கி.சீலதாஸ் – ஒரு நாட்டின் கல்விக் கொள்கை, அதன் தரம் காலத்தின் மாற்றத்தைப் பிரதிபலிக்க வேண்டும். நாட்டின் கல்வி முறை சமுதாயச் சூழல்களைக் கவனத்தில் கொண்டிருக்கின்றனவா என நாட்டு நலனில் கரிசனம் கொண்ட குடிமகன் கேட்க உரிமை உண்டு.
அதற்கான பதிலைச் சொல்லும் கடமையும், பொறுப்பும் அரசுக்கு உண்டு.
எந்த ஒரு கல்விக் கொள்கையும் சமுதாயத்தில் அடிக்கடி ஏற்படுகின்ற மாற்றங்களைக் கவனத்தில் கொண்டிருப்பதோடு, பொருளாதாரம் மற்றும் ஏனைய துயர் சூழலால் பாதிப்புற்றவர்கள் கல்வி பெறுவதற்கான வசதிகளைச் செய்து தரும் பொறுப்பு அரசுக்கு உண்டு. அதோடு, கல்விக் கொள்கையும், கல்வியின் தரமும் பல இனங்கள் வாழும் நாட்டில் அவர்களின் மொழி, பண்பாடு போன்றவற்றின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட கூடாது.
இப்படிப்பட்ட ஒரு தாராளமான, அற்புதமான கல்விக் கொள்கையைப் பேணாததால்தான் நாட்டில் வெறுப்புணர்ச்சி கலாச்சாரம் ஊன்றவும், வளரவும் வழிகோலியது.
பல இனங்களை, அவர்தம் மொழி, பண்பாடுகளைக் கொண்ட நாட்டில் அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தும் கல்வி முறை காலப்போக்கில் நல்லதொரு இணக்கமான சமுதாயத்தைக் காண உதவும். அப்படிப்பட்ட ஒரு நல்ல திட்டத்தை அரசு மேற்கொண்டதா என்றால் நாட்டில் நிலவும் கடுமையான வெறுப்புணர்வே விடை நல்குகிறது.
இன, சமய ஏற்றத்தாழ்வு; பாகுபாடற்ற, பாகுபாட்டை உணர்த்தாத, வளர்க்காத கல்வி, கல்வியின் தரம் எல்லா மக்களிடையே நல்லிணக்கத்தை, நம்பிக்கையை வளர்க்க, உறுதி மனப்பாங்கைத் தளரவிடாமல் பாதுகாக்க உதவும். இதை மனத்தில் கொண்டு கல்வித் திட்டத்தைத் தயாரிப்பவர்கள் செயலாற்றினால் நாட்டில் வெறுப்புணர்வும், நம்பிக்கையின்மையும் வளர வழியில்லை, இடமில்லை.
மக்களிடையே வெறுப்புணர்வு, நம்பிக்கையின்மை வளராமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு அரசுக்கு உண்டு என்றால் தவறாகுமா? வெறுப்புணர்வை, நம்பிக்கையின்மையை வளர்க்காத கல்வி முறையைத்தான் மக்கள் விரும்புகிறார்கள்.
அந்தப் பொறுப்பை அரசு செவ்வெனச் செய்ததா என்ற கேள்வி எழும்போதெல்லாம் நாட்டில் பெருகி வரும் வெறுப்புணர்வு கலாச்சாரம் நம்மைப் பார்த்து கேலி செய்கிறது!
மக்கள் நம்பிக்கை நல்கும் சிறப்பான, தரமான கல்வி முறையைத்தான் விரும்புகிறார்கள். நம் கல்வி முறை கர்த்தாக்கள், கல்வி கொள்கை தயாரிப்பவர்கள் மக்களின் எதிர்காலம், நாட்டின் எதிர்காலம் போன்றவற்றை மனத்தில் கொண்டுதான் செயல்பட வேண்டும். செயல்பட்டார்களா?
கருத்துப் பரிமாற்றம் மிகவும் முக்கியம் என்பார்கள். ஆனால், இன்றைய கல்வி முறை கருத்துப் பரிமாற்றத்திற்கு வித்திடுகிறதா? கிடையாது!
கருத்துப் பரிமாற்றத்திற்கு இடம் தராத, இடம் தர மறுக்கும் தேசிய அரசியல், சமய அரசியல், தேசியமும் சமயமும் இணைந்த அரசியல், பண அரசியல், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்கின்ற அரசியல் எல்லா இனத்தவர்களையும் சக மனிதர்களாக நினைக்காத, நடத்தாத அரசியல் போன்றன தரமான கல்வியைப் புறக்கணிக்க காரணமாக இருந்ததைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
தரமான கல்வி பெறுவது தடைபடுகிறது. பொதுவாகச் சொல்ல வேண்டுமானால் எந்த ஒரு கல்வித்திட்டமும் மனிதனின் அறிவு வளர்ச்சிக்குத் தடையாக இருக்க கூடாது. மாறாக, அறிவு வளர்ச்சிக்கு ஆக்ககரமான திட்டங்களைக் கொண்டு வர வேண்டும்.
சமீபத்தில் யூ.பி.எஸ்.ஆர் பரீட்சை நிரந்தரமாக நிறுத்தப்படும் என்றும் இந்த ஆண்டு நடக்கவிருந்த படிவம் மூன்றுக்கான (PT3) பரீட்சை கோவிட்-19இன் காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் ரட்ஸி ஜீடின் அறிவித்ததைத் தொடர்ந்து பல கருத்துகள் சொல்லப்பட்டன.
மேலும் கருத்துகள் வரலாம், வர வேண்டும். கருத்து மழை பெய்தால்தான் பகுத்தறிவு செடி ஆழமாகப் பதிந்து, ஊன்றி, தழைத்து, உயர்ந்து, பலம் வாய்ந்த மரமாக வளர்ந்து எண்ணற்றோருக்கு அறிவுக் கனிகளையோ, அறிவு நிழலையோ தரலாம். ஆனால், இன்றைய கல்வி முறை பரீட்சையை நோக்கமாகக் கொண்டிருக்கிறது என்பதைப் பார்க்கும்போது மற்றவர்களின் அனுபவங்களை ஏற்க மறுப்பவர்களைத்தான் காண்கிறோம்.
பரீட்சை மட்டும் ஒருவரின் திறனை வெளிப்படுத்தும் என்பது தவறான கூற்றாகும். பரீட்சை முறை சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டதாம். அது அரசுப் பணியில் சேருவோருக்கு நடத்தப்பட்டது. ஆங்கிலேயர்கள் தங்களின் காலனித்துவ பிடியைத் தளரவிடாமல் பார்த்துக் கொள்ள தங்களுக்குத் தேவையான பணியாட்களைத் தேடும்போது பரீட்சை முறை மேற்கொள்ளப்பட்டது.
பரீட்சைக்கான சீனாவின் நோக்கமும் காலனித்துவ வாதிகளின் நோக்கமும் மாறுபட்டவை. சீனாவின் நோக்கம் சிறந்த நிர்வாகிகளை உருவாக்குவது, காலனித்துவ வாதிகளின் நோக்கம் காலனித்துவத்தைப் பாதுகாப்பதாகும்.
பரீட்சைக்கு அப்பாற்பட்ட முறைதான் அறிவு வளர்ச்சிக்கு உதவியது என நமக்கு வரலாறு பறைசாற்றுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஞானிகள், தீர்க்கத்தரிசிகள் எந்தப் பள்ளிக்கூடத்துக்குப் போனார்கள்? அவர்களில் எவரும் இப்பொழுது கையாளப்படும் பரீட்சை முறைக்கு ஆளாக்கப்பட்டார்களா? கிடையாது. வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவ பரீட்சையே அவர்கள் உலகுக்குப் பல அறிவார்ந்த கருத்துகளை வெளியிட உந்தியது என்பதை உணர வேண்டாமா?
கடந்த நூற்றாண்டின் இறுதியில் (23.12.1921) நோபெல் பரிசு பெற்ற இரவீந்திரநாத் தாகூர் விஸ்வ – பாரதி என்ற கல்லூரியை நிறுவினார். அதன் குறிக்கோள்கூற்று, “உலகம் ஒரு கூட்டினுள் வீட்டை அமைத்துக் கொண்டது” என்பதாகும். உலகமே ஒரு வீடு, அங்கே எல்லோருக்கும் வாழ இடம் உண்டு என்பதை உணர்த்துகிறது அல்லவா?
தாகூர் ஆரம்பித்த கல்லூரியில் பரீட்சை இல்லை. பற்பல நடவடிக்கைகள் இருந்தன. வகுப்பறைகளில் பாடங்களை நடத்தாமல் வெளியே நடத்தப்பட்டன. சாந்திநிகேதனில் அமைந்த இந்தக் கல்லூரி இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பின்னர் பல்கலைக்கழகமாக வடிவம் கண்டது, பெருமை பெற்றது. உலக வரலாற்றிலேயே ஒரு கவிஞரின் பாடல் இரு நாடுகளின் தேசிய கீதமாகத் திகழ்வது தாகூரின் பாடல்களே. இந்தியாவின் தேசிய கீதமான “ஜன கண மன” மற்றும் வங்காள தேசத்தின் தேசிய கீதம் “அமர் ஷோனார் பங்களா” பாடல்களை எழுதியவர் தாகூர்.
விஸ்வ – பாரதி கல்லூரியில் பயின்றவர்களில் இந்தியப் பிரதமர் காலஞ்சென்ற இந்திரா காந்தி, இந்தி திரைப்பட உலகில் புரட்சியை ஏற்படுத்திய காலஞ்சென்ற சத்யஜித்ரே, நோபெல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் ஆகியோர் அடங்குவர். பிற நாட்டவர்கள், குறிப்பாக மேலை நாட்டவர்களும் விஸ்வ பாரதியில் பயின்று நல்ல அனுபவம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் உலகம் ஒரே குடும்பம் என்பது வெறும் சுலோகம் அல்ல; அது போற்றி பின்பற்றத்தக்க ஒரு தத்துவம் என அங்கே உணர்த்தப்பட்டது.
நம் நாட்டு கல்வி நிலவரத்தைப் பார்ப்போம். யூ.பி.எஸ்.ஆர் பரீட்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதால், நம் கல்வி முறையில் மாறுபாடு காண வேண்டுமெனச் சிலர் கூறுவது பொருத்தமான, தேவைப்படும் கருத்து. பரீட்சையைக் குறிக்கோளாகக் கொண்டிருக்க கூடாது என்பதும் நியாயமான அணுகுமுறையே. பரீட்சையில் புதைந்து கிடக்கும் போலி கவுரவத்தை அகற்றுவது முக்கியமென நினைக்கும்போது சிந்தனை மாற்றம் தேவைப்படுகிறது. அரசு இதை உணர்ந்து தக்க நடவடிக்கை மேற்கொள்வது காலத்துக்கேற்றதாகும்.
மற்றுமொரு வரலாற்று உண்மையை நாம் தெளிவாகத் தெரிந்திருப்பது நல்லது. பதினெட்டாம் நூற்றாண்டில் ஏற்பட்ட கல்வி விழிப்புணர்வு புரட்சியைக் கவனிக்க வேண்டும். அப்போது கல்வியில் மாற்றம் காண வேண்டும் என்பதற்கு ஒரு காரணம் இருந்தது.
சமய கல்விக்கு இடம் தந்த கல்விமுறை அறிவு வளர்ச்சிக்கு உதவவில்லை என்பதை உணர்ந்ததால்தான் கல்வி முறையில் மாற்றம் தேவை என்ற துணிவான இயக்கம் ஆரம்பிக்கப்பெற்றது. அது திறந்த மனப்பான்மை, பாரபட்சமற்ற, நடுநிலையான, மனிதத் தரத்தை ஊக்குவிக்கும் கல்வியை உற்சாகப்படுத்தியது. வெற்றி கண்டது.
மேலை நாடுகளுக்குச் சென்று கல்வி பயின்ற நம்மவர்கள் ஒரு வகையில் மாறுபட்ட கருத்துகளை ஏற்கும் மனப்பக்குவத்தைக் கொண்டிருந்தனர். ஆனால், காலப்போக்கில் அந்தத் திறந்த மனப்பான்மை கல்வியின் தரத்தைப் புறக்கணித்த கல்வியைத்தான் நாம் காண்கிறோம்.
இன்றைய கல்வி தன்னலம் கொண்ட ஒரு குழுமத்துக்குச் சாதகமாக இயங்குகிறது என்றும், அந்தத் தன்னலக் குழுமத்தின் நலனுக்காகவே கல்வி கொள்கையின் தரம் அமைந்துவிட்டது என்றால் அது சிந்திக்க வேண்டிய விஷயமாகும். தன்னலமிக்கோரின் நன்மைக்காக, நலனுக்காக மக்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று உணர்த்துகின்ற கல்வி முறை மக்களை எப்பொழுதும் அடிமை நிலையில் வைத்திருக்க வேண்டும் என்கின்ற அடிப்படையைக் கொண்டதாகும்.