ட போதிலும் அவரால் முடிக்கப்படாத வேலைகள் இன்னும் நிறையவே உள்ளன என்பது மக்களுக்குத் தெரியும்.

1MDB ஊழலில் சம்பந்தப்பட்ட ஜோ லோ எனும் கோடீஸ்வர் எங்கு இருக்கிறார் என்று தெரியும். அவரை விரைவில் கைது செய்து நாட்டுக்குள் கொண்டுவர ஏற்பாடு செய்யப்படும் என ஹமிட் செய்த அறிவிப்பு நமக்கெல்லாம் நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால் ஒன்றும் நடந்தபாடில்லை.

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன் தமது முன்னாள் கணவர் பத்மநாதனால் கடத்திச் செல்லப்பட்ட மகள் பிரசன்னாவை அன்புக்கரங்களால் கட்டியணைக்கத் துடித்துக் கொண்டிருக்கும் பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்தியின் கதையும் அப்படிதான்.

இஸ்லாத்திற்கு மதம் மாறிய பத்மநாதனின் இருப்பிடம் கண்டறியப்பட்டுள்ளது என்றும் இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சுமூகமானத் தீர்வு காணப்படும் என்றும் அவர் செய்த அறிவிப்பினால் இந்திரா மட்டுமின்றி அனைத்துத் தரப்பினரும்  அகமகிழ்ந்தனர்.

ஆனால் கடைசியில் அதுவும் ‘இலவு காத்த கிளி’ போன்ற நிலைதான்.

கடந்த 2017ஆம் ஆண்டில் நடுத்தெருவில் பட்டப்பகலில் கடத்தப்பட்ட மத போதகர் ரேய்மன் கோ மற்றும் மர்மமான முறையில் காணாமல் போன அம்ரி சே மாட் ஆகியோரும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

காவல்துறையின் உளவுப் பிரிவுதான் இதற்குக் காரணம் என ‘சுஹாக்காம்’ எனும் மனித உரிமை ஆணையம் தனது சொந்த விசாரணையின் முடிவில் அறிவித்துள்ள போதிலும் அரசு தரப்பில் இன்னமும் மௌனம்தான்.

காவல்துறையின் தினசரிப் பணிகளில் உள்ள அரசியல் தலையீடு குறித்து ஹமிட் பாடோர் வெளியிட்ட அறிக்கைகளைத் தொடர்ந்து பத்மநாதனை கண்டுபிடிப்பதிலும் ரேய்மன் கோ கடத்தப்பட்ட விவகாரத்திலும் நிலவும் மக்களின் சந்தேகங்கள் மேலும் வலுவடைந்துள்ளன என்றே சொல்ல வேண்டும்.

பத்மநாதனை கைது செய்து பிரசன்னாவை இந்திராவிடம் ஒப்படைக்க வேண்டும் என கூட்டரசு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும் கடந்த 10 ஆண்டுகளில்  தலைமை  பொறுப்பேற்றிருந்த 3 ஐ.ஜி.பி.களும் அதனை செயல்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதே ஆண்டில் தற்கொலை செய்துகொண்ட அரசியல் உதவியாளர் தியோ பெங் ஹொக்கின் மரணத்திற்கு ஊழல் தடுப்பு ஆணையத்தின் 3 அதிகாரிகள்தான் காரணம் என அரச ஆணையம் தனது விசாரணையின் முடிவில் தீர்ப்பளித்துள்ள போதிலும் இதுவரையில் யாரும் தண்டிக்கப்படவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிறிதொரு சம்பவத்தில் ஷா அலாம் அருகே உள்ள சீஃபீல் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய வளாகத்தில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்களின் போது மரணமடைந்த தீயணைப்பு வீரர் முஹமட் அடிபின் நிலையும் அப்படிதான்.

கலவரத்தின் போது அடிப் கொல்லப்பட்டார் என ‘இன்குவெஸ்ட்’ எனப்படும் மரண விசாரணையின் முடிவில் அறிவிக்கப்பட்ட போதிலும் தீயணைப்பு வாகனம் ஒன்றினால் அவர் மோதித் தள்ளப்பட்டார் என முன்னாள் சட்டத்துறை தலைவர் தோமி தோமஸ் குறிப்பிட்டார்.

இந்த மரணம் தொடர்பாகவும் யாரும் இதுவரையில் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவில்லை.

ஆக இவ்வாறு பல முக்கியமான வழக்குகளுக்கு இன்னும் தீர்வு காணப்படாத நிலையில் பதவியேற்கும் அக்ரில் சானி அரசியல்வாதிகளின் தலையீட்டுக்கு அடிபணியாமல் மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப செயல்படுவாரா என நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.