மலேசியாவில் சமத்துவம் என்பது ஒரு கேள்விக்குறியாகும். இருப்பினும், மலேசியர்கள் அனைவரும் ஒரு சுமுகமான வாழ்க்கையை அரவணைத்து வாழ்கிறார்கள் என்பது நிதர்சனம்.
விடுதலை மலேசியாவில் வாழ்கின்ற இரண்டாம் தலைமுறையினர், ஒரு இனபேதமற்ற சமத்துவமான மலேசியாவை உருவாக்க வேண்டும் என்ற சமூக சிந்தனையின் உந்துதல், கோமாஸ் மையத்தின் (PUSAT KOMAS) ஒரு திட்டமாக உருவானது. அது தான் சமத்துவத்திற்காக ஓடலாம் (RACE TO EQUALITY) என்ற ஓட்ட பந்தயமாகும்.
இது ஒரு போட்டி ஆனால், இது மெய்நிகர் வகையில் நடைபெறும். மெய்நிகர் ஓட்டம் (VIRTUAL) என்றால் உண்மையான போட்டி இருக்காது ஆனால், நீங்கள் உங்களின் இருப்பிடத்திலோ அல்லது பிற இடங்களிலோ ஓடலாம். உங்கள் ஓட்டத்தைத் திறன்பேசியின் வழி (SMART PHONE) பதிவு செய்ய வேண்டும். இதை எப்படி பயன் படுத்துவது என்பதை அறிய இங்கே சொடுக்கலாம் – https://checkpointspot.asia/ .
இந்த மெய்நிகர் ஓட்டத்தின் குறிக்கோள் பற்றி இதன் ஒருங்கிணைப்பாளர் அனுசா ஆறுமுகம் இப்படி விவரிக்கிறார்,
“மலேசியர்களின் தேசிய ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் ஒரு நிலைத்தன்மையான சமூக அரசியலுக்கு அத்தியாவசியமாகும். அதற்கு இனம், மதம், மொழி போன்றவை பிரிவினையாக இருக்கக் கூடாது. பல்லின பண்பாடு என்பது நமது உண்மையான அடையாளம், அதுதான் நமது சொத்தும் மூலதனமுமாகும்.” என்கிறார்.
மேலும் விவரிக்கையில், “மனிதர்கள் இடையே பிறப்பில் வேறுபாடு கிடையாது. சமத்துவம் என்பது பிறப்பின் உரிமை. ஆனால், பிரிவினை என்பதில் சிக்கிக்கொள்கிறோம். இந்த மெய்நிகர் ஓட்டம், நமக்கு ஒரு விழிப்புணர்ச்சியை அளிக்க வேண்டும். மலேசியர்கள் அனைவரும் ஓரினம், நம்மிடையே இருக்கும் இன, சமய அடையாளங்களுக்கு அப்பாற்பட்ட வகையில், அனைவரும் நாட்டின் சுகபோகங்களைச் சமத்துவ அடிப்படையில் பெற வேண்டும் என்பதாகும்”.
மே 13 தொடங்கப்பட்ட இந்த ஓட்டம் ஜூன் 15 தேதி வரையில் நடைபெறும், இதில் சுமார் 400 நபர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கொமாஸ் இயக்கத்தின் இயக்குநர் ஜெரல்டு ஜோசப் ஆகும், இவர் தற்போது சுகாக்காம் ஆணையராகவும் உள்ளார்.