இராகவன் கருப்பையா –
இந்நாட்டில் உள்ள தமிழ், சீனப் பள்ளிகள் அரசியலமைப்புக்கு உள்பட்ட ஒன்று என அரசாங்கம் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளது இவ்வாண்டில் நமக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய ஒரு இனிப்பு செய்தியென்றால் அது மிகையில்லை.
தமிழ், சீனப்பள்ளிகள் நம் நாட்டில் சட்டவிரோதமாக இயங்குகின்றன என தீபகற்ப மலேசிய மாணவர்கள் சங்கம், இஸ்லாமிய கல்வி மேம்பாட்டு மன்றம் மற்றும் மலேசிய எழுத்தாளர் சங்கங்களின் சம்மேளனம், ஆகிய 3 இயக்கங்களும் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த ஆண்டில் வழக்கு பதிவு செய்திருந்தது நாம் அறிந்த ஒன்றே.
இந்நிலையில் நாட்டின் அரச சாசனத்தில் தமிழ், சீனப்பள்ளிகளுக்கு இடமுண்டு என கடந்த மாதம் தனது தற்காப்பு வாதத்தை பதிவு செய்த சட்டத்துறை அலுவலகம், மேற்குறிப்பிட்ட 3 இயக்கங்களுக்கும் இவ்விவகாரத்தில் வழக்குரிமை கிடையாது என்று குறிப்பிட்டுள்ளது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
மலேசிய கல்விமுறை பலதரப்பட்ட கூறுகளை அடிப்படையாகக்கொண்டுள்ளதால் இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு வரவேண்டிய அவசியமே இல்லை என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
தமிழ், சீனப்பள்ளிகளை இழுத்து மூடவேண்டும் என பல்வேறு தரப்பினர் அண்மைய காலமாக அரசாங்கத்திற்கு நெருக்குதல் கொடுத்துவரும் சூழலில் சட்டத்துறை அலுவலகத்தின் இந்த நிலைப்பாடு தமிழ் தொடர்பான நமது போராட்டத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகவே கருதப்படுகிறது.
இந்திய பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கே அனுப்ப வேண்டும் என்பது மட்டுமின்றி தமிழ் பள்ளிகளின் துரித மேம்பாட்டுக்கும் சமீப காலமாக அதிக சிரத்தையெடுத்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நம் சமுகத்தினருக்கு இந்நிலைமை மிகுந்த உற்சாகத்தை அளிக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்த வழக்கில் ம.இ.கா., ம.சீ.ச., கெராக்கான் மற்றும் மலேசிய பூமிபுத்ரா கட்சி, ஆகிய 4 அரசியல் கட்சிகளும் அரசாங்கத்திற்கு ஆதரவாக தற்காப்புத் தரப்பில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு, மலேசிய தமிழர் இயக்கம், பேராக் மாநில தமிழர் திருநாள் இயக்கம், ஓய்வு பெற்ற தமிழாசிரியர்கள் நலனபிவிருத்தி சங்கம், மலேசிய தமிழ் நெறிக் கழகம் மற்றும் மலேசிய முன்னாள் தமிழ் பள்ளி மாணவர்கள் சங்கம் ஆகியவற்றோடு 3 சீன இயக்கங்களும் தங்களை தற்காப்புத் தரப்போடு இணைத்துக்கொண்டுள்ளன.
தாங்கள் செலுத்தியுள்ள வரிப்பணம் தமிழ், சீனப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது என்று ஆதங்கப்பட்ட வாதியின் வழக்கறிஞருக்கு பதிலுரைத்த தற்காப்புத் தரப்பினர், முஸ்லிம் அல்லாதாரின் வரிப்பணமும் கூட இஸ்லாமிய சமய பள்ளிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது என்றனர்.
நீதிபதி முஹமட் நஸ்லான் தலைமையிலான இந்த வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 22ஆம் தேதி தொடங்கி 4 நாள்களுக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.